அந்த‌ 10 நிமிட‌ங்க‌ள் – Fazil Freeman Ali

Share

அன்வ‌ர் ந‌டுத்த‌ர‌வ‌ய‌து ம‌னித‌ர், ந‌ல்ல‌ உழைப்பாளி, யார் வ‌ந்து கேட்டாலும் த‌ன்னால் இய‌ன்ற‌ உத‌விக‌ள் செய்ப‌வர்.

எல்லோருக்கும் அவ‌ர்மீது மிகுந்த‌ ம‌திப்பும் ம‌ரியாதையும் உண்டு. அவ‌ருடைய ஒரே கெட்ட‌ ப‌ழ‌க்க‌ம், அவ‌ருடைய‌ முன்கோப‌ம். அன்வ‌ர் க‌டும் கோப‌க்கார‌ர், எத‌ற்கெடுத்தாலும் சுள்ளென்று கோப‌ம் த‌லைக்கேறும், ப‌ட்டென்று த‌டித்த‌ வார்த்தைக‌ள் வாயிலிருந்து கொட்டும். ப‌ல‌வேளைக‌ளில் த‌ன்னுடைய‌ வார்த்தைக‌ளுக்காக‌ அவ‌ரே பின்ன‌ர் வ‌ருந்தவும் செய்வார்.

என்ன‌தான் வீட்டில் ந‌ல்ல‌ வ‌ச‌திக‌ள் இருந்தாலும் இந்த‌ ஒற்றை குண‌ம் கார‌ண‌மாக‌ வீட்டில் நிலையான‌ ம‌கிழ்ச்சியும் நிம்ம‌தியும் குடிகொள்வ‌தே இல்லை. ம‌னுச‌ன் எப்ப‌ எதுக்கு எரிஞ்சு விழுவாரென்று தெரியாததால் வீட்டில் எப்போதும் எல்லோரும் ஒருவித‌ அமைதியின்மையுட‌னும் இறுக்க‌த்துட‌னுமே வாழ்ந்திருந்த‌ன‌ர். அன்வ‌ருக்கும் கோப‌த்தை அட‌க்க‌வும் க‌ட்டுப்ப‌டுத்த‌வும் ஆசைதான். யோக‌ம், தியான‌ம் என்று நிறைய‌ இட‌ங்க‌ளுக்கு சென்று முய‌ற்சித்தார், ஒரு பிர‌யோச‌ன‌மும் இல்லை. இவ‌ருக்கு பிடிக்காத‌ ஏதொன்று ந‌ட‌ந்தாலும் வேதாள‌ம் உட‌ன‌டியாக‌ முருங்கைம‌ர‌ம் ஏறிவிடும். அர்ச்ச‌னைக‌ள் வாயிலிருந்து அவ‌ரையும்மீறி அருவிபோல் கொட்டும்.

ஒருநாள் ப‌க்க‌த்து ஊருக்கு ஒரு அறிஞ‌ர் வ‌ந்திருப்பதை கேள்விப்ப‌ட்டு அவ‌ரை பார்க்க‌ச்சென்ற‌வ‌ர் அவ‌ரிட‌ம் த‌ன் க‌வ‌லையை கொட்டித்தீர்த்தார்.

அன்வ‌ரின் உழைத்து மெருகேறிய‌ உட‌லையும் க‌னிவான‌ பேச்சையும் அமைதியாக‌ கேட்டுக்கொண்டிருந்த‌ அறிஞ‌ர், “இதெல்லாம் ஒரு பிர‌ச்சினையே இல்லை த‌ம்பி, இதுக்கு எங்கிட்ட‌ ஒரு ந‌ல்ல‌ ம‌ருந்து இருக்கு. ப‌ல‌ருக்கும் ப‌ல‌ ஊர்க‌ளில் இந்த‌ ம‌ருந்தை குடுத்திருக்கேன். எல்லோருக்கும் இது ப‌லிச்சிருக்கு” என்று சொன்ன‌ப‌டி அருகிலிருந்த‌ அறைக்குச்சென்று ஒரு சின்ன‌ குப்பி நிறைய‌ ம‌ருந்து எடுத்துவ‌ந்து கொடுத்தார்.

“ஆனால் ஒரு க‌ண்டிஷ‌ன்..”

“சொல்லுங்க‌ய்யா, இந்த‌ நாச‌மாப்போன‌ கோப‌ம் வ‌ராம‌லிருக்க‌ என்ன‌ வேணும்னாலும் செய்வேன்” என்றார் அன்வ‌ர்.

“பெருசா ஒண்ணுமில்ல‌ப்பா.. கோப‌ம் வ‌ரும்போது ம‌ட்டும்தான் இந்த ம‌ருந்தை ப‌ய‌ன்ப‌டுத்த‌ணும். குப்பியிலிருந்து வெறும் மூணே மூணு சொட்டு ம‌ருந்தெடுத்து நாக்கில் ஊத்த‌ணும். அப்புறும் 10 நிமிட‌ம் ம‌ருந்தை முழுங்காம‌ நாக்கிலேயே வெச்சிருக்க‌ணும், வாய் திற‌க்கூடாது. ம‌ருந்து நாக்கில் ஊற‌ணும், அப்ப‌த்தான் ம‌ருந்து வேலைசெய்யும்” என்றார் அறிஞ‌ர்.

“ச‌ரிங்க‌ய்யா… அப்ப‌டியே செய்றேன்” என்று ம‌ருந்தை வாங்கிச்சென்ற‌ அன்வ‌ருக்கு ஆறுத‌லுட‌ன்கூடிய‌ ம‌கிழ்ச்சி. ஏனென்றால் தொழுகை, திக்ரு, ச‌ல‌வாத்து, ம‌ந்திர‌ம், யோக‌ம் என்று பெரிய‌வ‌ர் எதுவும் சொல்ல‌வில்லை. அதையெல்லாம் ப‌ல‌முறை ப‌ரீட்சித்துப்பார்த்து தோல்விய‌டைந்தாயிற்று. இது ம‌ருந்து, அதுவும் நாக்கில் ஊற்றும் ம‌ருந்து, க‌ண்டிப்பாக‌ வேலைசெய்யும் என்று த‌ன‌க்குள் கூறிய‌ப‌டி வீட்டுக்கு சென்றார்.

வீட்டுக்குள் அன்வ‌ர் நுழைந்த‌துமே அதுவ‌ரை க‌ல‌க‌ல‌வென்றிருந்த‌ வீடு அமைதி ஆயிற்று, கார‌ண‌ம் ம‌னித‌ர் வெளியே யார்மீதோ உள்ள‌ ஆத்திர‌த்தையெல்லாம் வீட்டுக்குள் நுழைந்த‌தும்தான் பொதுவாக‌ கொட்டுவார்.

இன்றும் அப்ப‌டித்தான், தெருவில் சைக்கிளில் சென்ற‌ ஒருவ‌ன் இவ‌ர்மீது மோதிவிடுவ‌துபோல் வ‌ந்த‌தால் ஏற்ப‌ட்ட‌ கோப‌த்தை தெருவில் காட்ட‌முடியாததால் வீட்டுக்குள் நுழையும்போதே, “சைக்கிளா ஓட்டுறானுங்க‌ குருட்டுப்…” என்று துவ‌ங்கிய‌வ‌ர், பெரிய‌வ‌ரின் ம‌ருந்து நினைவுக்குவ‌ர‌, ம‌டியிலிருந்து குப்பியை எடுத்து மூன்று சொட்டு நாக்கில் ஊற்றிவிட்டு ஈசி சேரில் அம‌ர்ந்து சுவ‌ரில் இருந்த‌ க‌டிகார‌த்தை க‌ண்கொட்டாம‌ல் பார்த்த‌வ‌ண்ண‌ம் இருந்தார்.

“என்னாச்சு ம‌னுச‌னுக்கு, குடிக்க‌ ஆர‌ம்பிச்சுட்டாரா..? அதென்ன‌ சொட்டு சொட்டாவா குடிப்பாங்க‌..?” என்று யோசித்து குழ‌ம்பிய‌ப‌டி ம‌னைவி அருகில் வ‌ந்து, “காபி போட‌வாங்க‌..?” என்று கேட்க‌, கோப‌ம் த‌லைக்கேறிய‌து அன்வ‌ருக்கு. ஆனால் இன்னும் 7 நிமிட‌ங்க‌ள் வாய் திற‌க்க‌க்கூடாது…

கோப‌த்தை முக‌த்தில்காட்டிய‌ப‌டி சைகையாலேயே, “ஒண்ணும் வாணாம், பேசாம‌ போ…” என்று ம‌னைவியை துர‌த்திவிட்டார்.

“இதென்ன‌ புது நோயா இருக்கு” என்று முணுமுணுத்த‌ப‌டி அடுப்ப‌டிக்கு சென்ற‌ சுபைதா த‌ன் மாமியாரிட‌ம், “என்ன‌ ஆச்சு உங்க‌ ம‌க‌னுக்கு..? என்ன‌மோ சைக்கிள்னு க‌த்திட்டே வீட்டுக்குள்ள‌ வ‌ந்தாரு, ஒரு பாட்டில்ல இருந்து என்ன‌மோ எடுத்து வாயில‌ ஊத்தினாரு, இப்போ ஈசிசேர்ல‌ சாஞ்சு கிட‌க்காரு. காபி வேணுமான்னு கேட்ட‌துக்கு மூஞ்சியில‌ எள்ளும் கொள்ளும் வெடிக்க‌ கையாலேயே வேணாம்னு சொல்லிட்டாரு” என்று சொல்ல, மாமியாரும் குழ‌ம்பிப்போனார்.

க‌ர‌ண்டு வேறு இல்லாததால் விய‌ர்த்துப்போய் அம‌ர்ந்திருந்த‌வ‌ருக்கு விசிறிவிட்ட‌ப‌டி, சொல்லியும் கேட்காம‌ல் அவ‌ருக்கு தான் போட்டு கொண்டுவ‌ந்திருந்த‌ காப்பியோடு அருகே அம‌ர்ந்து க‌வ‌லையோடு அவ‌ரையே பார்த்தாள் சுபைதா.

10 நிமிட‌ம் ஆன‌தை க‌டிகார‌ம் சொல்ல‌வும், அப்பாடாவென்று நாக்கில் இருந்த‌ ம‌ருந்தை விழுங்கிய‌வ‌ர், “என்ன‌டி என்னையே இப்ப‌டி உத்து பாக்குறே..?” என்றார்.

“இல்ல‌… என்ன‌மோ சைக்கிள்னு சொல்லிட்டு வ‌ந்தீங்க‌, அப்ப‌டியே ஈசி சேர்ல‌ சாஞ்சிட்டீங்க‌, நான் ப‌த‌றிப்போயிட்டேன்..?” என்ற சுபைதாவிட‌ம், “ஏன் ஹார்ட் அட்டாக் வ‌ந்துட்டுன்னு நென‌ச்சியாக்கும், அதொண்ணுமில்ல‌. அந்த‌ அத்துல்லா ம‌வ‌ன் காசீம் இஸ்றாயில‌ தேடி வெர‌ச‌லா சைக்கிள்ள‌ போறான்போல‌. ஹ‌ற‌வாபோற‌வ‌ன் என்னையுஞ்சேத்து கூட்டிட்டு போவ‌ப்பாத்தான்….” என்று மித‌மான‌ கோப‌த்தோடு சொல்லிவிட்டு, “சொல்லியும் கேக்காம‌ காபி போட்டியாக்கும், க‌ள்ளி…” என்று சுபைதாவின் க‌ன்ன‌த்தை கிள்ளிய‌ப‌டி காப்பியை குடிக்க‌த்துவ‌ங்கினார்.

காபி குடிக்கும்போதுதான் தோன்றிய‌து, “நாம் ஓவ‌ரா கோப‌ப்ப‌ட‌லியே, அப்ப‌ பெரிய‌வ‌ர் குடுத்த‌ ம‌ருந்து க‌ண்டிப்பா வேல‌ செய்யுது போல‌யே. இந்த‌ ம‌ருந்து ம‌ட்டும் தொட‌ர்ந்து ப‌லிச்சிட்டா வாழ்க்கை எவ்வ‌ள‌வு ந‌ல்லா இருக்கும்..!”

அன்று ம‌ட்டும் ப‌தினேழு முறை மருந்து குடிக்க‌வேண்டியிருந்த‌து. உப்பு குறைவாக‌ இருந்த‌ மீன்க‌றி, செருப்பை காலிலிருந்து விசிறிய‌டித்துவிட்டு வீட்டுனுள் நுழைந்த‌ ம‌க‌ன், நியூஸ் கேட்கும்போது மிக்சியை ஓட‌விட்ட‌ தாயார்… என்று வெவ்வேறு கார‌ண‌ங்க‌ள்.

அடுத்த‌நாள், அத‌ற்க‌டுத்த‌நாள் என்று ம‌ருந்தெடுக்கும் த‌வ‌ணைக‌ள் குறைந்த‌து. ஒரே வார‌த்தில் கோப‌ம் வ‌ருவ‌தும் நின்றுபோன‌து, ம‌ருந்தும் தீர்ந்துபோன‌து.

ஏற்க‌ன‌வே பாட்டிலை மோர்ந்துபார்த்து அது சாராய‌ம் இல்லையென்று உறுதிசெய்துவிட்ட‌ சுபைதா, “ஏங்க‌, அந்த‌ பெரிய‌வ‌ரை பார்த்து அடுத்த‌ பாட்டில் ம‌ருந்து வாங்க‌ப்போவும்போது நானும் வ‌ர‌ட்டா..?” என்று இழுத்தாள்.

“ச‌ரி, ம‌ருந்து நேத்தே தீந்துருச்சு. இன்னிக்கி சாய‌ங்கால‌ம் போவோம்” என்று சொல்லிய‌ அன்வ‌ர், ம‌திய‌ம் உண்டபின் குட்டித்தூக்க‌ம் போட்டுவிட்டு எழும்போது கையில் காபியுட‌னும் வெளியே செல்லும் உடையுட‌னும் சுபைதா.

“என்ன‌, சீவி சிங்காரிச்சுட்டு காபி தாரே, எங்க‌ போறதுக்கு கிள‌ம்புறே..?” என்ற‌வ‌ரிட‌ம், “அதுக்குள்ள‌ ம‌ற‌ந்துட்டிய‌ளா, உங்க‌ வைத்திய‌ரை பாத்து ம‌ருந்து வாங்க‌ போவாண்டாமா..?” என்றாள் சுபைதா.

“அப்ப‌டியே ம‌ற‌திக்கும் ஒரு ம‌ருந்து கேக்க‌ணும்” என்று முணுமுணுத்த‌வ‌ளிட‌ம், “மூப்பு கார‌ண‌மா வ‌ர‌க்கூடிய‌ ம‌ற‌திக்கெல்லாம் ம‌ருந்து கிடையாதும்மா…” என்று சொல்லி சிரித்த‌ப‌டி சென்றான் ம‌க‌ன்.

அன்வ‌ரும் “டேய் உன‌க்கும் ஒருநாள் வ‌ய‌சாகும்டா…” என்று சிரித்த‌ப‌டி கைலியை க‌ழ‌ற்றிவிட்டு பேன்டும் ச‌ட்டையும் உடுத்திய‌ப‌டி, “வா போய்ட்டு வந்துருவோம்” என்று கிள‌ம்பினார்.

சேலையின் தோள் ப‌குதி முந்தானையால் முட்டாக்கு போட்ட‌ப‌டி அன்வ‌ருட‌ன் ப‌டிக்க‌ட்டில் இற‌ங்கிய‌ சுபைதா, “ஏங்க‌ உங்க‌ வைத்திய‌ரு ந‌ம்மாளுதானா…?” என்று கேட்க‌, “ஆமா… ம‌னுச‌ ஆளுதான், ஏலிய‌ன் எல்லாம் இல்ல‌, வா பேசாம‌..” என்று சிரித்த‌ப‌டி பைக்கை ஸ்டார்ட் செய்தார் அன்வ‌ர்.

அறிஞ‌ரின் இட‌த்தை அடையும்போது அந்தி ம‌ய‌ங்க‌த் துவ‌ங்கியிருந்த‌து. அவ்வ‌ள‌வாக‌ கூட்ட‌ம் இல்லை.

“வாங்க‌ த‌ம்பி..” என்று முக‌ம் ம‌ல‌ர‌ வ‌ர‌வேற்ற‌ பெரிய‌வ‌ரிட‌ம் ம‌னைவியை அறிமுக‌ம் செய்துவைத்தார் அன்வ‌ர். இருவ‌ரையும் அருகிலிருந்த‌ நாற்காலிக‌ளில் அம‌ர‌ச்சொன்ன‌ அறிஞ‌ர், “எப்ப‌டி இருக்கீங்க‌..?” என்று அன்போடு ந‌ல‌ம் விசாரித்தார்.

அன்வ‌ர் வாயை திற‌க்குமுன் முந்திக்கொண்ட‌ சுபைதா, “இவ‌ர் இப்ப‌ல்லாம் ஆளே மாறிட்டாருங்க‌. கோப‌மே ப‌டுற‌தில்ல‌, எரிஞ்சு விழுற‌தில்ல‌, வீடே ச‌ந்தோச‌மா இருக்கு. அதுக்கு உங்களுக்கு ந‌ன்றி சொல்ல‌த்தான் நானும் கூட‌வே வ‌ந்தேன்” என்று சொன்னாள்.

“ஆமாங்க‌ பெரிய‌வ‌ரே, உங்க‌ ம‌ருந்து ந‌ல்லா வேலை செய்யுது. ஆனா என்ன‌, ம‌ருந்து தீந்துருச்சு. அதான் உங்க‌ளையும் பாத்துட்டு, ம‌ருந்தும் வாங்கிட்டு போலாம்ணு வ‌ந்தோம்” என்றார் அன்வ‌ர்.

ஹ‌ ஹ‌ ஹா… என்று வாய்விட்டு சிரித்த அறிஞ‌ர், “ம‌ருந்து எப்ப‌ தீந்துச்சு..?” என்று கேட்க‌, அவ‌ரின் வெடிச்சிரிப்புக்கு கார‌ண‌ம் புரியாம‌ல், “நேற்று ம‌திய‌ம்ங்க‌” என்றார் அன்வ‌ர்.

“அதுக்க‌ப்புற‌மும் உன‌க்கு கோப‌ம் வ‌ந்திருக்குமே, அப்ப‌ என்ன‌ செய்தே..?”

“ஆமாங்க‌ய்யா, கொஞ்ச‌ம் கோப‌ம் எரிச்ச‌ல் எல்லாம் ஓரிரு முறை வ‌ந்துச்சு. உட‌னே ரியாக்ட் ப‌ண்ணாம‌ ம‌ருந்து நாக்கில‌ இருக்கிற‌ மாதிரி நென‌ச்சுட்டு கொஞ்ச‌ம் நேர‌ம் அமைதியா இருந்தேன், கோப‌மும் எரிச்ச‌லும் தானா அட‌ங்கிருச்சு” என்று சொல்லும்போதே ஏதோ புரிந்த‌மாதிரி இருந்த‌து அன்வ‌ருக்கு.

மீண்டும் சிரித்த‌ அறிஞ‌ர், “நான் த‌ந்த‌ ம‌ருந்து உன் வீட்டிலேயே நிறைய‌ இருக்குப்பா” என்று சொல்லிவிட்டு, சுபைதாவை பார்த்து”அது வெறும் த‌ண்ணீர்தாம்மா…” என்றார்.

“என்ன‌து, சாதார‌ண‌ த‌ன்ணீரா இவ‌ரோட‌ கோப‌த்தை க‌ட்டுப்ப‌டுத்திச்சு..?” என்று மூக்கில் விர‌ல்வைத்த‌ப‌டி ஆச்ச‌ரிய‌மாக‌ கேட்ட‌ சுபைதாவிட‌ம், “அது ம‌ட்டும் இல்ல‌ம்மா… கூட‌வே அந்த‌ 10 நிமிட‌மும்” என்ற அறிஞ‌ர் தொட‌ர்ந்தார்…

“கோப‌ம் என்ப‌து வினை அல்ல‌, அது எப்போதுமே ஒரு எதிர்வினை ம‌ட்டுமே. ந‌ம‌க்கு பிடிக்காத‌ ஏதோவொன்று ந‌ட‌க்கும்போதோ, பார்க்கும்போதோ, கேட்கும்போதோ மூளை ஆற்றும் எதிர்வினைதான் கோப‌மும் எரிச்ச‌லும். அத‌ற்கு ஆயுளும் மிக‌க்குறைவு. நாம் எதுவும் செய்யாம‌ல் இருந்தால் வெறும் 10 நிமிட‌த்திற்குள் அது தானாக‌வே இற‌ந்தும் விடும்”

“அந்த‌ 10 நிமிட‌த்திற்குள் நாம் ஆற்றும் வினைக‌ள்தான் அத‌ன் ஆயுளை நீடிக்க‌ச்செய்யும். நாம் பேசும் க‌டும் சொற்க‌ள், சில‌ வேளைக‌ளில் கையையும் நீட்டிய‌ப‌டி பேசும் சொற்க‌ள்தான் கோப‌த்தை தூப‌ம்போட்டு வ‌ள‌ர்க்கும்”

வ‌ள்ளுவ‌ர்கூட‌ சொல்கிறாரில்லையா, “தீயினால் சுட்ட‌புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட‌ வ‌டு” என்று.

“கோப‌மும் ஆத்திர‌மும் எரிச்ச‌லும் ஏற்ப‌டும்போதெல்லாம் வெறும் 10 நிமிட‌ம் அந்த‌ உண‌ர்ச்சிக்கு அடிமையாகாம‌ல் இருந்தால் அந்த‌ உண‌ர்ச்சி உன‌க்கு அடிமையாகிவிடும். வெறும் ஒரு வார‌த்திலேயே அது உன‌க்கு அடிமையாகிவிட்ட‌து, பார்த்தாயா..?”

“பொறுத்தார் பூமி ஆள்வார்” என்ப‌து இதுதான் என்ப‌தை புரிந்துகொண்ட‌ அன்வ‌ரும் சுபைதாவும் நிறைவோடு அங்கிருந்து கிள‌ம்பின‌ர்.

“ஏண்டி, ம‌ற‌திக்கு ம‌ருந்து கேக்க‌ ம‌ற‌ந்துட்ட‌ போல‌யே” என்று ந‌க்க‌லாக‌ சிரித்த‌ அன்வ‌ரிட‌ம், “அதான் உங்க‌ ம‌வ‌னே சொல்லிட்டானே, ரோட்டை பாத்து பைக்க‌ ஓட்டு கிழ‌வா” என்று செல்ல‌மாக‌ அவ‌ன் காதில் முத்த‌மிட்ட‌ப‌டி ஓதிய‌ சுபைதா அவ‌ன் தோளை இன்னும் இறுக்க‌மாக‌ அணைத்த‌ப‌டி அம‌ர்ந்தாள்.

ஜில்லென்ற‌ காற்று இத‌மாக‌ வ‌ருடிச்சென்ற‌து, அவ‌ர்க‌ளின் உட‌லையும் ம‌ன‌தையும்.

உங்க‌ள் கோப‌த்திற்கும் ஆயுள் 10 நிமிட‌ங்க‌ள்தான், நீங்க‌ளாக‌ அத‌ற்கு மீண்டும் மீண்டும் உயிரூட்டிக்கொண்டிருக்காத‌வ‌ரை.

“தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்”

Leave A Reply