விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 3 – ஆதனூர் சோழன்

Share

விண்வெளியில் தொலைந்த குரங்கு (டிசம்பர் 13, 1958)

இரண்டே மாதங்களில் இரண்டு செயற்கைக் கோள்களை அனுப்பி உலகை வியக்க வைத்தது சோவியத் யூனியன்.

விண்வெளிக்குள் முதலில் நுழைந்த பெருமையையும், முதல் உயிரினத்தை விண்வெளிக்குள் அனுப்பிய பெருமையையும் சோவியத் யூனியன் கைப்பற்றியது.

ஒருவகையில் இதை அவமானமாக கருதியது அமெரிக்கா. மிகக்குறுகிய காலத்தில் அறிவியலிலும் சோவியத் யூனியன் சாதனை நிகழ்த்தியதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவசரப்பட மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் கூறினாலும், ஸ்புட்னிக்-2 செயற்கைக் கோள் அனுப்பப்பட்ட அடுத்த மாதம் அதாவது, 1957 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்வெளிக்கு ஒரு செயற்கைக் கோளை அனுப்பியது அமெரிக்கா.

ஆனால், அது புறப்பட்டவுடன் வெடித்துவிட்டது.

அதையடுத்து 1958 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எக்ஸ்புளோரர் என்ற தனது முதல் செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்த முயற்சிகளைத் தொடர்ந்து, 1958 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி ஜூபிடர் என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது அமெரிக்கா.

அந்த ராக்கெட் 50 டன் எடை உள்ளது. வழக்கமாக மத்திய தூர ஏவுகணைகளைச் செலுத்துவதற்காக மட்டுமே இது பயன்படுத்தப்படும். ஆனால், முதன்முறையாக புளோரிடாவில் உள்ள கேப் கேனவெரல் ஏவுதளத்தில் இருந்து அறிவியல் ஆய்வுக்காக இது பயன்படுத்தப்பட்டது.

இந்த ராக்கெட்டின் பயணம் 15 நிமிடங்கள் நீடித்தது.

அந்த ராக்கெட்டின் மூக்கு பகுதியில் கோர்டோ என்ற தென்னமெரிக்க வகை குரங்கும் பயணம் செய்தது.

அது அணில்வால் குரங்கு. சுமார் ஒரு அடி உயரம். ஒன்றரைக் கிலோ எடையுடன் அந்தக் குரங்கு இருந்தது.

இந்தக் குரங்கின் மரபணு அமைப்பு, உடற்கூறுகள் மனித உடலமைப்பை ஒத்திருந்தது. எனவேதான் இதை ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்தார்கள்.

விண்வெளியில் அந்த ராக்கெட் 300 மைல் தூரம் செல்லும் வரையில் அந்தக் குரங்கு உயிருடன் இருந்தது. மேலும் அந்த ராக்கெட் ஆயிரத்து 500 மைல் தூரம் பயணம் செய்தது. பின்னர், அட்லாண்டிக் பெருங்கடலின் தென்பகுதியில் அந்த ராக்கெட் விழுந்தது.

ராக்கெட் கடலில் விழும்போது, அதன் மூக்குப் பகுதியில் இருந்த குரங்கு பாராசூட் மூலம் தனியாக விழுந்திருக்க வேண்டும். ஆனால், பாராசூட் உரிய நேரத்தில் இயங்கவில்லை.

ராக்கெட்டின் மூக்குப்பகுதி கடலில் மூழ்கியது. அமெரிக்க ராணுவம் அதைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டது. ஆறு மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு முயற்சி கைவிடப்பட்டது.

ராக்கெட் பயணத்தின் போது குரங்கு எடையை இழந்தது. ஆனால், அதன்காரணமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ராக்கெட் புறப்பட்ட சிறிது நேரத்தில், குரங்கின் சுவாசம் மெதுவாகியது. அதன் நாடித் துடிப்பும் ஒழுங்கு தவறியது. ஆனால், ராக்கெட்டின் மூக்குப் பகுதி புவியீர்ப்பு விசையிலிருந்து விலகியதும் எல்லாம் சரியாகியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ராக்கெட்டின் மூக்குப் பகுதியில் கோர்டோ என்ற அந்தக் குரங்கு ரப்பர் படுக்கையில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. தோலினால் செய்யப்பட்ட தலைக்கவசம் அணிந்திருந்தது.

குரங்கின் உடலில் ஏற்படும் தட்பவெப்ப மாறுதலைக் கண்காணிக்க ஒரு தர்மாமீட்டரும், அதன் இதயத் துடிப்பை அறிய ஒரு மைக்ரோ போனும், சுவாசத்தை கண்காணிக்கும் கருவிகளும் பொருத்தப்பட்டிருந்தன.

குரங்கை விண்வெளிக்கு அனுப்பியதற்கும் விலங்கு நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால், மனிதனைப் போல உடலமைப்பு உள்ள விலங்கு ஒன்றை அனுப்பி சோதனை நடத்தியது, எதிர்காலத்தில் மனிதன் விண்வெளிக்கு செல்ல உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

1959 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி மீண்டும் ஒரு சோதனையை அமெரிக்கா நடத்தியது. ஜூபிடர் ராக்கெட்டில் இரண்டு குரங்குகளை வைத்து விண்வெளிக்கு அனுப்பியது. பிறகு இரண்டு குரங்குகளும் உயிருடன் மீட்கப்பட்டன.

இவை இரண்டும்தான் விண்வெளிக்கு சென்று உயிருடன் மீட்கப்பட்ட முதல் விலங்குகள் ஆகும்.

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 4 – ஆதனூர் சோழன்

Leave A Reply