கொரியா தமிழக உறவுகளுக்கு இலக்கிய – அறிவியல் சான்றுகளுடன் உலகத் தமிழ்ச்சங்க கருத்தரங்கில் முனைவர் ஆரோக்கியராஜ் பேச்சு!

Share

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் கொரியத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் ‘கொரியத் தமிழரும் தமிழும்’ இணையவழி ஆய்வரங்கத்தின் நான்காவது நாளில் ‘கொரியாவில் அதிகரிக்கும் தமிழ் ஆர்வம்’ குறித்து கொரியத் தமிழ்ச் சங்கத்தின் ஆளுமைப்பிரிவின் இணைச்செயலர் முனைவர் செ.ஆரோக்கியராஜ் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது…
நான் வேலைக்காக கொரியா வந்து 8 ஆண்டுகள் ஆகின்றன. பேராசிரியராக பணிபுரிந்தாலும், கொரியாவின் கிராமப்புறங்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டினேன். எனது கொரியா பேராசிரியரும் எனக்கு உதவிசெய்தார். அப்போதுதான் கொரியா மொழியில் தமிழ் கலந்திருப்பதையும், தமிழர்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், கலாச்சாரம் ஆகியவற்றின் மிச்சங்கள் கொரியர்களின் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படுவதையும் காணமுடிந்தது.
ஏற்கெனவே, கொரியா தமிழக உறவுகள் குறித்து முனைவர் நா.கண்ணன், ஒரிசா பாலு ஆகியோர் சில காணொளிகளை வெளியிட்டிருக்கிறார்கள். இங்கேயும் ஜீ மூன் யாங் என்ற கொரியா பேராசிரியரும் மொழி ஒற்றுமை குறித்து வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார்.
ஆனால், இந்த ஒற்றுமைகளை யாரிடம் கொண்டுசேர்க்க வேண்டுமோ அவர்களுக்கு சேர்க்கவில்லை என்று நான் நினைத்தேன். எனவேதான் கொரிய மக்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு இந்த ஒற்றுமை சென்றுசேருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அதன்விளைவாகத்தான், லஸோல் என்ற கொரிய யூடியூபரை இணைத்து என்னிடமிருந்த தரவுகளை கொண்டு, கொரிய தமிழ்மொழி ஒற்றுமை குறித்தும் உணவுப் பழக்கங்கள் குறித்தும் ஆதாரத்தோடு ஒரு வீடியோ தயாரித்து வெளியிட்டேன்.

அந்த வீடியோ கொரியாவில் 40 லட்சம் பார்வையாளர்களை சென்று சேர்ந்தது. இதுவரை எந்த அன்னிய மொழிசார்ந்த வீடியோவும் இதுபோல ஒரு வரவேற்பை பெற்றதில்லை. அந்த வீடியோவுக்கு பிறகு கொரியா தமிழ்மொழி உறவுகளை அறியும் ஆர்வம் கொரியாவில் அதிகரித்துள்ளது.
நிறைய வீடியோக்களும் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. ஆனால் நாங்கள் வெளியிட்ட வீடியோ ஏற்படுத்திய உரையாடல்கள் அளவுக்கு மற்ற வீடியோக்கள் உருவாக்கவில்லை. தமிழ் வார்த்தை ஒற்றுமைகளையும், உணவு வகைகளில் உள்ள ஒற்றுமையையும் வீடியோவில் விளக்கினேன். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள கிராமப்புற விளையாட்டுகளையும் எடுத்துக் காட்டினேன்.
அம்மா, அப்பா, அண்ணி போன்ற உறவுமுறை வார்த்தைகளையும், கொழுக்கட்டை, எள்ளுருண்டை, பொங்கல் போன்ற உணவுகளையும் அறிமுகப்படுத்தினோம்.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள கலாச்சார பழக்க வழக்கங்கள் சிலவற்றை ஆதாரத்துடன் சொன்னேன். நோய்த் தடுப்பு நடவடிக்கையாக நாம் வேப்பிலைத் தோரணம் கட்டுவதைப் போல, கொரியாவிலும் தோரணம் கட்டுகிறார்கள். பொங்கல் திருவிழாவில் முக்கியமான நாள், காணும் பொங்கல் ஆகும். அது இங்கேயும் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம், கொரியர்கள் இப்போதும் தங்கள் உறவினர்களை கண்டு நலம் விசாரித்து இனிப்பு வகைகளை பரிமாறும் பழக்கம் இருக்கிறது.
விவசாயம் சார்ந்த தமிழ் வார்த்தைகளும் கொரியா மொழியில் ஏராளமாகக் கலந்திருக்கின்றன. உடல்பாகங்கள் பலவற்றுக்கு அப்படியே தமிழ் வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. கொரியர்களின் வாழ்க்கையில் அரிசி உணவுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒரு குழந்தை பிறக்கும்போதும் சரி, ஒருவர் இறக்கும்போதும் சரி, புதுமனை புகுவிழா சமயத்திலும் சரி அதிரசம் உள்ளிட்ட அரிசியால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை பரிமாறுகிறார்கள்.

இறப்பு வீட்டில் கறி, மீன் போன்றவற்றை படைக்கிறார்கள். அரிசி சார்ந்த உணவுகளையும், அந்தப் பகுதியில் விளையும் பழங்களையும் படைக்கிறார்கள். எந்த ஒரு காரியத்துக்கும் நாம் பலி கொடுப்பதைப் போலவே, கொரியர்கள் பன்றியை பலிகொடுக்கிறார்கள். இங்குள்ள கிராமப்புற புத்தர் கோவில் கிட்டத்தட்ட நம் ஊர் அய்யனார் கோவிலைப் போல இருக்கிறது. புத்தரே அப்படியான தோற்றத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறார். புத்தருக்கு இங்கே சாக்கிய முனி என்றே அடைமொழி கொடுத்திருக்கிறார்.
கொரியா தமிழக உறவுகளை குறித்து முனைவர் நா.கண்ணன், ஒரிசா பாலு, ஆதனூர் சோழன் ஆகியோர்தான் நூல்களை எழுதியிருக்கிறார்கள். 18ஆம் நூற்றாண்டுவரை சமஸ்கிருதம்தான் தொன்மையான மொழி என்று கற்பிக்கப்பட்டதை, கால்டுவெல் மாற்றினார். அதன்பிறகுதான் தமிழ் மொழியின் தனித்தன்மை வெளிப்பட்டது.
ஒரு மொழியின் சிறப்புக்கு மூன்று கூறுகள் இருக்கின்றன். இலக்கியச் சிறப்பு, வணிக சார்பு, தொல்லியல்தன்மை ஆகியவை முக்கியமானவை இவை மூன்றுமே தமிழுக்கு இருக்கின்றன. ரோமாபுரியுடன் வணிகம் செய்ததற்கான ஆதாரங்களாக ரோம நாணயங்கள் கிடைத்திருக்கின்றன. தொல்லியல் ஆய்வுகளில் தமிழின் தொன்மை வெளிப்பட்டிருக்கிறது. மிகத் தொன்மையான இலக்கியங்கள் தமிழில் இருக்கின்றன. தமிழை தொன்மையான மொழி என்று அறிவியல் நிரூபித்திருக்கிறது.
இலக்கியத்திலும், அறிவியலிலும் தமிழின் சிறப்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வுகள் ஆதிச்சநல்லூரில் நடந்திருக்கின்றன. இப்போதும் கீழடியில் ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் பெரும்பாலும் வணிகம் சார்ந்திருக்கிறது.
கொற்கை துறைமுகத்திலிருந்து தமிழன் வணிகம் நடத்தியிருக்கிறான். ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியில் வெளிநாட்டினர் தங்கியிருந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன என்று ஆஸ்திரேலிய ஆய்வறிஞர் ராகவன் கூறியிருக்கிறார். அங்கு கிடைத்த நூற்றுக்கு மேற்பட்ட மனித எலும்புக் கூடுகளில் சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது. சமீபகாலமாகத்தான் கொரியா தமிழக உறவுகள் பேசுபொருளாகி இருக்கிறது. தமிழ்ராணி கொரியாவை ஆட்சி செய்திருக்கிறார் என்றால், அதற்கு முன்பே இரு நாடுகளுக்கும் இடையே வணிகம் நடந்திருக்க வேண்டும். அந்தத் தொடர்பில்தான் கொரியா மன்னருக்கு தமிழச்சி ஒருவரை மணமுடித்துக் கொடுத்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு நம்பிக்கை அதிகரித்திருக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாகத்தான் தமிழ் எழுத்துருக்கள் கொரியா மொழியில் மாற்றம் பெற்றிருக்க முடியும். கொரியா தமிழ்ச்சங்கம் இந்த இரு நாடுகளின் தொடர்புகள் குறித்து பல முன்னெடுப்புகளை செய்திருக்கிறது.
அதன்தொடர்ச்சியாக தமிழ் மற்றும் கொரியா மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை மேலும் வெளிக்கொணர ஆராய்ச்சி மையம் நிறுவவேண்டும். இந்தியா தமிழக பல்கலைக்கழக ஆசியா மொழிகள் கொரியா மொழி இணைப்பு, கொரியா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம் என்றார்.
முனைவர் ஆரோக்கியராஜ் தனது உரையில் ஏராளமான் இலக்கியம் மற்றும் அறிவியல் தரவுகளை மேற்கோள் காட்டி பேசினார். கொரியா தமிழ்ச்சங்கம் தமிழ் ஆர்வலர்களை அழைத்துச் சிறப்பித்ததையும் விருதுகள் வழங்கிக் கவுரவித்து முன்னுதாரணமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அவருடைய உரையை உலகத்தமிழ்ச்சங்க இயக்குனர் அன்புச்செழியன் பாராட்டினார். சிறப்பான உரை என்று குறிப்பிட்டு பேசினார்.

Leave A Reply