நூலக இதழ் தேர்வை ரத்து செய்வாரா முதல்வர்? குமுறல்கள் கோட்டையை எட்டுமா?

Share

எல்லோருக்குமான அரசு. வாக்களிக்காதோரும் பாராட்டும் வகையிலான அரசு என்பதுதான் தனது இலக்கு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரகடனம் செய்திருந்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக தனது அரசு வெளிப்படையாக செயல்படும். எதையும் மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கும் என்றெல்லாம் பறைசாற்றினார்.

ஆனால், நூலகத்துறையில் நடைபெற்ற மிகப்பெரிய மோசடி குறித்து பத்திரிகையாளர்களும், பதிப்பாளர்களும் மிகப்பெரிய குரல் எழுப்பி வருகிறார்கள். அதுகுறித்து அரசுத் தரப்பில் எந்தவொரு விளக்கமும் இதுவரை இல்லை.

300க்கு மேற்பட்ட குப்பைப் பத்திரிகைகளை ஒழித்துக் கட்டியிருப்பதாக ஒரு குப்பை பத்திரிகையாளர் விளக்கம் கொடுக்கிறார். அவருக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை.

இப்போது நூலகத்திற்கு தேர்வு செய்திருக்கும் நாளிதழ்களும், வார, மாத, மாதமிருமுறை இதழ்களும் அறிவுப்பூர்வமான இதழ்கள் என்பதற்கான விளக்கமும் இல்லை.

குப்பை இதழ்கள் என்பதற்கும் அறிவுப்பூர்வமான இதழ்கள் என்பதற்கும் வரையறை இருக்கிறதா? என்பதை விளக்க வேண்டும் அல்லவா?

தினமும் வெளிவருகிற நாளிதழ்களில் தினமலரை டிஷ்யூ பேப்பரைக் காட்டிலும் கேவலமாக கருதுவோர் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அந்த பத்திரிகையை நூலகத்திற்கு தேர்வு செய்திருக்கிறார்கள்.

ஆளும் அரசின் நற்காரியங்களை மூடி மறைக்கும், வீண் பழி சுமத்தி பொய்களை பரப்பும் இதழ்களுக்கும் நூலகத்தில் இடமளிக்கப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஆர்என்ஐ பதிவு பெறாத பல இதழ்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதிலும் ரவிக்குமார் என்ற மக்களவை உறுப்பினர் ஆசிரியராக இருக்கும் மூன்று தல்த்திய இதழ்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதுதான் மிகப்பெரிய கேலிக்கூத்து.

ரவிக்குமார் நடத்தும் மூன்று தலித்தியம் சார்ந்த இதழ்களுக்கு அனுமதி


இதழ் தேர்வுக்குழு சார்பில் பரிசீலனைக்கு இதழ்களை அனுப்பும்படி அறிவிப்பு வெளியிட்ட போது, ஆர்என்ஐ பதிவு பெறாத இதழ்களாக இருந்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்டிருந்தால், இப்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இதழ்களைக் காட்டிலும் மிகச் சிறப்பான, அறிவுப்பூர்வமான இலக்கியத்தரமுள்ள எத்தனையோ இதழ்களை அனுப்பியிருப்பார்கள்.

மிகவும் எரிச்சலான ஒரு விஷயம் என்னவென்றால், இயக்குனர் ரஞ்சித் படாடோபமாக அச்சிட்டு 75 ரூபாய் விலையில் வெளியிடும் நீலம் இதழை நூலகத்திற்கு தேர்வு செய்திருப்பதுதான்.

ஆக, தேர்வுக்குழுவினர், தங்களுக்கு வேண்டிய அரசியல், சினிமா செல்வாக்கு மிக்க ஆட்கள் நடத்தும் இதழ்களுக்கும், பெரிய கார்பரேட் நிறுவனங்கள் நடத்தும் இதழ்களுக்கும் முக்கியத்துவம் வழங்கியிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

அதாவது, பணியாளர்களை வைத்து, ஏஜெண்டுகளுக்கு கமிஷன் கொடுத்து லட்சக்கணக்கில் விற்பனை செய்யக்கூடிய, டிஜிடலாக தங்கள் இதழை புரமோட் செய்யக்கூடிய நிறுவனங்களுக்கு மேலும் அரசு பணத்தை வாரிக்கொடுக்கும் வேலையையே தேர்வுக்குழு செய்திருக்கிறது.

இந்த இதழ்களை தங்கள் வீடுகளிலும், டீக்கடைகளிலும் சலூன்களிலும் படிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தேர்வுக்குழு குப்பை என்று சொல்லி ஒழித்துக் கட்டியிருப்பதாக சொல்லும் இதழ்களில் எத்தனையோ அமைப்புகளின் குரல்கள் இடம்பெற்றிருக்கும். அந்தக் குரல்கள் அடக்கப்பட்டுள்ளன. எத்தனையோ அமைப்புகளின் கோரிக்கைகள் அமுக்கப்பட்டுள்ளன.

குப்பைகள் என்பது சாதி வெறியையும், மதவெறியையும் தூண்டுகிறவைதான். ஆனால், மதம்சார்ந்த, சாதி அமைப்புகள் சார்ந்த பத்திரிகைகளை இவர்கள் குப்பைகள் என்று கூறுகிறார்களா என்பது புரியவில்லை. அப்படிப் பார்த்தால், தினத்தந்தியும், தினமலரும், ஹிண்டுவும், தினமணியும்கூட சில குறிப்பிட்ட சாதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் இதழ்கள்தானே. அதிலும் தினமலர் நேரடியாகவே மதத்துவேசத்தையும், சாதிப்பற்றையும் அடிப்படையாக கொண்ட பொய்களை செய்திகளாக்குகிறது.

அது குப்பையல்ல என்றால், வேறு எதுவும் அதுபோல குப்பையாக இருக்க முடியாது என்பதே நிஜம். நூலகத்துறை இனியாவது முந்தைய இதழ் தேர்வை புறக்கணித்து, புதிதாக தகுதியுள்ள இதழ்களை, ஆள் செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு இல்லாத நல்ல இதழ்களை நடத்த விரும்புகிறவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முன்வர வேண்டும்.

ஆதனூர் சோழன்
ஆசிரியர், உதயமுகம் வார இதழ்
http://www.puthiyamugam.com/category/uthayamugam-weekly/

Leave A Reply