ஒரு கால் விலங்கின் இசை..! – C.N.Annadurai

Share

(அண்ணா தனது தம்பிகளுக்கு எழுதிய கடிதங்களில் இந்திய வரலாறு, உலக வரலாறு, உலகச் சிறுகதைகள் என கலந்து கொடுப்பார். அப்படி ஒரு கடிதத்தில் இடம்பெற்ற ரஷ்ய புரட்சிக் கதை இது…)

ஒரு இரும்புப் பட்டறைத் தொழிலாளி. அவன் தகப்பனும், அண்ணன் தம்பிகளும் அதே பட்டறையில் வேலை செய்பவர்கள். தொழிற்சாலை முதலாளியுடையது. தொழிலாளர்களின் உரிமைக்காகக் கிளர்ச்சி செய்தான் என்பதற்காக, அந்த தொழிலாளியைச் சிறையிலே போட்டு அடைத்தார்கள். காலிலே, ஒரு விலங்கு; ஒரு இரும்புச் சங்கிலி. கதை, இந்த விலங்கைப் பற்றித்தான் – “விலங்குவிடு தூது!’ என்று கருத்துப்பட, கதைக்குத் தலைப்பிட்டிருக்கிறார்கள்.

இந்தக் கால் விலங்கை, மற்றோர் கைதி பார்க்கிறான், உற்றுப் பார்க்கிறான், தொட்டுப் பார்க்கிறான், மகிழ்ச்சியுடன் பார்க்கிறான். பார்த்துவிட்டு, “அதேதான்! அதே விலங்குதான்! அதிர்ஷ்ட விலங்கு!’’ என்று கூறுகிறான். விலங்குகளிலே, அதிர்ஷ்டமானது, அதிர்ஷ்டக்கட்டை என்று என்ன இருக்கிறது என்று புரியவில்லை, தொழிலாளிக்கு. விவரம் கேட்கிறான்.

“இதே விலங்குதான் முன்பு ஒரு முறை எனக்குப் பூட்டினார்கள்! கழற்றிவிட்டு ஓடித் தப்பித்துக்கொண்டேன். அதற்கு முன்பு ஒரு முறை இதே விலங்கை வேறு ஒருவனுக்குப் பூட்டியிருந்தார்கள். அவனும் இதைக் கழற்றிப் போட்டுவிட்டு ஓடிவிட்டான். இது கைதிகளைத் தப்பி ஓடிவிடச் செய்யும் விலங்கு’’ என்று கூறினான்.

தன் சிறை வாழ்க்கைபற்றி, தகப்பனுக்கு எழுதிய கடிதத்தில், மகன், இந்த விலங்குபற்றி குறிப்பிட்டிருந்தான் – சிறை அதிகாரிகள் கண்ணில் படலாமா இப்படிப்பட்ட கடிதம். ஆகவே கடிதத்தை அனுப்பவேண்டிய முறைபடிதான், இரகசியமாக அனுப்பி வைத்தான். மகன் சிறையில் இருந்து எழுதிய கடிதத்தைப் படித்த தகப்பனுக்கு, அந்த விலங்குமீது ஒரு விருப்பம் ஏற்பட்டது. எப்படியாவது அந்த இரும்புச் சங்கிலியையும் விலங்கையும் தனக்கு அனுப்பி வைக்கும்படி கடிதம் எழுதினான். மகன், தந்திரமாக, அந்த விலங்கைத் தகப்பனாருக்கு அனுப்பி வைத்தான். அது கிடைத்ததும், தொடுவதும், குலுக்கி கிளம்பும் ஓசையைக் கேட்பதும், மனைவியிடமும் மற்ற மகன்களிடமும் காட்டுவதும் – தகப்பனுடைய பெருமை நிறைந்த வேலையாகிவிட்டது.

“தொழிலாளிகள் உரிமை பெற்று வாழவேண்டும் என்பதற்காகப் பாடுபட்ட என் மகன் காலிலே, இருந்த விலங்கு இது. பார் இது பாடுவதை, பாடலின் பொருள் புரிகிறதா!’’ – என்று பேசியபடி விலங்கை நண்பர்களிடம் காட்டுவான்.

தொழிற்சாலையிலே ஒரு விழா வந்தது, அந்த விழா நாளன்று ஆடல் பாடல். அந்த விழாவிலே விலங்கு கொண்டு வரப்பட்டது. அதை ஒருவர் அணிந்துகொண்டு நடப்பது, அதிலே கிளம்பும் ஓசையைக் கேட்டு மகிழ்வது விலங்கைக் கையிலே எடுத்துக்கொண்டு குலுக்குவது, அதனால் கிளம்பும் ஓசையை இசையாகக் கொண்டு நடனமாடுவது, இப்படி நடந்தது. என் மகன் காலில் இருந்த விலங்கு – என்று கூறிக்கொள்வதிலே அந்தத் தகப்பனுக்கு ஒரு தனிப்பெருமை, தனி மகிழ்ச்சி!

தொழிற்சாலை முதலாளிக்கு விஷயம் எட்டிற்று. வெகுண்டெழுந்தான் – “எங்கே விலங்கு? யாரிடம் இருக்கிறது? எப்படிக் கிடைத்தது?’’ என்ற கேள்விகளை அடுக்கினான் அவன். தேடிட ஆட்களை ஏவினான். விலங்கோ, ஒரு கையிலிருந்து மற்றோர் கை, பிறகு இன்னொருவர் கை என்று மாறிமாறி மறைந்தேவிட்டது – பாதுகாப்பான இடத்துக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது – முதலாளியால் கண்டுபிடிக்க முடியவில்லை.

புரட்சி வந்தது, புது ஆட்சி எழுந்தது. முதலாளி தத்துவம் முறிந்தது. தொழிற்சாலைகள் பொது உடைமையாயின.

கைதியாகச் சென்ற மகன், இதற்கிடையில், சிறையினிலும் தப்பிச் சென்றான்; புரட்சியில் பங்கு கொண்டான் என்று கேள்விப்படுகிறான் தகப்பன்; மேலும் பெருமைப்படுகிறான்.
பொது உடைமை ஆட்சி ஏற்பட்டுவிட்டது. இனி விலங்குக்கு விடுதலை – இதைக் கண்டுபிடிக்க மோப்பமிடும் முதலாளி இனி இல்லை – விலங்கு இனித் தலைமறைவாக இருக்கத் தேவை இல்லை – என்று கூறி, தன் வீட்டுக் கூடத்தில் அந்த விலங்கைத் தொங்கவிட்டிருந்தான், காட்சிப் பொருளாக. தொழிலாளர்களும் பொதுமக்களும் அணி அணியாக அவன் வீடு வந்தனர்.

விலங்கைக் காண, அதனுடன் இணைந்திருந்த வரலாறு கேட்க, பாட்டாளியின் கதை அறிய. என் மகன் காலில் இருந்தது! பாட்டாளிகளுக்காகப் பாடுபட்ட என் மகன் காலில் இதைப் பூட்டி வைத்தார்கள் – என் மகன் இதனால் நசுங்கியா போய்விட்டான் – முதலாளித்தனம்தான் பொசுங்கிப் போய்விட்டது – இதோ, விலங்கு கொலு இருக்கிறது – தளைகள் பூட்டப்பட்டிருந்தவர்கள் தரணி ஆள்கிறார்கள் – இதோ கேளுங்கள் விலங்கின் பாடலை என்று கூறி, கையிலே எடுத்து வைத்துக்கொண்டு குலுக்குவான் – அந்த ஓசை இசையாக இருந்தது கேட்பவர்களுக்கு.

எதிர்ப்புரட்சியை அடக்கும் போரில் ஈடுபட்டு மகன் மடிந்துவிட்டான் என்று தகப்பன் கேள்விப்படுகிறான்; வேதனை அடைகிறான்.

தொழில்கள் பொது உடைமையான உடன், வேலை நேரம் குறையும் கூலி வசதி பெருகும் என்று எதிர்பார்த்த தொழிலாளருக்கு, மேலும் உழைக்கவேண்டிய நிலையும், கடினமான சூழ்நிலையும், கூலி உயராத் தன்மையும் ஏற்பட்டது; ஏற்படவே கோபம் கொந்தளிப்பு! என்னய்யா மணலைக் கயிறாகத் திரிப்போம் என்று வாய்வீச்சாக நடக்கிறார்கள்; நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறதே; பொது உடைமை வந்து கண்ட பலன் இதுதானா? முன்பு வேலை செய்ததைவிட அதிகமாக வேலைசெய்ய வேண்டுமாமே! ஏன்? கூடாது! ஆகாது! – என்றெல்லாம் தொழிலாளிகள் முழக்கம் எழுப்புகிறார்கள்.

இரும்புப் பட்டறையில் குழப்பமான நிலைமை. பொது உடைமை ஆட்சியினர் இதை எப்படிச் சமாளிப்பது, தொழிலாளிகளுக்கு என்ன விளக்கம் அளிப்பது, சமாதானம் கூறுவது என்று குழம்பிக் கொண்டிருந்தனர்.

இரும்புப் பட்டறையில் மூண்டுவிட்ட கலவரம் பற்றிக் கேள்விப்பட்டதும் அந்த முதியவன் வீட்டுக்கூடத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்த விலங்கை எடுத்துக்கொண்டான். நேராகத் தொழிற்சாலை சென்றான், கூவிக்கொண்டும், குழம்பிக் கொண்டும் கிடந்த தொழிலாளர்களை நோக்கினான் – ஒரு மேடைமீது ஏறினான், விலங்கை எடுத்துக் குலுக்கினான் – ஓசை கிளம்பிற்று, கூச்சல் அடங்கிற்று, மேலும் குலுக்கினான்; அனைவரும் அந்த ஓசை இசையைக் கேட்டிடலாயினர்.

“என் மகன் காலில் இருந்த இரும்புச் சங்கிலி – விலங்கு – கேளுங்கள் இதன் இசையை – இதைப் பூட்டினார்கள் என் மகன் காலில் – எத்தனையோ பேர்களுடைய காலில் – ஏழை எளியோருக்குப் பாட்டாளிக்கு முன்பு இருந்த அரசு பூட்டியது விலங்கு! கவனம் இருக்கட்டும்! விலங்கு – நமக்கு! பூட்டியவர்கள் அவர்கள்; இன்று அவர்களை அகற்றிவிட்டோம். நமது அரசு அமைத்திருக்கிறோம். நமது அரசு ஆரம்பமாகி இருக்கிறது. இந்த அரசு முறையிலே குறை இருக்கலாம் – நீக்கிக்கொள்ளலாம். ஆனால் அந்தக் குறை காரணமாகக் குழம்பிவிடுவது, கலாம் விளைவிப்பது, ஆட்சியை எதிர்ப்பது என்று பாட்டாளிகள் கிளம்பினால், என்ன நடக்கும் – நமது அரசு விழும் – பழைய அரசு எழும். பழைய அரசு வந்தால் என்ன கிடைக்கும்? இதோ இது! விலங்கு! இரும்புச் சங்கிலி! காலில் விலங்கு! என் மகன் காலில் பூட்டியதுபோல – புரிகிறதா! கேளுங்கள் விலங்கின் – இசையை கேளுங்கள்’’

இந்தப் பேச்சும், விலங்கு கிளப்பிய ஓசை இசையும், தொழிலாளிகளை, ஒரு முடிவுக்கு வரச்செய்தது.

விலங்கின் இசை புரிகிறது – வேலைக்குச் செல்வோம் – நமது அரசு நிலைத்திட வேண்டும். அதற்காக நாம் கஷ்ட நஷ்டம் ஏற்போம் – விலங்கின் – இசையின் பொருள் அதுதான் என்று எண்ணினர். அமைதியாக வேலைக்குச் சென்றனர்.

Leave A Reply