ஸ்கூல் பஸ்சில் அழகிய வீடு – ஆதனூர் சோழன்

Share

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் வீட்டு வாடகையை கொட்டிக்கொடுத்து அலுத்துப்போனார் ஒரு கிராபிக் டிஸைனர். அவர் பெயர் மைக்கேல்.

அவருக்கு இந்த பிரச்சனையிலிருந்து மீள வழி தெரியாமல் விழி பிதுங்கியது. அவர் தங்கியிருந்த அபார்ட்மெண்ட்டுக்கும் ஸ்டுடியோவுக்கும் மாதம் இந்திய ரூபாயில் 93 ஆயிரம் வாடகையாக கொடுத்தார்.

இதை தவிர்த்து பணத்தை சேமிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார். முடிவாக ஒரு பழைய ஸ்கூல் பஸ்சை விலைக்கு வாங்கினார். ஆம் பஸ்சில்தான் இயல்பாகவே நான்கு சுவர்களும், கூரையும் இருக்கின்றனவே என்று நினைத்தார்.

அந்த பஸ்சுக்கு ஒரு லட்சத்து 71 ஆயிரம் விலை கொடுத்தார். ஆனால், அந்த பஸ்சை தனக்கேற்ற வீடாக மாற்ற அவருக்கு எந்த ஐடியாவும் இல்லை. ஏனென்றால், கிராபிக் டிஸைனரான அவர் எதையும் கட்டி பழக்கம் இல்லாதவர்.

ஆனால், முயற்சியைத் தொடங்கினார். பஸ்சை தனக்கேற்ற வசதிகளுடன் கூடிய வீடாக ஒரு மாடலை வரைந்தார். ஆனால், பஸ்சின் உள் உயரம் ஆறு அடி ஒரு அங்குலம்தான் இருந்தது. மைக்கேல் 6 அடி 6 அங்குலம் உயரம் இருந்தார்.

எனவே, பஸ்சின் உயரத்தை 20 அங்குலம் அதிகரிக்க வேண்டியது அவசியமாக இருந்தது. ஒரு வீட்டுக்குள் எவ்வளவு ஃப்ரீயாக உலவ முடியுமோ அந்த அளவுக்கு விஸ்தாரமாக டிசைன் செய்தார்.

உயரத்தை மட்டுமல்ல, நீளம் அகலத்தையும் சற்று அதிகரித்தார். கிட்டத்தட்ட பஸ்சை பாதி புல்லட் புரூஃப் ஆக மாற்றிவிட்டார். பஸ் மொத்தம் 40 அடி நீளமாக மாறியது. இந்த பஸ் வீட்டை கட்டும்போது, மைக்கேல் தனது நண்பர்களின் பண்ணையில் ஒரு டெண்ட் அமைத்து தங்கினார்.

இதனால், அவருக்கு வாடகை மிச்சமாகியது. இந்த வீட்டை கட்டுவதற்கு 5 மாதங்கள் ஆனது. உள் வெப்பத்தை தணிக்க இன்சுலேஷன் செய்தார். மரக்கட்டைகள்தான் அதிகமாக செலவழித்தார். பர்னிச்சர், கிச்சன் என்று பார்த்துப் பார்த்துக் கட்டினார்.

இந்தக் கட்டுமானப் பணியில் தனது தோழியை பிரிந்திருக்க வேண்டியதாயிற்று. தனது தாத்தாவின் மரணத்தை சந்திக்க வேண்டியதாயிற்று. ஆனாலும், வீட்டை 11 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவில் அருமையாக கட்டி முடித்தார்.

நகரும் அழகிய வீடு. இந்த வீடு பலருக்கும் இதுபோன்ற வீட்டை கட்ட ஆசையைத் தூண்டி இருக்கிறது. விருப்பப்பட்ட இடத்துக்கு வீடை நகர்த்திக் கொண்டு போய்விடலாம் என்பதே இதில் உள்ள சவுகரியம்.

வீடுகட்ட ஆன செலவு, மைக்கேலின் 12 மாத வாடகை என்பதுதான் இதில் நாம் அறிய வேண்டிய செய்தி.

-ஆதனூர் சோழன்

Leave A Reply