விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 13 – ஆதனூர் சோழன்

Share

விண்வெளியைச் சுற்றிய அமெரிக்க வீரர்

(பிப்ரவர் 20, 1962)

எல்லா வகையிலும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சோவியத் யூனியன் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தது.

ஒருநாள் முழுவதும் விண்வெளியில் தங்கி பூமிக்குத் திரும்பினார் சோவியத் விண்வெளி வீரர். ஆனால் 1962ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி பூமியை மூன்றுமுறை சுற்றிவிட்டு திரும்பினார். அமெரிக்க வீரர் ஜான் கிளென்.

அட்லஸ் என்ற ஏவுகலம் ஃப்ரண்ட்ஷிப் செவன் என்ற செயற்கைக் கோளில் இவர் பூமியைச் சுற்றினார்.

40 வயதான ஜான் கிளென் 4 மணிநேரம் 56 நிமிடங்கள் விண்வெளியில் பூமியை சுற்றினார். மணிக்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பூமியை இவர் சுற்றி வந்தார்.

மொத்தத்தில் 3 முறை பூமியைச் சுற்றிய இவருடைய செயற்கைக் கோள் அட்லாண்டிக் கடலில் புவெர்ட்டோ ரிகோ தீவுக்கு அருகே கடலில் வந்து விழுந்தது.

அமெரிக்க போர் கப்பலான நோவா இவரை பத்திரமாக மீட்டது. பூமியின் பல்வேறு மையங்களில் 24 அமெரிக்க கப்பல்கள் இவரை மீட்பதற்காக தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

விண்வெளி பயணத்தின்போது இவர் விடுத்த செய்திகளை அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் பல ரேடியோ நிலையங்கள் பெற்றுக் கொண்டிருந்தன.

செயற்கைக் கோள் பூமியைச் சுற்றிக் கொண்டிருந்தபோது ஜான் கிளெனின் உடல்நிலையில் சிறு பாதிப்புகள் தோன்றின. மூன்றாவது சுற்றின்போது இவருடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக பூமிக்குத் திரும்பும்படி உத்தரவிடப்பட்டது.

இந்த பயணத்தை ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்த அதிபர் கென்னடி ஜான் கிளெனுக்கு போன் செய்து பாராட்டினார்.

பிரிட்டிஷ் ராணியும் பிரதமரும் தங்களுடைய வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர்.

61 நாட்களுக்கு முன்பே இது நடந்திருக்க வேண்டும். ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் இந்த பயணத்தை 10 முறை ஒத்தி வைக்கும்படி செய்துவிட்டது.

இந்த 4 மணிநேர பயணத் திட்டத்திற்காக அமெரிக்கா 14 கோடியே 20 லட்சம் டாலர்களை செலவு செய்திருந்தது.

யூரி காகரின் பூமியை வெற்றிகரமாக வலம் வந்து 10 மாதங்கள் 10 நாட்கள் கடந்த நிலையில் அமெரிக்க வீரர் பூமியை வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 14 – ஆதனூர் சோழன்

Leave A Reply