நேரம் நல்ல நேரம் – 12 – ஆதனூர் சோழன்

Share

படுக்கையில் மூத்திரம் போகும் பழக்கம்

குழந்தைகள் படுக்கையில் மூத்திரம் போவது பல பெற்றோருக்கு எரிச்சலை உருவாக்கும்.

ஆனால் ஐந்து வயதுக்கு கீழான குழந்தைகள் படுக்கையில் மூத்திரம் போவதைப் பற்றி கவலையோ எரிச்சலோ அடையத் தேவையில்லை.

அதேசமயம் ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் தொடர்ந்து படுக்கையை ஈரமாக்குவது நீடித்தால் அது குறித்து நாம் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

படுக்கையை ஈரமாக்குவதில் இருவகையினர் உண்டு.

சிறு குழந்தையாக இருக்கும் போதிருந்து தொடர்ந்து படுக்கையை நனைக்கும் குழந்தைகள் முதல் பிரிவினர்.

5 வயதும் அதற்கு மேலும் உள்ள குழந்தைகளில் பலர் 6 மாதம் வரையிலும் படுக்கையை ஈரமாக்கமாட்டார்கள்.

ஆனால் அதன்பிறகு தொடர்ந்து படுக்கையை நனைக்கும் பழக்கம் அவர்களை தொற்றிக் கொள்ளும். இவர்கள் இரண்டாவது பிரிவினர்.

படுக்கையில் மூத்திரம் போகும் இந்தப் பழக்கத்திற்கு எனுரெசிஸ் என்று டாக்டர்கள் பெயரிட்டுள்ளனர்.

இது ஒரு பொதுவான ஆனால் அருவறுப்பான பிரச்சனையாகும்.

மும்பையில் ஆயிரத்து 500 குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 15 முதல் 18 சதவீத குழந்தைகள் படுக்கையை நனைக்கும் பழக்கமுடையவை என அறியப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 சதவீத குழந்தைகள் படுக்கையை ஈரமாக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுகின்றனர்.

இந்தப் பழக்கத்திற்கு சரியான விதத்தில் சிகிச்சை அளிக்கத் தவறினால் 0.5 சதவீத குழந்தைகள் வாழ்க்கை முழுவதும் படுக்கையில் மூத்திரம் போகும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

பெரும்பாலான குழந்தைகள் இரவில் மட்டும படுக்கையை நனைப்பார்கள். வெகுசிலர் மட்டுமே பகலிலும் படுக்கையில் மூத்திரம் போவார்கள்.

பெண்களைக் காட்டிலும் பையன்கள்தான் இந்தப் பிரச்சனையை அதிகமாக சந்திக்கின்றனர்.

பெரும்பாலான குழந்தைகள் வளரும்போது, சில குழந்தைகள் மட்டும் இந்த பழக்கத்திலிருந்து மீள முடியாதது ஏன்?

இதுகுறித்து டாக்டர்கள் துவக்கம் முதலே ஆர்வம் செலுத்தவில்லை.

கடந்த பல ஆண்டுகளாக இதுஒரு மனோதத்துவ பிரச்சனையாகவே கருதப்பட்டது.

உருவ அமைப்புக்கு உண்டான குணமாகவும், வாழ்க்கை அழுத்தம், குடும்ப குழப்பங்கள், சமூக பிரச்சனைகள் ஆகியவை சம்பந்தப்பட்டதாகவும் மாறியது. கழிப்பறை பயிற்சியை முறைப்படுத்தாததும் இதற்கு காரணமாக கூறப்பட்டது.

ஆனால், கடந்த 10 ஆண்டில் படுக்கையை நனைக்கும் பழக்கத்தை புரிந்து கொள்வதில் முக்கிய மாற்றம் ஏற்பட்டது.

படுக்கை நனைக்கும் பழக்கத்திற்கு பின்னணியில் பல முக்கியமான விஷயங்கள் உள்ளன.

குறிப்பாக, தூங்கும் முறை, தூக்கத்தின்போது மூத்திரப்பை நிறைந்து விட்டாலும் எழ முடியாத நிலை ஆகியவை படுக்கையை நனைக்கும் பழக்கத்திற்கு காரணமான அமைகின்றன.

இரவு நேரத்தில் நமது உடலில் மூத்திரம் உற்பத்தியாவதை கட்டுப்படுத்தும் ஒருவித ஹார்மோன் குறைந்த அளவே சுரக்கும். எனவே நமது மூத்திரப்பையின் அளவைக் காட்டிலும் கூடுதலாக இரவில் மூத்திரம் உற்பத்தியாகும்.

படுக்கையை நனைக்கும் பழக்கம் ஒரு குழந்தையை மோசமாக பாதிக்கும். ஒரு கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பேர் படுக்கையை நனைக்கும் பழக்கத்தினராக உள்ளனர் என தெரியவந்துள்ளது.

இத்தகைய குழந்தைகள் மற்ற எல்லாவிதத்திலும் ஆரோக்கியமாக இருந்தாலும் இந்தப் பழக்கம் குழந்தைகளிடமும் அதன் பெற்றோர்களிடமும் மன விசாரத்தையும், அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

படுக்கை நனைக்கும் குழந்தைகள் வழக்கமான பள்ளிச் சுற்றுலா செல்வதையோ, மாமா வீட்டில் இரவு தங்குவதையோ கோடை விடுமுறையில் பிற இடங்களுக்கு சென்று நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ தங்குவதையோ தவிர்க்க விரும்புகின்றனர்.

ஆனால், இவை அனைத்துமே வளரும் குழந்தைகளுக்கு வழக்கமாக தேவைப்படுகிற விஷயங்கள் ஆகும்.

மறுபுறத்தில் குழந்தைகளின் இந்தப் பழக்கம் காரணமாக அன்றாடம் சுத்தம் செய்யும் வேலை, சலவை செய்யும் வேலை அதிகரிப்பதால் பெற்றோர் அவர்களை திட்டுவதும், தண்டிப்பதும் தொடர்கிறது.

ஏனெனில், குழந்தைகளின் கெட்ட நடத்தையாகவே இந்தப் பழக்கத்தை அவர்கள் கருதுகின்றனர்.

இவை அனைத்தும் வளரும் குழந்தைக்கு மிகவும் அவசியமான தன்னம்பிக்கையை இழக்கச் செய்கிறது.

எனவே, இந்தப் பழக்கத்திற்கு சரியான சிகிச்சை அளிக்க தவறினால் தீவிர மனோதத்துவ மற்றும் சமூக பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

சாதாரணமாக, படுக்கையை நனைக்கும் பழக்கமுடைய குழந்தைகளின் குடும்ப பின்னணி மற்றும் சில குறைந்தபட்ச விசாரணைகள் மூலம் இந்தப் பழக்கத்தை குணப்படுத்தி விடலாம்.

இதற்கு மிக அவசிமயமானது தரமான உடல் பரிசோதனை மற்றும் மூத்திர குழாய் பாதிப்பு அல்லது நீரிழிவு நோய் உள்ளதா என்ற சோதனை ஆகும்.

ஆனால், ஒரு வேளை குழந்தை மூத்திரம் போவதில் சிரமங்கள் ஏற்பட்டால் பெரிய அளவிலான பாதிப்புகள் உண்டா என்பதை பெற்றோர்கள் டாக்டர்களிடம்தான் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த சிகிச்சைக்கு முதலும் முக்கியமானதுமான விஷயம் என்னவெனில் சிகிச்சைக்கு குழந்தைகள் ஒத்துழைப்புதான்.
படுக்கை நனைக்கும் பழக்கத்தால் தான் எதையெல்லாம் இழந்துள்ளமோ அவற்றை பெறப் போகிறோம் என்ற நம்பிக்கை குழந்தைக்கு ஏற்பட வேண்டும்.

அத்துடன், குழந்தை தூங்கப் போவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்பு அதற்கு தண்ணீரோ, திரவ உணவோ அளிப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.

இவை தவிர இந்தப் பழக்கத்தை கட்டுப்படுத்த மேலும் இரண்டு வழிகள் உள்ளன.

குழந்தை வழக்கமாக படுக்கையில் மூத்திரம் போகும் நேரத்தை கிட்டத் தட்ட சரியாக கணித்து அந்த நேரத்திற்கு கடிகாரத்தில் அலாரம் வைத்து பழக்குவது ஒரு வழி. பெரும்பாலான குழந்தைகள் தூங்கிய 2 அல்லது 4 மணி நேரத்திற்கு படுக்கையை நனைக்கின்றன என்பதை மனதில் கொள்வது நல்லது.

இந்தப் பழக்கத்திற்கு மருந்து என பார்க்கையில் டெஸ்மோபிரெஸ்ஸின் முறை ஏற்றதாக இருக்கும்.

டெஸ்மோபிரெஸ்ஸின் என்பது நமது சுவாசத்தில் இழுக்கும் வகையானது. அதாவது சென்ட் ஸ்பிரே செய்வது போல. அல்லது இன்ஹேலர் உறிஞ்சுவது போல.

இதை உறிஞ்சிவிட்டால் இரவு நேரத்தில் மூத்திரம் உற்பத்தியாவதை வெகுவாக கட்டுப்படுத்தும். இதன்மூலம் சுமார் 6 முதல் 8 மணி நேரத்திற்கு படுக்கையில் மூத்திரம் போவதிலிருந்து தாக்குப்பிடிக்க முடியும்.

ஆனால், இந்த சிகிச்சை 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் படுக்கையில் மூத்திரம் போவதை தடுப்பதில் உடனடியாக பயனளிக்கும் சிகிச்சையாகும். இந்த சிகிச்சை பக்கவிளைவு இல்லாதது.

எனினும், இந்த சிகிச்சை முறைகள் பலனளிக்க தவறினால் குழந்தையின் மூத்திரப்பை செயல்பாடு குறித்து பரிசோதிக்க வேண்டியது அவசியமாகும்.

இந்தியாவில் சராசரியாக 1.5 சத குடும்பங்களில் படுக்கையை நனைக்கும் குழந்தைகள் உள்ளன.

டாக்டர்களிடம் வரும் குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் இந்த பழக்கத்திற்கான காரணங்களாக ஏதேதோ சொல்லி குழப்புவதாக கூறப்படுகிறது.

அதே சமயம், இந்தப் பழக்கத்தை நிறுத்த டாக்டர்கள் சரியான. பொருத்தமான சிகிச்சையை அளிக்கத் தவறுவதாக பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்தியாவில் பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பள்ளி மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் ஆகியோரிடம், படுக்கையில் மூத்திரம் போகும் பழக்கத்தை நிறுத்த பாதுகாப்பான பயனுள்ள சிகிச்சை முறை இருப்பதை பிரச்சாரம் செய்ய வேண்டும்.

இதன்மூலம் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

நேரம் நல்ல நேரம் – 13 – ஆதனூர் சோழன்

Leave A Reply