லெனினுடன் சில நாட்கள் 3 – மாக்ஸிம் கார்க்கி

Share

ரோஸா லக்ஸம்பர்க் வாசாலகத் திறமையுடன் உணர்ச்சிகரமாகவும், கடுமையாகவும், குத்தலாகவும் பேசினாள். அப்புறம் லெனின் மேடை மீது ஏறினார்; கரகரப்பான குரலில், அடித் தொண்டையிலிருந்து “தோழர்களே!” என்று முழங்கினார்.

முதலில் அவருடைய பேச்சு மோசமாக இருப்பது போல எனக்குத் தோன்றிற்று. ஒரு நிமிஷம் கழித்ததும் நானும், ஒவ்வொருவரும் அவருடைய பேச்சில் பரிபூரணமாக ஈடுபட்டு விட்டோம். சிக்கலான அரசியல் பிரச்சினைகள் மிகவும் லகுவான முறையில் எடுத்துக் கூறப்படுவதை அப்பொழுதுதான் நான் முதன்முதலாகக் கண்டேன். சொல்லலங்காரத்துடன் பேசவேண்டுமென்ற பிரயாசை எதுவும் இல்லாமல் ஒவ்வொரு வார்த்தையையும் திருத்தமாகப் பேசினார். அதன் பொருளும் அதிசயிக்கத்தக்கவாறு மிகமிக வெளிப்படையாக இருந்தது. அவர் தம் பேச்சின் மூலமாக அசாதாரணமான முறையில் உள்ளத்தைக் கவர்ந்து விட்டார். அது எப்படி என்று வாசகருக்குச் சித்திரித்துக் காட்டுவது மிகவும் சிரமம்.

முன்பக்கமாகத் தம் கையை நீட்டி, அதைச்சற்று மேல்நோக்கி ஏந்திக்கொண்டு அவர் பேசினார். அப்பொழுது அவர் ஒவ்வொரு வார்த்தையையும் தம் கையால் நிறுத்துப் பார்த்து வெளியி டுவது போலவும், எதிரிகளின் வாதங்களை முறத்தில் போட்டுப் புடைத்தெடுப்பது போலவும் இருந்தது. எதிரிகளின் வாதங்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு. தம்முடைய கட்சியை எடுத்துச் சொன்னார். தொழிலாளி வர்க்கத்தின் உரிமையையும், கடமையையும் பற்றிக் கூறும் போது, தொழிலாளர்கள் தாங்கள் சொந்த வழியைத்தான் கடைபிடித்து ஒழுக வேண்டுமே ஒழிய, தாராளவாதிகளான பூர்ஷ்வாக்களோடு கைகோத்துக் கொண்டு செல்வதோ, அல்லது அவர்களைப் பின்பற்றிச் செல்வதோ தவறு என்று கூறினார், அவர் சொன்ன இந்த விஷயங்கள் யாவும் அசாதாரணமாக இருந்தன.

ஆனால் அவர் தம்முடைய சொந்த விருப்பப்படி இவ்வாறு சொல்லாமல், சரித்திரத்தின் ஆதாரப்படி சொல்லுவது போலவே இருந்தது. அவருடைய பேச்சின் ஒருமைப்பாடு, பூரணத்துவம், நேர்முக மான பிரயோகம், ஆற்றல் ஆகியவையும், மேடை யில் நின்ற அவருடைய தோற்றமும் சேர்ந்து ஒரு மகத்தான ஓவியம் போலவே இருந்தன. அந்த ஓவியத்தில் சகலமும் அடங்கியிருந்தது. அதில் தேவைக்கு மிஞ்சிய அம்சங்கள் இல்லை; அதில் ஏதேனும் அலங்கார வேலைப்பாடுகள் காணப்பட்டாலும், அவை கண்ணுக்கு அலங் காரங்களாகக் காட்சியளிக்கவில்லை. முகத்தில் இரண்டு கண்கள் இருப்பதும், கையில் ஐந்து விரல்கள் இருப்பதும் எப்படி இயல்பாகவும், இன்றியமையாதவையாகவும் இருக்கின்றனவோ அதுபோலவே அந்த ஓவியத்தின் அலங்காரங்களும் அமைந்திருந்தன.

அவருக்கு முன்னால் பேசியவர்களைவிட அவர் சுருக்கமாகவே பேசினார். ஆனால் அவர் பேச்சுத்தான் கூட்டத்தின் மனதில் அதிகமாகப் பதிந்திருந்தது. இது என் ஒருவனுடைய அபிப் பிராயம் மட்டுமல்ல. எனக்குப்பின்னால் இருந்த வர்கள், “ஓ, இவருடையபேச்சில் விஷயச் சிறப்பு இருக்கிறது” என்று உற்சாகத்துடன் ÔகுசுகுசுÕ என்று பேசிக்கொண்டதும் எனக்குக் கேட்டது.

அவர்கள் பேசிக்கொண்டது உண்மை. அவருடைய தீர்மானங்கள் செயற்கையாக இட்டுக் கட்டியவையல்ல; அவை தமக்குத் தாமே, இன்றியமையாத முறையில் வளர்ந்து அவ்வாறு உருவாகியிருக்கின்றன. லெனினுடைய பேச்சில் மென்ஷ்விக்குகளுக்கு ஒரே வெறுப்பு; தங்கள் கடுகடுப்பை வெளிப்படையாக அவர்கள் காட்டிக் கொண்டார்கள். பேச்சின்மீது அவர்கள் காட்டிய வெறுப்பைவிட, லெனினிடத்தில் காட்டிய வெறுப்பு அதிகம். புரட்சி சித்தாந்தம் பரிபூரண வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், நடைமுறை வேலையை அந்தச் சித்தாந்தத்தைக் கொண்டு சீர் தூக்கும்படியாக இருக்கவேண்டும் என்றும் கூறினார் லெனின். கேட்பவர்கள் ÔசரிÕ என்று ஏற்றுக்கொள்ளும் வண்ணம் இந்த அத்தியாவசியத்தை அவர் வற்புறுத்தும் போதெல்லாம், மென்ஷவிக்குகள் அதிகக் கடுகடுப்புடன் நடுநடுவே பேச்சுக்கு இடைஞ்சலாகப் பின் கண்டவாறு சந்தடி பண்ணிக் கொண்டிருந்தார்கள்:

“தத்துவ விசாரம் செய்வதற்காக மாநாடு கூட்டப்படவில்லை!” “வாத்திமைத்தனம் பண்ண வேண்டாம்; நாங்கள் பள்ளிப்பிள்ளைகள் அல்ல!”

அப்பொழுது நெட்டையான ஒரு தாடிக்கார ஆசாமி எழுந்தான். பார்ப்பதற்குக் கடைக்காரன் மாதிரி இருந்தது. தன் இருப்பிடத்திலிருந்து துள்ளிக் குதித்து, “சதிகாரர்கள்! புத்தி கெட்டவர்கள்!” என்ற கூப்பாடு போட்டான். ரோஸா லக்ஸம்பர்க் குற்றம் சாட்டும் தோரணையில் தன் தலையை அசைத்தாள். பின்னால் நடந்த ஒரு கூட்டத்தில் அவள் மென்ஷ்விக்குகளைப் பார்த்து, “நீங்கள் மார்க்ஸிஸத்தின் அடிப்படையில் நிற்கவில்லை; அதற்குப் பதிலாக அதன்மீது உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்கள். ஏன் அதன்மேல் நீங்கள் படுத்துவிட்டீர்கள்” என்றாள்.

மாநாட்டு மண்டபத்தில் கெட்ட எண்ணமும், எரிச்சலும், நையாண்டியும், குரோதமும்தான் நிறைந்திருந்தன. லெனினைப் பார்த்துக் கொண்டிருக்கும் விழிகளில் நூறு தினுசான குணபாவங்கள் பிரதிபலித்தன. இந்த விரோதச் செயல்களில் அவர் அசைந்து கொடுத்ததாகவே தெரியவில்லை.

குதூகலத்துடனும், அமைதியாகவும்தான் அவர் பேசினார். புறத்தோற்றத்திற்கு இவ்வளவு அமைதி யோடு நடந்து கொண்டதன் காரணமாக, அவருக்கு ஏற்பட்ட கஷ்டத்தைச் சில தினங்களுக்குப் பிறகு நான் அறியலானேன். “பூரணவளர்ச்சி பெற்ற சித்தாந்தத்தின் உதவியினால்தான், கட்சியின் நடுவில் ஏற்படும் வேற்றுமை களுடைய காரணங் களைக் கண்டறிய முடியும்” என்று அவர் தெரிவித்த இயல்பான விஷயத்திற்கு இப்படிப்பட்ட எதிர்ப்பு காண்பிக்கப்பட்டது, விசித்திரமாகவும் பரிதாபகரமாகவும் இருந்தது.

மாநாட்டின்போது, நாளுக்கு நாள் லெனினுக்கு அதிக பலமும், அதிக ஆதரவும், அதிக நம்பிக்கையும் கிடைத்து வருவது போல எனக்குத் தோன்றியது. முந்திய நாள் பேசியதை விட மறுநாள் அதிக உறுதியுடன் அவர் பேசினார். கட்சியில் இருந்த போல்ஷ்விக் கோஷ்டி, ஒரு நாளுக்கு ஒருநாள் அதிக மன உரம் பெற்று வந்தது.தளர்ந்துபோய் குனிந்து கொடுக்காத தீரத்தைப் பெற்றது. இது ஒரு புறமிருக்க, ரோஸா லக்ஸம்பர்க் மென்ஷ்விக்குகளை எதிர்த்து நிகழ்த்திய ஆற்றல் சான்று, அழகிய பிரசங்கமும், “தொழிலாளர் காங்கிரஸ்” என்னும் அபிப்பிராயத்தை எதிர்த்துச் சம்மட்டி அடி கொடுத்துப் பேசிய எம்.பி. டாம்ஸ்கியின் கடுமையான பிரசங்கமும் என்னை மிகவும் கவர்ந்து விட்டன.

(தொடரும்)

Leave A Reply