சிறையில் நஞ்சு வைத்து கொல்லப்பட்ட உழவர் போராளி!

Share

1940 கால கட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் பண்ணையார்கள் சாணிப்பால் , சவுக்கடி தந்து உழவர்களை கொடுமைப் படுத்தி வந்தனர். இந்த அநீதிக்கு எதிராக போராடி சிறை சென்று உயிர் நீத்த ஒப்பற்ற போராளிதான் களப்பால் குப்பு என்றழைக்கப்படும் குப்புச்சாமி.

இவர் மன்னார் குடி வட்டம் களப்பால் கிராமத்தில் 11.3.1911இல் அருணாசலம்- சமுத்திரம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் தந்தையார் ஊர்த் தலையாரி. அக்காலத்தில் ஊர்த்தலையாரி ஆனாலும், உழவுக் கூலி செய்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து படிக்க முடியாது.

அருணாசலம் மகனாகிய குப்புச்சாமியை எப்படியோ ஒரு ஆசிரியர் பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவன் மற்ற சாதி குழந்தைகளை தொட்டுவிடக்கூடும் என்பதால் திண்ணையில் நின்று படிக்க வற்புறுத்தப்பட்டான். மற்ற சாதி குழந்தைகளையோ, ஆசிரியர்களையோ தொட்டு விட்டால் பிரம்படி தருவது அங்கு வழமையாகும்.

பல்வேறு நெருக்கடி காரணமாக ஆறாம் வகுப்பு வரை மட்டுமே குப்புசாமியால் படிக்க முடிகிறது. பின்னர் பண்ணையார் தொப்பை முதலியாரிடம் கூலியடிமை வேலைக்கு சேருகிறார். இளம் வயதிலேயே பண்ணையார்களின் உழைப்புச் சுரண்டலையும் சாதித்திமிரையும் கண்டுணர்ந்த குப்புச்சாமி இவற்றுக்கு எதிராக போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவுக்கு வருகிறார்.

களப்பால் கிராமத்தில் பஞ்சு ஐயர் என்ற மருத்துவர் தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் தொட்டு மருத்துவம் பார்க்க மாட்டார். இதை அறிந்த குப்புச்சாமி ஒருமுறை பஞ்சு ஐயரின் கையை தொட்டு விடவே ஊர்ப்பஞ்சாயத்து கூட்டப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இளம் வயது என்பதால் குப்புச் சாமிக்கு தண்டனையோ, தண்டத்தொகையோ விதிக்கப்படவில்லை.

ஒருமுறை பண்ணையார் மணியம் காதர் பாட்சா என்பவர் குப்புச்சாமியை சாட்டையால் அடிக்க ஓடோடி வந்தார். இதைக் கண்ட குப்புச்சாமி இளம்வயதிற்குரிய துடிப்போடு சாட்டையை பிடுங்கி அவரையே திரும்பி அடித்து விடுகிறார். இதைக் கண்ட மற்ற பண்ணையார் கூட்டத்திற்கு பயம் தொற்றிக் கொள்கிறது. பண்ணையார்களின் தாக்குதலுக்கு அஞ்சி உடனே குப்புச்சாமி களப்பாலை விட்டு வெளியேறுகிறார்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பி.சீனிவாசராவ் அவர்கள் தஞ்சை மண்ணில் காலடி வைத்த பின்பு பொதுவுடைமை இயக்கம் தீவிரமாக இயங்கத் தொடங்கியது. 23.6.1943இல் விவசாயிகள் சங்கம் தொடங்கப்பட்டு செங்கொடி ஏற்றப்பட்டது. பண்ணையார்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட
எல்லா கிராமத்திலும் விவசாய சங்கக் கிளைகள் கட்டப்பட்டு செங்கொடிகள் பறக்கவிடப்பட்டன.

மன்னார் குடி வட்டம் தென்பரை கிராமத்தில் பி.சீனிவாசராவ் தலைமையில், களப்பால் குப்புச்சாமி செங்கொடி ஏற்ற விவசாயிகள் சங்கம் தொடங்கப்பட்டது. இதில் கிளைத் தலைவராக களப்பால் குப்புச்சாமியும் கிளைச் செயலாளராக சிங்காரம் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

தோழர் பி.சீனிவாச ராவ், களப்பால் குப்புச்சாமி கலந்து கொள்ளும் விவசாய சங்கக் கூட்டங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினார்கள்.

ஒவ்வொரு கூட்டத்திலும் பி.சீனிவாசராவ் முழக்கம் எழுப்புவார். மக்களும் அப்படியே உணர்ச்சியோடு முழங்குவர்.

“சாட்டையால் அடிக்காதே! சாட்டையால் அடிக்காதே!

சாணிப்பாலை நிறுத்து!
சாணிப்பாலை நிறுத்து!

அடித்தால் திருப்பி அடிப்போம்!
அடித்தால் திருப்பி அடிப்போம்!

“வாடி போடி” என்றால் “வாடா போடா ” என்போம்!
வாடி போடி” என்றால் ” வாடா போடா” என்போம்!

-போன்ற முழக்கங்கள் பண்ணையார்களின் அடிவயிற்றை கலக்கியது.

அப்போது கோட்டூர் பகுதியில் உள்ள குன்னியூர் பண்ணையில் வேலை செய்த உழவர்கள் விவசாய சங்கத்தில் சேர்ந்தனர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத பண்ணையார்கள் அடியாட்கள் மூலம் உழவர்களைத் தாக்கினர்.

மேலும், குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்றும், கடைகளில் பொருட்கள் வாங்கக் கூடாது என்றும், வெளியிலும் வேலைக்கு போகக் கூடாது என்றும் மிரட்டல் விடுத்தனர். அப்போது காவல்துறை மூலமாக கலகம் செய்ததாகக் கூறி 23 அப்பாவிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தது. களப்பால் மற்றும் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி முழுவதும் குத்தகை சாகுபடிதாரர்களும், உழவர்களும், தொழிலாளர்களும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின் மூலம் பண்ணையார்களை அடிபணிய வைத்ததில் பி.சீனிவாசராவ், களப்பால் குப்புசாமி ஆகியோருக்கு பெரும் பங்குண்டு.

1944ஆம் ஆண்டு களப்பாலில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதில் மிராசுதாரர்கள் சார்பில் வி.எஸ்.தியாகராஜ முதலியார், திருக்களார் மடாதிபதி அவர்களும் உழவர்கள் சார்பில் களப்பால் குப்புசாமி, ஆர்.அமிர்தலிங்கம், டி.ராஜகோபால் அவர்களும் கலந்து கொண்டனர்.

இரு தரப்பு பேச்சு வார்த்தை முடிவில் 1.சாட்டையடி, சாணிப்பால் நிறுத்தப்பட வேண்டும்.
2. குத்தகை சாகுபடிதாரர்கள் தன் குத்தகை நிலத்திலேயே கதிர் அடிக்கலாம், 3. அறுவடையில் பண்ணையாருக்கு களத்துக்கு முக்கால் மரக்காலும், மேக்கூலியாக 1 மரக்கால் என்றும் – ஒப்பந்தம் காணப்பட்டது.

ஒருமுறை களப்பாலில் பெரிய கூட்டமொன்றை கூட்ட குப்புச்சாமி ஏற்பாடு செய்தார். இதனை கேள்வியுற்ற பண்ணையாளர்கள் அடியாட்கள் மூலம் அவரது மூத்த மகன் கணேசனின் கையை வெட்டி விடுகின்றனர். இதனால் குப்புச்சாமியின் துணைவியார் வாஞ்சாலை மிகுந்த துயருற்று இறந்து விடுகிறார். குப்புச் சாமி மனைவி இறந்த செய்தி கேட்டு கண் கலங்க வில்லை. “நான் வந்து என்ன நடக்கப் போகிறது , நீங்களே அடக்கம் செய்யுங்கள் ” என்று கூறி, மக்களுக்கு பணியாற்றும் பணியில் இறங்கினார்.

1946-ல் குன்னியூர் சாம்பசிவ ஐயர் பண்ணையில் கூலி உயர்வு போராட்டம் நடைபெற்று வந்தது. இதனால் ஆத்திரமடைந்த சாம்ப சிவ ஐயர் இராமநாதபுரத்திலிருந்து ஆட்களை கொண்டு வந்து இறங்கினார்.
இதனை போராட்டக்காரர்கள் தடுத்தபோது மோதல் ஏற்பட்டது. இதில் சாம்பசிவ ஐயரின் இரண்டு அடியாட்கள் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து களப்பால் குப்புசாமி, ஆலத்தூர் ராமையன், கீராளத்தூர் பிச்சைக்கண்ணு ஆகிய மூன்று பேர் மீதும் பொய் வழக்கு பதியப்பட்டது .

இந்த மூன்று பேரும் 1947-ஆம் ஆண்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கு விசாரணை முடிவில் களப்பால் குப்புசாமிக்கு மரண தண்டனைவிதிக்கப்பட்டது. அவரை விடுதலை செய்ய பொதுவுடைமைக் கட்சி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

சிறையில் குப்புச்சாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது அவருக்கு மருந்து கொடுக்கும் சாக்கில் நஞ்சு மாத்திரைகளை கைதி இராமன் என்பவர் கொடுத்தார். இதன் காரணமாக குப்புச்சாமி இரத்த வாந்தி எடுத்தார். 18.4..1948 அன்று உழவர்களின் உற்ற தோழன் குப்புச்சாமி வீரச்சாவடைந்தார்.

நேரிலே ஆள் வைத்து பலமுறை முயன்றும் குப்புச்சாமியை கொல்ல முடியாதவர்கள் நஞ்சு கொடுத்து அவரைக் கொன்றது கோழைத்தனமான செயலாகும்.

சாணிப்பால் சவுக்கடிக்கு எதிராக சமத்துவப் போராட்டம் நடத்தி 37 ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த பொதுவுடைமை ஈகி களப்பால் குப்புச்சாமியை இந்நாளில் நினைவு கூர்வோம்!

-கதிர்நிலவன்

Leave A Reply