விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 6 – ஆதனூர் சோழன்

Share

நிலவின் மறுபக்கம் (அக்டோபர் 26, 1959)

பூமியிலிருந்து எப்போதுமே நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்க முடியும். மறுபக்கத்தை பார்க்க முடியாது.

முதன்முறையாக சோவியத் விண்கலம் நிலவின் மறுபக்கத்தை படம்பிடித்து அனுப்பியது.

1959ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி லூனிக்-3 என்ற சோவியத் விண்கலம் நிலவின் மறுபக்கத்தை படம்பிடித்து அனுப்பியது.

4 லட்சத்து 83 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்து அந்த படம் பூமிக்கு அனுப்பப்பட்டது. அக்டோபர் 4ஆம் தேதி பூமியிலிருந்து புறப்பட்ட விண்கலம் இதுவரை யாருமே பார்த்திராத நிலவின் மறுபக்கத்துக்குச் சென்று அற்புதமான படங்களை எடுத்து அனுப்பியது.

அந்த படங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. இருந்தாலும் ரஷ்ய தொலைக்காட்சியில் சிறிது நேரம் அந்த படங்கள் ஒளிபரப்பப் பட்டது.

நிலவின் மறுபக்கத்தில் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருந்தன. 298 கிலோமீட்டர் குறுக்களவு உள்ள மிகப்பெரிய கடல்போன்ற பகுதி படத்தில் காணப்பட்டது. அதற்கு மாஸ்கோ கடல் என்று பெயரிடப்பட்டது.

மாஸ்கோ கடலில் மிகப்பெரிய வளைகுடா ஒன்று காணப்பட்டது. அதற்கு விண்வெளி வீரர்கள் வளைகுடா என்று பெயரிடப்பட்டது. 96 கிலோமீட்டர் குறுக்களவு உள்ள பெரிய பள்ளத்தாக்கு இருந்தது. அதற்கு சோவியத் விண்கலத் திட்டத்தின் முன்னோடியான பேராசிரியர் கான்ஸ்டன்டைன் சியோல்கோவ்ஸ்கியின் பெயர் சூட்டப்பட்டது.

இவை தவிர அந்த பகுதியில் காணப்பட்ட மலைத்தொடர் ஒன்றுக்கு சோவியட்ஸ்கி என்று பெயரிடப்பட்டது. நிலவின் கண்ணுக்குத் தெரியாத பகுதியின் எல்லையில் இருப்பதாக கூறப்படும் கடலுக்கு கனவுகளின் கடல் என்று பெயர் சூட்டப்பட்டது.

நிலவின் மறுபக்கம் பல்வேறு ஆச்சரியங்களை உள்ளடக்கி இருந்தது. 35 மில்லிமீட்டர் பிலிமைக் கொண்ட கேமரா பூமியிலிருந்து ரிமோட் கண்ரோல் மூலம் இயக்கப்பட்டது. அந்த கேமரா எடுத்த 29 படங்கள்தான் முதன்முறையாக நெடுந்தொலைவிலிருந்து ரிமோட் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் ஆகும்.

நிலவுக்கும் சூரியனுக்கும் இடையில் லூனிக்-3 வரும் சமயத்தை கணக்கிட்டு கேமரா இயக்கப்பட்டது.

நிலவை படம் பிடிக்க சோவியத் விஞ்ஞானிகள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். முதலில் அனுப்பப்பட்ட லூனிக்-1 விண்வெளியில் தொலைந்து போயிற்று. லூனிக் -2 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி செயல் இழந்தது.

சோவியத் விஞ்ஞானிகள் மொத்தம் 24 லூனா ராக்கெட்டுகளை அனுப்பினர். அவற்றில் முதல் சில ராக்கெட்டுகளுக்கு லூனிக் என்று பெயரிடப்பட்டு இருந்தது.

லூனா ராக்கெட்டுகள் அனைத்துமே ஆளில்லாமல் இயக்கப்பட்டவை. அவற்றில் பல ராக்கெட்டுகள் வரலாறு படைத்தன. லூனா – 9 ராக்கெட் 1966ஆம் ஆண்டு நிலவில் பத்திரமாக தரையிறங்கி சாதனைப்படைத்தது. லூனா – 10 ராக்கெட் முதன்முறையாக நிலவை சுற்றியது. லூனா – 16 ராக்கெட் நிலவில் இறங்கி அங்கிருந்து மண்மாதிரிகளை எடுத்துக் கொண்டு பத்திரமாக பூமிக்குத் திரும்பியது.

மிகக் குறைந்த செலவில் சோவியத் யூனியன் மேற்கொண்ட இந்த விண்வெளி பயணங்கள் 1976ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நிலவை ஆய்வு செய்ய உதவியாக இருந்தது.

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 7 – ஆதனூர் சோழன்

Leave A Reply