உள்ளூர்க்காரனுக்கு பேய்க்கு பயம்

Share

உள்ளூர்க்காரன் பேய்க்கு பயப்படுவான். வெளியூர்க்காரன் தண்ணியைப் பார்த்து பயப்படுவான் என்று சொல்வார்கள். அதாவது, உள்ளூர்க்காரனை ஊரைச் சுற்றி பல இடங்களில் பேய் இருப்பதாக சொல்லி வளர்த்திருப்பார்கள். அதனால் அந்த இடங்களுக்குப் போக அவன் பயப்படுவான். வெளியூர்க்காரன் கொஞ்சூண்டு தண்ணீர் கிடந்தாலும் அது ஆழமா இருக்குமோ என்று கால் வைக்கவே பயப்படுவான்.

சிறு வயதிலிருந்தே பேய், பிசாசு, பில்லி சூனியம், செய்வினை, வசியம் என்று பலவிதமான விஷயங்களைச் சுற்றியே நாம் வளர்கிறோம். நமக்குப் பிடிக்காவிட்டாலும், எப்படியும் இந்த விஷயங்களை படித்தோ, கேட்டோ தெரிந்து கொள்கிறோம்.

வேப்பமர உச்சியில் நின்னு

பேய் ஒன்னு ஆடுதுன்னு 

விளையாடப் போகும்போது 

சொல்லி வைப்பாங்க… என்று பட்டுக்கோட்டை பாட்டு ஒன்று இருக்கிறது. அதாவது சின்ன வயதிலேயே பேய் பயத்தை ஊட்டி வளர்க்கப்படுவதாக சொல்வார். ஆனால், இப்போதெல்லாம், பேயை காமெடிக் கதாபாத்திரமாக்கி சினிமா எடுத்து காசு சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

அதேசமயம், அந்தச் சினிமாக்களிலும் பேயோட்டிகளின் முக்கியத்துவம் குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்வார்கள். இன்றுவரை பேய் இருக்கிறதா? இல்லையா? என்ற குழப்பம் நீடிப்பதே அதற்குக் காரணம். அந்த அளவுக்கு மனிதனின் பரிணாம வளர்ச்சியில் மந்திர, தந்திரங்களும், மாயாஜாலங்களும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து மத நம்பிக்கைகளிலும் பேய் பிசாசுகளுக்கு முக்கிய இடம் இருக்கிறது. 

இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பேயோட்டுவது, பில்லி சூனியம் வைப்பது போன்ற வேலைகளுக்கு இப்போதும் ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள். தென்மேற்கு இங்கிலாந்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குகைகள் இருக்கின்றன. அந்தக் குகைகளில் கொடூரமான சூனியக்காரர்களாக பணியாற்ற ஆண்களும் பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரம் செய்தார்கள். அவர்களுடைய வேலை என்ன தெரியுமா? சூனியக்காரர்கள் போல வேஷம்போட்டு பயங்கரமாக அலறும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். அப்படி தேர்வாகும் நபருக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் பவுண் சம்பளமாம்.

இந்தியாவிலும் இப்படிப்பட்ட ஆட்கள் நிறையவே சம்பாதிக்கிறார்கள். குறிப்பாக கேரளா, மேற்கு வங்கம், ஆந்திராவின் கோதாவரி மாவட்டம் உள்ளிட்ட சில பகுதிகள் இதுபோன்ற வேலைகளுக்கு முக்கியமான இடங்களாக இருக்கின்றன.

தமிழ்நாட்டில் காலங்காலமாக கொல்லிமலைதான் இதற்கு புகழ்பெற்றது. கொல்லிமலையைத் தவிர கேரளா மாநிலம் திரிச்சூரில் குட்டிச்சாத்தானுக்கு கோவிலே கட்டி வழிபடுகிறார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ளது கொல்லிமலை. மூலிகை வாசத்துடன் நெடிதுயர்ந்த மரங்களுடன் இந்த மலை நம்மை வரவேற்கிறது. இங்கு கொற்றவை எனும் எட்டுக் கை அம்மன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலில் பவுர்ணமி மற்றும் அமாவசைக்கு மாந்த்ரீகம், குறி சொல்கிறவர்கள்  கூடுவார்கள். ஆனால் நாம் பார்க்கப்போவது அதுவல்ல. அந்த மலை அடிவாரத்தில், இன்னொரு கிராமம் இருக்கிறது. பேயோட்டுவதையேஅந்தக் கிராமத்தினர் தொழிலாக செய்கிறார்கள் என்றால் உங்களால் நம்பக்கூட முடியாது. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். அந்தக் கிராமத்தின் பெயர் மலைவேப்பன்குட்டை.

தமிழகத்தின் செழிப்பான கிராமங்களைப்போல இதுவும் சாதாரண கிராமம்தான். ஆலமரத்தடியில் பஸ் ஸ்டாப். அதற்கு பக்கத்திலேயே டீக்கடை. பொதுவாக பச்சைப் போர்வை போர்த்தி அமைதியாக இருக்கும் இந்த கிராமத்தின் அமைதி, ஞாயிற்றுக்கிழமைகளில் காணாமல் போகும். அதிலும் அமாவசை, பவுர்ணமி என்றால் கூட்டம் அலைமோதத் தொடங்கிவிடும். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் இந்தக் கிராமத்தை மொய்க்கத் தொடங்குகிறது. 

பங்காளிச்சண்டை, சொத்துப் பிரச்சனை, பேய் ஓட்டுவது, காணாமல் போன பொருட்களை மீட்பது என்று பல பிரச்சனைகளோடு அவர்கள் இங்கே வருகிறார்கள்.

மலைவேப்பன்குட்டையை நெருங்கும் வாகனங்களையும், பஸ்களில் இருந்து பஸ்ஸ்டாப்பில் இறங்கும் மக்களையும் ஒரு கூட்டம் ஓடிஓடி வழிமறிக்கும். பிரச்சனைகளோடு வருகிறவர்களின் தேவையை அறிந்து கொண்டு, குறி சொல்கிறவர், பேயோட்டுகிறவர், வசியம் செய்கிறவர், செய்வினை வைப்பவர், செய்வினை எடுப்பவர், மை வைப்பவர் என அவரவர் தேவைக்கு தகுந்தபடி மக்களை அழைத்துச் செல்வார்கள். இதற்காக கமிஷனும் பெற்றுக் கொள்கிறார்கள். கிராமத்தில் உள்ள பெரும்பாலோர் இதைத்தான் செய்கிறார்கள். இவர்களுக்கு இதுவே வருமானம் என்கிறார்கள்.

சித்தரிக்கப்பட்ட காட்சிகள்….

மலைவேப்பன்குட்டை கிராமத்துக்கு அருகில் உள்ளது உடையான் பாளையம் கிராமம். விவசாயமும் கால்நடை பண்ணையும்தான் முக்கியத் தொழில்கள். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். மூவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. மகன் சதீஷ் சென்னையில் வேலை செய்கிறார். வார கடைசியில் ஊருக்கு வருவது வழக்கம். சண்முகம் தனது மனைவி மற்றும் மருமகள்களுடன் அமைதியாக வாழ்க்கையை கழித்து வந்தார். இந்நிலையில்தான் ஒருநாள் சண்முகத்தின் மனைவிக்கும் மருமகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது, தனது மருமகளை விலக்க முயன்றார் சண்முகம். ஆனால், அந்தப் பெண் நிலை தடுமாறி வாசல்படியில் தலைமோதி இறந்தார். பதறிப்போன சண்முகம், தனது மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக ஜோடித்துவிட்டார்.

மனைவி இறந்த தகவல் அறிந்து ஓடிவந்த சதீஷ், மனைவியின் மரணத்தை ஜீரணிக்க முடியாமல் தவித்தார். வேலைக்கு போகாமல் ஊரிலேயே தங்கினார். மன உளைச்சல் காரணமாக பித்துப்பிடித்தாற்போல பிதற்றிக்கொண்டே திரிந்தார். இதைப்பார்த்து வேதனையடைந்த அவருடைய நண்பர்கள், சதீஷை மலைவேப்பன்குட்டைக்கு அழைத்துப் போனார்கள். மூன்று வாரம் தொடர்ந்து அவருக்கு பேயோட்டினார்கள். அதன்பிறகு சதீஷ் இயல்பு நிலைக்கு திரும்பினார் என்று கிராமவாசி ஒருவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். சதீஷை அவருடைய மனைவி பேயாக பிடித்திருந்தாரா? அல்லது மனைவி இறந்த மிரட்சியில் சிந்தனை ஓட்டத்தை இழந்திருந்தாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

செவ்வாய்க் கிரகத்துக்கே இந்தியா மங்கள்யானை அனுப்பியிருக்கிற நிலையில், அடுத்ததாக ஆட்களை செவ்வாய்க்கு அனுப்ப தயாராகி வருகிற நிலையில், செவ்வாய் தோஷத்தைக் கழிக்க வைத்தீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் நிலையில்தான் மக்கள் இருக்கிறார்கள். பேய் பிடிப்பது என்பதை மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் என்கிறது அறிவியல். ஏதேனும் ஒரு விஷயத்தில் தீவிரமான சிந்தனையில் ஈடுபட்டால், ஒரு கட்டத்தில் நாம் அதுவாகவே மாறும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். அப்படிப்பட்ட மனநிலையைத்தான் பேய் பிடித்திருப்பதாக சொல்கிறார்கள். அதிலிருந்து நம்மை பேய் ஓட்டுகிறவர்கள் விடுவிக்கிறார்களா? அல்லது அவர்கள் படுத்தும் பாடு காரணமாக அவர்களே சுயநினைவுக்கு வந்துவிடுகிறார்களா என்பது புரியாத புதிராகவே தொடர்கிறது. மலைவேப்பன்குட்டை கிராமத்தில் பேய் ஓட்டுகிறவர்கள், இந்தத் தொழிலை தங்கள் பரம்பரைக்கு மட்டுமே கடத்துவதாக கூறுகிறார்கள். வெளி ஆட்களுக்கு இதை சொல்லிக் கொடுப்பதில்லை. வெளிநாடுகளில் ஒரு ஊரைப் பற்றி பொய்க் கதைகளை பரப்பி சுற்றுலா பயணிகளை கவர்வார்கள். அந்தக் கதைகளால் ஈர்க்கப்பட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். கிராமத்தின் வருவாயும் அதிகரிக்கும். அதுபோன்ற தந்திரத்தைத்தான் மலைவேப்பன்குட்டை கிராமத்தினரும் செய்கிறார்களா? அல்லது, மக்களுடைய பயத்தை வைத்து பிழைக்கும் மனோதத்துவ சூழ்ச்சியா? நம் அறிவுக்கே எட்டாத அறிவியலா? காலம்தான் பதில் சொல்லவேண்டும். இந்த கிராமத்தின் எதிர்காலம் என்ன ஆகும் என்பது வரும் ஆண்டுகளில்தான் தெரியவரும். 

கொல்லிமலை அடிவாரத்தில் ஒரு வினோதமான கிராமம். கிராமம் முழுக்க நடக்கும் விசித்திரமான மாந்த்ரீக தொழில். பரம்பரை பரம்பரையாக தொடரும் பழக்க வழக்கம். அமாவாசை, பவுர்ணமிகளில் மொய்க்கும் மக்கள் கூட்டம். இது வருவாய் பறிக்கும் தந்திரமா? அல்லது வேற்றுக்கிரகவாசிகளின் உதவியுடன் செய்யப்படும் சித்து வேலையா? மக்களின் பயத்தை வைத்து பிழைக்கும் ஒரு மனோதத்துவ சூழ்ச்சியா? நம் அறிவுக்கு எட்டாத அறிவியலா? புலன் விசாரணை தொடரில்… மலைவேப்பன்குட்டை மர்மங்கள்…

Leave A Reply