பெரிய கோவிலில் தமிழ் வெல்லுமா?

Share

தமிழனின் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழில்தான் நடத்தவேண்டும் என்பதற்கே தமிழர்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பெரிய கோவிலை ராஜராஜசோழன் கட்டி முடித்து குடமுழுக்கு நடத்த திட்டமிட்டபோது, அவனைச் சுற்றியிருந்தவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக சமஸ்கிருத மந்திரம் ஓதி குடமுழுக்கை நடத்திவிட்டார்கள். 

இது, ராஜராஜனின் குருவான கருவூரார் சித்தருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர் ராஜராஜனை சபித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த சர்ச்சை இப்போது மீண்டும் எழுந்துள்ளது. பெருவுடையார் கோவில் ஆகம விதிகளுக்கு மாறாக சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், இதைக் கண்டுகொள்ளாமல் சமஸ்கிருதத்திலேயே குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்துவருகிறார்கள்.

உடலுக்கும் உயிருக்கும் சக்தியை தூண்டக்கூடிய ஒலி அதிர்வு தமிழுக்கு இருக்கிறது. இதைத்தான் சித்தர்களும் சொன்னார்கள். அவர்கள் அருளிய மந்திரங்கள் மறைக்கப்பட்டுவிட்டன. அவற்றை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்றே சித்தர்கள் விரும்புகிறார்கள். எனவேதான், அரசு தலையிட்டு தமிழில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 22 ஆம் தேதி தஞ்சையில் வேண்டுகோள் மாநாடு நடைபெற்றது. 

தமிழனின் கட்டிட கலைக்கு சாட்சியாக உலகத்தை வியக்க வைத்து நின்றுகொண்டிருக்கும் பெரிய கோவிலுக்குள். அதைக் கட்டிய மன்னன் ராஜராஜனின் சிலையை வைக்க இதுவரை எதிர்ப்பு தொடர்கிறது.  ஆனால், தமிழில் குடமுழுக்கு நடத்தவும், ராஜராஜன் சிலையை கோவிலுக்குள் வைக்கவும் தமிழக அரசும், அறநிலையத்துறையும் மறுத்துவருகிறது. ஆகமவிதிகளின்படி சமஸ்கிருதத்திலேயே குடமுழுக்கு நடத்தப்படும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் பெ.மணியரசன் தலைமையில் தஞ்சை காவேரி திருமண் மண்டபத்தில் வேண்டுகோள் மாநாடு நடைபெற்றது. அயநாவரம் முருகேசன் தலைமையில் தொடங்கிய முதல் அமா்வில்..  களிமேடு அப்பர் பேரவையினரின் திருமுறைப் பாடல்களோடு மாநாடு தொடங்கியது.  இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த சித்தர் வழி ஆன்மிகச் செயற்பாட்டாளர்கள் செந்தமிழால் வேள்வி நடத்த முடியும் என மாநாட்டில் அரங்கேற்றிக் காட்டினார்கள். 2005 ஆம் ஆண்டு முதல் தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்புக் குழு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் அடங்கிய ஒளிபடக் காட்சியை ஆவடி தமிழ்ச் சைவ பேரவைத் தலைவர் கலையரசி நடராசன் திறந்துவைத்தார்.

பெரிய கோவில் குடமுழுக்கை தமிழ் வழியிலேயே நடத்த வேண்டும். பெரிய கோவில் உள்ளிட்ட 88 கோவில்களுக்கு மராட்டியத்தைச் சேர்ந்த பாபாஜி பான்ஸ்லே என்பவரை பரம்பரை அறங்காவலர் என்று அரசு கொடுத்துள்ள உரிமையை நீக்கிவிட்டு கோவில்களை தமிழக அரசின் அறங்காவல் துறையே நிர்வகிக்க வேண்டும். தமிழகம் முழுவது சமஸ்கிருதமயமாக்கப்பட்ட ஆண் மற்றும் பெண் கடவுளர்களின் பெயர்களையும் ஆன்மிக ஊர்ப்பெயர்களையும் மீண்டும் தமிழாக்க வேண்டும். அர்ச்சகர் பயிற்சிபெற்ற 230 மாணவர்களுக்கும் உடனடியாக வேலை வழங்க வேண்டும். அதுவரை அவர்களுக்கு வாழ்வூதியம் வழங்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாலையில் நடைபெற்ற நிறைவரங்கில் பேசிய வழக்கறிஞர் நல்லதுரை, ராசராசன் தமிழன் என்று பெருமை கொள்வதைப் போல, அவன் கட்டிய கோவில் குடமுழுக்கை தமிழில்தான் நடத்த வேண்டும் என்றார்.

முன்னாள் அமைச்சர் சாமிநாதன் பேசும்போது, ராஜராஜன் சிலையை மீட்க நான்தான் வழக்குப் போட்டேன். சிலை மீட்கப்பட்டது. இப்போது சென்னை கடற்கரையில் அவனுடைய சிலையை நிறுவ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் என்றார்.

முடிவாக பேசிய பெ.மணியரசன்… “தமிழர்கள் கடவுளிடம் வேண்டுவதாக இருந்தாலும், கோபப்படுவதாக இருந்தாலும் தமிழ்மொழியைத்தானே பயன்படுத்துகிறார்கள். வேறு எந்த மொழியிலும் இல்லாத கடவுள் வாழ்த்துகள் தமிழில் இருக்கின்றன. அப்படிப்பட்ட மொழியை ஏன் கடவுள் ஏற்கமாட்டார்? தமிழ்மொழி தமிழர்கள் கட்டிய கோவிலுக்குள் இருக்கக்கூடாது என்பது, மொழி ஆதிக்கம் என்பதைவிட இன ஆதிக்கம் என்பதே சரியாக இருக்கும். பெரிய கோவில் கட்டப்பட்டபோது தமிழ்தான் இருந்தது. பின்னர் வந்தவர்கள்தான் அதை வெளியேற்றி இருக்கிறார்கள். மீண்டும் கருவறைக்குள் தமிழ் ஒலிக்க வேண்டும். அயல்மொழியைத் தூக்கி எறிவோம்.

எங்கள் கோரிக்கைக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான் போன்றோர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள். அவர்களும் தமிழில் குடமுழுக்கு நடத்துங்கள் என்று அரசுக்கு கோரிக்கைதான் வைத்திருக்கிறார்கள். போராடுவோம் என்று சொல்லவில்லை. தமிழர் முதல்வராக இருக்கிறார் என்பதால் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம். 28 ஆம் தேதிவரை அரசின் முடிவுக்கு காத்திருப்போம். அதற்குள் அறிவிக்க வில்லை என்றால்  போராட்டங்கள் நடத்துவோம். வீதியில் இறங்கிப் போராடுவோம். ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம் என்றார்.

ஆன்மிகத்திற்குள் ஆதிக்கம் செலுத்தும் அன்னிய மொழி அரசியலுக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்பதை அறிய தமிழர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 

Leave A Reply