விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 9 – ஆதனூர் சோழன்

Share

விண்வெளியில் முதல் மனிதன் (ஏப்ரல் 12, 1961)

1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி.

சோவியத் யூனியன் உலகை அதிசயத்தில் ஆழ்த்தியது.

ஆம். விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தில் அமெரிக்கவை அது பின்னுக்குத் தள்ளியது.

சோவியத் யூனியனைச் சேர்ந்த கஜகஸ்தான் மாநிலம் மத்திய ஆசியாவில் உள்ளது. அங்கு பைகானூர் என்ற இடத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது.

அங்கிருந்து வோஸ்டாக் என்ற விண்கலம் ஏவப்பட்டது.

அந்த விண்கலத்தில் ரஷ்ய விண்வெளி வீரர் யூரி அலெக்ஸேவிச் காகரின் இருந்தார். புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விண்கலம் பூமியின் எல்லையைத் தாண்டி பூமியை சுற்றத் தொடங்கியது. மணிக்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் அந்த விண்கலம் 108 நிமிடங்கள் பூமியை சுற்றியது.

பின்னர் பத்திரமாக பூமியில் தரையிறங்கியது.

விண்வெளிக்குச் சென்று திரும்பிய முதல் மனிதர் என்ற பெருமையை யூரி காகரில் பெற்றார்.

சோவியத் அதிபர் குருசேவ் அவரை பாராட்டினார். விண்வெளி ஆராய்ச்சியில் மனித சமூதாயத்திற்கு உள்ள தாகத்தை தீர்க்கும் வகையில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

சோவியத் யூனியன் உற்சாகத்தில் ததும்பி வழிந்தது. மக்கள் தெருக்களில் நடனமாடினார்கள். அவர்களுடைய உற்சாகத்தில் மாஸ்கோ ரேடியோவும் பங்கேற்றது. தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு இந்த கொண்டாட்டத்தில் அதுவும் பங்கேற்றது.

யூரி காகரின் பத்திரமாக திரும்பியதைத் தொடர்ந்து விண்வெளி பயணம் மனிதர்களின் உயிருக்கு ஆபத்து என்ற நம்பிக்கை பொய்த்துப் போனது.

தாங்கள்தான் முதன்முதலில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பப் போவதாக அமெரிக்கா நம்பி வந்தது. அந்த நம்பிக்கையை சோவியத் யூனியன் தகர்த்து விட்டது.

இருந்தாலும் ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் சோவியத் யூனியனை அமெரிக்க அதிபர் கென்னடி பாராட்டினார்.

அமெரிக்கா குரங்குகளை வைத்து ஆராய்ச்சி நடத்திய சமயத்தில், 2 ஆண்டுகளாக 27 வயது யூரி காகரின் கடுமையான பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டிருந்தார்.

மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் யூரி காகரினுக்கு மிகப்பெரிய பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

1957ஆம் ஆண்டு மனிதனால் செய்யப்பட்ட முதல் செயற்கைக் கோளை சோவியத் யூனியன் விண்வெளிக்கு அனுப்பி வெற்றி பெற்றது.

அதே ஆண்டின் பிற்பகுதியில் லைக்கா என்ற நாயை விண்வெளிக்கு அனுப்பி சாதனைப் படைத்தது. நிலவில் செயற்கைக் கோளை இறக்கி அடுத்த சாதனையை நிகழ்த்தியது.

நிலவின் மறுபக்கத்தை படம்பிடித்து ஒளிபரப்பி சாதனைப் படைத்தது. இப்போது மனிதனை அனுப்பி புதிய சாதனையை படைத்தது.

1963ஆம் ஆண்டு விண்வெளிக்கு முதல் பெண்ணை அனுப்பியதும் சோவியத் யூனியன் தான்.

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 10 – ஆதனூர் சோழன்

Leave A Reply