உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் – 9.வின்சென்ட் வான் கோக்

Share

இவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓவியர்.

வின்சென்ட் வான் கோக் என்பது இவருடைய பெயர்.

நெதர்லாந்தில் உள்ள குருட் ஸுன்டெர்ட்டில் 1853 மார்ச் 30ந்தேதி பிறந்தார். வான் கோக்கின் தந்தை தியோடரஸ் வான் கோக் டச்சு ரிபார்ம்டு தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தார். தாயார் அன்னா கார்னெலியா கார்பென்டஸ்.
வான் கோக்கின் 10 ஆவது வயதில் இருந்துதான் அவரது வாழ்க்கைக் குறிப்புகள் கிடைத்துள்ளன. அதற்கு முன்பு அவர் என்ன செய்தார் என்பது பற்றிய குறிப்புகள் இல்லை.

வான்கோக் செவன்பெர்கெனில் உள்ள ஒரு உறைவிடப்பள்ளியில் படித்தார். அதன்பிறகு தில்பர்கில் உள்ள மன்னர் இரண்டாம் வில்லியம் செகன்டரி பள்ளியில் இரண்டு ஆண்டுகள் படித்தார். 15 வயதில் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு விட்டார். அதன்பிறகு அவர் பள்ளிக்கே செல்லவில்லை. 1869ல் வான் கோக் தி ஹேக் நகரில் உள்ள ஓவியங்கள் வாங்கி விற்கும் கவ்பில் சியீ நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

வான்கோக்கின் குடும்பத்தினர் ஏற்கனவே ஓவியங்கள் வாங்கி விற்பனை செய்பவர்களாக(ஆர்ட் டீலர்களாக) இருந்தனர். வான் கோக்கிற்கு கார்னெயில், வின்சென்ட் என்ற இரண்டு மாமன்கள் இருந்தனர். இருவருமே ஓவிய விற்பனையாளர் களாக இருந்தனர். இது வான் கோக் பிற்காலத்தில் பெரிய ஓவியராக உதவியது.

வான் கோக் தொடர்ந்து 7 ஆண்டுகள் அநத் நிறுவனத்தில் வேலை பார்த்தார். 1873ல் அவர் அதே நிறுவனத்தின் லண்டன் கிளைக்கு மாற்றப்பட்டார். இங்கிலாந்தில் வசித்த மக்களையும், அவர்களின் கலாச்சாரத்தையும் வான்கோக் மிகவும் ரசித்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாத கடைசியில் வான் கோக் உர்சுலா லோயெர் எனும் பெண்ணுடனும் அந்தப்பெண்ணின் மகள் யூஜெனி என்பவருடனும் வசித்தார். அவர், யூஜெனியை காதலித்தார்.

இப்படியெல்லாம், வரலாற்ரு ஆசிரியர்கள் சிலர் கூறுகின்றனர். ஆனால் அவர் அந்தப் பெண்ணை ஒருபோதும் காதலிக்கவில்லை என்று சிலர் மறுக்கின்றனர். இந்த குழப்பம் இன்னும¢ நீடிக்கிறது.

வான் கோக் லண்டனில் இருந்தபோது ஏராளமான ஓவியக் கண்காட்சிகளுக்குச் சென்றார். அருங்காட்சியகங்ளுக்கும் சென்றார். பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் ஜார்ஜ் எலியட், சார்லஸ் டிக்கன்ஸ் போன்றவர்கள் வான் கோஹை கவர்ந்தனர். தி கிராபிக் போன்ற பத்திரிகைகளில் அந்தக்காலத்தில் உலோகம் மற்றும் மரத்தில் ஓவியங்கள் செதுக்குபவர்கள் பற்றிய செய்திகளும், அவர்களது படைப்புகளும் இடம் பெற்றன. அந்த படைப்புகளும் படைப்பாளிகளும் வான் கோஹை பெரிதும் பாதித்தன. பின்னாளில் அவர் ஒரு சிறந்த ஓவியராக பரிணமிக்க இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.


1875 மே மாதத்தில் மீண்டும் பாரீஸ் கிளைக்-கு மாற்றப்பட்டார். தொடர்ந்து ஓவிய விற்பனையாளராக வேலை பார்ப்பது அவருக்கு பிடிக்கவில்லை. 1876 மார்ச்சில் அவர் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினார். அடுத்த மாதம் அவர் ராம்ஸ்கேட்டில் உள்ள பாதிரியார் வில்லியம் பி. ஸ்டோக்ஸ் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். 10 முதல் 12 வயதுக்குட்பட்ட 24 குழந்தைகள் அவரிடம் படித்தனர். இந்த தொழில் அவருக்கு பிடித்திருந்தது.

அதைத் தொடர்ந்து ஐஸ்ல்வொர்த்தில் இருந்த பாதிரியார் டி. ஸ்லேட் ஜோன்ஸ் பள்ளியிலும் ஆசிரியராக பணியாற்றி னார். வேலை நேரம் போக ஓய்வு நேரத்தில் ஓவியக் கண்காட்சி களுக்கு செல்வார். இல்லாவிட்டால் பைபிள் படிப்பார்.

1876 ஆம் ஆண்டு அவர் முழுமையாக தேவாலயப்பணிக்காக தன்னை ஒப்புக்கொடுத்துவிடுவது என முடிவு செய்தார். டர்ன்ஹாம் கிரீன் மாவட்ட தேவாலயத்தில் நடைபெறக்கூடிய வழிபாட்டுக் கூட்டங்களில் பேசத்துவங்கினார். ஆனால், அவருக்கு ஆர்வம் இருந்ததே தவிர அவரது மதபோதனை உரைகளில் ஒரு கவர்ச்சி இல்லை. 1877 ஆம் ஆண்டு தொடக்கத்தில், ஒரு புத்தகநிலையத்தில் வேலை பார்ததார். பின்னர் மே 9 ஆம் தேதியன்று ஆம்ஸ்டர்டாம் சென்றார். அங்கு இறையியல் பல்கலைக் கழகத்தில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுக்கு தன்னை தயார் செய்தார்.

இறையியல் படிப்புக்கான பாடங்கள் கிரேக்கத்திலும் லத்தீனிலும் வந்தன. சில பாடங்கள் கணக்கு தொடர்பானவை. இவற்றை படிப்பது வான் கோக்கிற்கு சிரமமாக இருந்தது. 15 மாதங்கள் பல்லைக் கடித்துக்கொண்டு படித்தார். இறுதியில் தன்னால் முடியாது என முடிவு செய்தார். இறையியல் படிப்புக்கு முழுக்கு போட்டார். பின்னாளில் இந்த நாட்களை அவர் தனது வாழ்நாளில் மிகவும் மோசமான காலகட்டம் என வர்ணித்துள்ளார்.

பின்னர் தேவாலயத்தோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, அதன் அடிப்படையில் பெல்ஜியத்தில் உள்ள தி போரினேஜ் மாவட்டத்தில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் மத போதனையில் ஈடுபட்டார்.

சுரங்கத்தொழிலாளர்களிடம் அன்புடன் பழகினார். அவர்க ளது கடினம் நிறைந்த வாழ்க்கை குறித்து அவர்கள் மீது இரக்கத்துடன் இருந்தார். தனது உணவு மற்றும் உடைகளை வறுமையில் இருந்த அவர்களுக்கு கொடுத்தார்.

இது சர்ச் நிர்வாகத்திற்கு பிடிக்கவில்லை. அவரது பாதிரியார் பதவியை சர்ச் நிர்வாகம் பிடுங்கியது. அந்தப்பகு தியை விட்டு வெளியேறுமாறு சர்ச் நிர்வாகம் கூறியது. ஆனால் வெளியேற மறுத்த வான்கோக், பக்கத்தில் இருந்த கியூஸ்மெஸ் கிராமத்திற்கு சென்றார். பாதிரியார் என்ற பதவி போனதற்கு பிறகு அவரது பொருளாதார நிலை மிகவும் மோசமானது. அங்கிருந்த சுரங்கத் தொழிலாளர்களைப் போலவே வறுமையில் வாடினார்.


ஒருமுறை தனக்கு பிடித்தமான ஜூல்ஸ் பிரிட்டோன் எனும் பிரஞ்சு ஓவியரை பார்க்க வேண்டும் என முடிவு செய்தார். அப்போது அவரிடம் அந்நாட்டு பணம் 10 பிராங்குகள் மட்டுமே இருந்தது. 70 கிலோ மீட்டர் நடந்தே சென்றார். அங்கு சென்றாலும் நினைத்த காரியம் நடக்கவில்லை. மீண்டும் கியூஸ்மெஸ் கிராமத்திற்கே திரும்பினார்.

அதன்பிறகு சுரங்கத் தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும், அவர்களின் வறுமை மிகுந்த கடினமான வாழ்க்கையையும் ஓவியங்களாக தீட்டத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் இருந்துதான் அவர் ஓவியராக வாழத் துவங்குகிறார். போரினெஜில் மிகுந்த வறுமையுடன் ஓர் ஆண்டு கழிந்தது. பின்னர் 1880ல் பிரஸ்ஸல்ஸ் நகருக்குச் சென்று அங்கு ஓவியப் படிப்பை துவங்கினார். அப்போது அவருக்கு அவரது சகோதரர் தியோ பண உதவி செய்தார்.

சின்ன வயதில் இருந்தே வான் கோக்கும் தியோவும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகவும் பாசத்துடனும் இருந்து வந்தனர்.

பிரஸ்ஸல்ஸில் வான்கோக் ஓவியம் படித்தது தொடர்பாக ஒரு சர்ச்சை நீடிக்கிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஹல்ஸ்கர் மற்றும் டிரால்பவுட் ஆகியோர் இருவேறு விதமாக தெரிவிக்கின்றனர். எகோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட் என்ற பள்ளியில் வான்கோக் ஓவியம் படித்தார் என டிரால்பவுட் கூறுகிறார்.

வான்கோக் பள்ளியில் சேர்வதற்கு விண்ணபித்தது உண்மை. ஆனால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது. அவர் ஓவியப்பள்ளியில் படிக்கவே இல்லை என ஹல்ஸ்கர் கூறுகிறார்.

எது உண்மையோ. ஆனால் வான்கோக் ஓவியக்கலையை தானாகவோ பள்ளியில் படித்தோ கற்றுக்கொண்டார் என்பது மட்டும் உண்மை. பெற்றோரை விட்டு நீண்ட காலம் பிரிந்து தனியாக வாழ்ந்த வான்கோக் மீண்டும் பெற்றோருடன் சேர்ந்து வாழத் துவங்கினார். அப்போது அவரது அத்தை மகள் கார்னெலியா அட்ரியானா வோஸ் ஸ்டிக்கரை சந்தித்தார். அவரை எல்லோரும் கீ என அழைப்பார்கள்.

கீ கணவரை இழந்தவர். ஒரு மகன் அவருக்கு. வான்கோக்கிற்கு கீ மீது காதல் ஏற்பட்டது. கீயிடம் தனது எண்ணத்தை தெரிவித்தார். ஆனால், கீ வான் கோக்கின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. கீயின் பெற்றோரும் வான் கோக்கின் எண்ணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தனது மகளை பார்க்கக்கூட கூடாது என வான் கோக்கிற்கு கீயின் தந்தை தடை விதித்தார்.

ஒருநாள் அவருடைய வீட்டிற்கு சென்ற வான் கோக், உங்கள் மகளை பார்க்க அனுமதிக்காவிட்டால் என்னை எரித்துக்கொள்வேன் என்று கூறி எரியும் விளக்கில் கையை வைத்தார். கையில் தீப்பிடித்ததும், கீயின் தந்தை உடனே விளக்கை அணைத்தார். பின்னர் வான்கோக்கை திட்டி அனுப்பிவிட்டார். வான் கோக் அவமானத்துடன் வெளியேறி னார். கவலையுடன் இருந்த வான்கோக்கிற்கு ஆன்டோன் மௌவி என்ற ஓவியர் ஆறுதல் அளித்தார். மௌவி வான்கோக்கிற்கு உறவினரும் கூட. தி ஹேக் நகரில் மௌவி யுடன் தங்கினார் வான்கோக்.

ஆனால் அங்கும் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது. 1882 பிப்ரவரியில் சியென் எனப்படும் ஒரு விலைமாதை சந்தித்தார் வான் கோக். அந்த விலைமாதுவுக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை இருந்தது. கர்ப்பமாக வேறு இருந்தார். அவருடன் வான்கோக்கிற்கு தொடர்பு ஏற்பட்டது. வான்கோக் அவருடன் தொடர்பு வைத்துக்கொள்வது மௌவிக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

சியென்–வான்கோக் இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன. இருவருமே எளிதில் உணர்ச்சிவசப் படுகிற குணாம்சம் கொண்டவர்கள். மேலும் வறுமை வேறு அவர்களை வாட்டியது. இதனால் அடிக்கடி அவர்களுக்கி டையே சண்டை வந்தது.

ஆனாலும், வான்கோக் தன்னை முழுவதுமாக சியெனுக்காக ஒப்புக்கொடுத்து விட்டிருந்தார். குறிப்பாக அவர் சியெனின் குழந்தைகளுக்காக தன்னையே ஒப்படைத்திருந்தார். அவர் தனது சகோதரன் தியோவுக்கு எழுதிய கடிதத்தி¢ல் இதை கூறியுள்ளார். ஆனால் அனைத்து கவலைகளையும் அவர் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவரது சிந்தனை முழுவதும் ஓவியங்களின் மீதே இருந்தது.

வான்கோக்கின் பல ஓவியங்களுக்கு சியெனும் அவளது குழந்தையும் மாடல்களாக இருந்தனர். இந்த காலகட்டத்தில் அவரது ஓவியத்திறன் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சிய டைந்தது. அவர் ஏற்கனவே வரைந்திருந்த சுரங்கத்தொழிலாளர் ஓவியங்கள் உணர்ச்சிமயமான சித்தரிப்பாக இருந்தன. தற்போது சியெனுடன் இருந்தபோது மேலும் சிறந்த ஓவியங்களை அவர் வரைந்தார்.

அவற்றில் சியென் சிட்டிங் ஆன் எ பாஸ்கெட் வித் எ கேர்ள் என்ற ஓவியம் குறிப்பிடத்தக் கது. 19 மாத காலம் சியெனுடன் அவர்நடத்திய வாழ்க்கை அதில் ஏற்பட்ட மனச்சோர்வு அனைத்தையும் அவர் அந்த ஓவியத்தில் சித்தரித்திருந்தார்.

1982ல் அவர் ஆயில் பெயிண்ட்டிங்கில் சில பரிசோதனை முயற்சிகளை செய்தார். ஓவியத்தில் அவர் அடுத்தடுத்த கட்டங் களுக்கு சென்று கொண்டிருக்கும் அதே சமயத்தில் சியெனுக்கும் அவருக்கும் இடையே இருந்த உறவு மேலும் மேலும் மோசமடைந்தது. ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.

ஏற்கனவே, சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் போரினெஜில் வசித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்க ளுக்கு பிறகு சியெனின் நட்பு கிடைத்தது. அந்தச் சமயத்தில் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

தற்போது அந்த உறவும் முறிந்தது வான்கோக்கை பெரும் கவலையில் ஆழ்த்தியது. குறிப்பாக சியெனின் குழந்தைகளை பிரிந்ததை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தி ஹேக் நகரைவிட்டு கவலையுடன் அவர் வெளியேறினார்.

நெதர்லாந்தில் உள்ள டிமெதி மாவட்டத்திற்கு சென்றார். அது ஒரு வறண்ட பூமி. மனிதர்கள் அதிகம் வசிக்காத பகுதி. அங்கு அவர் நாடோடி யாக திரிந்தார். அந்த வறண்ட பூமியை அவர் பல்வேறு சித்திரங்களாக வரைந்தார்.

1883ல் தனது பெற்றோர் வீட்டுக்கு மீண்டும் திரும்பினார். அப்போது அவரது பெற்றோர் நவுனன்னில் இருந்தனர்.

அங்கிருந்தபோது தனது முழுக்கவனத்தையும் ஓவியங்கள் மீதும் சித்திரங்கள் மீதும் செலுத்தினார். நெசவாளர்கள், நூல் நூற்பவர்கள் போன்றவர்களை போர்ட்ரெய்ட் ஓவியங்களாக வரைந்தார்.

வான்கோக்கிற்கு மிகவும் பிடித்த ஓவியர் மில்லெட். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்க்கையை சித்திரங் களாக வரைபவர் அவர்.

அவரைப்போலவே வான்கோக்கும் விவசாயிகள் ஏழைத் தொழிலாளர்களை தனது ஓவியங்களில் வரைந்தார்.

இந்த நேரத்தில் வான்கோக்கிற்கு மீண்டும் ஒரு துன்ப அனுபவம் ஏற்பட்டது. பக்கத்து வீட்டில் வசித்து வந்த மார்கோட் பெக்மான் என்ற பெண் வான் கோக்கை காதலிக்க ஆரம்பித்தார். ஆனால், வான்கோக் அந்தப் பெண்ணை காதலிக்கவில்லை. ஒரு கட்டத்தில் பெக்மான் தற்கொலை செய்து கொள்ள எண்ணி விஷம் குடித்து விட்டார்.

பிறகு ஒருவழியாக அவர் காப்பாற்றப்பட்டார். ஆனாலும், அந்தச் சம்பவம் வான்கோக்கை பெரிதும் பாதித்தது. துகுறித்து அவர் தனது நண்பர்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

1885ல் விவசாயிகளை பல்வேறு போர்ட்ரெய்ட் ஓவியங் களாக வரைந்தார் வான்கோக். இது ஒருவகையான கற்றுக் கொள்ளல் என்று அவர் நினைத்தார். இந்த கற்றுக்கொள்ளல் அந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்கள் தீவிரமாக இருந்தது. மார்ச் 26 ஆம் தேதியன்று அவரது தந்தை இறந்தார். அதனால் சிறிது இடையூறு ஏற்பட்டாலும், அவர் கற்றுக்கொள்வதை நிறுத்தவில்லை.

தொடர்ந்த கடுமையான பயிற்சிக்கு பிறகு அவர் தனது மிகச்சிறந்த படைப்பான தி பொட்டேட்டோ ஈட்டர்ஸ் ஓவியத்தை வரைந்தார். 1885ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முழுவதும் கடினமாக உழைத்து அந்த ஓவியத்தை உருவாக்கினார். ஏராளமானோர் பாராட்டினர். அந்த ஓவியத்தை அவர் மிகவும் நேசித்தார். யாராவது அதைப்பற்றி சிறு குறை சொன்னாலும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

வான்கோக்கின் நண்பர் ஆன்த்தோன் வான் ரேப்பார்டு எனும் ஓவியர் பொட்டாட்டோ ஓவியத்தை விமர்சித்தார். அதனால் அவரது நட்பையே முறித்துக்கொண்டார் வான்கோக்.

1986 தொடக்கத்தில், ஆண்ட்வெர்ப்பில் இருந்த அகாடமியில் சேர்ந்தார். ஆனால் அங்கிருந்த ஆசிரியர்களை பிடிக்காமல் நான்கு வாரங்களில் விலகிவிட்டார். முறையாக படிப்பது என்பது எப்போதுமே வான்கோக்கிற்கு ஒத்துவர வில்லை.

அதன்பிறகு ஒருநாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் திடீரென்று பாரீஸ் சென்றார். அங்குள்ள தனது சகோதாரன் தியோ வீட்டிற்கு சென்றார். வான்கோக்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் பெரும்பாலும் அவரது கடிதங் களை வைத்தே எழுதியுள்ளனர். அதில் முக்கியமான கடிதங்கள் வான்கோக், தியோ இடையே எழுதப்பட்டவை. ஆனால் இருவரும் ஒரே இடத்தில் தங்கிய இந்த காலகட்டத்தில் கடிதப் போக்குவரத்து இல்லாமல் போனது. எனவே பாரீசில் வான்கோக் தங்கியிருந்த காலகட்டம் குறித்து அதிகமான குறிப்புகள் பதிவாகவில்லை.

வான்கோக்கின் வாழ்க்கையில் இந்த பாரீஸ் வாசம் மிகவும் முக்கியமான காலகட்டமாகும். தியோ ஒரு ஓவியவிற்பனையாளர். அவருக்கு நிறையப்பேருடன் தொடர்பு இருந்தது. இது வான்கோக்கின் ஓவியம் பலருக்கு அறிமுகமாக உதவியாக இருந்தது. டெகாஸ், மோனெட், ரெனாயிர், பிசாரோ, செவுராட், சிஸ்லி போன்ற பல ஓவியர்களின் கண்காட்சிகளுக்கு சென்று வந்தார் வான்கோக்.

அந்த ஓவியர்கள் அனைவரும் இம்ப்ரசனிஸ்ட்டுகள் என அழைக்கப்பட்டவர்கள். இம்ப்ரசனிஸ்ட்டுகளின் பாணி வான்கோக்கை பாதித்தது. அந்த பாதிப்பில் அவர் தனது ஓவியங்களில் ஒரு புதிய உத்தியை கையாண்டார். எனினும் இம்ப்ரசனிஸ்ட்டுகள் தனது சொந்த பாணியின் மீது செல்வாக்கு செலுத்தாமல் பார்த்துக்கொண்டார்.


1886 முழுவதும் அவர் பாரீசில் இருந்தபடி ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தார். அந்த ஓவியங்கள் புதிய உத்திகளை கொண்டிருந்தன. வான்கோக்கின் தாய்நாடான டச்சுவில் அவர் இருந்தபோது வரைந்த ஓவியங்களில் இருந்து இப்போது வரைந்த ஓவியங்கள் மாறுபட்டு இருந்தன. இருள் மற்றும் வழக்கமான வண்ணங்கள் இப்போது அவரது ஓவியங்களில் இல்லை. இம்ப்ரசனிஸ்ட்டுகள் கையாண்ட வண்ணங்களில் ஒரு அதிர்வுத்தன்மை இருக்கும்.

அதேபோன்ற பாணி வான்கோக் கின் ஓ-வியங்களில் எதிரொலித்தது. அதன்பிறகு அவர் ஜப்பானிய ஓவியங்களின் மீது ஆர்வம் கொண்டார். ஜப்பானியர்களின் ஓவியங்களை அவர் சேகரித்தார். இப்போதும் கூட ஆம்ஸ்டர்டாமில் உள்ள வான் கோக் அருங்காட்சியகத்தில் அந்த ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சமயத்தில் அவர் வரைந்த தி போர்ட்ரெய்ட் ஆஃப் பெரே டான்கய் என்ற ஓவியத்தில் இம்ப்ரசனிஸ்ட்களின் பாணியும் மற்றும் ஜப்பானிய ஓவிய பாணியும் இணைந்திருந்தது.

பாரீஸ் வாழ்க்கை மீண்டும் சிக்கலானது. சகோதரன் தியோவுக்கும் வான்கோக்கும் ஒத்துப்போகவில்லை. பொருளா தார சிக்கல் வந்தது. சரியான சாப்பாடு இல்லை அதே சமயத்தில் மதுவும் சிகரெட்டும் அதிகமானது. 1887, 1888 ஆகிய இரண்டு ஆண்டுகள் அமைதியில்லாமல் பாரீசில் கழித்தார். பொதுவாகவே வான்கோக்கிற்கு பாரீஸ் நகர குளிர் ஒத்துவர வில்லை.

வெயிலுக்காக ஏங்கினார். சூரியனை தேடி பாரீசை விட்டு வெளியேறினார். 1888 பிப்ரவரி 20 ஆம் தேதியன்று வான்கோக் ஆர்லெஸுக்கு சென்றார்.

ஆனால் அவர் எதிர்பார்த்ததைப்போல அங்கு வெயில் இல்லை. அங்கு நிலவிய பனித்து£சியும், அசாதாரணமான குளிரும் முதல் சில வாரங்கள் ஏமாற்றத்தை அளித்தன. முதல் சில வாரங்கள் இப்படி இருந்தாலும் அதன்பிறகு நிலைமை கொஞ்சம் மாறியது. அவர் உற்சாகமாக ஓவியங்களை வரைய ஆரம்பித்தார். மரங்கள், நிலப்பரப்பு, பழத்தோட்டங்கள் போன்றவற்றை வரைந்தார்.

அதன்பிறகு வந்த மாதங்கள் மகிழ்ச்சியாகவே கழிந்தன. மே மாத தொடக்கத்தில் மஞ்சள் மாளிகை என்ற வீட்டிற்கு குடிபோனார். அதுவே அவரது ஓவியச் சாலையாகவும் இருந்தது. அதன்பிறகு வந்த வசந்தம் மற்றும் கோடைக் காலங்களில் கடுமையாக வேலை செய்தார். ஏராளமான ஓவியங்களை வரைந்து, தனது சகோதரன் தியோவிற்கு கப்பல் மூலம் அனுப்பி வைத்தார். இந்த காலகட்டத்தில் தன்னந்தனியாக வசித்த வான்கோக் தனது ஓவிய மாடல்க ளுடன் நெருக்கத்தை விரும்பினார். அவர்களுடன் நட்பு வைத்துக்கொண்டார்.

இதற்கிடையில் பவுல் கவுகுயின் என்னும் பாரீஸ் ஓவியருடன் சேர்ந்து பணியாற்ற விரும்பினார் வான்கோக்.
வான்கோக்கின் ஓவியத்தை போலவே பவுல் கவுகுயின் ஓவியத்தையும் வாங்கி விற்பனை செய்தவர் வான்கோக்கின் சகோதரர் தியோதான்.

ஆனால், பவுல் கவுகுயின் ஏர்லஸ் வந்து புதிய வீடு பிடித்து தங்குவதற்கு அதிகப்பணம் தேவைப்பட்டது. அந்தப் பணத்தை தியோதான் கொடுக்க வேண்டும். ஆனால் தியோவிற்கு அப்போதைக்கு பணம் இல்லாமல் இருந்தது. அதன்பிறகு தியோவின் மாமா ஒருவர் இறந்தார். அவரிடம் இருந்து தியோவிற்கு வரவேண்டிய சொத்து வந்தது. இதனால் தியோவின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, பவுல் கவுகுயின் ஏர்லஸ் செல்ல தியோ உதவினார்.

ரயில் மூலம் பவுல் கவுகுயின் ஏர்லஸ் வந்து சேர்ந்தார். இவருக்காகவே மஞ்சள் மாளிகையை சிறப்பாக தயார் செய்து வைத்திருந்தார் வான்கோக். இருவரும் இணைந்து பணியாற்றி னர். இந்த காலகட்டத்தில் ரோவுலின் குடும்ப போர்ட்ரெய்ட் ஓவியத்தை வான்கோக் வரைந்தார். இது மிகவும் பாராட்டப்பட்டது. வான்கோக்கும், பவுல் கவுகுயினும் இணைந்தும் ஓவியங்கள் வரைந்தனர்.

அடுத்து ஒருமாதம் வரையில் இந்த உறவு நன்றாகவே இருந்தது. ஆனால் மூன்று மாதங்களில்ல் இருவருக்கும் இடையே ஓவியம் தொடர்பாக அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சண்டை வந்தது. அப்போது குளிர் அதிகமாக இருந்ததால், இருவருமே அதிகநேரம் அறையில் இருக்க வேண்டி வந்தது. இது அவர்களது சண்டையை அதிகப்படுத் தியது. இதற்கிடையில் வான்கோக்கின் மனநலமும் பாதிக்கப் பட்டது. டிசம்பர் 23 ஆம் தேதியன்று தனது இடதுகாதின் கீழ்ப்பகுதியை பிளேடால் அறுத்துக்கொண்டார் வான்கோக்.

அந்தப்பகுதியை அப்படியே ஒரு துணியில் சுற்றி பக்கத்தில் இருந்த விபச்சார விடுதிக்கு சென்று, அங்குள்ள விலைமாது ஒருவரிடம் கொடுத்து, இதை பத்திரமாக வைத்திரு என்று சொன்னார் வான்கோக். அதன்பிறகு அறைக்கு வந்த வான்கோக், அப்படியே மயங்கி விழுந்து விட்டார். இதற்கிடையில் பவுல்கவுகுயின் அறையை விட்டு வெளியேறி விட்டார். வான்கோக்கின் மீது இருந்த கோபத்தில் அவர் மீண்டும் பாரீசுக்கே சென்று விட்டார்.

மயங்கி விழுந்திருந்த வான்கோகை மருத்துவமனையில் சேர்த்தார்கள். பெலிக்ஸ் ரே எனும் மருத்துவரின் பராமரிப்பில் இருந்தார் வான்கோக்.

தியோவும் அவசரமாக பாரீசில் இருந்து வந்தார். காதை அறுத்த இடத்தில் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டதால், மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தார் வான்கோக். அவர் இறந்து விடுவார் என்றே தியோ நினைத்தார். ஆனால் 15 நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறினார் வான்கோக். முழுவதுமாக உடல் நலம் தேறிய பிறகு வான்கோக் தனது மஞ்சள் மாளிகைக்கு சென்றார்.

அவ்வப்போது டாக்டர் ரேயிடம் பரிசோதனைக்கும் புண்ணுக்கு கட்டுப்போடவும் சென்று வந்தார். பொருளாதார சிக்கல் தொடர்ந்து நீடித்தது. ஏர்லசில் வான்கோக்கிற்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பெயர் ஜோசப் ராவுலின்.

இவர் அவ்வப்போது வான்கோக்கிற்கு பண உதவி செய்து வந்தார். அவருக்கு மார்செய்லெஸ்சில் வேலை கிடைத்ததால் அவர் ஏர்லெஸ்சை விட்டு குடும்பத்துடன் இடம் மாறிவிட்டார். இது வான்கோக்கிற்கு பெரும் இழப்பாக இருந்தது.

ஆனாலும், அவரது ஓவியப்பணி நிற்கவில்லை. இந்தக் காலகட்டத்தில்தான் அவரது புகழ்பெற்ற லா பெர்செயூஸ் அண்ட் ஸன்ஃப்ளவர்ஸ் என்ற ஓவியத்தை வரைந்தார். மறுபடியும் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. தனக்கு யாரோ விஷம் வைத்து விட்டார்கள் என நினைத்தார். மறுபடியும் ரேயின் மருத்துவமனைக்கே சென்றார். ஒரு பத்து நாட்கள் வைத்தியத்திற்கு பிறகு திரும்பினார்.

வான்கோக்கிற்கு அடிக்கடி மனநலம் பாதிக்கப்படுவதால் அவரது நடவடிக்கைகளை பார்த்து அக்கம்பக்கத்தில் உள்ள சிலர் பயந்தனர். அவர்கள் மனு ஒன்றை தயார் செய்து, ஏர்லஸ் மேயருக்கும், உள்ளூர் காவல்துறை அதிகாரிக்கும் அனுப்பினர். இதையடுத்து, மருத்துவமனையில் சேர்ந்து மீண்டும் சிகிச்சை பெற வேண்டும் என்று வான்கோக்கிற்கு காவல்துறை உத்தரவிட்டது. எனவே, ஹோட்டல் டியு மருத்துவமனையில் அவர் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆறு வாரங்கள் இருந்தார்.

யாரேனும் ஒருவரது கண்காணிப்பின் கீழ் ஓவியங்கள் வரையவும், அந்த ஓவியங்களை அவரது இடத்தில் சென்று வைக்கவும் அவரை மருத்துவர்கள் அனுமதித்தனர். இந்தக் கால கட்டத்தில் அவர் சிறந்த ஓவியங்களை வரைந்தாலும், அவரது நிலை நிச்சயமற்றதாக இருந்தது. எந்த நேரத்தில் அவருக்கு என்ன ஆகுமோ என்ற அச்சம் இருந்தது.

தியோவின் யோசனைப்படி புனித ரெமி டி மாகாணத்தில் உள்ள புனித பவுல் டி மவுசோலே காப்பகத்தில் சேர்ந்தார். அங்கு அவரை தியோபிலி சாச்சரி ஆகஸ்ட் பெய்ரேன் என்ற மருத்துவர் கவனித்துக் கொண்டார். அவர் வான்கோக்கை பரிசோதித்து அவருக்கு ஒருவிதமான வலிப்பு நோய் இருப்பதாக கூறினார். காப்பகத்தில் மற்ற நோயாளிகளின் அழுகையும் கூக்குரலும் மோசமான உணவும் வான்கோக்கிற்கு பிடிக்கவில்லை. வான்கோக்கிற்கு ஹைட்ரோ தெரப்பி எனப்படும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது நீரில் மூழ்கச் செய்யும் சிகிச்சையாகும்.

சிலவாரங்களில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இடையில் ஓவியப்பணியில் சிறிது இடைவெளி ஏற்பட்டது. உடல்நலம் தேறியதும் மீண்டும் பணியில் இறங்கினார். அவருடைய மிகச்சிறந்த படைப்பான ஸ்டேரி நைட் என்ற ஓவியம் வெளிவந்தது.

மறுபடியும் அடுத்த மாதமே அவரது மனநலத்தில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் மீண்டும் குணமானார். மருத்துவர் பெய்ரான் மீண்டும் அவரை ஓவியம் வரையலாம் என அனுமதித்தார். தனக்கு அடிக்கடி இவ்வாறு மனநலப்பாதிப்பு ஏற்படுவது குறித்து தனது சகோதரர் தியோவிற்கு கடிதம் எழுதினார் வான்கோக். இதற்கிடையில் 1889 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தியோவிற்கும் உடல்நலமில்லாமல் போனது.

வான்கோக் இரண்டு மாதங்களுக்கு தனது அறையைவிட்டு வெளியே செல்லாமல் இருந்தார். வெளியே சென்றால் தனிமையாக உணர்வதாகவும், வெளியே செல்லவே வெட்கமாக இருப்பதாகவும் தனது சகோதரிக்கு எழுதிய கடிதத்தில் வான்கோக் குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகு அவரது பதட்ட நிலைமை ஓரளவிற்கு சரியானது. மீண்டும் ஓவியங்கள் தீட்ட ஆரம்பித்தார். அதன்பிறகு சிறிது காலத்திற்-கு அவரது உடல்நலம் நன்றாகவே இருந்தது.

தியோவின் உடல்நிலையும் நன்கு தேறியது. ஓவியக்கண்காட்சி ஒன்று நடத்த ஆக்டேவ் மவ்ஸுக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட்டார். பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற அந்த கண்காட்சியில் வான்கோக்கின் ஆறு ஓவியங்கள் இடம் பெற்றன.

1889 டிசம்பர் 23 ஆம் தேதி மீண்டும் வான்கோக்கிற்கு மனநலம் பாதிக்கப்பட்டது. சுமார் ஒருவாரகாலம் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் சுற்றித் திரிந்தார். ஒரு வாரத்திற்கு பின்னர் மனநலம் சரியானதும் மீண்டும் ஓவியப்பணி. இந்த முறை அவர் மற்ற ஓவியர்களின் ஓவியங்களை நகலெடுக்கும் வேலையில் ஈடுபட்டார். அடுத்த ஆண்டும் அடிக்கடி இதுபோலவே ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அவர் காப்பகத்தை விட்டு வெளியேறினார்.

அப்போது தியோ ஒரு யோசனை சொன்னார். பாரீசுக்கு அருகில் ஆவெர்ஸ் சுர் ஓய்ஸே என்ற இடத்தில் பவுல் காச்செட் என்ற ஹோமியோபதி மருத்துவர் ஒருவர் இருந்தார். அவரிடம் வைத்தியம் பார்க்கலாம் என தியோ கூறினார். இதை வான்கோக் ஏற்றுக்கொண்டு 1890 மே 16 ஆம் தேதி ரயில் மூலம் பாரீஸ் சென்றார்.

பாரீசில் தியோவின் வீட்டிற்கு சென்றார். அங்கு தியோவின் மனைவி ஜோஹன்னா, அவர்களின் மகன் வின்சென்ட் வில்லியம் ஆகியோருடன் மூன்று நாட்களை அமைதியாகக் கழித்தார். அதன்பிறகு ஆவெர்ஸ் சென்றார். அங்கு ஹோமியோபதி மருத்துவர் கோச்செட்டை சந்தித்தார். அவரிடம் சிகிச்சை தொடங்கிய நாட்களில் கோச்செட் குறித்து இவர் சரியாக வைத்தியம் பார்ப்பாரா-? என வான்கோக் சந்தேகப்பட்டார்.

கோச்செட்டின் தோற்றம் அப்படி இருந்தது. அதுபற்றி வான்கோக் கூறுகையில், ‘இவர் என்னை விட நோயாளியாக இருப்பார் போலிருக்கிறதே-. என்னை விட மோசமான நோயாளியாக இருப்பார் என்று கூடச் சொல்லலாம்’ என்றார். அதன்பிறகு இரண்டு வாரங்கள் மருந்து சாப்பிட ஆரம்பித்தபிறகு கோச்செட் குறித்த வான்கோக்கின் கருத்து மாறியது. இதற்கிடையில் வின்சென்ட் ஆவெர்ஸிலேயே ஒரு விடுதியில் வாடகைக்கு தங்கினார்.

வைத்தியம் பார்த்துக் கொண்டே அங்கிருந்தபடி ஓவியப்பணியில் ஈடுபட்டார். மருந்து ஒருபுறம் வேலை செய்தாலும், மற்றொருபுறம் இந்த ஊர் வான்கோக்கிற்கு பிடித்திருந்தது.

காப்பகத்தில் இருந்ததுபோல கட்டுப்பாடுகள் இல்லை. சுதந்திரமாக உணர்ந்தார். ஜூன் மாதம் 8 ஆம் தேதியன்று தியோவும் அவரது குடும்பமும் வான்கோக்கை பார்க்க வந்திருந்தார்கள். அன்று முழுவதும் அவர்களுடன் சந்தோஷ மாக கழித்தார். தற்போது உடல் மற்றும் மனம் இரண்டுமே அமைதியாக இருந்தது. இதை அவர் தனது தாய்க்கும் சகோதரிக்கும் எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டார். இந்தக் காலகட்டத்தில் அவரது மிகச்சிறந்த இரண்டு ஓவியங்களை படைத்தார். வைத்தியர் கோச்செட்டின் உருவப்படமும், ஆவெர்ஸ் தேவாலயமும் அந்த அளவுக்கு புகழ்பெற்றவை.

ஆரம்பத்தில் கோச்செட் குறித்து அவர் தவறான அபிப்ராயம் கொண்டிருந்தாலும், தற்போது அவரது உருவப்படத்தை வரைந்ததில் இருந்து அவரது மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அறியமுடியும்.

இதற்கிடையில் தியோவின் குழந்தைக்கு உடல்நலம் இல்லாமல் போனது. தியோவின் குழந்தையை பார்ப்பதற்காக வான்கோக் பாரீஸ் சென்று வந்தார். அதன்பிறகு அந்த மாதம் முழுவதும் ஆவெர்ஸில் சிறந்த இயற்கைக்காட்சி ஓவியங்களை வரைந்தார். இந்தக் காலகட்டத்தில் வான்கோக் மகிழ்ச்சியாக இருந்தார் என்று சொல்ல முடியாவிட்டாலும், பிரச்சனை எதுவும் இல்லாமல் இருந்தார்.

அதேசமயம், வெளிப்படையாக தெரியாவிட்டாலும் அவருக்குள் என்னவோ நடந்து கொண்டிருந்தது. 1890 ஜூலை 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. அன்று மாலை தனது ஓவியப் பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார்.

அங்கு தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் அப்படியே தட்டுதடுமாறி நடந்து விடுதிக்கு வந்தார். அங்கு சுயநினைவற்று விழுந்தார். உடனடியாக தகவல் தெரிந்து உள்ளூர் மருத்துவர் மாசெரி, ஹோமியோபதி மருத்துவர் கோச்செட் ஆகியோர் வந்தனர். கோச்செட் தியோவிற்கு அவசரமாக கடிதம் எழுதினார். தியோவின் வீட்டு முகவரி தெரியாமல் அவரது அலுவலக முகவரிக்கு கடிதத்தை அனுப்பி வைத்தார். எப்படியோ தகவல் தெரிந்து தியோ அடுத்தநாள் மதியம் வந்து சேர்ந்தார்.

கடைசி நேரத்தில் தியோ, வான்கோக்குடன் கூட இருந்தார். தியோ வான்கோக்கிற்கு சகோதரனாக மட்டும் இருக்கவில்லை. ஒரு நல்ல நண்பனாகவும் இருந்தார். அடுத்தநாள் வான்கோக் கின் உயிர் பிரிந்தது.

‘வான்கோக் இறப்பதற்கே விரும்பினார். கடைசிநேரத்தில் நாங்கள் அவர் அருகில் உட்கார்ந்துகொண்டு, அவரை தேற்ற முயற்சித்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவர் இந்த துன்பம் அனைத்தும் ஒரேயடியாக தொலையட்டும் என்று கூறினார். அவர் எந்த அர்த்தத்தில் இப்படிச் சொன்னார் என என்னால் புரிந்து கொள்ள முடிந்தது’ என்று பின்னாளில் தியோ எழுதியிருந்தார்.

வான்கோக் இறந்தபிறகும் சோதனை விடவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறி அவரது உடலை அடக்கம் செய்ய அங்கிருந்த கத்தோலிக்க சர்ச் மறுத்துவிட்டது. அதன்பிறகு அருகில் இருந்த நகராட்சி மயானத்தில், அடுத்தநாள் 30 ஆம் தேதி அவரது உடல் அடக்கமும் இறுதிச் சடங்குகளும் நடந்தன.

வான்கோக் இறந்து 6 மாதங்களுக்கு பிறகு தியோவும் இறந்து விட்டார். அவரது உடல் உட்ரெட்சில் அடக்கம் செய்யப் பட்டது. ஆனால், 1914ல் தியோவின் மனைவி ஜோஹன்னாவின் விருப்பப்படி, தியோவின் உடலை எடுத்து, வான் கோக்கின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்தனர்.

Leave A Reply