அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகனுக்கு… – ஜே.மஞ்சுளாதேவி

Share

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகனுக்கு, ஜெ.மஞ்சுளாதேவி எழுதிக்கொள்வது…

சாகித்ய அகாதமி, யுவபுரஸ்கார் விருது பற்றி நிறைய புலம்பி எழுதியிருந்தீர்கள்…

நீங்கள் சொல்பவர்கள் மட்டும்தான் இலக்கியவாதிகள்,விஷ்ணுபுர விருது பெற்றவர்கள் மட்டும்தான் திறமையாளர்கள் என்று நீங்கள் நம்பலாம், தவறில்லை, ஆனால் அதை மற்றவர்கள் மீது திணிப்பதற்கு உங்களுக்கு யார் சார் உரிமை கொடுத்தார்கள்.

விருதுபெற்ற ப.காளிமுத்துவை உங்களுக்கு எத்தனை நாளாகத் தெரியும், விருது அறிவிப்பிற்குப் பிறகுதானே. எந்த தைரியத்தில் சொல்கிறீர்கள்? இனிமேல்தான் அவர் எழுதனும் இனிமேல்தான் வாசிக்கனும் என்று. அவர் வாசிப்பது கிடக்கட்டும், நீங்கள் அதை வாசித்துத்தான் எழுதினீர்களா.ஒருதனிமனிதன், படித்தான், படிக்கவில்லை என்று சொல்வதற்கு உங்களுக்கு யார் சார் உரிமை தந்தார்கள்.

உங்களை ஆசான் என்று கொண்டாடுபவர்களுக்குத்தான் பரிசைத் தர வேண்டும் என்று நீங்கள், பதிவு பண்ணாத உங்கள் அமைப்பின் விருதுக்கு வேண்டுமானால் முடிவு செய்யலாம். ஆனால் அரசின் அமைப்பு விருது ஒற்றை நபரால் முடிவு செய்யப்படுகிறது என்று நீங்கள் நினைப்பது உங்கள் அறியாமையைத்தான் காட்டுகிறது. இது உங்களுக்கு வயதாகிவிட்டதன் அறிகுறி. இன்றைய இளைஞர்கள், ‘போங்க பூமர்’ என்று சொல்லிவிடுவார்கள் சார். கவனமாக இருங்கள்.
இவ்விருது, போட்டி அல்ல.. வளர்ந்து வரும் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதற்காக அளிப்பது என்பதை மறந்துவிடுகிறீர்களே.

தமிழில் நாவலே இல்லை என்று பரபரப்பைக் கிளப்புவீர்கள்,நாவலைப் படம் ஆக்கும் பணிக்கு உங்களைச் சேர்த்துக்கொண்டதும் அது பற்றி எழுதிய கட்டுரைகளை அழிப்பீர்கள், இதெல்லாம்தான் நவீன இலக்கியவாதியின் அடையாளம் என்றால், பாவம் காளிமுத்துவுக்கு இதை எல்லாம் எப்போதும் செய்யமுடியாது.

நீங்கள் எழுதியதன் உச்சபட்சவன்மம், பொள்ளாச்சி பற்றி குறிப்பிட்டதுதான்.

“பொள்ளாச்சியில் இருந்து இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த உபாதை இருக்கும்” என்று எழுதியதற்கு என் கடும் கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். எந்த அர்த்தத்தில், யாரைப் புண்படுத்த
நினைத்து இதைச் சொல்லியிருந்தாலும் சரி, இவ்வரிகள் உங்களின் தரத்தைப் அதலபாதாளத்தில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எதைப்பற்றியும், “சில காலங்கள்” என்று காலத்தை நிர்ணயம் செய்ய நீங்கள்யார், கடவுளா?
உங்கள் காலம் எவ்வளவு என்று நிர்ணயிக்க உங்களால் முடியுமா, அறுபது ஆண்டுகள் கொண்டாடியிருக்கிறீர்கள், அறுபத்தாறு என்று பதட்டம் வேண்டாம். பணிசெய்யும் படத்தின் 2,3,4,5 என்று எண்ணற்ற பாகங்களிலும் பணிசெய்து நூறாண்டு வாழுங்கள்.

எங்கள் பொள்ளாச்சிப் பகுதியில் திட்டும்போதுகூட, ‘நாசம் அத்துப் போனவனே’ என்பதுதான் எங்கள் பண்பாடு.

Leave A Reply