நிம்ம‌தியைத் தேடி – Fazil Freeman Ali

Share

அந்த‌ முதிய‌வ‌ரை க‌ண்டாலே ப‌ல‌ரும் த‌லைதெறிக்க‌ ஓடிவிடுவ‌ர். அவ‌ர் ந‌ட‌ந்துவ‌ருவ‌தை க‌ண்ட‌துமே சாலையின் ம‌றுபுற‌த்துக்கு சென்றுவிடுவார்க‌ள் ஊர்க்கார‌ர்க‌ள். அவ‌ருடைய‌ வீட்டுக்கு அருகேகூட‌ யாரும் செல்வ‌தில்லை.

கார‌ண‌ம் ரெம்ப‌ சிம்பிள், ம‌னித‌ர் எப்போதும் எதிர்ம‌றை சிந்த‌னையுட‌னேயே இருப்பார், ச‌தா எரிந்துவிழுவார், திட்டுவார், யாராவ‌து ஏதாவ‌து ந‌ல்ல‌து செய்யும்போதுகூட‌, “ஆமா இவ‌ந்தான் உல‌க‌த்தையே மாத்த‌ப்போறானாக்கும்…” என்று சுருக்கென்று சொல்லிவிடுவார்.

அந்த‌ ஊரிலுள்ள‌ சிறுவ‌ர்க‌ளுக்குக்கூட‌ “சிடுமூஞ்சி கிழ‌வ‌ன்” என்றால்தான் இவ‌ரைத்தெரியும்.

என்ன‌ ந‌ட‌ந்துச்சோ தெரிய‌ல‌, திடீர்னு ஒரு பெரும் மாற்ற‌ம். ஊரில் எல்லோருடைய‌ பேசுபொருளும் இதுதான், “சிடுமூஞ்சி தாத்தா எல்லார்கூடேயும் சிரிச்சு பேசுறாராம், நேர்ம‌றையா ப‌ழ‌குறாராம், சின்ன‌ ப‌ச‌ங்க‌ளுக்கு மிட்டாய்லாம்கூட‌ வாங்கி குடுக்குறாராம்பா….”

ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ த‌ன்னை சுற்றி ஒரு எதிர்ம‌றை வ‌ளைய‌த்தையே வ‌லுவாக‌ உருவாக்கி வைத்திருந்த‌ ம‌னித‌ர் எப்ப‌டி திடீரென்று இப்ப‌டி மாற‌முடியும்..? ச‌ரி, அவ‌ரிட‌மே கேட்டுவிடுவோம் என்று முடிவு செய்த‌ன‌ர் ஊர்ம‌க்க‌ள்.

திடீரென்று த‌ன் வீட்டின்முன் ப‌ல‌ர் கூடியிருப்ப‌தை பார்த்து முதிய‌வ‌ருக்கு ஆச்ச‌ரிய‌ம். க‌த‌வை திற‌ந்து வெளியே வ‌ந்த‌வ‌ர், “உங்க‌ எல்லாரையும் உள்ளே கூப்பிட‌ ஆசைதான், ஆனா சின்ன‌ வீடு, உள்ளே எல்லாரும் நிக்கிற‌தே சிர‌ம‌மாயிருக்கும். சொல்லுங்க‌, என்ன‌ விச‌ய‌மா வ‌ந்திருக்கீங்க‌..?” என்றார்.

இந்த‌மாதிரி இவ‌ர் பேசியே யாரும் கேட்ட‌தில்லை… “ஏண்டா நோக்காடு புடிச்ச‌வங்க‌ளா, ஏன்டா என் ஊட்டுமுன்னாடி போக்க‌த்துப்போயி கூடி நிக்கிறீங்க‌..?”ன்னு இவ‌ர் கேட்டிருந்தால்தான் இவ‌ர் இவ‌ர்க‌ளுக்கு தெரிந்த‌ இவ‌ராக‌ இருந்திருப்பார்.

கூட்ட‌த்தில் ஒருவ‌ர், “என்ன‌ பெரிய‌வ‌ரே சிரிச்சு சிரிச்சு பேசுறீங்க‌. அன்பா உரையாடுறீங்க‌. முக‌த்தில‌கூட‌ ஒரு வ‌ன‌ப்பு தெரியுது, என்ன‌ ஆச்சு..? என்று கேட்க‌…

கூட்ட‌த்திலிருந்து ஒரு பொடிய‌ன், “இன்னா பெர்சு, யார‌னா கெய‌விய‌ ல‌வ்ஸ் ப‌ண்றியா..?” என்று கேட்க‌…. கூட்ட‌த்தோடு சேர்ந்து முதிய‌வ‌ரும் வாய்விட்டு சிரித்தேவிட்டார்.

“என‌க்கு போன‌மாச‌ம் 80 வ‌ய‌சு முடிஞ்சுதுப்பா..” பெரிய‌வ‌ர் பேச‌த்துவ‌ங்கினார், “என‌க்கு விப‌ர‌ம் தெரிந்த‌ நாளிலிருந்து கோவில் குள‌ம் ம‌ட்டுமில்ல‌, த‌ர்கா, தேவால‌ய‌ம் எல்லாத்துக்கும் போற‌வ‌ன் நான், ஏன்னா எல்லாம் சாமிதானே, இல்லையா..? எப்ப‌வுமே சாமிக்கிட்ட‌ என்னோட‌ ஒரே பிரார்த்த‌னையும் தேட‌லும் என்னான்னா, நிம்ம‌தியா ச‌ந்தோச‌மா வாழ‌ணுங்க‌ற‌து ம‌ட்டும்தான்”

“தியான‌ம் சொல்லித்தாறேன், யோகா சொல்லித்தாறேன்னு தொட‌ங்கி, தாய‌த்து க‌யிறு விக்கிற‌வ‌ங்க‌ உட்ப‌ட‌ யாரையும் விட‌மாட்டேன். ப‌ஸ், ர‌யில் ஏறிப்போயெல்லாம் சோசிய‌ம் பாத்திருக்கேன்…”

“இப்ப‌டி 60 வ‌ருச‌த்துக்கும் மேல‌ ச‌ந்தோச‌த்தை தேடி அங்கே இங்கேன்னு அல‌ஞ்ச‌துதான் மிச்ச‌ம். கைக்காசுதான் க‌ரைஞ்சுதேயொழிய‌ க‌ஷ்ட‌மும் தீர‌ல்ல‌, நிம்ம‌தியும் கிடைக்க‌ல‌. என்ன‌ க‌ல்யாண‌ம் க‌ட்டுன‌ ம‌வ‌ராசி போய்ச்சேந்த‌துக்கு அப்புற‌ம், ம‌ன‌வேத‌னை இன்னும் கூடித்தான் போச்சே ஒழிய‌ கொற‌ஞ்ச‌பாடில்ல‌…”

“ஓக்கே பெரிய‌ரே, உங்க‌ இதுவ‌ரையிலான‌ வாழ்க்கைய‌ அழ‌கா ச‌ம்ம‌ரைஸ் செய்துட்டீங்க‌. அந்த‌ 80-வ‌து பிற‌ந்த‌நாளில் அப்ப‌டி என்ன‌த்தான் அதிச‌ய‌ம் ந‌ட‌ந்துச்சு..?” என்று ஒரு இளைஞ‌ன் ஆர்வ‌மாய் கேட்க‌…

“பொற‌ந்த‌நாள் இல்லியா, காலைல‌யே எழும்பி குளிச்சுட்டு கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு வ‌ந்து உக்காந்து யோசிச்சேன். இருவ‌து வ‌ய‌சிலேருந்து இந்த‌ 60 வ‌ருச‌மா நாம‌ விடாம‌ ம‌ன‌முருகி வ‌ண‌ங்கி தொழுது பிரார்த்தித்து கேட்டும் ச‌ந்தோச‌த்தை குடுக்காத‌ சாமி இனிமேலயா கூரைய‌ பொத்துட்டு குடுக்க‌ப்போகுது. இனி அந்த‌ எதிர்பார்ப்பே வேண்டாம். பேசாம‌ இருக்கிற‌த வெச்சு இந்த‌ பொழுதை க‌வ‌லை இல்லாம‌ல் வாழ்வோம்னு முடிவு செய்தேன். இந்த‌ ஒருமாச‌மா அப்ப‌டியே வாழ்ந்துட்டு வாரேன், அவ்வ‌ள‌வுதாம்பா ந‌ட‌ந்துச்சு..’ என்ற முதிய‌வ‌ர், “வேற‌ எதுவும் பெருசா ந‌ட‌க்க‌ல‌ப்பா” என்று இளைஞ‌னை பார்த்து முறுவ‌லித்தார்.

ஊரே வாய‌டைத்துப்போய் இவ‌ர் பேசுவ‌தை கேட்டுக்கொண்டிருந்த‌து. “தீதும் ந‌ன்றும் பிற‌ர்த‌ர‌ வாரா”ங்க‌ற‌ எவ்வ‌ள‌வு பெரிய‌ விச‌ய‌த்தை கிழ‌வ‌ன் சிம்பிளா சொல்லிட்டாரு.

சிடுமூஞ்சி தாத்தா-னு இப்ப‌ யாரும் இவ‌ரை கூப்பிட‌ற‌துல்ல‌. “சீனிய‌ர் சிட்டிச‌ன்”னு ப‌ச‌ங்க‌ இவ‌ருக்கு புதுப்பேர் வெச்சிருக்கானுங்க‌. ப‌ச‌ங்க‌ளோட‌ ஃபேவ‌ரைட் தாத்தா ஆகிவிட்டார் பெரிய‌வ‌ர். இப்ப‌ல்லாம் ஊரில் எல்லா ந‌ல்ல‌து கெட்ட‌துக்கும் பெரிய‌வ‌ருக்குத்தான் முத‌ல் அழைப்பித‌ழ் போகுது. அதே வ‌றுமையும் முதுமையும் தொட‌ருது, ஆனா ம‌னுச‌ன் எல்லோருட‌னும் அன்பா ப‌ழ‌கி நிம்ம‌தியா ச‌ந்தோச‌மா இருக்கார்.

நாம் 80 வ‌ய‌துவ‌ரை எல்லாம் காத்திருக்க‌ வேண்டிய‌தில்லை. இப்போதே அப்ப‌டி வாழ‌த்துவ‌ங்குவோமே..!

Leave A Reply