வங்கச் சிறுகதை படம் பிடிக்கும் “பங்கமான” தொற்றுநோய் அரசியல்!

Share

கொரோனா தொற்று நோய் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், வங்கமொழி சிறுகதை ஒன்று உலகையே கலங்க வைக்கும் தொற்று நோய் அரசியலை அந்தக் காலத்திலேயே கற்பனை செய்திருக்கிறது. அந்த பயங்கரமான கற்பனை உங்களுக்காக…

1946 ஆம் ஆண்டு வங்க மொழி கதாசிரியர் ஷரடிந்து பாண்டியோபாத்யாய ஒரு சிறுகதை எழுதினார். அந்தக் கதையின் தலைப்பு ‘ஷாடா பிருதிபி’ அல்லது ‘வெள்ளை உலகம்.’

கதாசிரியர் பண்டோபாத்யாய

கதை லண்டனில் தொடங்குகிறது. கதாநாயகனான சர் ஜான் வொய்ட் ஒரு விஞ்ஞானி பிளஸ் தத்துவஞானி.

1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி அதிகாலை, சர் ஜான் திடீரென்று விழித்தெழுந்தார். அவருடைய 80 ஆண்டு வாழ்க்கையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்த குழப்பமான புதிருக்கு தீர்வு கிடைக்கிறது.

“ஆயிரம் அணுகுண்டுகளின் தாங்கமுடியாத பிரகாசத்தைப் போல,” ஒரு புத்திசாலித்தனமான யோசனை அவரது தலைக்குள் மின்னலைப் போல பளிச்சிடுகிறது. உடனடியாக அவர் பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.யை அழைத்தார். அவரிடம், நடுங்கும் குரலில், “வெள்ளை இனத்தின் உயிர்ப்புக்காக” தான் ஒரு தீர்வை கண்டுபிடித்திருப்பதாக கூறினார்.

1947 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி இல் டோரிக் கட்சியின் செய்தித்தாள் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அந்தக் கட்டுரை வெள்ளை இனத்தின் நலனுக்கான கொடூரமான திட்டத்தை முன்மொழிந்திருந்தது.

உலகம் முழுவதும் அதிகரிக்கும் மக்கள்தொகை மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக அந்தக் கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார். மால்தூசியன் கோட்பாடுகளையும், மக்களுடைய வாழ்க்கை முறையை மேம்படுத்தும் வழிமுறைகளையும் பயன்படுத்தி அவர் தனது வாதங்களை முன்வைத்திருந்தார். ஆனால், வெள்ளை இனத்தின் நல்வாழ்வுக்காக கருப்பு, மஞ்சள், பிரவுன், கலப்பு என அனைத்து நிற இனங்களையும் அழிக்க வேண்டியதும், தக்கன பிழைக்கும் என்ற கோட்பாட்டை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும் தனது கட்டுரையில் கூறியிருந்தார்.

இது வெறும் பகல் கனவு என்று பத்திரிகையின் பெரும்பாலான வாசகர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால், உண்மையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். அமெரிக்காவில் 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி முதல் நிகழ்வு நடந்தது. கருப்பர்கள் நீண்டகாலமாக போராடி, தங்களுக்காக ஒரு மாநிலத்தை உருவாக்கினார்கள். அரிஸோனா மாநிலத்துக்கும் மெக்ஸிகோவுக்கும் இடையே மெக்ஸாரைஸ் என்ற மாநிலத்தை உருவாக்கினார்கள்.

அந்தக் குறிப்பிட்ட நாளில் ஆளில்லாத விமானம் ஒன்று மெர்காரைஸ் மாநிலத்தின் தலைநகர் மீது பறந்தது. திடீரென்று ஒரு அணுகுண்டை வீசி வெடிக்கச் செய்தது. அந்த குண்டுவெடிப்பில் தலைநகர மக்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று ராய்ட்டர் நிருபர் கூறினார்.

இதே பாணி, அடுத்த தென்னாப்பிரிக்காவில் தொடர்கிறது. வெள்ளை இனம் மட்டுமே உலகில் இருக்க வேண்டும் என்பதற்கான அடுத்த முயற்சியாக தென்னாப்பிரிக்காவில் இருந்த வெள்ளை இனத்தவர் அனைவரையும் ஆஸ்திரேலியாவுக்கு இடம் மாற்றினார்கள்.

வெள்ளையர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர். மர்மமான தொற்றுநோயின் பிடியில் சிக்கி கருப்பின மக்கள் அனைவரும் பலியானார்கள். அதேசமயத்தில், தென்னமெரிக்க பத்திரிகைகள் அடையாளம் தெரியாத வரைஸ் குறித்து செய்திகளை பரப்புகின்றன. அந்த வைரஸ் பாதிக்கும் உடலில் எந்த பின்விளைவும் இருக்காது. ஆனால், வைரஸ் தாக்கியதும் அனைவரும் பலியாவார்கள் என்று அந்த செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.

படிப்படியாக, வெள்ளை இனம் வாழாத உலகின் பல நாடுகளில் இந்த தொற்றுநோய் பரவத் தொடங்கியது. கோடிக்கணக்கான மக்களை பலிகொண்டது. சீனா, பர்மா, பிலிப்பைன்ஸ் தீவுகள் என கணக்கற்ற நாடுகளில் இந்த நோய் பரவியது. அதைத்தொடர்ந்து மக்கள் வெளியில் நடமாடப் பயந்து, தங்களை தனிமைப் படுத்திக் கொண்டார்கள்.

ஆனால், இந்தியாவில் எந்த மாற்றமும் இல்லை.

விடுதலைக்கு பிறகு அனைத்து வெள்ளையரும் இந்தியாவை விட்டு வெளியேறினார்கள். அதன்பிறகு, 1949 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் தேதி கல்கத்தாவில் முதல் மரணம் நிகழ்ந்தது. சில நாட்களிலேயே இந்த வைரஸ் காட்டுத்தீ போல பரவியது. விடுதலை பெற்ற இந்தியாவின் மக்கள் அனைவரும் பூச்சிகளைப் போல மடிந்தனர். (பண்டோபாத்யாய ஒன்றுபட்ட இந்தியாவை கற்பனை செய்திருந்தார்)

ஆகஸ்ட் 6, 1950 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள், அதாவது, சர் ஜான் தனது கண்டுபிடிப்பை வெளியிட்ட நான்கு ஆண்டுகளுக்குள், உலகின் வெள்ளை அல்லாத அனைத்து இனங்களும் பூமியின் முகத்திலிருந்து அழிக்கப்படுகின்றன. இதற்கிடையே 1949 ஆம் ஆண்டு அவருடைய 83 ஆவது வயதில் சர் ஜானுக்கு நோபல் பரிசே வழங்கப்பட்டுவிட்டது.

பண்டோபாத்தியாயவின் இந்தக் கதை தொற்று நோய்களுக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவை பரிசீலனை செய்ய நம்மை தூண்டுகிறதா இல்லையா?

Leave A Reply