அந்த‌ நூறு ஒட்ட‌க‌ங்க‌ள் – Fazil Freeman Ali

Share

அன்வ‌ர் பிற‌ந்த‌து வ‌ள‌ர்ந்த‌து எல்லாமே ராஜ‌ஸ்தான் மாநில‌த்தில். ஓர‌ள‌வுக்கு வ‌ச‌தியான‌ குடும்ப‌ம்தான். அன்வ‌ர் பிற‌ந்த‌ கிராம‌ம் பாலை நில‌த்தை ஒட்டியிருந்ததால் இங்கு யாரும் பெரிதாக‌ விவ‌சாய‌ம் செய்வ‌து கிடையாது. கால்ந‌டைக‌ள் ம‌ற்றும் சிறு குறு தொழில்க‌ள்தான் அங்குள்ள‌ மக்க‌ளின் பிர‌தான‌ வாழ்வாதார‌ம்.

பால்ய‌ம் க‌ட‌ந்து இருப‌துக‌ளில் கால‌டியெடுத்துவைத்த‌ ம‌க‌னுக்கு பெற்றோர் ம‌ண‌முடித்து வைத்த‌ன‌ர். சில‌ ஆண்டுக‌ளில் த‌ந்தையானான் அன்வ‌ர்.

வெளிப்பார்வைக்கு எல்லாமே ந‌ன்றாக‌ போய்க்கொண்டிருப்ப‌து போல் தோன்றினாலும் அன்வ‌ருக்கு எப்போதும் ஏதாவ‌து க‌வ‌லைக‌ள் ம‌ன‌துக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். இதுதான் என்றில்லை, எந்த‌ நிக‌ழ்வு ந‌ட‌ந்தாலும் அதில் ஏதாவ‌தொரு குறைகாண்ப‌து அவ‌னுக்கு இய‌ல்பாக‌வே அமைந்துவிட்ட‌ ப‌ண்பு. மூன்றுபேர் இருக்கும் ஒரு புகைப்ப‌ட‌த்தை காட்டினால், அதில் இல்லாத‌ நான்காவ‌தொரு ந‌ப‌ரை குறிப்பிட்டு, “அவ‌ர் ஏன் இந்த‌ புகைப்ப‌ட‌த்தில் இல்லை..?” என்றுதான் முத‌லில் கேட்பான், அப்ப‌டியொரு eternal pessimist, நித்திய‌ அவ‌ந‌ம்பிக்கையாள‌ன்.

நாட்க‌ள் இப்ப‌டியே க‌ட‌க்க‌, ஒருநாள் அந்த‌ கிராம‌த்திற்கு ஒரு அறிஞ‌ர் வ‌ந்தார். அடிப்ப‌டையில் ஒட்ட‌க‌ வியாபாரியான‌ அவ‌ர் செல்வ‌ந்த‌ரும்கூட‌. கிராம‌த்தை ஒட்டிய‌ பாலைவ‌ன‌ப்ப‌குதியில் ப‌ல‌ கூடார‌ங்க‌ள் அமைத்து, ஷாமியானாக்க‌ள் க‌ட்டி, அறிஞ‌ரும் அவ‌ருட‌ன் வ‌ந்திருந்த‌வ‌ர்க‌ளும் த‌ங்கியிருந்த‌ன‌ர். சில‌ நாட்க‌ளிலேயே அறிஞ‌ரின் புக‌ழ் ஊரெங்கும் ப‌ர‌வி, ப‌ல‌ரும் அவ‌ரை காண‌வும் அவ‌ருட‌ன் உரையாடி த‌ம் பிர‌ச்சினைக‌ளுக்கு ஆலோச‌னை கேட்க‌வும் வ‌ர‌த்துவ‌ங்கின‌ர். அன்வ‌ரும் மாலையில் த‌ன் க‌டையை சாத்திய‌பிற‌கு அவ‌ரை காண‌ச்சென்றான்.

கூட்ட‌ம் குறைந்து அறிஞ‌ர் த‌னியாக‌ இருக்கும்வ‌ரை காத்திருந்து அவ‌ரை அணுகி ச‌லாம் சொன்ன‌வ‌ன் அவ‌ர‌ருகில் ப‌வ்ய‌மாக‌ அம‌ர்ந்தான். “என்ன‌ப்பா விச‌ய‌ம்..? சின்ன‌வ‌ய‌சுக்கார‌ன் முக‌த்தில் ஏன் இவ்வ‌ள‌வு க‌வ‌லை ரேகைக‌ள்…?” என்று ப‌ரிவோடு கேட்டார் அறிஞ‌ர்.

“ஒன்றா இரண்டா பிர‌ச்சினைக‌ள், எதை சொல்ல‌..?” என்று இழுத்த‌ அன்வ‌ர், சிறுவ‌ய‌து முத‌லே பிர‌ச்சினைக‌ள் த‌ன்னை தொட‌ர்ந்து துர‌த்துவ‌தாக‌வும். விப‌ர‌ம் தெரிந்த‌ நாள்முத‌ல் பிர‌ச்சினை இல்லாத‌ நாட்க‌ளையே தான் ச‌ந்தித்த‌தில்லை என்றும் வேத‌னையோடு சொன்னான். அனுதின‌மும் ஐந்து வேளையும் ந‌மாஸ் செய்து துஆ கேட்கிறேன், குரான் ஓதுகிறேன், என்ன‌ செய்தும் எந்த‌ விடிவும் இல்லை என்று சொல்லும்போது ஏற‌க்குறைய‌ அழுதேவிட்டான் அன்வ‌ர். “என‌க்கு ம‌ட்டும் ஏங்க‌ இந்த‌ அவ‌ல‌ வாழ்க்கை..?” என்று முக‌த்தில் கைவைத்து அழுத‌வ‌னை க‌னிவோடு தேற்றிய‌ அறிஞ‌ர், “இன்றிர‌வு இங்கே த‌ங்கு, உன‌க்கு ஒரு வேலை த‌ருகிறேன். நாளை காலையில் உன் பிர‌ச்சினையை தீர்க்கும் வ‌ழிவ‌கை சொல்கிறேன், ச‌ரியா..?” என்றார்.

ஆக‌ட்டும் ஐயா, நான் வீட்டுக்குப்போய் இர‌வு உங்க‌ளோடு த‌ங்குவ‌தை சொல்லிவிட்டு உண‌வும் உண்டுவிட்டு ஓடி வ‌ருகிறேன் என்று சொல்லிச்சென்றான்.

திரும்பி வ‌ந்த‌வ‌னை அழைத்த‌ அறிஞ‌ர் ப‌ல‌ ஒட்ட‌க‌ங்க‌ள் க‌ட்டிவைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ கொட்ட‌கைக்கு அழைத்துச் சென்றார். “உன் வேலை இன்றிர‌வு இந்த‌ ஒட்ட‌க‌ங்க‌ளை பார்த்துக்கொள்வ‌து. இங்கு நூறு ஒட்ட‌க‌ங்க‌ள் உள்ள‌ன‌. இவை அனைத்தும் ச‌ற்று நேர‌த்தில் தூங்கிவிடும், அவை உட்கார்ந்த‌ப‌டி தூங்குவ‌து அவ‌சிய‌ம். அம‌ர்ந்து ஓய்வெடுத்தால்தான் ஒட்ட‌க‌த்தின் கால்க‌ளுக்கு முழு ஓய்வும் கிடைக்கும், நாளை அவை சுறுசுறுப்பாக‌வும் செய‌ல்ப‌டும். ஒட்ட‌க‌ங்க‌ள் ஓய்வெடுத்தபின் நீயும் இந்த‌ க‌ட்டிலில் ப‌டுத்து தூங்கு” என்று கூறிவிட்டு த‌ன் குடிலுக்கு சென்றார்.

பொன்னிற‌த்தில் ஜொலித்த‌ ம‌ண‌ல் மேடுக‌ளின் பின்னால் சூரிய‌ன் மெல்ல‌ ம‌றைந்து இர‌வின் இருள் பாலை எங்கும் பாய்விரித்த‌து. மேக‌ங்க‌ள‌ற்ற‌ வானில் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் க‌ண்சிமிட்டி சிரித்த‌ன‌, ஏதோவொரு கொட்ட‌கையிலிருந்து க‌ச‌ல் இசை காற்றில் க‌ல‌ந்து காதில் தாலாட்டு பாடிய‌து, ஒவ்வொன்றாய் ஒட்ட‌க‌ங்க‌ள் மெல்ல‌ அம‌ர்ந்து ஓய்வெடுக்க‌த் துவ‌ங்கின‌.

சில‌ ம‌ணிநேர‌த்தில் ஏற‌க்குறைய‌ எல்லா ஒட்ட‌க‌ங்க‌ளும் அம‌ர்ந்துவிட‌, இன்ன‌மும் நின்றுகொண்டிருந்த‌ சில‌ ஒட்ட‌க‌ங்க‌ளை த‌ட‌விக்கொடுத்து உட்கார‌வைக்க‌ முய‌ற்சித்தான் அன்வ‌ர்.

அவை உட்கார‌ எத்த‌னிக்கையில் கொட்ட‌கையின் இன்னொரு மூலையில் சில‌ ஒட்ட‌க‌ங்க‌ள் எழுந்து நின்ற‌ன‌. மெல்ல‌ அவை மீண்டும் உட்காரும்போது வேறு சில‌ ஒட்ட‌க‌ங்க‌ள் எழுந்த‌ன‌. இப்ப‌டியே சில‌ எழும்போது சில‌ அம‌ர்வ‌தும், இவை எழும்போது ம‌ற்ற‌வை அம‌ர்வ‌துமாக‌ முழு இர‌வும் ஓடிப்போன‌து.

காலையில் க‌ண்க‌ள் சிவ‌ந்து சோர்வோடு க‌ட்டிலில் ப‌டுத்திருந்த‌ அன்வ‌ரை ஒரு குவ‌ளை சுலைமானியோடு ச‌ந்தித்து, “அஸ்ஸ‌லாமு அலைக்கும்” என்று முக‌ம‌ன் கூறிய‌ அறிஞ‌ர், “ச‌ரியா தூங்க‌வில்லையா த‌ம்பி, க‌ண்க‌ள் சிவ‌ந்திருக்கு..?” என்று அக்க‌ரையோடு கேட்டார்.

“எப்ப‌டீங்க‌ய்யா தூங்குற‌து..? ஒட்ட‌க‌ங்க‌ள் என்னை தூங்க‌வே விட‌வில்லை” என்று ச‌லிப்போடு சொன்னான் அன்வ‌ர்.

“ஏம்பா, ஒட்ட‌க‌ங்க‌ள் உன்னை மிதித்தன‌வா..?” என்று க‌வ‌லையோடு கேட்ட‌வ‌ரிட‌ம், “இல்லீங்க‌ய்யா… ஒன்றை உட்கார‌ வைத்தால் இன்னொன்று எழுந்துவிடுகிற‌து. அது உட்காரும்போது இன்னொன்று எழுகிற‌து… இப்ப‌டியே ஓடிப்போச்சு முழு இர‌வும்” என்றான் அன்வ‌ர்.

“நீ த‌ட‌விக்கொடுத்து சாந்த‌ப்ப‌டுத்தாம‌ல் எந்த‌ ஒட்ட‌க‌மும் உட்கார‌வில்லையா, என்ன‌..?” என்று கேட்டார் பெரிய‌வ‌ர். “அப்ப‌டியெல்லாம் இல்லீங்க‌, கொஞ்ச‌ நேர‌த்தில் நான் சோர்வ‌டைந்துவிட்டேன். அவை தானே அம‌ர்ந்த‌ன‌, தானே எழுந்த‌ன‌. நான் தூங்காம‌ல் அவ‌ற்றையே க‌ண்காணித்துக்கொண்டு இருந்தேன்” என்றான்.

அறிஞ‌ர் சொன்னார், “உன் வாழ்வின் பெரும்பாலான‌ பிர‌ச்சினைக‌ளும் இதே மாதிரித்தான். அவை வ‌ரும் அவை போகும். நீயோ ஒவ்வொன்றையும் க‌ண்கொட்டாம‌ல் பார்த்துக்கொண்டும் க‌ர‌ங்க‌ளில் ப‌ற்றிக்கொண்டு தொங்குகிறாய். ஒரு க‌ட்ட‌த்துமேல் எங்கே அடுத்த‌ பிர‌ச்சினை எழும் என்றே பார்த்துக்கொண்டிருக்கிறாய் அதை பிடித்துத்தொங்க‌. இது ஒருவித‌ victim mentallity. உன்னைத்தேடி பிர‌ச்சினை வ‌ராத‌போதுகூட‌ நீயே பிர‌ச்சினைக‌ளை தேடிச்செல்கிறாய்”

“பார்த்தாய் அல்ல‌வா, நீ எதுவும் செய்ய‌ம‌லேயே எழுந்த‌ ஒட்ட‌க‌ங்க‌ள் ச‌ற்று நேர‌த்தில் ப‌டுத்துவிடுவ‌தை. அப்போதே நீயும் க‌ட்டிலில் ப‌டுத்து ஓய்வெடுத்திருக்க‌லாம். ஆனால் நீ எப்போது அடுத்த‌ ஒட்ட‌க‌ம் எழும் என்று எதிர்பார்த்து விழித்திருந்தாய். இதைத்தான் உன் வாழ்கையிலும் நீ செய்துகொண்டிருக்கிறாய்”

“ஆனால் நான் தின‌மும் இறைவ‌னை தொழுகிறேனே, பிரார்திக்கிறேனே. அவ‌ன் என் வாழ்வில் பிர‌ச்சினைக‌ள் எழாம‌ல் செய்திருக்க‌லாமே…” சொல்லும்போதே தொண்டை க‌ட்டிய‌து அன்வ‌ருக்கு.

“நீ ஒரு அரேபிய‌ ப‌ழ‌மொழி கேட்ட‌தில்லையா…?” புன்சிரிப்போடு தொட‌ர்ந்தார் பெரிய‌வ‌ர், “அல்லாவை ந‌ம்பு அதேவேளை ஒட்ட‌க‌த்தை க‌ட்டி வை, என்று…”

“ம்ம்ம்…” என்று த‌லையாட்டினான் அன்வ‌ர்.

“அல்லா மீது நீ வைத்திருப்ப‌து உன் ந‌ம்பிக்கை. தூங்கும்போது ஒட்ட‌க‌த்தை கொட்ட‌கையில் ஒழுங்காக‌ க‌ட்டிவைப்ப‌து அறிவு. உன‌க்கு ந‌ம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒட்ட‌க‌த்தை க‌ட்டிவைத்தால் ம‌ட்டுமே அது பாதுகாப்பாக‌ இருக்கும். உன‌க்கு எவ்வ‌ள‌வுதான் இறைந‌ம்பிக்கை இருந்தாலும் இடைவிடாது பிரார்தித்தாலும் ஒட்ட‌க‌த்தை க‌ட்டிவைக்க‌த் த‌வ‌றினால், உன் ந‌ம்பிக்கையும் துஆவும் ஒட்ட‌க‌த்தை காப்பாற்றாது, அவை த‌ன்போக்கில் எங்கோ போய்விடும்”

“இப்ப‌ நான் என்ன‌த்தான் செய்ற‌து..?”

“இர‌வில் குழ‌ந்தை அழுவ‌துமுத‌ல், ச‌மைய‌லில் உப்பு கொஞ்ச‌ம் குறைவாக‌வோ கூடுத‌லாக‌வோ இருப்ப‌து வ‌ரை; உன் வியாபார‌ம் பெரிய‌ லாப‌ம் த‌ராத‌து முத‌ல், முக‌நூலில் யாரோ உன்னை திட்டி போடும் பின்னூட்ட‌ம் வ‌ரை… எல்லாமே உன‌க்கு பிர‌ச்சினைக‌ளாக‌ தெரிகிற‌து. எல்லாவ‌ற்றுக்கும் எதிர்வினையாற்றுகிறாய். அத‌னால் உன் ம‌ன‌ அமைதியை நீயே கெடுக்கிறாய்”

“உண்மையில் உன் வாழ்வில் நீ ச‌ந்திக்கும் பிர‌ச்சினைக‌ள் அல்ல‌ உன் உண்மையான‌ பிர‌ச்சினைக‌ள். அந்த‌ பிர‌ச்சினைக‌ளை நீ எப்ப‌டி எதிர்கொள்கிறாய் என்ப‌துதான் உன் ஆளுமைக்கான‌ உண்மையான‌ ப‌ரீட்சை”

“சில‌ விச‌ய‌ங்க‌ளை க‌ட‌ந்துபோக‌ப் ப‌ழ‌க வேண்டும், சில‌வ‌ற்றை ஏற்றுக்கொண்டு வாழ‌வேண்டும், இன்னும் சில‌வ‌ற்றை க‌ண்டுகொள்ளாம‌ல் இருந்தாலே போதும், இந்த‌ ஒட்ட‌க‌ங்க‌ளைப்போன்று அவை தானே அட‌ங்கிவிடும், அழும் குழ‌ந்தை கொஞ்ச‌ம் நேர‌த்தில் தானே அமைதியாகிவிடுவ‌து போல்”

“உன் சுய‌ம‌ரியாதையை சீண்டுத‌ல் போன்ற‌ மிக‌ச்சில‌ பிர‌ச்சினைக‌ளை ம‌ட்டும்தான் எதிர்கொண்டு போராட‌வேண்டும். ஆனால் அத‌ற்கு உன்னிட‌ம் ஆற்ற‌ல் இல்லாம‌ல் போகும‌ள‌வுக்கு நீ தேவைய‌ற்ற‌ விச‌ய‌ங்க‌ளிலெல்லாம் உன் ச‌க்தியை விர‌ய‌ம் செய்துகொண்டு இருக்கிறாய்”

“இப்போது வீட்டுக்குப்போய் குளித்துவிட்டு கொஞ்ச‌ம் ஓய்வெடு. பின்ன‌ர் ம‌னைவி ம‌க்க‌ளோடும் பெற்றோரோடும் இன்முக‌த்தோடு கொஞ்ச‌ம் நேர‌ம் செல‌விடு. உன்னோடு த‌ன் வாழ்கையை ப‌கிர்கிற‌வ‌ர்க‌ள் உன் வாழ்கையையும் த‌ம்மோடு ப‌கிர்கிறார்க‌ள். உன் நிம்ம‌தியும் ம‌கிழ்ச்சியும் அவ‌ர்க‌ளோடு பின்னிப்பிணைந்த‌து. அவ‌ர்க‌ளை உதாசீன‌ம் செய்துவிட்டு நீ ம‌ட்டும் எப்ப‌டி நிம்ம‌தியாக‌ வாழ்ந்துவிட‌ முடியும்…?”

“அத‌ன்பின் உன் க‌ட்டுப்பாடிலுள்ள‌, உன்னால் தீர்க்க‌முடிந்த‌ முக்கியமான‌ பிர‌ச்சினைக‌ளைப்ப‌ற்றி ம‌ட்டும் யோசி. அதை எப்ப‌டி ச‌ரி செய்வ‌து என்று ந‌ன்கு சிந்தித்து அத‌ன்பின் செய‌ல்ப‌டு. வெறும் க‌வ‌லைக‌ளும் பிரார்த்த‌னைக‌ளும் எந்த‌ பிர‌ச்சினையையும் தீர்க்காது. இறைவ‌னிட‌ம் கையேந்தி பிரார்த்திப்ப‌தால் பிர‌ச்சினைக‌ள் தீர்ந்துவிடுமென்றால் இந்த‌ உல‌கில் ஏழைக‌ளே இருக்க‌மாட்டார்க‌ளே, இல்லையா..?”

“இவ்வுல‌கில் யாராவ‌து, இறைவா என‌க்கு க‌ஷ்ட‌த்தை குடு, துன்ப‌த்தை தா, பிர‌ச்சினைக‌ளை வாரிவ‌ழ‌ங்கு என்றா பிரார்த்திக்கிறார்க‌ள்..? ஆக்க‌பூர்வ‌மாக‌ சிந்தித்து எடுக்கும் முடிவுக‌ளாலும் செய‌ல்பாடுக‌ளாலும் ம‌ட்டுமே தீர்வுக‌ளை எட்ட‌முடியும்”

இப்போதும் அவ‌னுக்கு பிர‌ச்சினைக‌ள் அவ்வ‌ப்போது ஏற்ப‌ட‌த்தான் செய்கிற‌து, ஆனால் இப்போதெல்லாம் அன்வ‌ர் ச‌தா முக‌த்தை தொங்க‌ப்போட்டுக்கொண்டு அலைவ‌தில்லை. அத‌னால் குடும்ப‌த்தின‌ர் ம‌கிழ்ச்சியோடு இருக்க‌, அந்த‌ ம‌கிழ்ச்சி அன்வ‌ரை மேலும் உற்சாக‌த்தோடு செய்ப‌ட‌வைக்கிற‌து….

Leave A Reply