“தங்கமக்காலே” – கை.அறிவழகன்

Share

“தங்கமக்காலே” என்ற சொல்லைக் கேட்டால் எனக்குக் காய்ச்சல் வந்து விடும், அதிலும் இரவு விளக்கின் ஒளியில் ஊடுருவி மரக்கிளைகளில் பட்டு எதிரொலிக்கும் அந்தக் குரல் ஒரு மாதிரிக் கிலியை உண்டாக்கும்.

அந்தக் குரலோடு கூடவே சர்ர்…. சர்ர்…. என்று தரையை உரசும் கோணிச் சாக்குப் பைகளின் ஓசையும், ஒரு அலுமினியத் தட்டின் ஒலியும் கூடுதல் நடுக்கத்தை வரவழைக்கும்.

எனக்கு மட்டுமில்லை ஏறக்குறைய குடியிருப்பில் இருக்கும் எல்லாக் குழந்தைகளும் “தங்கமக்காலே”யின் குரலைக் கண்டு குலை நடுங்கிப் போய் விடுவார்கள், குழந்தைகள் யாரும் சாப்பிடவில்லை என்றாலோ, உறங்கவில்லை என்றாலோ “தங்கமக்காலே வருகிறார்” என்று சொன்னால் போதும், எல்லாம் விரைந்து நடக்கும்.

நான் அப்போது ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன், தங்கமக்காலே பெரும்பாலும் இரவுகளில் மட்டும் தான் வருவார். குடியிருப்பின் ஒவ்வொரு வீடாகச் சென்று உணவு கேட்பதுதான் தங்கமக்காலேயின் வேலை.

தங்கமக்காலே யாரிடமும் பணம் வாங்குவதில்லை, தங்கமக்காலே வேறு எந்தப் பொருட்களையும் யாரிடமும் கேட்டுப் பெறுவதில்லை. எல்லா ஊர்களையும் போலவே சில வீடுகளில் அவருக்குக் கொடுப்பார்கள், வேறு சிலர் அவரை விரட்டுவார்கள்,

தங்கமக்காலேயின் உருவத்தை பல்வேறு கற்பனை முகங்களால் மனதுக்குள் நான் வரைந்து கொண்டிருந்தாலும் அவரது குரல் மட்டுமே அவரது உருவத்தை முழுமையாக்கிக் கொண்டிருந்தது.

என்னைப் பொறுத்தவரையில் தங்கமக்காலே என்பது அந்த அச்சமூட்டும் குரல்தான், அடிவயிற்றில் இருந்து கிளம்பி தொண்டை முழுவதும் அடித்துக் கொண்டு அந்தக் குடியிருப்பு முழுவதும் கேட்கும் அந்தக் குரல் , “த்தங்கமக்காலே………”.

தங்கமக்கலேயின் வருகை முந்தைய இரவில் நிகழ்ந்திருந்தால், குடியிருப்பின் சிறுவர்கள் அனைவருக்கும் அடுத்த நாள் பேசுபொருள் அதுதான்,

“இந்தப் பகுதியில் தான்டா வந்தான், இப்படித்தான் வந்தான், இந்தா பார்ரா அவன் போன தடம், எங்க வீட்டுக்கு வந்தாண்டா, நான் ரூமுக்குள்ள போயிப் படுத்துக்கிட்டேன்” என்று ஆளாளுக்குக் கதை சொல்வார்கள், அதில் கொஞ்சம் ஆர்வமும், நிறையப் பயமும் நிறைந்திருக்கும்.

தங்கமக்காலேயால் நடக்க முடியாது, அவரது இரண்டு கால்களும் ஒரு சாக்குப்பைக்குள் அடைக்கப்பட்டிருக்கும், கைகளை ஊன்றி அவர் சரட்டிக் கொண்டே தான் வருவார் என்று சிலர் சொல்லி இருக்கிறார்கள்.

அப்படி ஒருநாள் இரவில் தங்கமக்காலேயின் குரலும் சரண்டர் ஒலியும் கேட்கத் துவங்கிய பொழுதில் நான் அப்பாவிடம் போய் “அப்பா, தங்கமக்காலேயால் ஏன் நடக்க முடியாது?” என்று கேட்டேன். எனது குரல் நடுங்கிக் கொண்டிருந்தது.

அப்பா, என்னைக் கொஞ்ச நேரம் அமைதியாகப் பார்த்து விட்டு, ” அவரு ராணுவத்துல இருந்தவருப்பா, போர் நடக்கும் போது கண்ணிவெடில காலை இழந்தவரு”.

தங்கமக்காலே குறித்த என்னுடைய அச்சத்தைப் புரிந்து கொண்டவராய் அப்பா என்னருகில் வந்து “தங்கமக்காலே ரொம்ப நல்லவருப்பா, ஒனக்கு அவர ஒரு நாள் அறிமுகம் செஞ்சு வைக்கிறேன்” என்று சொன்னார். எனக்கு இந்தக் கேள்வியை அப்பாவிடம் ஏன் தான் கேட்டோமோ என்றானது.

தங்கமக்காலேவை எதிர் கொள்ளும் அந்த நாளுக்கு அஞ்சி நான் ஒளிந்து கொள்ள ஆரம்பித்தேன், எப்போதாவது தங்கமக்காலே வருவது மாதிரித் தெரிந்தால் நான் உறங்கி விடுவது போலப் பாவனைகள் செய்வது அல்லது வயிற்று வலி என்று பொய் சொல்வது என்று அந்த நாட்களைத் தவிர்க்க ஆரம்பித்தேன்.

அப்பா என்னை விடுவது மாதிரித் தெரியவில்லை. கடைசியாக ஒருநாள் அது நிகழ்ந்தே விட்டது. அன்று அந்தி சாய்வதற்கு முன்னதாக தங்கமக்காலே வந்து விட்டிருந்தார், மொட்டை மாடிகளில் நிறையத் துணிகளும் கொஞ்சம் மாலையும் மிச்சமிருந்தது.

வேலைக்குப் போனவர்கள் வீடு திரும்பவும், மாடிப்படிகளில் பிள்ளைகள் ஆட்டம் போடுவதுமாய் இருக்க, மூலைக் கடையில் நிறையப் பேர் அமர்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்தார்கள், அப்பா, அலுவலகத்தின் ஆவணங்கள் சிலவற்றைச் சரிபார்த்தபடி அப்பத்தா மலேசியாவில் இருந்து வாங்கி வந்த “சேன்யோ” டேப்ரெக்கார்டரில் பாலும் பழமும் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

சரியாக எங்கள் வீட்டு மாடிப்படிகளுக்கு நேராக அந்தக் குரல் எதிரொலித்தது, த்தங்கமக்காலே… இப்போது அப்பா எழுந்து என்னருகில் வந்தார், நான் புரிந்து கொண்டேன், இன்று நான் தங்கமக்காலேவை நேருக்கு நேர் பார்க்க நேரிடப் போகிறது என்று.

எழுந்து அப்பாவிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தேன், அழுது பார்த்தேன், ஆனால், அப்பா அன்று ஒரே முடிவாக இருந்திருக்க வேண்டும், அந்த முடிவு, இன்று நான் எப்படியும் தங்கமக்காலேவைப் பார்த்தும் பேசியும் விட வேண்டும் என்பது தான்.

ஆனது ஆகி விட்டதென்று அப்பாவை இறுக்கப் பிடித்துக் கொண்டு முகத்தைக் கொஞ்சம் திருப்பி குரல் வருகிற திசையில் பார்த்தேன், கால்களை நிரப்பியும், இடுப்பை மறைத்து உராய்வைத் தடுக்கவுமாய் நிறைய சாக்குப்பைகள், கொஞ்சம் அழுக்கடைந்த பாதி திறந்திருந்த மேல்சட்டை…

துணிகளால் சுற்றிக் கட்டப்பட்டிருந்த கைகள், ஒரு நெளிந்து போயிருந்த அலுமினியத் தட்டு, அவரது அடையாளங்கள் இப்படித்தான் இருந்தன, கொஞ்சம் அச்சம் விலக தங்கமக்காலேவின் முகத்தைப் பார்ப்பதற்காக கொஞ்சம் நிமிர்ந்தேன்,

கொஞ்சமாய் வளர்ந்திருந்த வெண்ணிறத்தாடி, அதில் ஒட்டியிருந்த சில சோற்றுப்பருக்கைகள், கூர்மையாக நுனியில் வேர்த்துக் கிடந்த மூக்கு, இவற்றுக்கிடையில் சின்னதாய் விழிகள் ஒரு குழந்தையின் கண்களைப் போல மின்னிக் கொண்டிருந்தன.

நான் நினைத்திருந்த எம்.ஜி.யார் திரைப்படங்களில் வருகிற ஒற்றைக் கண் வில்லனைப் போல அவர் இருக்கவில்லை, மாறாக அவரது கண்களில் ஒரு சாந்தமும், வெளிச்சமும் தென்பட்டது.

அப்பா, தங்கமக்காலேயின் அருகில் சென்று “துரை ஐயா, எப்படி இருக்கீங்க, என்ன ரொம்ப நாளா ஆளக் காணும்” என்று ரொம்பவும் பழகியவர் போலக் கேட்டார்.

“நல்லா இருக்கேன், மூர்த்தி, இவன் யாரு? பெரியவனா?” சின்ன மயம்புள்ளைங்க ரெண்டும் ஐயான்னா அம்புட்டு உசிரு அப்பு, போன வாரம் வரைக்கும் நம்ம வீட்டுலதான் கிடந்துச்சுக, அதுதான் இந்தப் பக்கம் வரல”.

நீங்க, எதுக்கு இவ்வளவு சிரமப்படனும் துரை ஐயா, அம்புட்டு நிலமும், காசும் கிடக்கு வீட்டுல” என்று கொஞ்சம் அக்கறையோடு கேட்டார் அப்பா. அவர்களது உரையாடல் என்னைக் கொஞ்சம் அதிர்ச்சி அடைய வைத்தது, நான் அப்பாவின் முகத்தையும், தங்கமாக்காலேவின் முகத்தையும் மாறி மாறிப் பார்க்கத் துவங்கினேன்.

“காசும், காணியும் நிறைஞ்சு கிடந்தா போதுமா அப்பு, மனசு நெறைய வேணாமா?, பட்டாளத்துல கூட்டம் கூட்டமாச் சனங்களோட இருந்து பழகிட்டேன் மூர்த்தி, இப்போ, பொழுது ஆனா பித்துப் பிடிச்ச மாதிரி ஆயிருது, சனங்க முகத்தையும், சோத்தையும் சாப்பிட்டாத்தேன் மனசு நிறையுது மூர்த்தி.

“என்னைய மாதிரிக் கால் இல்லாத பய சும்மா வந்து திரிஞ்சா, களவாணிப் பயலா மாத்திப் புடுவாங்கே மூர்த்தி, அதுதான் இப்புடி வேஷம் போட்டுத் திரிய வேண்டியிருக்கு, பிச்சை எடுக்க வர்ற பயன்னு தெரிஞ்சாத்தான் காலனிக்குள்ளேயே விடுறாங்கே, என்ன பண்றது?”

சனங்களப் பாத்த மாதிரியும் இருக்கும், சோறு தின்ன மாதிரியும் இருக்கும் மூர்த்தி”. என்று கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார் தங்கமக்காலே.

“பய என்ன சொல்றான்?, எத்தனாவது படிக்கிற பயலே?, பேரு என்ன?” என்னை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டார் தங்கமக்காலே, இப்போது நான் அவரது கண்களை நேருக்கு நேர் பார்த்து என் பெயரைச் சொல்லத் துவங்கினேன்.

“மணிகண்டன் ஐயா, அஞ்சாவது படிக்குறேன்”,

“நல்லாப் படிக்கனும்டா பயலே, அப்பா மாதிரி நல்ல அராசங்க வேலைக்குப் போகணும், என்ன?” என்றார் தங்கமக்காலே, வேகமாகத் தலையை ஆட்டினேன் நான்.

அப்பா இப்போது சொன்னார், “துரை ஐயா உங்க கொரலக் கேட்டாலே அழுக ஆரம்பிச்சான், அதான் நேரக் கூட்டி வந்து உங்களைக் காட்டிரலாம்னு வந்தேன், சாப்பாடு கொண்டு வரச் சொல்லவா?”, என்று கேட்டார்.

“இல்ல, மூர்த்தி பீ டி எல் தம்பி வீட்ல சாப்பிட்டேன், தம்பி கல்யாண விருந்து சாப்பாடு போட்டான். அப்பாவும் தங்கமக்காலேயும் உரையாடிக் கொண்டிருந்ததை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.

சரி, மூர்த்தி, நானும் மெல்லக் கிளம்புறேன், இப்போக் கிளம்பினாத்தான் ஒம்பது மணிக்கு வீடு சேர முடியும்” என்று என் பக்கம் திரும்பினார் தங்கமக்காலே, “மணிகண்டா, நல்லாப் படிக்கணும், என்ன!!!” என்று சொல்லி விட்டுத் தன் மடியில் கை வைத்தார் தங்கமக்காலே.

சாக்குப் பைகளுக்குள் துழாவி ஒரு பத்து ரூபாய் நோட்டை என்னை நோக்கி நீட்டினார் தங்கமக்காலே, நான் அப்பாவைப் பார்த்தேன். அப்பா,

“தொரை ஐயா, எதுக்கு இதெல்லாம்?” என்று தயங்க, “இல்ல மூர்த்தி, பெரியவுங்க குடுக்குறத வேண்டாம்னு சொல்லாத, வாங்கச் சொல்லு” என்று சொல்லவும், அப்பா குனிந்து என்னைக் கீழே இறக்கி விட்டார்.

நான் மெல்ல அவர் அருகில் சென்று அவர் கொடுத்த பத்து ரூபாய் நோட்டை வாங்கி பைக்குள் திணித்துக் கொண்டேன். சாக்குப் பை சரசரக்க அவர் மீண்டும் “த்தங்கமக்காலே… என்று ஒரு முறை அடிக்குரலில் கத்தியவாறு நகரத் துவங்கினார்.

அப்பாவும் நானும் வீடு திரும்ப, நான் அமைதியாக இருந்தேன், எனக்குள் முழுவதுமாய் அப்பாவும், தங்கமக்காலேவும் உரையாடிய சொற்கள் நிரம்பி இருந்தன.

நீண்ட நேரத்துக்குப் பின்னர் “அப்பா, தொரை ஐயா வீடு எங்கே இருக்கு?, இனி அவர் எப்போ வருவார்?” என்று கேட்டேன், அப்பா மீண்டும் ஒரு முறை என்னை அமைதியாகப் பார்த்து விட்டு “உனக்கு இப்போ அவரப் பாத்துப் பயம் இல்லைல்ல மணி” என்று கேட்டார்.

“இல்லப்பா” என்று தலையை ஆட்டினேன். மனுஷங்க எல்லாரும் ரொம்பக் கிட்டப் போய்ப் பாத்தா நல்லவங்க தான் மணி, நாமதான் பக்கத்துல போய் யாரையும் பாக்குறதில்ல” என்றார்.

ஒரே இரவில் தங்கமக்காலே துரை ஐயாவாக எனக்குள் மாற்றம் பெற்றிருந்தார். தொலைவில் “தங்க………மக்களே……….” என்று இம்முறை மிகத் தெளிவாக துரை ஐயா கத்துவது என் காதில் கேட்டது.

அவர் கொடுத்த பத்து ரூபாய் நோட்டு மிகுந்த கனமானதாகவும், ஈரமானதாகவும் சட்டைப் பையில் துருத்திக் கொண்டிருக்கிறது, அப்பாவும், நானும் இரவு உணவுக்குப் பின் உறங்கப் போகும் போது துரை ஐயா வீட்டுக்குப் போயிருப்பார்.

மனிதர்களைப் பார்க்க வேண்டும், அவர்களோடு உணவு உட்கொள்ள வேண்டும் என்கிற அவரது ஏக்கம் அப்போது கொஞ்சம் வடிந்திருக்கும், துரை ஐயாவும், அப்பாவும், நானும் உறங்கிய பின்னும் உலகம் ஒவ்வொரு தனி மனிதர்களுக்குள்ளும் பொதிந்து கிடக்கிற பல கதைகளையும், அதற்குப் பின்னிருக்கிற காரணங்களையும் விழித்தபடி அசை போட்டுக்கொண்டு விழித்திருக்கும்.

Leave A Reply