விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 8 – ஆதனூர் சோழன்

Share

மனிதக் குரங்கின் விண்வெளி பயணம் (ஜனவரி 31, 1961)

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் முக்கிய திருப்பமாக அமெரிக்க விஞ்ஞானிகள் மனிதக் குரங்கு ஒன்றை விண்வெளிக்கு அனுப்பினர்.

1961ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

மெர்குரி என்ற செயற்கைக்கோளை அமெரிக்க விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தினார்கள். அதில் ஹாம் என்று பெயரிடப்பட்ட மனிதக் குரங்கு பயணம் செய்தது.

ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூனில் இருந்து 6 மனிதக்குரங்குகள் வரவழைக்கப்பட்டன. அவற்றில் இரண்டு ஆண் குரங்குகளும், நான்கு பெண் குரங்குகளும் இருந்தன. விண்வெளிக்கு அனுப்புவதற்காக இவற்றுக்கு தீவிரமான பயிற்சி அளிக்கப்பட்டது.

பின்னர் பயிற்சி பெற்ற குரங்குகளில் சிறந்த குரங்காக ஹாம் தேர்வு செய்யப்பட்டது. செயற்கைக்கோளில் பயணம் செய்யும்போது சில பிளாஷ் வெளிச்சத்துக்கு தகுந்தபடி செயல்படும் வகையில் ஹாம் பயிற்சி பெற்றிருந்தது.

மணிக்கு 5 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்த சமயத்தில் இந்த குரங்கு பலமுறை பிளாஷ் வெளிச்சத்துக்கு ஏற்றபடி செயற்கைக்கோள் லிவர்களை இயக்கியது.

பூமியிலிருந்து 250 கிலோமீட்டர் உயரத்தில் மெர்குரி செயற்கைக்கோள் பூமியை சுற்றியது. பின்னர் அந்த செயற்கைக்கோள் பூமிக்கு திரும்பியது. அதிலிருந்து ஹாம் பத்திரமாக மீட்கப்பட்டது.

இந்த மனிதக் குரங்கு பத்திரமாக திரும்பியதைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பமுடியும் என்ற நம்பிக்கை வலுப்பட்டது.

சோவியத் யூனியன் தனது சோதனைக்கு நாய்களை மட்டுமே பயன்படுத்தியது. ஆனால் மனிதனைப் போன்ற உடலமைப்புள்ள குரங்குகளை அமெரிக்கா பயன்படுத்தியது. மெரிகுரி விண்கலத்தில் பயணம் செய்தபோது மனிதக் குரங்குக்கு தேவையான ஆக்ஸிஜன் அளவு குறைந்தது.

செயற்கைக் கோள் கம்ப்யூட்டர்கள் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து மெர்குரி செயற்கைக் கோளின் பயணம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

இந்த செயற்கைக் கோள் 185 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்ற வேண்டும் என்பதுதான் விஞ்ஞானிகளின் திட்டம். ஆனால் திட்டமிட்டதைக் காட்டிலும் அதிகமாக அதாவது 253 கிலோமீட்டர் உயரத்தில் அது சுற்றிக் கொண்டிருந்தது.

இதுதான் மனிதக் குரங்குக்கு ஆக்ஸிஜன் சப்ளை குறைவதற்கு காரணமாக அமைந்தது.

சுமார் 17 நிமிடங்கள் 250 கிலோ மீட்டர் உயரத்தில் ஹாம் பத்திரமாக சுற்றியது. இதில் 61/2 நிமிடங்கள் மட்டுமே அது எடையை இழந்தது. தவிர, பூமியில் இருப்பதுபோலவே நல்ல நிலையில் அது இருந்தது.

ஆனால் பூமிக்கு திரும்பியபோது சில சிரமங்களை அது அனுபவித்தது. அட்லாண்டிக் பெருங்கடலில் செயற்கைக் கோள் விழுந்த சமயத்தில் உடனடியாக அந்த இடத்துக்குச் செல்லமுடியவில்லை.

3 மணிநேர தாமதத்திற்குப் பிறகு மீட்பு ஹெலிகாப்டர்கள் அந்த இடத்தை அடைந்தன. செயற்கைக் கோளில் இருந்து ஹாம் பத்திரமாக மீட்கப்பட்டது. வெளியே வந்தவுடன் ஒரு ஆப்பிள் மட்டும் பாதி ஆரஞ்சு பழத்தை ஹாம் சாப்பிட்டது.

அமெரிக்கா குரங்குகளை வைத்து சோதனை நடத்திக்கொண்டிருந்த சமயத்தில் சோவியத் யூனியன் மனிதனையே விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுக் கொண்டிருந்தது.

எல்லா வகையிலும் அமெரிக்காவை முந்திக் கொள்ளவே அது விரும்பியது.

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 9 – ஆதனூர் சோழன்

Leave A Reply