நீங்க நல்லவரா கெட்டவரா? – Fazil Freeman Ali

Share

அந்த அறிஞர் தங்கள் ஊருக்கு வருகிறார் என்ற செய்தி பரவியதுமே ஊர் பரபரப்பாகிப்போனது. பலரும் அவரை சந்திக்கவும் அவருடன் பேசவும் ஆர்வமாக கூடி காத்திருந்தனர்.

அறிஞரும் வந்து சேர்ந்தார். பலரும் அவருடன் பேச, சிலர் செல்ஃபி எடுக்க, ஒரு மூதாட்டியோ,

“ஐயா எங்க ஊரில் ஒரு சோம்பேறி இருக்கான்யா. பெரிய பணக்காரன் ஆகணும்னு அவனுக்கு ஆசை. ஆனா எந்த வேலையும் செய்றதில்ல. வீட்டுக்குள்ளேயே சதா சாமி கும்பிட்டு என்னை பணக்காரனாக்குன்னு புலம்பிக்கிடே இருக்கான்” என்று புலம்பினார்.

“சரி, அவனை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றார் அறிஞர்.

“ஐயோ வேணாங்கய்யா, முதல்ல அவன் வரவேமாட்டான், வந்தாலும் அவன் உங்களையே அவமரியாதையா பேசிருவான்” என்று ஊரே ஒரேகுரலில் சொல்லிற்று.

“பரவாயில்லை, அவன் பிரச்சினையை நான் தீர்த்து வைக்கிறேன் என்று சொல்லுங்கள்” என்றார் அறிஞர்.

ரொம்ப பிகு பண்ணிய அந்த சோம்பேறியை ஒருவழியாக அழைத்து வந்தார் மூதாட்டி. அறிஞரை பார்த்ததுமே,

“உன்னை மாதிரி ஃப்ராடு பசங்க நிறைய பேரை பாத்துட்டேன் நான். ஊரை ஏமாத்தி நல்லா வாழ்றீங்க, என்ன..?” என்று நக்கலாக சிரித்தான் சோம்பேறி.

அறிஞரும் சிரித்தபடியே, “என் பற்றிய உன் அபிப்பிராயம் ஒரு பக்கம் இருக்கட்டும். உன்னோட பிரச்சினை என்ன தம்பி..? நல்ல பக்திமானா இருக்கியாம், கைகால் எல்லாம் நல்லாத்தானே இருக்கு, ஆனா எந்த வேலையும் செய்றதில்லையாமே..?” என்று கேட்டார்.

“நான் எதுக்கு வேலை செய்யணும். சில குழந்தைகள் பணக்கார வீட்ல பொறக்குது, நல்ல சூழ்நிலையில் வளருது. நான் மட்டும் ஏன் ஏழை வீட்டில் பிறந்து ஏழையாகவே வாழணும். எல்லாமே கடவுளுடைய சித்தம்தானே, கடவுள் நெனச்சா என் நிலைமையை மாத்தலாமே. அதனாலதான், இறைவனை மட்டும் நம்பி தொடர்ந்து வணங்குறேன். இது ஆரோக்கியமான உடம்பா..? இந்த இத்துப்போன உடம்பை வைத்து என்னய்யா செய்ய முடியும்..?” என்றான் சோம்பேறி.

இவனிடம் சாதாரணமாக பேசினால் வேலைக்கு ஆகாது என்று புரிந்துகொண்ட அறிஞர்,

“என்னால உன்னோட பிரச்சினையை தீர்க்கமுடியும் தம்பி” என்றார்.

“ஏது… என்னையும் உங்கூட ஊர் ஊரா சுத்தச்சொல்றியா…?” நக்கலாக கேட்டான் சோம்பேறி.

“இல்ல தம்பி, எனக்கு தெரிந்த ஒரு பெரிய தொழிலதிபர் இருக்கார். அவருக்கு ஒரு சின்ன பிரச்சினை. நீ அவருக்கு உதவினால் அவர் உனக்கு நிறைய பணம் கொடுப்பார்” என்றார் அறிஞர்.

நானே ஏழை, என்னால் எப்படி ஒரு தொழிலதிபருக்கு உதவ முடியும் என்று குழம்பினான் இளைஞன். என்றாலும் பேராசை கொஞ்சம் எட்டிப்பார்க்க, “என்ன உதவி வேணும்..?” என்றான்.

“ஒண்ணும் பெரிய வேலை இல்லப்பா. அந்த தொழிலதிபருக்கு ஒரு மகன் இருக்கான். அவனுக்கு நீண்ட நாட்களாகவே சுகவீனம், கண் பார்வை ஏறக்குறைய போய்விட்டது. உயிருள்ள உடலிலிருந்து கண்கள் தானமாக பெற்றால், அவர் மகனுடைய கண்பார்வையை மீட்டுவிடலாமாம். நீ உன் கண்களை தானமாக கொடுத்தால் வாழ்நாளெல்லாம் சவுகரியமா உக்காந்து சாப்பிடலாம். என்ன சொல்றே…?” என்றார் அறிஞர்.

“என்னது, என் கண்களை கொடுக்கவா..? கண்ணு குருடா போனதுக்கப்புறம் பணத்தை வெச்சுக்கிட்டு என்னய்யா செய்றது..? புத்தி கித்தி பேதலிச்சுப்போச்சா உனக்கு..?” என்று கத்தினான் சோம்பேறி இளைஞன்.

“என்னப்பா… இப்பத்தான் இத்துப்போன உடம்புன்னு சொன்னே. நான் என்ன முழு உடம்பையுமா தானமா கொடுக்கச் சொன்னேன், வெறும் கண்களைத்தானே…? அதைக்கொடுத்தால் நீ ஆசைப்பட்டபடியே பணக்காரன் ஆகிவிடலாம். எந்த வேலையும் செய்யாமல் செழிப்பாக வாழலாம்” என்றார் அறிஞர்.

“என்னது… கண்களை விற்று பணமா, நான் உழைச்சே வாழ்ந்துக்கறேன், ஆளை விடுங்கடா சாமிகளா” என்று ஓடியே போய்விட்டான் இளைஞன்.

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். நம்மில் பலரும்கூட இந்த இளைஞன் மாதிரித்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துக்குவான் என்று சோம்பேறியாக வாழ்ந்துகொண்டு பணக்கார ஆசையோடு வாழ்பவர்கள் எத்தனை பேர். அது சாத்தியமா என்ன..?

இன்னும் சிலர், நான் நல்லவனா இருக்கேன். இருந்தும் ஏன் வறுமை என்னை விடாமல் துரத்துது. கெட்டவனெல்லாம் நல்லா இருக்கான், நான் மட்டும் ஏன் சிரமப்படணும் என்று அங்கலாய்க்கின்றனர்.

நல்லவனா கெட்டவனா என்று பிரபஞ்சம் ஒருபோதும் பார்ப்பதில்லை. வல்லவனா, இல்லையா என்று மட்டுமே அது பார்க்கிறது. நீங்கள் உங்கள் வல்லமையை பெருக்கிக்கொள்ள வேண்டும், அதுதான் தாரக மந்திரம். அது உடலுழைப்பால் இருக்கலாம், அறிவின் பெருக்கத்தால் இருக்கலாம், அதிகாரத்தை அடைவதால் இருக்கலாம். இது எதுவும் மேலே இருப்பவன் கூரையை பொத்துக்கொண்டு கொடுப்பதல்ல. நாம் நம் உழைப்பால் பெருக்கிக்கொள்ள வேண்டியவை.

இதைத்தானே வள்ளுவரும், ஆள்வினையுடைமை அதிகாரத்தில், “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலிதரும்” என்கிறார்.

அதனால் கண்களை விற்று ஓவியம் வாங்கும் ஆசையைவிட்டுவிட்டு உழைப்பை நம்பி, வல்லமையை பெருக்கி வாழ்வை வளமாக்க முயல்வோம்.

முடங்கிக்கிடந்தால் மூச்சு விடுவதுகூட சிரமம்தான். சாதிக்க உழைத்தால் வானமும் எட்டிவிடும் தூரம்தான்.

Leave A Reply