நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 11– ஆதனூர் சோழன்

Share

குடும்ப உறவுகள் சீராக 11 வழிகள்

“எங்க அப்பா ஒரு கிராமத்தையே பெத்து வச்சுருக்காரு” என்னுடைய நண்பன் ஒருவன் அடிக்கடி இப்படிக் கூறுவான்.

இப்போதும்கூட, சில கிராமங்களுக்குச் சென்றால் பங்காளிக் கூட்டு என்று முக்கியமான நாள்களில் கூட்டம் கூடுவார்கள்.

அவர்கள் அனைவருமே ஒரு பெற்றோருக்கு பிள்ளைகளாக உருவாகி காலப்போக்கில் தனித்தனி குடும்பங்களாக மாறியவர்கள்.

தங்களுடைய உறவு தொடரவேண்டும் என்பதற்காகவே இவர்கள் குலதெய்வ வழிபாடுகளை ஏற்படுத்தினார்கள்.

ஆனால், காலம் போகிற வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பங்காளிகளே யாரென்று தெரியாமல் போகிற அவலம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இடைவெளி அதிகமாகி ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்புகள் மறைந்து கொண்டிருக்கின்றன.

தனது குடும்ப மரத்தின் வேர் எங்கிருந்து தொடங்குகிறது என்பதே தெரியாமல் இன்றைய தலைமுறை வளர்கிறது.

கூட்டு குடும்பம் என்ற வார்த்தை எழுத்தளவில் மட்டுமே இருக்கிறது. குடும்பத்துக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்கின்றன. அவர்களும்கூட திருமணம் ஆனவுடன் பெற்றோரை விட்டு தொலைதூரங்களுக்கு சென்று விடுகிறார்கள்.

கேலிகள், கிண்டல்கள், சண்டைகள், சச்சரவுகள், சமாதானங்கள், கொண்டாட்டங்கள் எதுவுமே இல்லாமல் ஒரு சவசவத்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சிறிய கருத்துவேறுபாட்டைக் கூட தீர்ப்பதற்கு முடியாமல் குடும்பம் பிளவுபடுகிறது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. உலகம் உள்ளங்கையளவாக சுருங்கிவிட்டது.

ஆனால், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே போதுமான நெருக்கம் இல்லாமல் போய்விட்டது.

குடும்பத்தினருக்குள் நல்லுறவை வளர்க்க உளவியல் நிபுணர்கள் சில வழிகளை கூறியுள்ளனர். அந்த வழிகள்…

1. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருடனும் தினந்தோறும் பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துங்கள். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் நேரத்தில் அவர்களுடன் திறந்த மனதுடன் பேசுங்கள். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருடனும் தினந்தோறும் சிறிது நேரமாவது பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துங்கள். ஒருவர் மனது ஒன்பதடா அதில் ஒளிந்துகிடப்பது எண்பதடா என்பார்கள். அப்படி ஒளிந்து கிடப்பவற்றை வெளியில் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். உள்ளுக்குள் வைத்து குமையாமல் வெளிப்படையாக இருங்கள். அடுத்தவர் மனதில் உள்ள குறைகளை களைய முயற்சி செய்யுங்கள்.

2. கோபமாக இருந்தால்கூட, குடும்ப உறுப்பினர்களுடன் அமைதியாகவும், மரியாதையுடனும் பேச முயற்சியுங்கள். இது தங்கள் மீது குடும்பத்தினருக்கு அளவுகடந்த பாசத்தை ஏற்படுத்தும். கோபப்பட்டாலோ, தவறு செய்தாலோ அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள். கோபமான வார்த்தைக ளால் தாக்கப்பட்டவர்கள், மன்னிப்பு வழங்க தயாராக இருக்க வேண்டும். இது நெருக்கத்தை அதிகரிக்க உதவும்.

3. தொட்டுப் பேசுங்கள். இது உறவை வலுப்படுத்தும். குடும்பத்தினர் சாலையில் நடந்துசெல்லும்போது கைகோர்த்த படி செல்லுங்கள். பேசிக் கொண்டிருக்கும் போது, நெருங்கி அமர்ந்துகொள்ளுங்கள். இதேபோல, குழந்தைகளிடம் கட்டித் தழுவியும், முத்தம் கொடுத்தும் அன்பை பரிமாறிக் கொள்ள வேண்டும். இது அன்பை அதிகரிக்கும்.

4. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தனித்தனியாக மேற்கொள்ளும் பணிகளை பட்டியலிடுங்கள். பின்னர், முடிந்தவரை இந்த நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டு, ஒவ்வொருவரும் நேரடியாகப் பார்த்து பேசுவதற்கு நேரம் ஒதுக்குங்கள். மாறிவரும் உலகில் கூடுதல் பணிகளில் ஈடுபட வேண்டியது அவசியமா என்று ஆராய்ந்து அதனை செயல் படுத்துங்கள்.

5. குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்து சுற்றுலா செல்லுங்கள். உறவினர் இல்லத்துக்குச் செல்லுங்கள். குடும்பம் ஒரே குழுவாக இருப்பதை உறுதிப்படுத் துவதற்காக அனைவ ரும் இணைந்து செய்யும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

6. கணவனும் மனைவியும் வாரத்தில் சில மணி நேரங்களா வது சேர்ந்து இருக்கும் வகையில் நேரம் ஒதுக்கிக் கொள்ளுங் கள். கணவன், மனைவி இடையே ஒருங்கிணைப்பு இருந்தால் தான், குடும்பத்தில் இணைப்பை ஏற்படுத்த முடியும். மாறிவரும் சூழ்நிலையில், கணவன், மனைவிக்கு இடையே கருத்துப் பரிமாற்றம் குறைந்து வருகிறது. உடலுறவு தடைபட்டுவிடுகிறது. இதைப் போக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்.

7. குடும்பத்துக்கு தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயலாற்ற வேண்டும். பிரச்சினை கள் ஏற்படும்போது, அதை அனைவரும் இணைந்து எதிர் கொள்ள வேண்டும். இது குழந்தைகளுக்கு ஊக்குவிப்பை ஏற்படுத்தும். ஒவ்வொருவரும் தன்னால் இயன்றதைச் செய்யும் போது, குடும்பத்தில் ஒருங்கிணைப்பு இருப்பதை உணர முடியும்.

8. எப்போதும் சிரித்தபடி இருப்பதற்கு முயற்சியுங்கள். மனஇறுக்கத்தை போக்க சிரிப்பு ஒரு சிறப்பான மருந்து. மேலும், நமது எண்ணத்தை வலுவுள்ளதாகவும், சிறப்பாக வும் இருக்கும்படி செய்யும். எனவே, குடும்ப உறுப்பினர்களிடம் சிரித்தபடியே பேசுங்கள்.

9. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தலாம். இது உறவை வலுப்படுத்த பெரிதும் உதவும். குழந்தைகளுடன் இணைந்து தினமும் இரவு நேரங்க ளில் உணவருந்தும்போது, மனக் குழப்பங்கள் பெருமளவில் விலகிவிடும்.

10. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தனி வாழ்க்கை சூழலில் இருக்கின்றனர். குழந்தைகளும் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, குழந்தைகள் உள்பட அனைவ ரும் இணைந்து கேளிக்கைகளில் ஈடுபடலாம். கேரம் போர்டு, சதுரங்கம் போன்ற விளையாட்டுகளிலும் அனைவரும் தினமும் ஒன்றாகக் கலந்துகொள்ளலாம்.

11. நமது குழந்தைகளுக்கு எதைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். உங்களிடம் உள்ள நம்பிக்கையைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்காமல் செயலில் காட்ட வேண்டும். இது குழந்தைகள் மனதில் பதிந்துவிடும். கடவுள் நம்பிக்கை உண்டு என்றால், அனைவரும் இணைந்து வழிபாட்டில் ஈடுபடலாம். மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால், தன்னார்வப் பணிகளில் குழந்தைகளுடன் கலந்துகொள்ளலாம்.

குடும்ப உறுப்பினர்களிடையே நல்லுறவைப் பாதுகாப்பதன் மூலமே, வெளி உலகில் நம்மால் சிறப்பாக செயல்பட முடியும். எனவே, குடும்பத்தில் ஒற்று¬மைய வளர்க்க வேண்டும் என்பதை மறக்காமல் செயல்படுங்கள்.

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 12 – ஆதனூர் சோழன்

Leave A Reply