நேரம் நல்ல நேரம் – 16 – ஆதனூர் சோழன்

Share

தேவை மருந்தல்ல…. நண்பர்கள்!

சிலருக்கு அன்றாடம் ஏதேனும் ஒரு பிரச்சனை உருவாகும்.

வேறு சிலர் பிரச்சனையே இல்லாதவற்றைக் கூட பிரச்சனையாக்கி மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள்.

எப்பப் பாருங்க, இவர்கள் யாரைப் பார்த்தாலும் சரி தங்கள் மன உளைச்சல் குறித்தே பேசுவார்கள்.

ஒரு முறையோ, இரு முறையோ இவர்களுக்கு ஆறுதல் கூற முடியும். ஆனால், ஒரு அளவுக்கு மேல் போகும்போது, குடும்பத்தினரும் சரி, நண்பர்களும் சரி, ஏன்… பொது மருத்துவர்களும் கூட.

‘அய்யா, சாமி, ஒங்க பஞ்சாயத்த ஒங்ககூடவே வச்சுக்கய்யா’ என்று கையெடுத்து பெரிய கும்பிடாக போட்டுவிட்டு தெறிச்சு ஓடுவார்கள்.

இப்படி ஓடினால் பாவம் அவர்களது பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி?

மன உளைச்சலால் பாதிக்கப்படுபவர்கள் பெருபாலோர் தங்களை குடும்பத்தாரும், நண்பர்களும் ஓரங்கட்டுவதாக கூறியுள்ளனர்.

இவர்கள் எந்தெந்த வகையில் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 70 சதவீதம் பேர் தங்கள் சொந்த மனவேதனைகள் அல்லது தங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களின் மனவேதனைகளால் ஓரக்கப்பட்ட அனுபவங்களை தெரிவித்தனர்.

44 சதவீதம் பேர் தங்கள் டாக்டரே, தங்களை ஓரங்கட்டுவதாக கூறியுள்ளனர். அடிக்கடி தொந்தரவு செய்து அவர் ஓரங்கட்டினால்கூட பரவாயில்லையாம். முதல்முறையாக தங்கள் மன உளைச்சலை தெரிவிக்கும் போதே டாக்டர்கள் தங்களை ஓரங்கட்டுவதாக அவர்கள் கூறியுள்ளது தான் சங்கடமளிக்கிற விஷயமாகும்.

இவர்களில் ஐந்தில் ஒருவர் தங்கள் டாக்டரிடம் தங்களுடைய மனவேதனைகளை தெரிவிக்கக்கூட விரும்பவில்லை என்கின்றனர்.

சில டாக்டர்கள் உடல்நலப் பிரச்சனைகளே மனவேதனைகளால்தான் ஏற்படுகின்றன என கூறுகிறார்கள்.

மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட பலர் உதவி செய்யாத மேற்கொண்டு சேதப்படுத்துகிற அறிவுரைகளை பெற நேருகிறது.

வேறு பலரோ, தாங்கள் நடிப்பதாக பிறர் நினைப்பதாகவும் முட்டாள் அல்லது நம்ப முடியாதவர் என கருதுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வேலைக்காக விண்ணப்பம் அளிக்கும்போது ஓரங்கட்டப்படுவோமோ என்கிற அச்சத்தில், தங்களுடைய மன நல பிரச்சனைகளை குறிப்பிடுவதில்லை என மூன்றில் ஒரு பங்கினர் தெரிவித்தனர்.

மன நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படுகிற மாறாத வடுவையும், அவர்கள் ஓரங்கப்பட்டப்படுவதையும் இந்த ஆய்வு அறிக்கை வெளிக் கொண்டு வந்துள்ளது.

இதில் டாக்டர்களுக்கு இருக்கிற பங்கு குறித்துதான் கேள்விகளே எழுகின்றன.

ஒரு மனநோயாளி சரியான சிகிச்சையையும், சேவையையும் பெறுவதை உறுதி செய்ய வேண்டிய டாக்டரே அவர்களை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டால் அவர்களுக்கு வேறு யார் ஆதரவளிக்க முடியும்?

இது இப்படியே இருக்கட்டும்.

மனநோயாளிகள் என்ன சொல்கிறார்கள்?
எங்களுக்கு டாக்டர்கள் எழுதி தருகிற மருந்துகள் வேண்டாம். பிறருடன் நல்ல உறவு இருந்தாலே போதும். எங்களுடன் நட்போடு பழகினாலே போதும்.

எங்கள் பிரச்சனைகளை பொறுமையாக கேட்கக் கூடிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வேண்டும். அத்துடன் மன நல நிபுணர்களிடம் எங்கள் பிரச்சனைகளை பேச விரும்புகிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

நாங்கள் என்ன விரும்புகிறோம் என்பது பற்றிக் கூட கேட்க தயாராக இல்லை. எந்தவொரு பிரச்சனையிலும் நான் என்ன நினைக்கிறேன் என்று கூட கேட்பதில்லை. அப்படியானால் எதைப்பற்றியும் நான் எனது உணர்வுகளை எப்படி வெளிப்படுத்த முடியும்.

எல்லாம் மன நல நிபுணரின் அறைக்குள்ளேயே நடக்கும். அவர் சொல்வதை நாங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் என்கிறார் மனநோயாளி ஒருவர்.

நேரம் நல்ல நேரம் – 17 – ஆதனூர் சோழன்

Leave A Reply