விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 1 – ஆதனூர் சோழன்

Share

மனிதன் செய்த குட்டி நிலவு ஸ்புட்னிக் (அக்டோபர் 04, 1957)

யாரும் எதிர்பாராமல் நடந்தது அந்த அதிசயம்.

சோவியத் ரஷ்யா அந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது. உலகம் வியந்தது. அமெரிக்கா அதிர்ந்தது.

தொழில்நுட்பத்தில் தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்று அதுவரை மார்தட்டிக் கொண்டிருந்தது அமெரிக்கா.

இரண்டு உலகப் போர்களைச் சந்தித்து, ஒரு உள்நாட்டு யுத்தத்தை சமாளித்து பாட்டாளிவர்க்க அரசு இந்தச் சாதனையை நிகழ்த்தியது.
புவியீர்ப்பு விசையைத் தாண்டி விண்வெளிக்குள் நுழைய முடியும் என்று சோவியத் ரஷ்யா நிரூபித்தது.

1957 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி.

சோவியத் ரஷ்யாவின் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக் கோள் விண்வெளிக்குள் நுழைந்து பூமியைச் சுற்றுவதாக அந்த நாட்டு ரேடியோ செய்தி ஒலிபரப்பியது.

பூமியிலிருந்து 900 கிலோ மீட்டர் உயரத்தில் ஒன்றரை மணி நேரத்துக்கு ஒருமுறை அந்தச் செயற்கைக் கோள் பூமியைச் சுற்றுவதாக சோவியத் விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

அது பந்து மாதிரி உருண்டையாக இருந்தது. அதன் எடை 83.5 கிலோ எடைதான் இருந்தது. அதிலும் பெரும்பகுதி பேட்டரிகள்தான்.

ஸ்புட்னிக் என்று பெயரிடப்பட்ட அது விண்வெளியிலேயே எரிந்து சாம்பலாகிவிடும். ஆனால், அதற்குமுன், மிக முக்கியமான் புள்ளிவிவரங்களை அது பூமிக்கு அனுப்பும் என்றும் சோவியத் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

1957 ஆம் ஆண்டை சர்வதேச பொறியியல் ஆண்டு என அறிவித்திருந்தனர். இதை முன்னிட்டு அமெரிக்காவும் சோவியத் யூனியனும் விண்வெளிக்கு செயற்கைக் கோள்களை அனுப்ப ஒப்புக் கொண்டிருந்தன.

இரு நாடுகளின் பிரதிநிதிகளும் வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் சந்தித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில்தான் இந்த செய்தி வெளியானது.

அமெரிக்க விஞ்ஞானிகள் முகத்தில் அதிர்ச்சி வெளிப்பட் டாலும், இந்தச் சாதனையை வரவேற்பதாக அறிவித்தனர்.

“இது ஒரு அற்புதமான சாதனை” என்றனர்.

ரஷ்ய தூதுக்குழுவின் தலைவர்,

“இது மனிதனால் செய்யப்பட்ட குட்டி நிலவு” என்றார்.

ஒருபக்கம் இது விண்வெளி ஆராய்ச்சியின் முக்கியமான தொடக்கமாக கருதப்பட்டாலும், அமெரிக்கா வேறுவிதமாக பயந்தது.

இந்தச் செயற்கைக் கோளை செலுத்திய ராக்கெட்டின் சக்தி, அணு ஆயுதங்களை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் கொண்டு செல்லக் கூடிய ஆற்றல் வாய்ந்தது. பூமியைச் சுற்றும் ஸ்புட்னிக், அமெரிக்காவுக்கு மேலாக மட்டும் ஒரு நாளைக்கு ஏழு முறை வரும்.

சோவியத் ரஷ்யா அமெரிக்காவின் அரசியல் எதிரி என்பதால், உடனடியாக அந்த நாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்பட்டன.

“யாரும் பயப்படுவதற்கு அவசியமே இல்லை. மேலே அனுப்பிய செயற்கைக் கோளின் செயல்பாடுகளை கவனிக்கவே நேரமில்லை. அறிவியல் ஆராய்ச்சிதான் எங்களுடைய நோக்கம்”

சோவியத் விஞ்ஞானிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

சோவியத் யூனியன் பெற்ற வெற்றியை அன்றைய அமெரிக்க அதிபர் ஐஸெனோவருக்கு தெரிவித்தனர்.

“சந்தோஷம். ஆனால், சோவியத் யூனியன் வெற்றி பெற்றுவிட்டதே என்பதற்காக, எங்களுடைய விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களை அவசரப்படுத்த மாட்டோம்” என்றார்.

ஸ்புட்னிக் செயற்கைக் கோள் அடுத்த மூன்று வாரங்களுக்கு தகவல் அனுப்பியது. அது அனுப்பிய சமிக்ஞைகள் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளுக்கு உற்சாகத்தை அளித்தது.

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 2 – ஆதனூர் சோழன்

Leave A Reply