நேரம் நல்ல நேரம் – 14 – ஆதனூர் சோழன்

Share

குழந்தைகள் ஏன் அடம்பிடிக்கின்றன?

குழந்தைகளின் மழலை மொழியை கேட்காதவர்கள்தான் ஏ.ஆர்.ரகுமானின் இசையையும், இளையராஜாவின் இசையையும் இனிமையென்று கூறுவார்கள்.

அவர்களது மழலை கொஞ்சும் வார்த்தைகளை ரசித்து கவனித்து அதை புரிந்து கொள்வதே தனி சுகம்தான்.

அதுபோல ஒரு சுட்டிக் குழந்தை, தனது சொந்த சிந்தனையுடனும், உணர்ச்சிகளுடனும் வளர்ந்து பெரிய வனாவதையோ அல்லது பெரியவளாவதையோ காணும் இன்பம் இருக்கிறதே…. பெற்றோரின் முக்கியமான இன்பங்களில் அதுவும் ஒன்று.

இது ஒன்றும் நீங்கள் எதிர்பார்ப்பது போல எளிதான காரியமல்ல.

சமயத்தில் நீங்கள் உங்கள் குழந்தையுடன் எங்காவது போயிருப்பீர்கள். அங்கு, அது திடீரென எதற்காகவாவது அடம்பிடித்து குதிக்கும். நீங்கள் என்ன சொன்னாலும் புரிந்து கொள்ளாமல் உங்கள் கோபத்தை தூண்டும் வகையில் அழுது புரளும்,

உடனே உங்களுக்கு நரம்பு முறுக்கேறும். வெறி கிளம்பும். பாவம் அந்த பச்சைக் குழந்தையை மொத்து மொத்தென்று முதுகில் நாலு சாத்து வைப்பீர்கள்.

எல்லாம் முடிந்து அமைதியான பிறகு நீங்களும் நிதானத்திற்கு வருவீர்கள். குழந்தையை அடித்தது குறித்து மனம் நோவீர்கள். எங்கே தவறு நடந்தது என்று ஆச்சரியப்படுவீர்கள்.

இது உங்களுக்கு மட்டுமல்ல. இரண்டு வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை வைத்திருக்கும் அனைத்து பெற்றோருக்கும் இத்தகைய வெறியுணர்ச்சி ஏற்படுவது சகஜம்தான்.

இவ்வாறு நிகழ்வதை தடுக்க, நீங்கள் உங்கள் குழந்தைகளை, அவை குட்டி குழந்தைகளாக இருக்கும் போதிருந்தே பயிற்றுவிக்க வேண்டும்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கான நமது ஆயிரக்கணக்கான சிரமங்களில் இதையும் ஒன்றாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் குழந்தைகளுக்கு அன்பைத் தாருங்கள். அறிவைத் தாருங்கள். ஆனால், அவர்களை அவர்களாகவே இருக்க விடுங்கள் என்று கலீல் ஜிப்ரான் கூறுவார்.

ஒவ்வொரு குழந்தையும் சுயதோற்றக் கூறுடன் பிறக்கின்றது. அந்த தோற்றக் கூறு, குழந்தையின் நடத்தையில் மட்டுமல்ல மனப்போக்கிலும் பிரதிபலிக்கிறது.

குழந்தையின் துவக்க நிலை உறவுகள் மற்றும் வளர்ச்சியில் இது முக்கிய பங்காற்றுகிறது.

எல்லாக் குழந்தைகளுக்குள்ளும் இத்தகைய தோற்றக் கூறு இருந்தாலும், பல விஷயங்களில் குழந்தைகள் வேறுபடும்.

அவை ஏமாற்றமடையும்போதும், அவ்வாறு ஏமாற்றமடையும் போது, அதை எவ்வளவு தூரம் வன்மத்துடன் பிரதிபலிக்கின்றன என்பதிலும் இந்த வேறுபாடுகள் தெரியும்.

சில குழந்தைகளை கவனித்தால், தாங்கள் மேற்கொண்ட காரியத்தில் பொறுமையாக ஈடுபட்டிருக்கும். வேறு சில குழந்தைகளோ, இடையிலேயே தங்கள் வேலையை கைவிட்டு விடும்.

சில குழந்தைகள் தமது தோல்வியை பெருந்தன்மையாக ஒப்புக் கொண்டு அமைதியாக வேறு பக்கம் கவனம் செலுத்தும்.

வேறு சில குழந்தைகள் ஒவ்வொரு தோல்வியையும் மனதில் வைத்துக் கொண்டு நம்பிக்கை இழந்துவிடும்.

ஒரு குழந்தைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி அந்தக் குழந்தையிடம் உற்சாகத்தையும் சமயத்தில் அச்சத்தையும் ஏற்படுத்தக் கூடும்.

அதாவது, அந்தக் குழந்தை உங்களிடமிருந்து முழுமையான விடுதலையை விரும்பக் கூடும்.

வேறு ஒரு வகையில் அந்தக் குழந்தை ஒவ்வொரு விஷயத்திற்கும் உங்களை சார்ந்தே இருக்க நினைக்கும்.

இம்மாதிரி எதுவும் நிகழாமல் பார்த்துக் கொள்ள முயற்சிக்கும் போது உங்களுக்கும் சரி, குழந்தைகளுக்கும் சரி கொந்தளிப்பான காலகட்டமாக இருக்கும்.

குழந்தைகள் தங்களால் இயலாத காரியங்களை கையிலெடுத்துக் கொண்டு ஏமாற்றமடைகின்றன.

அந்தக் காரியங்கள் தான் எதிர்பார்த்தது போல அமையவில்லை என்பதால் மட்டும் குழந்தை ஏமாற்றமடைவது இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக பெரியவர்கள் அவர்களை ஏமாற்றமடைய செய்கிறோம்.

முழுக் கட்டுப்பாட்டையும் நமது கையில் வைத்துக் கொண்டு குழந்தையின் அறிவு மற்றும் சுய உரிமையை மீறி தலையிடுகிறோம்.

இதுபோன்ற சமயங்களில் நமது கட்டுப்பாடுகளையும், தலையீடுகளையும் குழந்தைகள் எதிர்க்கின்றன.

அவர்களது எதிர்ப்பை நீங்கள் உங்களது மேலதிகாரத்தால் தோற்கடிக்கும்போது அவர்கள் அடங்காமல் அடம்பிடித்து அழுது புரள்கிறார்கள்.

நிர்க்கதியான தன்மை தோல்வி உணர்வு போன்றவை அவர்களை அடம்பிடிக்கச் செய்கின்றன.

இத்தகைய போக்கை சமாளிக்க நிறைய வழிகள் உள்ளன.

குழந்தைகள் அடம்பிடிக்கும்போது சேதம் ஏற்படாதவரை அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவது நல்லது.

இப்படி செய்யும்போது நாளாக நாளாக உங்களது கவனத்தை கவர அடம்பிடிப்பது சரியான வழியில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

ஆனால், அதற்கு பதிலாக மாற்று வழியொன்றை கண்டுபிடிக்கும் வரை தீவிரமாக அடம்பிடிப்பார்கள். எனவே, பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.

குழந்தை அடம்பிடிக்கும் விஷயத்திலிருந்து வேறு ஒன்றுக்கு அதன் கவனத்தை திருப்புவதும், நீங்கள் செய்யப் போகும் காரியத்துக்கு தொடர்பில்லாத வேறு ஏதேனும் ஒன்றை அவர்கள் வசம் ஒப்படைப்பதும் மற்றொரு வழியாகும்.

ஒரு தவறான காரியத்தை செய்யும்போது இயற்கையான, எதிர்மறையான விளைவுகளை குழந்தைகளை அனுபவிக்க விடுவது சரியானதாக இருக்கும்.

உதாரணமாக ஒரு பொம்மையை உடைத்துவிட்டால் பின்னர் அது உபயோகமற்றதாகிவிடும் என்பதை குழந்தை உணரும்படி செய்தால் பிறகு அது பொம்மையை உடைக்குமா?

தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளச் செய்வது இன்னொரு நல்ல வழி. தீக்குச்சியுடன் விளையாடுவது, தெருவில் இறங்கி ஓடுவது போன்ற காரியங்களில் குழந்தையின் பாதுகாப்பில் சிரமம் இருந்தாலும்கூட நாம் சிறிது எச்சரிக்கையுடன் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை சொல்லிக் கொடுக்கும்போது அவர்களுடைய கெட்ட பழக்கங்கள் தானாவே மறைந்துவிட வாய்ப்பு உள்ளது.

உங்கள் கவனத்தை கவருவது, அறிய விரும்பும் ஆவல். நண்பர்களை எப்படி வெல்வது என்பது குறித்த தவறான ஐடியாக்கள். குடும்பத்தின் பதட்டம். ஏமாற்ற உணர்வுகள். சகோதரர்களுடன் பகைமை.

இவ்வாறான விஷயங்கள்தான் குழந்தைகள் அடம்பிடிக்க பொதுவான காரணங்களாக உள்ளன.

உங்கள் குழந்தை எந்தச் சூழ்நிலையில் தவறாக நடந்து கொள்கிறது என்பதை கவனியுங்கள். அப்போது உங்களது உணர்வுகள் எப்படி உள்ளன என்பதையும் அறியுங்கள்.

அப்போது அது குறித்து உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும்.

உங்கள் குழந்தையை முரடன் என்று முத்திரை குத்துவதற்கு பதிலாக. எந்த மாதிரியான சூழலில் அவன் முரண்டு பிடிக்கிறான் என்பதையும், எதற்காக முரண்டு பிடிக்கிறான் என்பதையும் புரிந்து கொள்வது நல்லது.

படுக்கையில் சோம்பிக் கிடக்கிறானா? நீங்கள் அழைக்கும்போது வர மறுக்கிறானா?

இதுபோன்ற சமயங்களில் நீங்களும், மற்றவர்களும் செய்யக் கூடியது என்ன?

குழந்தையின் பல்வேறு பழக்கங்கள் வேறு ஒன்றுடன் தொடர்புடையதாக இருக்கும். அவற்றில் ஏதேனும் ஒன்றை முதலில் தேர்வு செய்து சரி செய்யுங்கள். அதை சமாளித்து விட்டால் மற்றவை தாமாகவே மறைந்து விடும்.

இந்த முயற்சியின் போது உங்கள் குழந்தையின் பழக்கம், உங்களுடையதைப் போல இருந்தால் என்ன செய்வீர்கள். அப்போது நீங்கள் உங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.

நேரம் நல்ல நேரம் – 15 – ஆதனூர் சோழன்

Leave A Reply