விண்வெளியில் முதல் அமெரிக்க வீரர் (மே 25, 1961)
சோவியத் யூனியனின் சாதனை அமெரிக்காவை அதிர்ச்சியடையச் செய்தது.
அந்த நாட்டு விஞ்ஞானிகள் பரபரப்படைந்தனர். தாங்களும் ஒரு விண்வெளி வீரரை அனுப்ப முடிவு செய்தனர்.
1961ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி கேப் கேனவெரலில் இருந்து மெர்குரி-3 என்ற விண்கலம் ஏவப்பட்டது.
அதில் 37 வயதான ஷெபர்டு விண்வெளிப் பயணத்தைத் தொடங்கினார். அமெரிக்க கப்பற்படையைச் சேர்ந்த இவர் விண்வெளிக்கு செல்வதற்காக சிறப்பு பயிற்சிப் பெற்றிருந்தார்.
ரெட்ஸ்டோன் என்ற ராக்கெட்டில் இணைக்கப்பட்ட மெர்குரி-3 செயற்கைக் கோளில் இவர் தனது பயணத்தை தொடங்கினார்.
பூமியிலிருந்து 115 மைல் உயரத்தில் 15 நிமிடங்கள் பூமியைச் சுற்றி இவர் அட்லாண்டிக் கடலில் வந்து விழுந்தார்.
ராணுவ ஹெலிக்காப்டர் அவரை மீட்டது. அப்போது அவர் பேசிய வார்த்தைகள், “என்ன மாதிரி பயணம் இது!”
யூரி காகரின் 2 மணி நேரம் விண்வெளியில் இருந்து திரும்பினார். ஆனால் 15 நிமிடங்கள் மட்டுமே ஷெபர்டு பூமியை சுற்றித் திரும்பினார்.
அமெரிக்க அதிபர் கென்னடி அவருக்கு போன் செய்து பாராட்டினார். ஒரு மாதத்திற்கு முன்பு சோவியத் யூனியன் நிகழ்த்திய சாதனையை ஒப்பிட்டு அவர் பேசினார்.
“எங்களுடைய விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல். இருந்தாலும் இன்னும் வேகமாக நாங்கள் செயல்பட வேண்டியுள்ளது” என்று கென்னடி குறிப்பிட்டார்.
பூமியை சுற்றும் சமயத்தில் ஷெபர்டு தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். புளோரிடா, நார்த் கரோலினா ஆகியவற்றின் மீது பறந்த சமயத்தில் “என்ன ஒரு அழகான காட்சி” என்று வியப்பு தெரிவித்தார்.
விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு கடலில் விழுந்த செயற்கைக் கோள் ஆராய்ச்சிக்காக கேப் கேனவெரலுக்கு கொண்டு வரப்பட்டது.
அதன்பிறகு ஷெபர்டு அமெரிக்க விண்வெளி பயணத்தில் பல முக்கிய பங்குகளை வகித்தார். 1998ஆம் ஆண்டு தன்னுடைய 74ஆம் வயதில் ஷெபர்டு இறந்தார்.