நேரம் நல்ல நேரம் – 19 – ஆதனூர் சோழன்

Share

கடந்த கால தவறுகளை களைய முடியுமா?

நாம் செய்யும் தவறுகள் நமக்குள் வலியை உற்பத்திச் செய்யக் கூடும். கடந்த காலத்தில் நாம் செய்த தவறுகள் கூட அவ்வப்போது நம்மை வேதனையில் ஆழ்த்தக் கூடும்.

சரி, இதற்கு நாம் என்ன செய்ய முடியும்?

மனோவியலாளர்கள் கூற்றுப்படி நாம் செய்யக் கூடியதும் சில உள்ளன.

கடந்த காலத்தில் நாம் செய்த தவறுகளை அழித்துவிடவோ, மறையச் செய்யவோ முடியாது.

ஆனால், நடந்த தவறுகளை மீண்டும் நினைவில் கொண்டு வந்து, அந்த தவறை நீங்கள் விரும்பும் எந்தச் சமயத்திலும் மாற்றிக் கொள்ள முடியும் என மனநல நிபுணர்கள் கூறுகின்றனர்.

உங்களுக்கு வலி ஏற்படுத்தக் கூடிய தவறு நடந்த சம்பவத்தை, முதலில் நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

இதையடுத்து உங்களுக்குள் உடல் ரீதியாக ஏற்படக் கூடிய மாற்றங்களை மனரீதியாக படம் பிடியுங்கள்.

அப்போது உங்கள் மார்பில் ஒரு இறுக்கம் ஏற்படும். உங்கள் முஷ்டி இறுகும். உதடுகள் நடுங்கும். தொண்டையில் ஒரு விம்மல் ஏற்படும்.

இதைத்தொடர்ந்து, உங்களுக்குள் ஏற்படும் உணர்வை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள்.

அது உங்களை காயப்படுத்துவதாகவோ, அச்சப்படுத்துவதாகவோ, கோபப்படுத்துவதாகவோ இருக்கக் கூடும்.

அந்த உணர்வுக்கு ஏற்றபடி ‘வீச்’சென்று கத்திவிடுங்கள். அழுதுவிடுங்கள் அல்லது உடல் ரீதியாக உங்கள் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்த முடியுமோ அந்த வகையில் வெளிப்படுத்துங்கள்.

இவ்வாறு உங்கள் உணர்ச்சி வேகத்தை உள்ளுக்குள் இருந்து சடாரென வெளிப்படுத்திவிட்டால், அதன் பிறகு உங்களால் புத்தம் புதிதாக யோசிக்க முடியும்.

அல்லது நடந்து போன தவறால் உங்களுக்கேதும் பாதிப்பு ஏற்பட்டதா? என்பதை கண்டுணருங்கள்.

அந்தச் சம்பவத்தைக் கொண்டு மற்றவர்கள் உங்களைப் பற்றி பேசுவது போலவோ அல்லது நினைப்பது போலவோ நீங்கள் இல்லை என்பதை நம்புங்கள்.

எனினும் இவை எல்லாம் சரியாக நடந்தாலும் உங்களுக்குள் ஏற்பட்ட உணர்வுகள் மெதுவாகவே போய்த் தொலையும்.

ஆம். காலம்தான் இதில் முக்கிய பங்காற்றும்.

எனவே உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் முதுகில் நீங்களே தட்டிக் கொடுங்கள்.

உங்களுக்குள் துன்பம் விளைவிப்பவர் வெளியேறிச் செல்லும் நேரம் வந்தாயிற்று என கூறுங்கள். இப்போது உங்கள் மனதில் நீங்கள்தான் ராஜா.

நேரம் நல்ல நேரம் – 20 – ஆதனூர் சோழன்

Leave A Reply