தமிழ்நாட்டில் தற்போது கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கும் பொங்கல் திருவிழா இந்துப் பண்டிகையா, திராவிடர் பண்டிகையா, சைவர் பண்டிகையா என்றெல்லாம் காரசார விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்துகொண்டிருக்கிறது.
இது ஒரு அக்மார்க் விவசாயிகளின் “அறுவடைத் திருவிழா”. விவசாயம் தெரியாத நாடோடி கூட்டங்கள் மட்டுமே இம்மாதிரி பண்டிகைகள் கொண்டாடுவதில்லை.
உலகம் முழுவதும் எல்லா விவசாய சமூகத்தினராலும் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படும் “உழவர் திருநாள்” இது.
நிலத்தை செப்பனிட்டு, உழுது நீர்பாய்ச்சி, பயிரிட்டு களை எடுத்து… பலமாத உழைப்பிற்குப்பின் அறுவடை செய்யும் விவசாய பெருமக்கள் தன் உழைப்பின் பலனை, இயற்கையின் கொடையை மனமகிழ்வோடு ஆர்ப்பரித்து பொங்கல் வைத்து கொண்டாடி மகிழும் பெருநாள் இது.
திணைக்கு திணை இந்தநாள் மாறுபடும். ஒரே நிலப்பகுதியில் வெவ்வேறு பொருட்கள் பயிரிடப்படும்போது அவற்றின் அறுவடைக்காலமும் மாறுபடும். ஆனாலும் ஒரு குறிப்பிட்ட திணையின் மக்களின் பிரதான உணவு எதுவோ அந்த அறுவடைநாளே அந்த சமூக மக்களின் பிரதான அறுவடை திருநாளாக அமையும்.
தென்னை, பனை, வாழை துவங்கி… கத்திரி, மிளகு, கேரட் என்று எத்தனையோ உணவுவகைகள் இருந்தாலும் நம்மிடையே நெல்லும், பஞ்சாபியர் கோதுமையும், கானா நாட்டில் யாம் எனப்படும் கிழங்கும் அறுவடை செய்யப்படும் காலமே உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. நாம் இங்கு உலை பொங்கி, இனிப்புண்டு, புத்தாடை அணிந்து கொண்டாட…. இதுவே தென் அமெரிக்காவின் அர்ஜென்டினா நாட்டில் திராட்சை அறுவடை செய்யும் நாளாக ஒயினும் நடனநிகழ்ச்சிகளுமாக கொண்டாடப்படுகிறது.
காலநிலை மாற்றங்கள் காரணமாக இவை கொண்டாடப்படும் காலகட்டங்களும் நாட்களும்கூட வெகுவாக மாறுபடும்.
உதாரணமாக தாய்லாந்தில் மே மாதமும், ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்திலும், சீனாவில் செப்டம்பர் மாதமும், நம்மிடையே ஜனவரியிலும் கொண்டாடப்படும் பண்டிகை இது. கீழுள்ள புகைப்படம் உலகின் வெவ்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் சில அறுவடைத் திருநாட்களின் தொகுப்பு
தோற்றம் என்று பார்க்கையில் எந்த மதக்கலப்படமும் இல்லாத உண்மையான விவசாயத் திருநாள் இது. காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்திருந்த மானுடம், கால்நடைகள் மேய்க்கவும் மீன் பிடிக்கவும் கற்று, மேலும் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் விவசாயத்தையும் நீர் மேலாண்மையும் கற்றபின் உருவான முதல் பண்டிகைகளுள் ஒன்றாக இது இருக்கக்கூடும்.
இருந்தாலும் இப்போது இதற்கும் மதச்சாயம் பூசப்படுகிறது.
“பிறப்பொக்கும் எல்லா உயிற்கும்” என்று சொன்ன வள்ளுவனையே சனாதநியாக்கி, காவிச்சாயம் பூசி குதூகலிக்கும் நமக்கு…
“உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து” என்று அவர் போற்றிப் புகழ்ந்த தொழில் சார்ந்த பண்டிகைக்கு மதச்சாயம் பூசுவதா சிரமம் இல்லையா…?
இது இங்கு மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள வழக்கம்தான்.
ரோமானியர் காலத்துக்கும் முன்பே அங்கிருந்த பழங்குடியினரால் டிசம்பர் மாதம் கொண்டாடப்பட்ட Saturnalia எனும் அறுவடைத் திருநாள் Christmas எனும் கிருஸ்தவ பண்டிகை ஆனதுபோல், மத்திய கிழக்கின் நாடோடிக்குழுவினருள் ஆண்டுக்கொருமுறை நடந்த வர்த்தக ஒன்றுகூடல் இஸ்லாமியரின் ஹஜ் பண்டிகை ஆனதுபோல், பொங்கலுக்கும் மதச்சாயம் பூசும் பணி முடுக்கிவிடப்படுகிறது.
வீட்டில் உலை பொங்குகிறதோ இல்லையோ, வாரிசு வென்றதா துணிவு வென்றதா என்று இந்த நூற்றாண்டின் இளைஞன் பரபரப்பாய் ஓடிக்கொண்டிருக்க, உழவனோ எழக்கூட சக்தியின்றி தோற்றுக்கொண்டிருக்கிறான்.