விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 4 – ஆதனூர் சோழன்

Share

விண்வெளியில் குரங்குகள் (மே 28, 1959)

1959ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி.

புளோரிடாவில் உள்ள கேப் கேனவெரல் ஏவுதளத்திலிருந்து கூரிய மூக்கு கொண்ட ஏஎம்-18 என்ற ஜூபிடர் (ஏவுகணை) சீறிக் கிளம்பியது. அதன் நுனிப் பகுதியில் ஏபில், பேக்கர் என்ற இரண்டு அணில்வால் குரங்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

பலத்த கண்காணிப்பு ஏற்பாடுகளுடன் அவை பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டன. ஜூபிடர் ராக்கெட் 300 மைல் தூரம் வரை விண்வெளிக்குள் சென்று பூமிக்குத் திரும்பியது.

மணிக்கு 10 ஆயிரம் மைல் வேகத்தில் பாய்ந்து திரும்பிய ராக்கெட் தெற்கு அட்லாண்டிக் பகுதியில் புவெர்டோ ரிகோ அருகில் கடலில் விழுந்தது.

உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்த அமெரிக்க ராணுவத்தினர் இரண்டு குரங்குகளையும் பத்திரமாக மீட்டனர். இரண்டு குரங்குகளும் சுமார் 9 நிமிடம் எடை இழந்து வாழ்ந்திருக்கின்றன.

எடையை இழந்த சமயத்தில் இதயத்துடிப்பு, சுவாசம், தசையில் ஏற்பட்ட மாற்றங்கள், நாடித்துடிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், தட்பவெப்ப நிலையில் ஏற்பட்ட மாற்றங்களை தாங்கி அவை உயிரோடு பூமிக்குத் திரும்பின.

மீட்கப்பட்ட இரண்டு குரங்குகளும் அற்புதமான உடல் நலத்துடன் இருப்பதாக அமெரிக்க ராணுவத்தின் மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

சோதனை முயற்சி வெற்றி பெற்றாலும் விலங்குநல அமைப்புகளின் கண்டனம் இருக்கத்தான் செய்தது.

மீட்கப்பட்ட இரண்டு குரங்குகளில் ஏபில் ஒரு மாதம் மட்டுமே உயிருடன் இருந்தது. பேக்கர் என்ற இரண்டாவது குரங்கு 1984ஆம் ஆண்டுவரை உயிருடன் இருந்தது.

இந்த சோதனையைத் தொடர்ந்து 1959ஆம் ஆண்டின் இறுதியிலும் 1960ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் சாம், மிஸ் சாம் என்ற இரண்டு குரங்குகளை விண்வெளிக்கு அனுப்பி அமெரிக்க விஞ்ஞானிகள் சோதனை நடத்தினர்.

விண்வெளிக்கு உயிரினங்களை அனுப்பி சோதனை செய்யும் முயற்சியில் அமெரிக்கா ஒரு பாணியையும், ரஷ்யா வேறு ஒரு பாணியையும் கடைப்பிடித்தன.

1957ஆம் ஆண்டு முதல் 1961ஆம் ஆண்டுவரை ரஷ்யா 13 நாய்களை விண்வெளிக்கு அனுப்பி சோதனை நடத்தியது. அவற்றில் 5 நாய்கள் இறந்தன. குரங்குகளை விண்வெளிக்கு அனுப்பமாட்டோம் என்பதில் ரஷ்ய விஞ்ஞானிகள் உறுதியாக இருந்தன.

ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் குரங்குகளை மட்டுமே சோதனையில் ஈடுபடுத்தினர்.

1963ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அனுப்பப்பட்ட ராக்கெட்டில் ஃபெலிக்ஸ் என்ற பூனை விண்வெளிக்குச் சென்று திரும்பியது. இந்த சோதனை முயற்சியை நடத்தியது பிரான்ஸ் விஞ்ஞானிகள்.

அப்போது முதல் தவளைகள், மீன்கள் மட்டுமல்ல புழுக்களும்கூட விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 5 – ஆதனூர் சோழன்

Leave A Reply