நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 5 – ஆதனூர் சோழன்

Share

திட்டமிட்டு படிப்பது எப்படி?

இந்த கேள்விக்கு விடை காண்பதற்கு முன்பு, வேறு சில கேள்விகளை உங்களது குழந்தை தனக்கு தானே கேட்டுக்கொண்டு தெளிவு பெற வேண்டும்.

பள்ளியில் கொடுத்துள்ள ஒரு வேலை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் முடிக்கப்பட்டால், அது எப்படி பார்க்கப்படும்? அதற்கு எவ்வளவு பாராட்டு கிடைக்கும்? எவ்வளவு மனநிறைவை தரும்?

இந்த வேலையை தரமாகவும் நேர்த்தியாகவும் செய்து முடிக்க எவ்வளவு நாள் அல்லது நேரம் ஆகும்?

இந்த வேலையை எப்படி ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அல்லது ஒவ்வொரு நாளுக்கும் பிரித்துக் கொள்வது?

இந்த கேள்விகளுக்கு விடைகண்டு விட்டால், போதும். திட்டம் தயார்.

உதாரணமாக, தேர்வுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கிறது என வைத்துக்கொள்வோம்.

படிக்க வேண்டியது 10 பாடங்கள் என்றால், ஒருநாளைக்கு ஒரு பாடம் என்று பிரித்துக்கொண்டு படிக்கலாம். இதுதான் திட்டம்.

இப்படி படிக்கும் போது படிப்பு சுமையாக இருக்காது. எளிதாகவும் தெளிவாகவும் படிக்க முடியும்.

படிப்பதில் தானாக படிப்பது. படித்ததை ஒப்பிப்பது. படித்ததை எழுதிப்பார்ப்பது என்று பல்வேறு வகைகள் உள்ளன.

ஆனால், படித்த பாடத்தை ஒரு ஆசிரியரை போல பிறருக்கு சொல்லித்தருவது மிகச்சிறந்த படிப்பு.

அப்படி சொல்லித்தரும்போது, பாடம் மேலும் தெளிவாக புரியும். மனதில் ஆழமாக பதியும்.

மேலும் பாடத்தை யாராவது ஒருவருக்கு சொல்லித்தரும்போது, அவர் பாடம் சம்பந்தமாக எழுப்பும் சந்தேகங்களை எதிர்கொள்ள நேரிடும். அந்த சந்தேகம் நமக்கு அதுவரையில் தோன்றாமல் இருந்திருக்கும்.

அவர் கேட்டவுடன், அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக மேலும் ஆழமாக பாடத்தை படிப்போம். அது இன்னும் நம்மை தெளிவு படுத்தும்.

சரி, யாருக்கு சொல்லி தருவது?
ஒரு மாணவன் அல்லது மாணவி தனது வகுப்பில் படிக்கும் சக மாணவன் அல்லது மாணவிக்கு சொல்லி தரலாம்.

பெற்றோருக்கு நேரம் இருந்தால், பெற்றோரே மாணவர்களாக இருக்கலாம். உங்களது குழந்தை உங்களுக்கு பாடம் நடத்துவது, உங்களுக்கும் புது அனுபவமாக இருக்கும்.

ஒரு பாடத்தை குழந்தை எப்படி சொல்லித் தருகிறாள் அல்லது தருகிறான் என்பதை கவனிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட பாடத்தில் குழந்தை எந்த அளவிற்கு தயாராகி இருக்கிறார்?

பாடத்தை எவ்வளவு நேரத்தில் நடத்துகிறார்?

பாடம் நடத்தும் போது எளிமையான உதாரணங்களுடன் விளக்குகிறாரா?

பாடம் நடத்தும் போது நம்மிடம் இடையிடையே கேள்விகள் கேட்டு, அதற்கு பதிலை கூறுகிறாரா? அதாவது அவர் மட்டுமே பேசிக்கொண்டிருக்க நாம் வெறுமனே கேட்டுக்கொண்டிருக்க என்று இல்லாமல், நம்மையும் அந்த உரையாடலில் பங்கெடுக்க வைக்கிறாரா?

பாடத்தை ஒரு நல்ல அறிமுகத்துடன் ஆரம்பித்து, முடிக்கும் போது ஒரு நல்ல முடிவுடன் முடிக்கிறாரா?

பாடம் நடத்தும் போது உற்சாகமாக நடத்துகிறாரா?

இப்படி அனைத்து விஷயங்களையும் நாம் கவனிக்க வேண்டும்.

தரம் என்பது என்ன

செய்யும் வேலையை திருத்தமாகவும் நேர்த்தியாகவும் செய்வது தரம். இதை எப்படி குழந்தைகளுக்கு புரிய வைப்பது?

நீங்கள் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியாக இருக்கலாம். அல்லது வீட்டில் சமையல் செய்யும் சாதாரண குடும்பப் பெண்ணாக இருக்கலாம். நீங்கள் செய்யும் வேலை மூலமாகவே குழந்தைகளுக்கு தரத்தை பற்றி புரிய வைக்க முடியும்.

உதாரணமாக, நீங்கள் சமையல் செய்கிறீர்கள்.

சமையல் செய்ய காய்கறி நறுக்கும் போது, வெங்காயத்திற்கு தோல் உரிக்கும போது, எப்படி சுத்தமாக தோலை உரிக்கிறீர்கள் என்பதை குழந்தைகளை பார்க்க செய்யலாம். எப்படி காய்களை நேர்த்தியாகவும் ஒரே வடிவத்திலும் நறுக்குறீர்கள் என்பதை அவர்கள் பார்த்தால், தரத்தை பற்றி தெரிந்து கொள்வார்கள்.

வீட்டைச் சுத்தம் செய்யும்போது, சிறு குப்பையை கூட விட்டு விடாமல் சுத்தம் செய்வதைப் பார்க்கும் குழந்தைகளுக்கு நேர்த்தி குறித்து கற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

நேர்த்தியையும் தரத்தையும் கற்றுத்தர நாம் படித்திருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. நாம் செய்யும் வேலை, அது எதுவாக இருந்தாலும் எவ்வளவு நேர்த்தியாக செய்கிறோம் என்பதை குழந்தைகளை பார்க்க செய்வது, நேர்த்தி குறித்து கற்றுக் கொள்ள வைக்கும்.

அந்த வேலைகளை குழந்தைகளிடமும் கொடுக்கலாம்.

அதை குழந்தைகள் செய்யும் போது சரியாக செய்திருக்கிறாயா? என்று அவர்களிடம் கேட்டு, தரத்தை உணர்த்தலாம்.

அதற்கு நீங்கள் முதலில் நிதானமாகவும் பொறுமையுடனும் வேலைகளை செய்பவராக இருக்க வேண்டும்.

குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள பல்வேறு நல்ல அம்சங்களில் மிகவும் முக்கியமானது, அவர்களுடன் சேர்ந்து நாமும் வளர்கிறோம் என்பதுதான்.

நாம் வளர வேண்டும்.

வளர மாட்டோம் என்று அடம்பிடித்தால் குழந்தையும் வளராது.

ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் ஒரு தந்தையும் தாயும் பிறக்கிறார்கள்.

பிறந்த குழந்தை வளர்கிறது,
ஆனால் தந்தையும் தாயும்……….
குழந்தைகளை நன்றாக படிக்க வைப்பதற்கும்,
வீடு சுத்தம் செய்வதற்கும் என்ன சம்பந்தம்?
நேரடியாக பார்த்தால் சம்பந்தம் இல்லைதான்.

ஆனால், வீடு கூட்டும் போது அந்த குழந்தை பொறுமையை பயில்கிறது.

சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை பயில்கிறது.
தவறு நேரக்கூடாது என்ற கவனத்தைப் பயில்கிறது.

இந்த கவனம், பொறுமை, சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்தால், அவை படிப்பிலும் பிரதிபலிக்கும்.

குழந்தைக்கு கல்வியில் கவனமும் பொறுமையும் வளரும். படிப்பதை அரைகுறையாக இல்லாமல் முழுமையாக படிக்கும். எனவே, ஒவ்வொன்றிலும் கற்றுக் கொள்வதற்கான அம்சங்கள் இருக்கின்றன.

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 6 – ஆதனூர் சோழன்

Leave A Reply