Home > கட்டுரைகள் > கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 4 – ராதா மனோகர்

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 4 – ராதா மனோகர்

புதுவேஷம் போட்ட பார்ப்பனர்கள்!

மிகுந்த மனவருத்தத்துடன் கொல்லா நோன்பை கடைப் பிடிக்க பார்ப்பனர்கள் முடிவு செய்தனர். ஆனாலும் இந்திரன் போன்ற தேவர்களை மகிழ்விக்க காலம் காலமாக செய்யப்படும் யாகங்களை செய்யவேண்டுமே?

அதற்காக வேள்வியில் மிருகங்களை பலியிடுவதற்கு பதிலாக இரத்த சிவப்பு குங்குமத்தையும் பசு நெய்யையும், தர்ப்பை புல்லால் உருவத்தை செய்து அவற்றை எல்லாம் தீயில் இட்டு பொசுக்கி தங்கள் யாகத்தை செய்யலாம் என்று முடிவெடுத்தனர்.

மக்களின் ஞாபக மறதியில் நம்பிக்கை வைத்த கயவர்கள் தற்போது புதிதாக தூய புலால் உண்ணாத பார்ப்பனர்களாக வேஷம் போட்டனர். பசுவை கோமாதா என்றும் ஆகாயம், நீர், நெருப்பு, நிலம், பயிர், பச்சை எல்லாம் தெய்வங்களே என்றும் அவற்றிக்கு வைதீக பூஜைகளை செய்யதொடங்கினார்கள். புரியாத பாசையில் வெள்ளை உடுத்தி வேஷம் போட்ட பார்ப்பனர்களின் ஆன்மீக வேஷத்தில் மெல்ல மெல்ல மக்கள் ஏமாற தொடங்கினர்.

நேமிநாத தீர்த்தங்கரர் வேங்கடாசலபதியானார்.

சமணர்களை விட அதிகமாக ஜீவகாருண்யம் பேசினார்கள். சமணர்களின் நூல்களை எல்லாம் தங்களின் வேதங்கள் என்றனர்.

சமண பள்ளிகளில் இருந்து பல சமணர்கள் துரத்தி விரட்டப்பட்டனர். வைதீக பார்ப்பனீய கோட்பாடுகளை ஏற்று கொண்டவர்களுக்கு எல்லா சலுகைகளும் அளிக்கப்பட்டன.

அரசனும் ஆட்சியும் வைதீக பார்ப்பனீயத்தை தழுவியதால், அதை மறுத்தவர்கள் இழிந்த சாதியி னராக சமுகத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். அவர்களின் நிலபுலங்கள் பலவும் அரசினாலும் அரசின் செல்ல பிள்ளைகளான பார்பனர்களாலும் சூறையாடப்பட்டது.

சமண பள்ளிகளை சேர்ந்த துறவிகள் குகைகளை நோக்கி செல்ல தொடங்கினர்.

சமண தீர்த்தங்கரர்களின் பெயர்கள் உள்ள சமண பள்ளிகளின் பெயர்கள் எல்லாம் பார்ப்பனீய பெயர்களாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

குலதிலகனால் நேமிநாதர் சமண பள்ளி என்று தொடங்கப் பட்ட சமண தலம் வேங்கட பாலாஜி கோவில் என்று பெயர் மாற்றப்பட்டது.

குலதிலகனின் இந்த கொடுங்கோல் ஆட்சி பற்றிய எல்லா செய்திகளும் ஒற்றர்கள் மூலம் தவறாது பாக்கியத்தம்மாளின் காதுக்கு எட்டிய வண்ணமே இருந்தது.

மெல்லிய மேகங்கள் இடியும் மின்னலுமாய்..

வழுக்கியாற்று கரையில் பெரிய கொட்டகைகள் அமைக்கப் பட்டன.

அங்குதான் மண்வெட்டி போன்ற கட்டு மான கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. சில கொட்டகைகளில் குளக் கட்டுமானத்தில் தேர்ச்சி பெற்ற விற்பனர்களும் வேறு சில கொட்டகைகளில் பணியாளர்களும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். உணவு பானம் தயாரிப்பதற்கு தனியாக நான்கு கொட்டகைகள் இருந்தன.

இவற்றுக்கு நடுவில் பாக்கியத்தமாளின் கொட்டகையும் இருந்தது.

வெகு வேகமாக கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. எண்ணியபடி குளம் கட்டி முடிப்பதற்குள் ஏராளமான தடங்கல்கள் வந்து கொண்டே இருந்ததால் பாக்கியத்தமாள் நிம்மதி இழந்து காணப்பட்டாள்.

குலதிலகனும் அவனது புதிய நண்பர்களாகி விட்ட பார்ப்பன பூசாரிகளும் செய்யும் முன்னுக்கு பின் முரணான கூத்துகள் மக்களிடம் பெரும் விவாதங்களை உண்டாக்கி இருந்தது.

மக்களில் பலருக்கும் பார்ப்பனர்களின் பல சம்பிரதாயங்கள் வேடிக்கையாகவும் கொஞ்சம் கவர்ச்சியாகவும் இருந்தன. முதலில் அவர்களது வர்ண அலங்கார ஆடைகள் மற்றும் வர்ணப்பூச்சுக்கள் சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் மகிழ்வித்தது. அவர்களின் உணவு முறை முற்று முழுதாக பாலாவோரை மக்களின் பாரம்பரிய உணவுகளில் இருந்து பெரிதும் மாறுபட்டு இருந்தன. எல்லாவற்றிலும் பார்க்க சதா ஆடல் பாடல் போன்ற கொண்டாட் டங்கள் அவர்களை சுற்றியே இருந்தன. அவர்கள் கூடும் இடமெல்லாம் குலதிலகனின் அரண்மனை பணியாட்கள் சிற்றுண்டிகளை வழங்கினார்கள்.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல அவர்களின் புதிய பசுநேசன் வேஷம் மக்களை பெரிதும் கவர்ந்தது. ஏராளமான பசுக்களை நீராட்டி அலங்கரித்து வர்ணபொடிகளை பூசி அவற்றை தேவதை போல பூசித்தனர். இயல் பிலேயே கொல்லா நோன்பை கடைப்பிடித்த பாலாவோரை சமண மக்களுக்கு பார்ப்பனர்களின் பசு நேசம் உள்ளத்தை தொட்டது. மெல்ல மெல்ல சமணர்களின் மனதில் பார்ப்பனீயம் இடம் பிடிக்க தொடங்கியது. பார்ப்பனர்களின் கோமாதா பூசைக்கு மக்கள் தங்களது பசுக்களை ஒட்டிக்கொண்டு வரலாயினர்.

தங்களின் செல்லபிராணியை எங்கிருந்தோ வந்த பூசாரிகள் அலங்கரித்து பூசைகள் செய்கிறார் களே என்று அந்த பார்ப்பனர்கள் மீது மிகுந்த அன்பு செலுத்தினர். குலதிலகனின் உள்ளத்தில் பார்ப்பனர்களின் இந்த முன்னேற்றம் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. தனது திட்டங்கள் எல்லாம் மிக இலகுவில் நிறைவேறும் என்று நம்பத் தொடங்கினான்.

பார்ப்பனர்களை பாலாவோரையில் நிரந்த ரமாக குடியமர்த்துவதற்கு அவர்களுக்கு தேவையான பொன் பொருள் மட்டுமல்லாது நல்ல விளைச்சலை தரக்கூடிய வயல் நிலங்களும் வழங்கவேண்டுமே?

அமைச்சர் பெருமக்களிடம் இதுபற்றி ஆலோசனையில் ஈடுபட்டான்.

அவனது அமைச்சர்கள் என்று கூறப்படுபவர்கள் பெரும்பாலோர் அவனுக்கு விருப்பமானவற்றை கூறி அவனை தவறாக நடத்தினார்கள்.

சில ஊர்களை தெரிவு செய்து முற்று முழுதாக பார்ப்பனர்களுக்கு வழங்கலாம் என்றும் முடிவெடுத்தனர். அது மட்டுமல்லாமல் அவ்வூர்களிலேயே ஏனைய பணிகள் செய்யும் இதர மக்களையும் இந்த பார்பனர்களுக்கு வேலையாட்களாக நியமிக்கலாம் என்றும் திட்டங்கள் தீட்டினார்கள்.

இப்படியாக குலத்தையும் குளத்தையும் கெடுக்க வந்த கோடரிக் காம்பு போல குலதிலகன் தனது சதியாலோசனைகளை மேற்கொள்ளத் தொடங்கினான்.

தம்பியின் அத்தனை ஆலோசனைகளையும் திட்டங்களையும் அவ்வப்போது அறிந்து வந்த அக்கா பேராவூர் பாக்கியத்தம்மாள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாள். அன்னையும் தந்தையும் இல்லாத நிலையில் அந்தக் குறை தெரியாமல் தம்பியிடம் அதிக பாசம் வைத்து அவனை கெடுத்து விட்டோமோ நினைத்து வருந்தினாள்.

ஒருநாள் காலையில் குலதிலகனின் அமைச்சர்கள் சிலர் பாக்கியத்தம்மாளின் தரிசனம் வேண்டி வந்தனர். அவர்களின் நேரிடையாக தாங்கள் வந்த நோக்கத்தை கூறாமல் வழுக்கியாற்று குளப்பணிகள் பற்றி மிகுந்த அக்கறையோடு கேட்டறிந்தனர்.

பாக்கியத்தமாளுக்கு இவர்களின் நோக்கம் நிச்சயம் படு மோசமானதாக இருக்கும் என்று தோன்றியது. அவர்களின் அதீத இனிப்பான வார்த்தைகள் அதை வெளிக்காட்டியது.

வெகுநேர வெட்டி பேச்சுக்கு பின் அவர்கள் மெதுவாக பாம்பு தலை காட்டுவதுபோல குலதிலகனின் கோரிக்கையை வெளிப்படுத்தினர்.

பார்ப்பனர்களுக்கு வழுக்கியாற்று கரையில் இரண்டு கிராமங்கள் தானமாக அளிக்க வேண்டும் என்றார்கள். அவர்கள் குறிப்பிட்ட அந்த கிராமங்கள் நல்ல விளைச்சல் தரும் அழகிய வயல் வெளியைக் கொண்டது. பாக்கியத்தம்மாளால் கட்டப்பட்டு கொண்டிருக்கும் குளத்தின் நீர்பாசனத்தால் முதலில் பயன்படப்போவதும் அந்த கிராமங்கள்தான். அதாவது தலைமடை கிராமங்கள்.

இதுவரை பாக்கியத்தம்மாள் தம்பி குலதிலகனின் பாசமிகு அக்காவாகத்தான் இருந்தாள். ஒருவர் வெறும் நல்லவராக மட்டுமே இருந்தால் அவரை சுண்டி பார்க்க சுரண்டிப்பார்க்க கோழைகளுக்கும் குள்ளநரிகளுக்கும் ஆசை வரத்தானே செய்யும்?

பல இடிகளை ஒரே நேரத்தில் கேட்ட பறவைகள் போல அவளது மனமும் உடலும் ஆன்மாவும் ஒரு கணம் ஆடிப்போய் விட்டது. தனது பதட்டத்தை கொஞ்சம் கூட வெளிகாட்டி கொள்ளவில்லை.

இந்த புயலையும் இடியையும் ஓரளவு அவள் எதிர்பார்த்தாள். அவளது ஒற்றர்கள் ஏற்கனவே இதுபற்றிய செய்திகளை அறிவித்திருந்தனர். என்னதான் சிந்தித்தாலும் சிலவேளை பார்ப்பனர்களுக்கு கிராமங்களை தாரை வார்க்கும் திட்டத்தை கடைசி நேரத்திலாவது குலதிலகன் கைவிட்டு விடக்கூடும்.

தாய்மண்ணை அன்னியருக்கு தாரை வார்க்கும் அளவுக்கு குலதிலகன் முட்டாளாகி விடமாட்டான் என்று ஒரு சிறு நம்பிக்கை அவளிடம் இருந்தது. இன்று அது பொய்த்துப் போனது.

தங்கள் கோரிக்கைக்கு பாக்கியத்தம்மாள் கோபத்துடன் பதில் கூறுவாள் என்று எதிர்பார்த்தனர் தம்பியின் தூதுவர்கள்.

சிறு மௌனத்தின் பின்பு புன்சிரிப்புடனேயே பாக்கியத்தம்மாள் பேசினாள்.

You may also like
வாழ்வியல் சிந்தனைகள் 7 – ராதா மனோகர்
கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 8 – ராதா மனோகர்
வாழ்வியல் சிந்தனைகள் 6 – ராதா மனோகர்
கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 7 – ராதா மனோகர்

Leave a Reply