நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 14 – ஆதனூர் சோழன்

Share

சரியான மருத்துவ சிகிச்சைக்கு…

நோயற்ற வாழ்வு என்பது நம் எல்லோருடைய விருப்பம்.

ஆனால், அப்படியொரு வாழ்க்கை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

பல்வேறு நோய்களை மருத்துவர்கள் ஒழித்திருக்கிறார்கள். அபாயகரமான உயிர்க்கொல்லி நோய்கள் பலவற்றுக்கு மருந்து கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இருந்தாலும், நோய் தாக்குதல் இயல்பான விஷயமாகிவிட்டது.

ஒரே வகை நோய் சிலருக்கு விரைவில் குணமாகிவிடும். சிலருக்கு பல்வேறு மருத்துவர்களிடம் சோதனை செய்து கொண்ட பின்னரும் குணமாகாது.

நோயின் தன்மை, அதற்காக நாம் எடுத்துக் கொள்ளும் மருந்தின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.

தவறான மருந்தை எடுத்துக் கொண்டு பாதிப்பை அதிகப்படுத்திக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். நோயின் தன்மையை உணர்ந்து அதற்கு தகுந்த மருந்து எடுத்துக் கொண்டால், நோயை விரைவில் அகற்றிவிடலாம் என்பதே வல்லுநர்களின் கருத்து. ஆனால், எல்லோரும் இதை பின்பற்றுவதில்லை.

ஒவ்வொரு நோய்க்கும் ஒரு சில அறிகுறிகள் இருக்கும். அறிகுறியை நோய் எனக் கருதி சிலர் மருந்து எடுத்துக் கொண்டு பாதிப்பை அதிகரித்துக் கொள்கின்றனர்.

நோய்க்கான சரியான மருந்தை எடுத்துக் கொள்வதற்கு மருத்துவ நிபுணர்கள் சில வழிமுறைகளை வகுத்துள்ளனர்.

1. நோய் அறிகுறி தெரிந்தவுடன் மருத்துவரிடம் செல்லுங்கள். அவரிடம், உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அனைத்தையும் தெள்ளத் தெளிவாக கூறுங்கள். நீங்கள் கூறுவது அனைத்தையும், பொறுமையாகக் கேட்கும்படி மருத்துவரிடம் முதலிலேயே வேண்டிக் கொள்ளுங்கள். நோயாளிகள் தங்களுக்குள் தோன்றியுள்ள நோய் அறிகுறிகளை கூறத் தொடங்கியவுடனேயே, சில மருத்துவர்கள் உடனடியாக முடிவுக்கு வந்துவிடுகின்றனர். அப்படிப்பட்ட சமயங்களில், தவறான மருந்துகளை கொடுத்துவிட வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, பாதிப்புகள் அனைத்தையும் மருத்துவர்களிடம் கூறுவதே நல்லது. மருத்துவர்களும் நோயாளிகளிடம் அவர்களுடைய பிரச்சினைகளை முழுமையாக கேட்பது நல்லது. இதன்மூலம், நோய் குறித்து தெளிவான முடிவுக்கு வந்து, நோயை முழுமையாகத் தீர்ப்பதற்கான சரியான மருந்துகளை வழங்க முடியும்.

2. உங்களுடைய நோய்க்கு எடுத்துக்கொண்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் விளக்கமாகக் கூறவேண்டும். அதுவரை எடுக்கப்பட்ட பரிசோதனைகள், எடுத்துக் கொண்ட மருந்துகள் ஆகியவற்றை மருத்துவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவற்றைப் பரிசீலித்த பின்னர், மருத்துவர் தெளிவான முடிவுக்கு வர முடியும்.

3. இதற்கு முன்னர் செய்துகொண்ட பரிசோதனைகளில் ஏதேனும் முரண்பாடு இருக்கிறதா என்று மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு கேள்வி கேட்பதன் மூலம், உங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். மருத்துவரும் ஒரு முடிவுக்கு வர உதவும்.

4. சிலவகை நோய்களுக்கு பரிசோதனை செய்துவரும்படி மருத்துவர் பரிந்துரைப்பார். நீங்களும் லேபுக்குச் செல்வீர்கள். அங்கு மருத்துவர் கூறிய சோதனைகள்தான் செய்யப்பட் டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சோதனை அறிக்கையின் பிரதியைத் தருமாறு லேபில் முன்கூட்டியே கூறிவிடுங்கள். அறிக்கையைப் பெறும்போது, உங்களின் முழுப் பெயரையும் தெளிவாகக் கூறுங்கள். சில நேரம் வேறு ஒரு நோயாளிக்குரிய சோதனை அறிக்கை உங்களுக்கு வழங்கப்பட்டுவிடும். அது உங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

5. டாக்டர் கொடுத்த மருந்துச் சீட்டை எடுத்துக் கொண்டு மருந்துக்கடைக்கு செல்வீர்கள். டாக்டர் குறிப்பிட்ட மருந்து இல்லாவிட்டால் அதற்கு பதிலாக வேறு மருந்தை கொடுத்துவிடுவார்கள். இப்படி கோடிக்கணக்கான தவறுகள் நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, டாக்டர் பரிந்துரைத்துள்ள மருந்துகள்தான் தரப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்து சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். டாக்டர் எந்த அளவு மருந்தை எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளாரோ அதன்படி கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

6. மருந்துகளை ஒரே கடையில் வாங்குங்கள். இதன்மூலம், மருந்துகளால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும். மருந்துக் கடைக்காரரிடம் உங்களுக்குத் தேவையான மருந்துகளைத் தெளிவாக கூறுங்கள். நீங்கள் வாங்கும் மருந்தில் பின்விளை ஏதேனும் இருக்கிறதா என்பதை கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

7. நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகளின் பட்டியலை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கும்போது, உங்களுடைய மருந்துப் பட்டியலுக்கு பதிலாக, மற்றொரு நோயாளியின் பட்டியலுடன் மாறிவிட வாய்ப்பு உண்டு. வேறொரு நோயாளிக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தை நீங்கள் எடுத்துக் கொண்டால் விளைவு விபரீதமாகும். எனவே, மருந்து பட்டியலை பத்திரமாக வைத்திருப்பது அவசியம்.

8. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும்போது ஒவ்வொரு முறையும் மருந்துகளை அளிப்பவர்களிடம், இந்த மருந்து எதற்காக என்று கேள்வி கேளுங்கள். இதன்மூலம், தவறான மருந்துகளை அளிப்பதை தவிர்த்துவிடலாம். சில நேரங்களில் மருத்துவமனைப் பணியாளர்கள், மற்றொரு நோயாளிக்கு தர வேண்டிய மருந்துகளை உங்களுக்கு அளித்துவிட வாய்ப்பு உண்டு. இந்தத் தவறு நடக்காமல் தவிர்க்க, ஒவ்வொரு முறையும் கேள்வி கேட்பது சரியான பழக்கமாக இருக்கும்.

9. உங்களுக்குப் பரிசோதனை செய்யுமாறு மருத்துவர் ஒரு லேபை பரிந்துரைப்பார். அந்த லேப் நிர்வாகம் செம்மையாக இருக்கிறதா என்பதை கவனியுங்கள். அங்கு நிறைய பரிசோதனைகள் நடைபெறுகிறதா என்பதை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதிக அளவில் பரிசோதனைகளை மேற்கொள்ளும் லேப்களில் தவறுகள் நடக்க குறைவான வாய்ப்புகளே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

10. ஆய்வகங்களில் பரிசோதனைக்காக உங்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் எங்கே வைக்கப்பட்டுள்ளது என்பதை கண்காணியுங்கள். அதில் எழுதப்பட்டுள்ள பெயர் மற்றும் அடையாளங்களை அறிந்து கொள்ளுங்கள். இது, உங்களுடைய பரிசோதனை முடிவுகள், மற்ற நோயாளிகளின் பரிசோதனை முடிவுகளுடன் கலந்துவிடாமல் தடுக்க உதவும்.

11. பரிசோதனை முடிவுகளை மற்றொரு மருத்துவரிடம் காட்டிக் கருத்து கேளுங்கள். சில நேரங்களில் ஒரு டாக்டர் கூறும் கருத்து, மற்றொரு டாக்டரின் கருத்துடன் மாறுபட்டிருக்க வாய்ப்பு உண்டு. எனவே, இரண்டாவது மருத்துவரிடம் காட்டி கருத்து கேட்கும்போது, தவறுகள் ஏற்படுவது குறைய வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

நோய் தாக்குவதே பாதிப்பு. அதிலும், தவறான சிகிச்சையால் பாதிப்பு அதிகரித்தால் வேதனைதானே… எனவே, நிபுணர்கள் வகுத்துள்ள இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் சரியான சிகிச்சையை உத்தரவாதப் படுத்தமுடியும்.

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 15 – ஆதனூர் சோழன்

Leave A Reply