முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு தென்கொரியா சத்துணவு! – முனைவர் ஆரோக்கியராஜ்

Share

இங்கே படத்தில் நீங்கள் பார்ப்பது வசதியானவர் வீட்டு சாப்பாட்டுத் தட்டுகள் அல்ல. பள்ளிகளில் போடப்படும் சத்துணவுத் தட்டுகள் என்றால் நம்ப முடிகிறதா?

தென்கொரியாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சாப்பாடு இது. தினமும் வெவ்வேறு வெரைட்டியில் சாப்பாடு. வீட்டில் தயாரிக்கும் சாப்பாடைக் காட்டிலும் டேஸ்ட்டாக, விதவிதமான கூட்டுப் பொறியலோடு வழங்குகிறார்கள்.

எனது பையன் வீட்டில் சாப்பிடுவதைக் காட்டிலும் பள்ளிக்கூடத்தில் வழங்கும் உணவையே மிகவும் விரும்புகிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டில் நான்கூட சத்துணவு சாப்பிட்டு படித்தவன்தான். ஆனால், தமிழ்நாட்டில் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை, அது உண்மையான சத்துணவாக இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில், சென்னையில் உள்ள 1923 ஆம் ஆண்டு அன்றைய சென்னை மேயர் பி.டி.தியாகராஜனால் சேத்துப்பட்டு, கோரப்பாளயைம் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் முதல்கட்டமாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு காரணமாக இருந்தவர் நீதிக்கட்சியைச் சேர்ந்த எல்.சி.குருசாமி. இவர் 10 ஆண்டுகள் நீதிக்கட்சியின் சட்டமேலவை உறுப்பினராகவும், கவுரவ நீதிபதியாகவும் பணியாற்றியவர்.

ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்தத்திட்டம் நிறுத்தப்பட்டது. பரவலாக்கப்படவும் இல்லை. காமராஜர் முதல்வராக இருந்தபோதுதான், பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதை எப்படி சரி செய்வது என்று ஆலோசித்து வந்தார். அப்போதுதான், சாப்பாட்டுக்கே வழி இல்லாத குழந்தைகள் எப்படி பள்ளிக்கு வரமுடியும் என்ற உண்மையை உணர்ந்தார்.

அதைத்தொடர்ந்தே பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக, ஐ.நா.விடமிருந்து, கோதுமை, மக்காச்சோள மாவு ஆகியவற்றையும் கேட்டுப் பெற்றார்.

மக்காச்சோள உப்புமா, கோதுமை கஞ்சி அல்லது உப்புமாவுடன் அரசிக் கஞ்சி ஆகியவற்றில் வாரம் ஒருநாள் ஏதாவது ஒன்று பரிமாறப்பட்டது.

இந்நிலையில்தான், 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த எம்ஜியார் 1980 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார். ஆனால், சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றார். கட்சிக்காரர்களுக்கு சம்பாதிக்க வழி செய்தால் மட்டுமே ஆட்சியைத் தொடர முடியும் என்பதால், அரசு சாராயக் கடைகளை திறந்தார்.

இதனால் ஏற்பட்ட கெட்ட பெயரை சரிசெய்ய, பள்ளிக்குழந்தைகளுக்கு எல்லா நாட்களிலும் சத்துணவு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி அரிசியுடன் பருப்பு, காய்கறிகள் கலந்து வேகவைத்து உணவு வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் மக்கிப்போன அரிசியே பெரும்பாலும் உணவுசமைக்கப் பயன்படுத்தப்பட்டது.

இருந்தாலும், ஒருநேர சாப்பாடுகூட கிடைக்காத ஏழை மாணவர்களுக்கு இது பெரிய உதவியாக இருந்தது. அதன் பின்னர் வந்த கலைஞர் சத்துணவுடன் முட்டை சேர்த்து உண்மையான சத்துணவாக மாற்றினார். ஜெயலலிதாவோ முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் வழங்க உத்தரவிட்டார். ஆனால், அது நடைமுறைப் படுத்தப்படவில்லை.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என்று எடப்பாடி பழனி்ச்சாமி அறிவித்தார். அதுவும் நடைமுறைப் படுத்தப்படவில்லை.

1923ல் சோதனை முயற்சியாக தொடங்கப்பட்ட மதிய உணவு நூறு ஆண்டுகள் கழித்து பள்ளிக் குழந்தைகளுக்கு 5 முட்டைகளுடன் கூடிய உணவாக மாறியிருக்கிறது.

ஆனால், தென்கொரியாவில் வழங்கப்படுவதைப் போல தினமும் பலவகை கூட்டுப் பொறியல்களுடன் மாணவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவாக மாற்ற வேண்டியது அவசியமாகும்.

மாணவர்கள் கல்வி பெறுவதுதான் தனது லட்சியம் என்று சொல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கும் பிடித்தமான வெரைட்டியான சத்துணவு வழங்க என்ன செய்யலாம்? என்று அவர் திட்டமிட வேண்டும்.

இப்போது அந்தந்த பள்ளியில்தான் சமையல் செய்து பரிமாறுகிறார்கள். இத்தனை வகை கூட்டுப் பொறியல்களை சமைத்து பரிமாற முடியுமா என்பதுதான் யோசனைக்குரிய விஷயமாக இருக்கும். ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியில் மொத்தமாக ஒரு இடத்தில் உணவு சமைத்து பள்ளிகளுக்கு வினியோகிப்பது எளிதான விஷயம்தான். தென்கொரியாவில் இப்படித்தான் வினியோகிக்கிறார்கள்.

சுத்தமாகவும் சுகாதாரமாகும் சத்து மிகுந்த வெரைட்டியாகவும் மாணவர்களுக்கு உணவு வழங்க விரும்பினால் போதும். வழிகள் பல இருக்கின்றன.

அப்படிப்பட்ட உணவு வழங்குவதை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் தலைவராக உயர்வார் என்பது நிச்சயம்.

Leave A Reply