திருவிளையாடல்!

Share

எல்லா காலையையும் போலத்தான் இன்றைய காலையும் விடிந்தது. என்றைக்கும் போலவே செல்போனில் அலாரம் அடித்தபிறகும், ‘படு, பிறகு பார்க்கலாம்’ என குளிர் தலையைப் பிடித்து தலையணையில் அமுக்கியது. இனியும் படுத்துக்கிடக்க முடியாது என்ற நிலையில் எழுந்துகொண்டு மனைவி சமையலறைக்குள் நகர, நான் காய்கறி வாங்கிவர படியிறங்கினேன்.

சற்று நேரத்துக்குப்பின்தான் எல்லா நாளையும்போல இன்றைய காலை இருக்கப்போவதில்லை எனத் தெரியவந்தது.

உலை வைத்துவிட்டு, காய்கறி நறுக்க அமர உட்கார்ந்தபோது மனைவிக்கு செல்போனை சார்ஜ் போடவேண்டுமென்ற ஞானோதயம் வந்தது. வழக்கமாக வைக்கும் இடத்தில் செல்போனைக் காணவில்லை. பிற இடங்களிலும் தேடினாள். எங்கும் செல்போன் தட்டுப்படாது போகவே, கட்டிலில், போர்வைக்குக் கீழே, தலையணைக்குக் கீழே எங்காவது மறைந்திருக்கிறதா என தேடினாள். இராவணன் மகன் இந்திரஜித்போல தன் இருப்பை மறைத்துக்கொண்டு மாயமாகியிருந்தது அது.

நீ முகம்காட்டாவிட்டால் என்ன, இன்னொரு செல்போனில் அழைத்தால் உன் குரல் கேட்டுவிட்டுப் போகிறது என தன் செல்போனுக்கு வேறொரு போனிலிருந்து அழைப்பு விடுத்தாள். இந்திரஜித்தின் குரலும் கேட்கவில்லை. செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக பதில் வந்தபோது லேசாக பதட்டமானாள். நான் தேநீருக்கு இஞ்சியைச் சேர்த்து, அதற்குச் சுவையேற்றியபடி மனைவியின் பதட்டத்தைக் கவனித்தபடி இருந்தேன்.

மகளுக்கு இன்று அரையாண்டுத் தேர்வு. விடைத்தாளை வைத்து எழுத உதவும் தேர்வட்டை எங்கெயன நேற்றிரவுதான் தேடினாள். வீட்டிலெங்கும் தட்டுப்படவில்லை. புலன்விசாரணையில் அது பாட்டி வீட்டில் இருப்பதாகத் தெரியவர கிட்டத்தட்ட இரவு பத்துமணி நெருக்கமாக தன் அம்மாவின் வீட்டுக்கு மனைவி கிளம்பினாள். அதுசமயம் மனைவியின் மற்றொரு திறன்பேசியில் யூடியுபில் பாடல்களும் கதைகளுமாகக் காணொலிகளைக் கண்டு தன்னை மறந்திருந்த மகன், அம்மா நகர்ந்ததைக் கண்டுகொள்ளவில்லை. மற்ற சமயத்திலென்றால் தனை விட்டுவிட்டுப் போகக்கூடாது என கூப்பாடு போட்டிருப்பான்.

போகும்போது, மகளை அழைத்து தன் செல்போனுக்கு சார்ஜ் போடும்படி சொன்னாள். தம்பியுடன் செல்போனில் யூடியுப் உற்சவத்தில் இருந்தவள், இதையெங்கே பொருட்படுத்துவாள். நான் பத்து நிமிடத்தில் திரும்பிவிடுவேன். அதனால் செல்போனை எடுத்துச்செல்லவில்லை என என்னிடம் சொல்லிவிட்டே போனாள்.

நேற்று ஒருவேளை மறந்து தன் வீட்டுக்குக் கொண்டுபோயிருக்கலாமோ… என்ற சந்தேகத்தில், தன் வீட்டுக்குப் போன் செய்து தன் செல்போன் அங்கே எங்கும் இருக்கிறதா என தன் தந்தையைப் பார்க்கச் சொன்னாள். அவளது தந்தையோ, நிதானமாகத் தேடும்படியும், ஒருவேளை அலுவலத்திலே விட்டுவந்திருக்கலாம் என பதற்றத்தைத் தணிக்கமுயன்றார். இந்தமுனையில் நெருப்புப் பறந்தது. 

ஏனெனில் நேற்று அலுவலகத்தில் இருந்து போனை எடுத்துவந்திருந்ததோடு, வழியில் எனக்குப் போன் செய்து தான் வரத் தாமதமாகும் என்பதால் குழந்தைகளை அவளது வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி அந்த செல்போனில்தான் எனக்குப் பேசியிருந்தாள். ஆக, அலுவலகத்தில் விட்டு வந்திருப்பதற்கான சாத்தியக்கூறு முடிந்துபோனது. அதுதெரியாமல் வளைத்து வளைத்து யோசனை சொன்னால்…

ஞாபக அடுக்கை கலைத்துப் புரட்டியபோது, நேற்று துவைத்த துணிகளை மடித்து பீரோவில் அடுக்கியது அவளது ஞாபகத்துக்கு வந்தது. ஒருவேளை மடித்த துணிகளுடன் செல்போனை பீரோவில் வைத்துவிட்டோமா…. என மடித்த துணிகளை அள்ளிப்போட்டு தேடினாள். ம்கூம்…

இப்போது நான் தேநீர் குடித்துக்கொண்டிருந்தேன். பிறகு தேடிக்கொள்ளலாம், டீயை முதலில் குடி என சொல்லலாம் என்றுதான் பார்த்தேன். செல்போன் காணாத ஆத்திரம் நம் மேல் பாயும் சாத்தியமிருக்கிறது என்று தெரிந்ததால், அக்கறையை அலட்சியப்படுத்தினேன். ஆனாலும் பிரயோஜனமில்லை. இரண்டாவது சுற்றாக வழக்கமாக போன் வைக்கும் இடங்களிலெல்லாம் தேடி, பிள்ளைகள் ஞாபக மறதியாக பள்ளிக்கூட பேக்கில் வைத்திருக்குமோ என சந்தேகம் தீர்த்துக்கொண்டு, இனி எங்கே தேடுவதென திகைத்த… சற்று நேரத்துக்கெல்லாம்

“வீட்டில வெச்ச போன் எங்கே போயிடும்… அதுங்க போனையே (யூடியுப்) பார்ததுக்கிட்டிருந்திருக்கும். இவர் புத்தகத்தையே பார்த்துக்கிட்டிருந்திருப்பார்… யாரும் வந்து எடுத்துக்கிட்டு போயிருந்தாக்கூட தெரிஞ்சிருக்காது”. தோட்டா நெஞ்சைக் குறிவைத்துப் பாய்ந்துவிட்டது. இதற்குமுன்பு மெஷின்கன்னையே சமாளித்த அனுபவமிருப்பதால், தோட்டாவைப் புறங்கையால் தள்ளிவிட்டு நான் கடமையே கண்ணாக இருந்தேன். மகளை பள்ளிக்கு அனுப்பும் ஆயத்தங்களில் மும்முரமானேன்.

ஏற்கெனவே மகளிடம் விசாரணை முடித்திருந்த மனைவி, தூங்கிக்கொண்டிருந்த மகனிடம், “இளா… இளா… அம்மா போனை பார்த்தியாடா,” தட்டியெழுப்ப முயன்றபடியே கேட்டாள். அவளின் விசாரணை அவனது தூக்கத்தை, அதன் அச்சிலிருந்து துளிக்கூட விலகச் செய்யவில்லை. ஏற்கெனவே தொண்டையிலிருந்து இரண்டொரு முறை கேவல் எழுந்திருந்தது. சும்மாவா ஐந்தாயிரத்து சொச்ச ரூபாய் விலைதந்து வாங்கிய செல்போனாச்சே…

நேற்று இரவு எனை செல்போனில் அழைத்திருந்ததால், அதற்குப் பிறகு பஸ்ஸில் யாராவது செல்போனை எடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றொரு  யூகம் எனக்குள் ஓடியது. ஆனால் ஆட்டோவில் வந்ததாக அல்லவா சொன்னாள்?

இடையில் மகளை பள்ளிக்கூட வேனில் ஏற்ற பத்து நிமிடம் வெளியில் போய்விட்டு வந்தேன். திரும்பவும் பீரோவிலிருந்த துணிகளை இழுத்துப்போட்டு தேடிப்பார்த்துவிட்டு அதன் மீதே தலைசாய்ந்து உறங்கியிருந்தார். மீண்டும் மனைவியின் மற்றொரு செல்போன் சிணுங்கியது. இந்த முறை அவரது தங்கையார், அழைப்பில் வந்து தொலைந்த போனை துப்பறிய உதவமுயன்றார். சற்று நேரத்துக்குப் பின் வீட்டுக்கே நேரில் வந்துவிட்டார்.

வெட்டிவைத்த காய்கறிகள் ஆயத்தமாக இருந்தன. செல்போன் தொலைந்தாலும் வயிறு பசிக்கும் என்றொரு யதார்த்தம் எனக்கு உறைத்தாலும், மனைவியை குழம்பு வைக்க அழைக்க ஒரு தயக்கம் ஓடியது. நமக்கும் நளபாகத்தில் காலரைக்கால் பாகம் கைவருமென்பதால், காய்கறிகளைத் தூக்கிக்கொண்டு சமையலறைக்கு நகர்ந்தேன். மனைவியின் தங்கை விசாரணைக்குப் பிறகு மூன்றாவது முறையாக செல்போனைக் குறித்த ஏதாவது துப்பு கிடைக்கிறதா… என தேடுதலைத் தீவிரப்படுத்தியிருந்தார். 

உலகத்தைக் குறித்த கவலையின்றி நான் புத்தகம் படிப்பதுதான், செல்போன் தொலைய காரணமாயிருக்குமோ என்ற பேச்சு மீண்டுமொரு முறை அடிபட்டது. இதற்குள் குழம்பு ஒரு சுமாரான பக்குவத்துக்கு வந்திருந்தது. இப்போது மகன் பள்ளிக்குச் செல்ல நேரமாயிருந்ததால், மனைவியின் தங்கை அவனை எழுப்பமுயல, ஒன்பது மணிக்கு பள்ளியிலிருக்கவேண்டிய, அவர் எட்டு நாற்பது மணிக்கு எழுந்திருப்பதற்கும் மிகுந்த சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்.

ஒருவழியாக கண்விழித்து தூக்கச் சடைவு மாறாமல் நின்றுகொண்டிருந்த அவரிடம், “செல்போனை எங்கேயாச்சும் பார்த்தியா” என அவரது சித்தி கேட்க, தன் தங்கை என்னவோ கேள்வியை சமஸ்கிருதத்தில் கேட்டதுபோல், மீண்டும் “செல்போனை எங்கேயாச்சும் பார்த்தியா… இளா” என மொழிபெயர்த்தார் இளாவின் அம்மா,. எழுந்தவுடன் டீ கூட தராமல் இதென்ன விசாரணையென குழப்பமாக அவர்களை அவன் ஏறிட்டு நோக்க, மீண்டும் அதே கேள்வி. 

தோராயமாக கேள்வி புரிந்ததும், கட்டிலிலிருந்து இறங்கி விறுவிறுவென என் பீரோவை நோக்கி வந்தவன், அதன் கைப்பிடியை இழுத்து, அதன் இரண்டாவது தட்டில் இருந்த துணிகளுக்கு இடையில் இருந்த செல்போனை எடுத்து அவர்களிடம் நீட்டினான்.(துணியையெல்லாம் இழுத்துக் கொட்டி மனைவி தேடியது அவளது பீரோ) ஒரு பக்கம் சிரிப்பும், ஒரு பக்கம் கடுப்பும் வர, முதுகில் ரெண்டு சாத்து சாத்தலாமா… என பார்த்தேன். மனைவி ஒரு பக்கம், மனைவியின் தங்கை ஒரு பக்கமென பவுன்சர்களாக நிற்கும்போது அத்தகைய காரியத்தில் இறங்குவது ஆபத்தென அனுபவ அறிவு சிக்னல் செய்தது.

தேடி, களைத்து, சலித்து, அழுது, ஏங்கி, காலையிலிருந்து டீக்கூட சாப்பிடாமல் இருக்கும் மனைவி மகனின் திருவிளையாடலுக்காக சாத்துப்படி நடத்துவார் என பார்த்தால், அவனை அருகில் அழைத்து அணைத்துக்கொண்டு, ஈயென இளித்தபடி, “ஏன் இளா போனை பீரோவுல வெச்சுப் பூட்டின” புளகாங்கிதமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

திருடன் தூக்கிட்டுப் போயிருவான்னுதான் உள்ளே வெச்சேன் என மழலையில் பதில் சொல்ல, இவனே பெரிய திருடனா இருக்கானே என மனதில் நினைத்துக்கொண்டேன். சீப்புகள், க்ரையான்ஸ், நாணயங்களை கட்டிலில், பாய்க்கடியில், தலையணைக்குக் கீழே மறைத்துவைக்கும் அவனது பதுக்கல் குணம் தெரிந்ததுதான். ஆனால் வழக்கமான இடத்தைவிட்டு, வழக்கமான பொருட்களைவிட்டு செல்போனை பீரோவில் பதுக்கியதால் கொஞ்சம் யூகிக்கமுடியாமல் போய்விட்டது.

இதெல்லாம் பரவாயில்லை… பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்து, சகஜ நிலைக்கு வந்தபிறகு மனைவி ஒன்று சொன்னார் பாருங்கள்: “நான்கூட நீங்கதான் செல்போனை எடுத்து வெச்சுக்கிட்டு விளையாடுதீங்களோன்னு நினைச்சேன்”

இதுக்கு இந்த செல்போன் கிடைக்காமலே போயிருக்கலாம்- சொல்லவில்லை. மனதில் நினைத்துக்கொண்டேன்.

Leave A Reply