உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் – 7. ரெம்பிராண்ட்

Share

இவர் டச்சு நாட்டைச் சேர்ந்தவர்.

ரெம்பிராண்ட் ஹார்மென்சூன் வான் ரிஜ்னி என்பது இவருடைய பெயர்.

ரெம்பிராண்ட் என்று அறியப்பட்டவர்.

உலோகத்தட்டில் சித்திரம் செதுக்கும் கலையை அறிந்தவர். 17ம் நு£ற்றாண்டின் புகழ் பெற்ற ஓவியராக திகழ்ந்தார். போர்ட்ரெய்ட் எனப்படும் தத்ரூபமான நிஜக்காட்சி ஓவியங் களை ஏராளமாக வரைந்தவர். அவரது ஓவியங்களில் பல ஆம்ஸ்டர்டாமின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை பிரதிபலிப்பவை யாக இருந்தன. அவரது உலோகச் சித்திரங்கள், ஓவியங்கள் போன்றவற்றில் அவர் பயன்படுத்திய வெளிச்சமும் நிழலும் ஓவிய வரலாற்றில் அவருக்கு அழிக்க முடியாத இடத்தை பெற்றுத் தந்தன.

நெதர்லாந்தில் உள்ள லெய்டெனில் 1606 ஜூலை 15 ஆம் தேதி இவர் பிறந்தார். அவரது தந்தை ரெம்பிராண்ட்டை நன்றாக படிக்கவைக்க வேண்டும் என விரும்பினார். ஆனால், ரெம்பிராண்ட் லெய்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து படிப்பை பாதியில் விட்டு விட்டு வெளியேறி ஓவியம் கற்கச் சென்றார். அவரது விருப்பம் ஓவியத்தின் மீது இருந்தால் விரைவில் நல்ல ஓவியராக ஆனார்.

கரவாஜியோ மற்றும் வேறு சில இத்தாலிய ஓவியர்களின் தாக்கம் ரெம்பிராண்ட்டிடம் இருந்தது. ரெம்பிராண்ட் ஓவியர் என்று அறியப்பட்டபோது, ஓவிய வகுப்புகளை தொடங்கி னார். பல மாணவர்களுக்கு தனது வாழ்நாள் முழுவதும் ஓவியக்கலையை கற்றுக்கொடுத்தார்.

1631ல் ரெம்பிராண்ட் மிகவும் பிரபலமான ஓவியரானார். பின்னர் அவர் ஆம்ஸ்டர்டாமுக்கு சென்றார். ஹாலந்தில் போர்ட்ரெய்ட் வகை ஓவியங்களில் முன்னணி ஓவியர் என அவர் பெயர் பெற்றார். அவர் வரைந்த மதம் தொடர்பான ஓவியங்களும் போர்ட்ரெய்ட் ஓவியங்களும் அவருக்கு நிறைய பாராட்டுகளை பெற்றுத்தந்தன.

பணமும் புகழும் குவிந்தன. சமூகத்தில் வசதியோடு கூடிய மதிக்கத்தக்க ஒரு மனிதராக வாழ்ந்தார். 1634ல் சாஸ்கியா வான் உய்லென்பர்க் எனும் அழகான பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர் ரெம்பிராண்டின் பல ஓவியங்க ளுக்கு மாடலாக இருந்திருக்கிறார்.

அவரது ஓவியங்களில் அவர் பயன்படுத்திய பலவிதமான வெளிச்ச உத்திகள் மிகவும் பிரபலம். உலோகச் சித்திரத்தில் எப்போதும் முதன்மையானவர் ரெம்பிராண்ட்தான்.


ரெம்பிராண்ட்டுக்கு மாடல்கள் கிடைக்காத நேரத்தில் தன்னைத்தானே வரைவார். அவர் வரைந்த ஓவியங்களில் சுமார் 50லிருந்து 60 ஓவியங்கள் தன்னைத்தானே வரைந்து கொண்டவை. 1636ல் அமைதியை சித்தரிக்கும் விதத்திலும் சிந்தனையை துண்டும் விதத்திலும் ஒரு புதிய இதமான வண்ணம் கொண்டு ஓவியங்களை வரைய துவங்கினார். அதன்பிறகு சில ஆண்டுகளில் அவரது நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் நோய் காரணமாக இறந்தன. அவரது மனைவி 1642ல் இறந்தார். 1630 மற்றும் 40களில் அவர் நிறைய லேண்ட்ஸ்கேப் ஓவியங்கள் மற்றும் உலோகச் சித்திரங்களைப் படைத்தார். அவரது லேண்ட்ஸ்கேப் ஓவியங்கள் கற்பனை வளம் மிக்கவை.

அவரைச் -சுற்றி அவர் கண்ட நிலப்பரப்பை மிக உன்னதமான முறையில் சித்தரித்தவை. 1642ல் அவர் வரைந்த தி நைட் வாட்ச் என்ற ஒவியம் அவரது ஓவியங்களில் மகத்தான படைப்பாக இன்றும் கருதப்படுகிறது. இந்த ஓவியத்தில் உள்ள வெளிச்சம், இருள், வண்ணம் அனைத்துமே ரெம்பிராண்ட்டின் மேதைமையை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளன.

ரெம்பிராண்ட் தானே ஒரு ஓவியர் எனினும் பல ஓவியர்களின் ஓவியங்களை விலை கொடுத்துவாங்குவதில் ஆர்வமாக இருந்தார். வசதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த ரெம்பிராண்ட், கடன் வலையில் சிக்கினார். அளவுக்கு மீறிய கடன் காரணமாக 1650 ஆம் ஆண்டில் அவரது வீடும் சொத்துக்களும் ஏலத்திற்கு விடப்பட்டன. அவரது ஓவியங்கள் பாராட்டப்பட்டாலும், அவரது பொருளாதார நிலைமை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. கடைசி காலத்தில் அவர் பணத்திற்கு மிகவும் சிரமப்பட்டார்.

ரெம்பிராண்ட் 600 சித்திரங்கள் வரைந்துள்ளார். 300 உலோகச் சித்திரங்களைச் செதுக்கியுள்ளார். 1400 ஓவியங்கள் வரைந்துள்ளார்.

செயின்ட் பால் இன் பிரிஸன், எம்மாஸில் இரவு விருந்து, யங் கேர்ள் அட் ஓபன் ஹாஃப் டோர், தி மில் உள்ளிட்ட பல மிகச்சிறந்த படைப்புகள் இவருக்கு சொந்தமானவை.

Leave A Reply