நேரம் நல்ல நேரம் – 17 – ஆதனூர் சோழன்

Share

நோய் தீர்க்கும் உண்ணாவிரதம்

‘எந்த ஒரு முட்டாளும் உண்ணாவிரதம் இருக்கலாம். ஆனால் புத்திசாலிதான் அந்த விரதத்தை முறையாக முறித்துக் கொள்வான்.’

இது பெர்னாட்ஷாவின் பொன் மொழிகளுள் ஒன்று.

நமது நாட்டில் மதரீதியான காரணங்களுக்காக உண்ணாவிரதம் இருப்பது வழக்கம்.

‘இன்னிக்கு நான் கிருத்திகை விரதம்.’
‘இன்னிக்கு நான் சனிக்கிழமை விரதம்’.
‘இன்னிக்கு நான் திங்கட்கிழமை விரதம்’.
‘ரம்ஜான் மாசமாச்சா. நான் நோன்பு.’

இப்படியெல்லாம் நம்மில் பலர் கூறக் கேட்டிருப்போம்.

ஆனால், உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் பலன்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக தொடரும் நோய்களை விரைவாக குணப்படுத்துவதற்கு, உண்ணாவிரதம் பல்வேறு சூழல்களில் நன்கு உதவுகிறது.

அத்துடன் மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும், ஆத்மரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் நம்மை சமநிலைப்படுத்த உண்ணாவிரதம் உதவுகிறது.

ரொம்ப கதை அளக்கிற மாதிரி தெரிகிறதா? அப்படியானால், உண்ணாவிரதத்தின் பின்னால் உள்ளதர்க்க நியாயங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய மோசமான உணவுப் பழக்க முறைகளே, பல்வேறு நோய்களுக்கு மூலகாரணம். அத்துடன் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறிய பல்வேறு உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் கேடுகளும் நோய்களுக்கு காரணமாக அமைகின்றன.

நமது உடலில் உயிரியல் மாறுபாடு உண்டு பண்ணுகிற செயலமைவு முறைகள் உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் சீராகிறது.

உணவு ஊட்டம் மற்றும் இதர கழிவுகளையும், விஷத் தன்மையை அதிகரிக்கும் மன அழுத்தம், துயரம் மற்றும் கோப உணர்வுகளை உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் ஒழித்து விட முடியும். உணவை செரிப்பதற்கு மட்டும நமது உடல் சக்தியால் 30 சதவீதம் செலவாகிறது.

எனவே, செரிப்பதற்கு உதவும் அமைப்புக்கு சில குறிப்பிட்ட காலம் ஓய்வு அளிப்பது நல்லது. இதன் மூலம் நமது உடலில் உள்ள நச்சுத்தன்மை அகற்றப்பட்டு, நோய்களில் இருந்து விரைவில் குணமடைய முடியும்.

உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுவதுடன், சின்ன சின்ன ஆரோக்கிய பிரச்சனைகளையும் துவக்க நிலையிலேயே நசுக்கிவிடுகிறது.

உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் நமது உடல் எடையை ஒரே சீராக வைத்திருக்க முடியும்.

அத்துடன், உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட பிறகு கூடுதல் ஊட்டத்தை உள்வாங்கிக் கொள்ள நமது உடலும் தயாராகிறது.

எந்த ஒரு சமயத்திலும், நமது உடல் அணுக்களில் கால்பங்கு வளர்ச்சி அடைகின்றன. பாதி அணுக்கள் அவற்றின் செயல்சக்தியின் உச்சத்தில் இருக்கின்றன. மீதமுள்ள கால்பங்கு அணுக்கள் மடிகின்றன. பின்னர் புதிய அணுக்கள் அந்த இடத்தை நிரப்புகின்றன.

இவ்வாறு மடிகிற அணுக்களை விரைவாகவும், திறமையாகவும் காலி செய்ய முடிந்தால், புதிய அணுக்களின் வளர்ச்சி தூண்டப்படும்.

உண்ணாவிரதம் நமது உடலில் மடிகிற அணுக்களை விரைவாக வெளியேற்றி, புதிய ஆரோக்கியமான அணுக்களை உருவாக்குவதில் சிறப்பான பங்கு வகிக்கிறது.

நமது ரத்தத்தில் உள்ள புரதம் நிலையானது. ஏனெனில் அவை மாற்று உபயோகத்திற்காக சிதைவதும் மீண்டும் இணைவதும் இருக்கும்.

நமது உடலில் மடிந்த அணுக்களில் உள்ள அமினோ அமிலங்கள், புதிய அணுக்களை சேர்த்து இணைப்பதில் மீண்டும் உதவிகரமாக உள்ளன.

உண்ணாவிரதத்தின் போது, நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகளின் திறன் வெகுவாக அதிகரிக்கின்றன.

உண்ணாவிரதத்தின் போது நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சிறுநீர் வழியே அதிக அளவில் வெளியேறுகின்றன. கல்லீரல் வழக்கத்தை விடவும் வேகமாக கழிவுகளை வெளியேற்றுகிறது.

உண்ணாவிரதம் நமது உடல் எடையை குறைப்பதற்கு வேகமான வழி அல்ல. உண்ணாவிரதத்தின் போது நமது உயிர்ப் பொருள் மாறுபாட்டு விகிதம் குறைகிறது.

துவக்க நாட்களில் நமது உடல் எடை வெகுவாக குறைகிறது. இதற்கு காரணம் நமது உடலில் சேமிக்கப்பட்டுள்ள குளுகோனை, சக்திக்காக கல்லீரல் குளுகோஸாக மாற்றுகிறது. ஆனால், வழக்கம் போல நாம் உணவு உட்கொள்ள துவங்கியவுடன் குறைந்த எடையை மீண்டும் பெற முடியும்.

எனவே, ஒல்லியானவர்களும் எவ்வித அச்சமும் இல்லாமல் உண்ணாவிரதம் இருக்கலாம். அதே சமயம் குண்டானவர்களுக்கு உண்ணாவிரதம் இருப்பது நல்லதென சொல்ல முடியாது.

ஆனாலும், அவர்களுக்கும் சில பலன்கள் உள்ளன. அவர்கள் தங்கள் எடையை குறைக்க விரும்பினால், அவர்கள் கவனமாக உணவு சேர்க்கையுடன் தொடர்ச்சியான உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்.

இதுபோன்ற உணவுக் கட்டுப்பாட்டுக்கு உண்ணாவிரதம் அருமையான வழியாகும். ஏனெனில் அதிகமாக சாப்பிடக் கூடாது என்ற தன்னம்பிக்கையை அது வளர்க்கிறது.

வழக்கமாக, உண்ணாவிரதம் இருப்பவர்கள் வெறும் தண்ணீரை மட்டும் குடிப்பது வழக்கம். முன்னே பின்னே உண்ணாவிரதம் இருந்து பழக்கமில்லாதவர்களுக்கு இது சரியான வழிமுறையல்ல. அவர்கள் பழங்களை மட்டுமோ. காய்கறிகளை மட்டுமோ அல்லது வெறும் பழச்சாறை மட்டுமோ சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

பழங்களுடன் விரதம்
பழங்களை சாப்பிடுவது எப்படி விரதமாகும் என சிலர் வாதிடக் கூடும். வெறும் திரவத்தை மட்டும் குடிக்கும்போது. செரிமான அமைப்புக்கு கிடைக்கிற ஓய்வைக் காட்டிலும், பழங்கள் சாப்பிடுகிறபோது என்ன ஓய்வு கிடைத்துவிடப் போகிறது என்பது அவர்களது கேள்வி.

ஆனாலும் கூட முதன்முறையாக விரதம் மேற்கொள்பவர்களுக்கு பழங்கள் நல்லது. ஏனெனில் முதன்முறையாக விரதம் இருப்பவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படும். உணவு மீது ஏக்கம் வரும்.

அத்துடன், நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இந்த விரதம் நல்ல பலனளிக்க கூடியதாகும்.

செரிமான அமைப்புக்குள் பழத்துணுக்குகள் வேகமாக செல்லும் போது, மிகக் குறைந்த செயல்பாடே தேவைப்படும் செரிமானத்திற்கு உதவும் என்ஸைம்கள் அவற்றை எளிதில் கூழாக்கிவிடும்.

பழங்களை ஒவ்வொரு துண்டாக நன்கு மென்று சாறை உறிஞ்சி, கொஞ்சம் கொஞ்சமாக விழுங்க வேண்டும். தோல், விதை ஆகியவற்றையும் கூட சேர்த்து விழுங்கி விட வேண்டும்.

பழங்கள் சாப்பிடும்போது தண்ணீர் உள்பட எவ்வித திரவத்தையும் குடித்துவிடக் கூடாது. அதே சமயம் அரை மணி நேரம் கழித்து எவ்வளவு விருப்பமோ அவ்வளவு தண்ணீரை குடிக்கலாம்.

காய்கறி விரதம்
காய்கறிகளை மட்டும் சாப்பிடுகிற விரதத்தை பெரும்பாலோர் விரும்புவதில்லை. ஏனெனில் தாங்கள் விரும்புகிற காய்கறிகளை நிறைய மென்று தின்ன எரிச்சலாக இருப்பதுதான் காரணம். காய்கறிகளை கடித்து தின்பது பல் ஈறுகளுக்கு நல்ல பயிற்சியாகும்.

விரும்பினால், கேரட், பீட்ரூட், காலிபிளவர் ஆகியவற்றை பச்சையாகத் தின்னலாம்.

காய்கறிகளைத் தின்பதற்கு முன்பு, அவற்றை தேவைப்பட்டால் வென்னீரில் நன்கு கழுவிவிட வேண்டும்.

பழச்சாறு விரதம்
பழச்சாறு மட்டும் குடித்து விரதம் இருப்பது குறிப்பாக பலனளிக்கக் கூடியது ஆகும். ஏனெனில் பழச்சாறை நிறைய குடிக்கும்போது. அதன் மூலம் கூடுதலான வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் என்ஸைம்கள் கிடைக்கும்.

விரதம் முடிப்பது எப்படி?
உண்ணாவிரதம் இருப்பது பெரிய விஷயமல்ல. விரதத்தை முடிக்கும் போதுதான் கவனம் தேவை. விரதம் முடிந்தவுடன், கடினமான உணவை உட்கொள்ளக்கூடாது. ஒரு ஆப்பிள் அல்லது ஏதேனும் பழத்தை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். அதுதான் புத்திசாலிக்கு அழகு.

எல்லாம் சரி, நொச்சு நொச்சுன்னு தின்றவங்களுக்கு உண்ணாவிரதம் உதவுகிற மாதிரி, சலசலன்னு பேசறவங்களுக்கு மவுன விரதம் எந்த அளவுக்கு உதவும் என யாரேனும் சொல்வார்களா?

நேரம் நல்ல நேரம் – 18 – ஆதனூர் சோழன்

Leave A Reply