விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 5 – ஆதனூர் சோழன்

Share

நிலவில் இறங்கிய சோவியத் விண்கலம்

(செப்டம்பர் 12, 1959)

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவை முந்துவதில் சோவியத் யூனியன் முனைப்பாகவே இருந்தது.

1959ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி மீண்டும் ஒரு சாதனையை சோவியத் விஞ்ஞானிகள் நிகழ்த்திக் காட்டினார்கள்.

சோவியத் யூனியனின் லூனிக்-2 என்ற பிரம்மாண்டமான ராக்கெட் நிலவில் இறங்கியது.

பூமியிலிருந்து புறப்பட்ட 36 மணி நேரத்தில் அந்த ராக்கெட் நிலவில் இறங்கியது.

சோவியத் ரஷ்யா நிலவை நோக்கி அனுப்பிய இரண்டாவது ராக்கெட் இது. லூனிக் என்று பெயரிடப்பட்ட முதல் ராக்கெட் தனது இலக்கை தவறவிட்டு விண்வெளிக்குள் காணாமல் போயிற்று.

பல அடுக்கு ராக்கெட் ஒன்றை உருவாக்கி இரண்டாவது முயற்சி தொடங்கியது. பூமியில் ஈர்ப்பு விசையிலிருந்து தப்புவதற்காக வினாடிக்கு 11.3 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் அந்த ராக்கெட் உருவாக்கப்பட்டது.

லூனிக்-2 ராக்கெட்டில் பூமி மற்றும் நிலவின் காந்தவயல் பரப்பு உள்ளிட்டவற்றை அளப்பதற்கு உதவும் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.

ராக்கெட் பயணம் செய்தபோது அதை சிறிது நேரம் பார்க்க முடிந்தது. ராக்கெட்டிலிருந்து பளிச்சென்ற மஞ்சள் வண்ண சோடியம் புகை மேகமாக உருவாகியது. ராக்கெட் செயற்கை குறுங்கோளைப்போல தோற்றத்தை ஏற்படுத்தியது.

ராக்கெட்டின் இந்த பயணத்தை சோவியத் ரஷ்யாவின் இரண்டு வானியல் ஆராய்ச்சி நிலையங்கள் படம் பிடித்தன.

ராக்கெட் தன்னுடன் 391 கிலோ எடையுள்ள அறிவியல் ஆராய்ச்சி சாதனங்களை எடுத்துச் சென்றது. நிலவில் இறங்கிய ராக்கெட்டின் பகுதியில் சோவியத் யூனியனின் அரிவாள் சுத்தியல் சின்னம் பொறித்த செங்கொடி முத்திரை இருந்தது. அத்துடன் 1959ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் என்ற எழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

3 லட்சத்து 81 ஆயிரத்து 131 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து நிலவில் இறங்கிய ராக்கெட்டை பூமியிலிருந்து பார்ப்பது சாத்தியமல்ல. இருந்தாலும் ரேடியோ அலைவரிசையில் ஏற்பட்ட இடைமுறிவு, அது நிலவில் இறங்கியதை உறுதிப்படுத்தியது.

நிலவில் தரையிறங்கிய வேகத்தில் ராக்கெட்டின் ரேடியோ டிரான்ஸ்மிட்டர்கள் இயக்கத்தை நிறுத்திவிட்டன.

லூனிக்-2 ராக்கெட்டின் நிலா பயணத்தை பார்த்து ரசிப்பதற்காக மாஸ்கோவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் 15 டெலஸ்கோப்புகள் நிறுவப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று இதை பார்த்து ரசித்தனர்.

நிலாவில் சோவியத் யூனியனின் செங்கொடி இறக்கப்பட் டதைத் தொடர்ந்து அங்கு நிலஉரிமை கோரப்போவதில்லை என்று சோவியத் விஞ்ஞானிகள் திட்டவட்டமாக அறிவித்தனர்.

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 6 – ஆதனூர் சோழன்

Leave A Reply