மஹர்கள் தேச விரோதிகளா..? பிராமண விரோதிகளா? – ஆதனூர் சோழன்

Share

பிராமண விரோதிகளாக இருந்தாலே தேச விரோதிகளாக சித்தரிக்கப்படும் போக்கு மனு சாஸ்திரம் அமலான காலத்தில் இருந்தே தொடர்கிறது.

1817 ஆம் ஆண்டிலிருந்து, 1917 ஆம் ஆண்டு வரையிலும் பிராமணீய சாதிய அடக்குமுறைகளை எதிர்த்து குரல் எழுப்பிய மராட்டிய மஹர் ஜாதியினரின் போராகட்டும், பிரிட்டிஷாரைப் பயன்படுத்தி சென்னை மாகாணத்தில் சாதிய ஒடுக்குமுறைக்கு முடிவு கட்ட நீதிக்கட்சியும் தந்தை பெரியாரும் எடுத்த முடிவுகளாகட்டும் எல்லாமே தேச விரோதச் செயல்களாகவே பிராமணர்களால் சித்தரிக்கப்பட்டன.

இந்தியாவில் இந்துப் பிராமணர்களின் நேரடி அதிகாரம் எப்போது தலைதூக்கியதோ, அப்போதிருந்து மக்களை சாதிகளாக பிரித்து அடிமைப்படுத்தும் போக்கும் தொடங்கியது. பிராமணர்களின் தலைமையிலான புஷ்யமித்ர சுங்கன் தொடங்கி, குப்தர்கள், பேஷ்வாக்கள் என்று அந்த நேரடி அதிகாரம் தொடர்ந்தது. பிராமணர்களின் பேச்சுக்குப் பணிந்து ஆட்சி செய்த மன்னர்களும் மனு சாஸ்திரத்தை அமல்படுத்தினார்கள்.

ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு வந்த பின்னர்தான் மனு சாஸ்திரத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு சாதியினரும் கல்வி கற்கவும் உடை அணியவும் முடிந்தது. அதன்காரணமாக பிரிட்டிஷாரையும் அவர்களுடைய கிறிஸ்தவ மதத்தையும் ஏற்க தொடங்கினார்கள்.

இந்தியாவில் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்கள்தான் தங்களையும் சக மனிதர்களாக மதித்த மதங்களை ஏற்று அவர்கள் கொடுத்த மரியாதையான வாழ்க்கையை வாழத் தொடங்கினர்.

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்று கூறப்பட்ட மராட்டியப் பேரரசின் கடைசி மன்னரும் சிவாஜியின் பேரனுமான சத்ரபதி சாகுஜி கி.பி.1749 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அப்போது படைத்தலைவனாக இருந்த பேஷ்வா பிராமணரான பாலாஜி பாஜிராவ், சாகுஜியின் வாரிசை சிறையில் அடைத்து கொன்றுவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினார்.

சாகுஜி மன்னராக இருக்கும்போதே மனு சாஸ்திரத்தை மிதமான அளவுக்கு நடைமுறைப்படுத்திய பாலாஜி பாஜிராவ், ஆட்சியை கைப்பற்றியவுடன் கடுமையாக நடைமுறைப்படுத்தினான். அவன் வழிவந்த இரண்டாம் பாஜிராவ்1796 முதல் பார்ப்பனர் அல்லாத ஜாதியினர் மீது கொடூரமான அடக்குமுறைகளை கையாளத் தொடங்கினான்.

இவனுடைய கொடுமைகள்தான் மராட்டியப் பேரரசு முடிவுக்கு வர காரணமாக அமைந்தது. மஹர் என்ற தாழ்த்தப்பட்ட மக்களை இவன் படுத்தியபாடு கேட்கவே நெஞ்சம் பதறும். அவர்கள் தங்கள் கையில் கருப்பு கயிறு கட்டியிருக்க வேண்டும். பின்புறம் இடுப்பில் தரையை கூட்டும் அளவுக்கு ஓலைமட்டைகளை கட்டியிருக்க வேண்டும். கழுத்தில் ஒரு கலையத்தை கட்டியிருக்க வேண்டும்.

அதாவது, பார்ப்பனர்கள் நடக்கும் பாதையில் மஹர் ஜாதியினர் எச்சிலைத் துப்பக்கூடாது. கலையத்தில்தான் துப்ப வேண்டும். அவர்களுடைய கால் தடம் அப்படியே படிந்துவிடக்கூடாது. ஓலைமட்டைகளால் அந்த கால்தடங்கள் அழிக்கப்பட வேண்டும் என்பது பார்ப்பன பாஜிராவின் உத்தரவு. இந்த உத்தரவை மீறுகிறவர்களுக்கு மரண தண்டனை வரை விதிக்கப்பட்டது.

மராட்டிய பேஷ்வாக்கள் ஆட்சியில் மஹர்களுக்கு இடமே இல்லை என்று புறக்கணிக்கப்பட்டனர். அதையடுத்து அவர்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்தார்கள். அந்த ராணுவத்தில் மஹர் படைப்பிரிவு என்று தனிப்பிரிவையே உருவாக்கினார்கள். அந்தப் படைப்பிரிவில் மஹர்கள் மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட மக்களும், முஸ்லிம்களும்கூட இடம்பெற்றார்கள். அந்தச் சமயத்தில்தான் 1817 ஆம்ஆண்டு பேஷ்வாக்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் வரிவசூல் ஒப்பந்தப் பேச்சு தோல்வியில் முடிந்து போர் மூண்டது.

அந்தப் போரில் பேஷ்வாக்கள் சார்பில் 20 ஆயிரம் பேர் கொண்ட ராணுவம் போரில் ஈடுபட்டது. அதில் 15 ஆயிரம் பேர் பார்ப்பன பேஷ்வாக்கள் எனக் கூறப்படுகிறது. 20 ஆயிரம் பேர் கொண்ட பேஷ்வா பார்ப்பன படையை, வெறும் 800 பேர் கொண்ட மஹர் படைப்பிரிவு பீமா நதிக்கரையில் உள்ள கோரேகான் என்ற சிறிய ஊரில் எதிர்த்துப் போரிட்டது.

1818 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி பார்ப்பன படைப்பிரிவு அழிக்கப்பட்டது. சுமார் 600 பார்ப்பன வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பேஷ்வா படை சிதறி ஓடியது. அடுத்த சில நாட்களில் மராட்டிய பேரரசு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது. அதன்பின்னர் 1851 ஆம் ஆண்டு பேஷ்வாக்களுடன் போரிட்டு உயிரிழந்த மஹர் வீரர்களின் நினைவாகவும், போர் வெற்றியை நினைவூட்டும் வகையிலும் பீமா நதிக்கரையில் பிரிட்டிஷ் அரசு ஒரு நினைவுச் சின்னத்தை நிறுவியது.

இந்தப் போரைப்பற்றி, ‘A History of the Mahrattas’ என்ற புத்தகத்தில் ஜேம்ஸ் கிராண்ட் டஃப் இரவு முழுவதும் சண்டையிட்டு புத்தாண்டு காலை சுமார் பத்து மணிக்கு, பீமா நதிக் கரையில், 28 ஆயிரம் மராட்டியர்களை மஹர்கள் தடுத்து நிறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹர் மற்றும் பேஷ்வாக்கள் இடையே நடைபெற்ற போரை வெளிநாட்டு படையெடுப்பாளர்களுக்கு எதிரான இந்திய ஆட்சியாளர்களின் போராகவும் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். உண்மையில் அதில் தவறும் இல்லை.

ஆனால் மஹர்களை பொறுத்தவரையில் அவர்கள் ஆங்கிலேயர்களுக்காக இந்தப் போரை நடத்தினார்கள் என்பதைவிட தங்களின் அடையாளத்திற்கான போராட்டமாகவே இதை கருதினார்கள் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

வரலாற்று ஆசிரியரும் விமர்சகருமான பேராசிரியர் ரிஷிகேஷ் காம்ப்ளே கொரெகான் பீமாவின் மற்றொரு பக்கத்தையும் சுட்டிக்காட்டுகிறார். மஹர்கள் மராத்தியர்களை தோற்கடிக்கவில்லை, அவர்கள் வெற்றிகொண்டது பிராமணர்களையே என்றும் அவர் கூறியிருக்கிறார்.

1818 ஜனவரியில் மஹர்கள் ஆயுதப் போராட்டம் மூலமாக பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து தங்களுடைய அவமானத்தை துடைத்தெறிந்தனர்.

1917 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் பிராமணர்கள் அல்லாதோரால் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி மனு சாஸ்திரத்தின் கொடுமைகளுக்கு எதிராக சட்டங்களையே இயற்ற முடிந்தது. தாங்கள் பெற்ற வெற்றியின் அடையாளச் சின்னத்தில் வணக்கம் செலுத்தச் சென்றவர்கள் மீது இன்றும்கூட பிராமணீயம் தாக்குதல் நடத்தி ஒரு உயிர்களை பறிப்பதை வாடிக்கையாக தொடர்கிறது.

தமிழ்நாட்டிலோ, ஜாதீய தீண்டாமைக்கு எதிராக பல சட்டங்களை இயற்றிய நீதிக்கட்சியையும், உரிமைகளுக்காக போராடும் திராவிடர் இயக்கத்தையும் தேசவிரோதிகள் என்று இன்றுவரை தூற்றுகிறார்கள்.

மராட்டியத்தில் மஹர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு நிகரானதுதான் வைக்கம் கிராமத்தில் நடந்த கொடுமையும், குமரி மாவட்டத்தில் நிலவிய தோல் சீலை போராட்டமும் என்பதை மறந்துவிடக்கூடாது. அந்தக் கொடுமைகளை ஒழித்துக்கட்டி அனைவருக்கும் சம உரிமை வழங்கும் சட்டங்களை கொண்டுவந்ததும், மராட்டிய போருக்கு நிகரானதுதான்!

Leave A Reply