நேரம் நல்ல நேரம் – 2 – ஆதனூர் சோழன்

Share

நேரம் நல்ல நேரம்

முதல்ல இந்தக் கதையை படிங்க.

ஒரு மாநாட்டு அரங்கம். குளுகுளு வசதியுடைய அந்த அரங்கத்தில், மெத்தப் படித்தவர்கள் போல காணப்பட்ட, பகட்டு உடை மனிதர்கள் குழுமியிருந்தனர்.

அரங்கத்தின் முன்புற சுவரோரம், சில நாய்க் குட்டிகள் நொடக்கி கிடந்தன.

அவற்றில் ஒரு நாய்க்குட்டி திடீரென தலையை உசுப்பிக் கொண்டு, ‘உள்ளே என்ன நடக்குது’ என்று கேட்டது.

“நேரத்தை எப்படி செலவிடுறதுன்னு ஆலோசனை நடந்துக்கிட்டிருக்கு”என்று மற்றொரு நாய் பதில் அளித்தது.

அப்போது பெரிய நாய் குறுக்கிட்டது.

‘காலத்தை எப்படி செலவிடறதுன்னு கூட அவங்களுக்கு தெரியலைன்னா என்னா பண்றது? இப்பிடித்தான் முக்கியத்துவம் இல்லாத விஷயங்களுக்கு எல்லாம் நேரத்தை வீணாக்குவாங்க’ என்றது பெரிய நாய்.

‘அப்படின்னா?’

‘மணிக்கணக்கில் பேசுவாங்க. பக்கத்துல இருக்கறவரப்பத்தி, இன்னொருத்தர் கிட்ட பொரணி பேசுவாங்க’

‘இப்படிப் பேசி இதுவரைக்கும் என்ன கண்டாங்க?’

‘வருஷக்கணக்கில் இதுபத்தி பேசிக்கிட்டருக்காங்க. இன்னும் எத்தன தலைமுறைக்கு பேசிக்கிட்டிருக்க போறாங்களோ?’

‘மனுஷங்க ஏன் இப்படி நீண்டகாலத்துக்கு போராடனும்?’

“என்ன பண்றது. அவங்களுக்கு நம்மள மாதிரி விவேகம் போதாது’ என்று ஏளனமாக சிரித்து சொன்னது ஒரு நாய்க்குட்டி, இந்தச் சமயத்துல பெண் நாய் ஒன்று குறுக்கிட்டது.

‘ஒங்களுக்கு தெரியுமா, உடை உடுத்தறதுக்கும், தங்களை அழகுபடுத்திக்கிறதுக்கும் எவ்வளவு நேரம் செலவு பண்றாங்கன்னு? கண்ணாடிக்கு முன்னால நின்னுக்கிட்டு முடியக் கோதி விடுவதும், அழகு கிரீம்களை முகத்தில் தடவி மேக்கப் பண்றதும் அப்பப்பா… எவ்வளவு நேரத்த வேஸ்ட் பண்றாங்க தெரியுமா?’

அலுத்துக் கொண்டது அந்த பெண் நாய்.

“இதெல்லாம் கூட ரொம்ப சாதாரணமான விஷயம். ஊர் சுத்தறது, குடிப்பது, கூத்தடிப்பது, போதை மருந்துகளுக்கு அடிமையாகி முடங்கிக் கிடப்பது, அப்பப்பா இன்னமும் எத்தனையோ மோசமான பழக்கங்களுக்கு அவங்க ஆளாகிக் கிடக்காங்க’ என்று மேலும் அது வருத்தப்பட்டது.

‘அவங்களோட நேரத்த இன்னும் கொஞ்சம் நல்ல வழியில் செலவு பண்ண முடியாதா?’ என்று இன்னொரு வயதான நாய் கேட்டது.

‘இவங்கதான் ரொம்ப உயர்ந்த மூளை உள்ளவங்கன்னு பீத்திக்கிறாங்க?’ அலட்சியமாக சொன்னது அடுத்த நாய்,

‘படைப்புலக பிரம்மாக்கள்னு சொல்லிக்குவாங்க. தங்களுக்கு எது நல்லது. எது கெட்டது என்பதைக் கூட இவங்களால முடிவு பண்ண முடியாதவங்களுக்கு பேர், பிரம்மாக்களா?’ என்று கடுகடுத்தது ஒரு நாய்.

‘அந்த வகையில் அவங்க மூளையக் காட்டிலும் நம்ம மூளை ரொம்ப உசத்திதான். நான் நாயாக பிறந்ததுக்கு சந்தோஷப்படுறேன்’ என்றது கடைசி நாய்.

“சரியா சொன்ன. நாங்க அதை ஆமோதிக்கிறோம்” என்றன மற்ற நாய்கள்.

அத்தோடு அவை ஆளுக்கு ஒரு திசையில் கலைந்து சென்றன.

நெஸ்கபே விளம்பரத்தில், சாதனையாளர் வரிசையில் சிவசங்கரியை காட்டினார்கள். அவர் தன்னை கவர்ந்ததாக ஒரு குட்டிக் கதை சொன்னார்.

ஒரு மனிதன் வாழ்கிற நாளில் பயனுள்ள காரியம் ஏதேனும் செய்திருக்கிறானா என்பது தான் முக்கியம் என்பதை விளக்குகிற அந்தக் கதை, வாழ்க்கையின் அர்த்தத்தை எளிமையாக புரிய வைக்கும்.

நம் எல்லோருக்கும் சமமாகவே ஒரு நாள் பொழுதை, இயற்கை கொடுத்திருக்கிறது.

விலங்குகளுக்கும் அதுபோலத்தான். ஆனால் தங்கள் அடிப்படைத் தேவைகள் பூர்த்ததியடைந்தால் தவிர அவை திருப்தி அடைவதில்லை. நேரத்தையும் அவை வீணாக்குவதில்லை.

மனிதன் மட்டுமே நேரத்தை பலனுள்ள வகையில் பிரித்து உபயோகிக்கும் அறிவைப் பெற்றுள்ளான். ஆனால், நம்மில் பெரும்பாலோர் நேரத்தை சரியாகப் பயன்படுத்துவதில்லை.

நள்ளிரவு 12 மணிக்கு நம்மிடம் ஒருவர் வந்து, 86 ஆயிரத்து 400 ரூபாய் கொடுக்கிறார்.

“அடுத்த நாள் நள்ளிரவுக்குள் அந்தப் பணம் முழுவதையும் செலவு செய்து விட வேண்டும். அப்படி செலவு செய்ய முடியாத பணம் இருந்தால் திரும்ப எடுத்துக் கொள்வேன்” என்று சொல்கிறார்.

நாம் என்ன செய்வோம்? நமக்கு கிடைத்த பணத்தை ஒரு ரூபாய் கூட மிச்சமில்லாமல் செலவு செய்ய வழிகளை காண்போமா இல்லையா?

இயற்கை நமக்கு ஒரு நாளைக்கு 86 ஆயிரத்து 400 வினாடிகளை அளித்திருக்கிறது. ஒரு வினாடியை நாம் உபயோகப்படுத்தாவிட்டாலும் அதுபோனது, போனதுதான்.

நமக்கு கிடைத்த ஒவ்வொரு வினாடியையும் உபயோகமாக செலவு செய்ய திட்டமிடுகிறோமா?

நாம் செய்வதில்லை,

நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கைக்கும், அதன் தேவையையும், முக்கியத்துவத்தையும் பொறுத்து நேரத்தை பிரித்துக் கொள்வது நல்ல வழியாகும்,

ஒரு நாளில் நம்முடைய நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்?

– தூக்கம், ஓய்வு
– வழக்கமான நடவடிக்கைகள்
– நமக்குத் தரப்பட்ட பணிகள். அவசர வேலைகள்
– நமக்கென தனித்துவம் அளிக்கக் கூடிய நடவடிக்கைகள்
– சமூக உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள்
– திட்டமிடுதல். கனவு காணுதல்

ஒரு நாள் பொழுதை எப்படி செலவிடுவது என்று, அந்த நாளை துவங்கும்போது திட்டமிடுவது நல்லது. அது அவசியமும் கூட.

படுக்கைக்குப் போகும் போது அந்த நாளில் நமக்கு சந்தோஷமளிக்கிற வகையில் என்ன காரியங்களை செய்திருக்கிறோம் என்பதை கணக்கிடுவது நல்லது.

தூக்கமும், ஓய்வும் ஒரு நாள் பொழுதின் அத்தியாவசியமான விஷயமாகும். இதில் குறைவேதும் வைத்தால் மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படும்.

அதே சமயம் தூக்கத்தில் அதிகம் விருப்பம் கொண்டு, நீண்ட நேரம் படுக்கையில் கிடக்கின்றனர். வேலைக்கு செல்கிறவர்களுக்கு இந்த சவுகரியம் கிடைக்காது. ஆனால், அவர்களும் கூட விடுமுறை தினங்களில் அதிக நேரம் தூங்க விரும்புகிறார்கள்.

அறிவியல் என்ன சொல்கிறது?
ஒரு மனிதனுக்கு 5 மணி நேர தூக்கம் அவசிமானது. 6 முதல் 7 மணி நேரத் தூக்கம் என்பது சவுகரியமானது. அதற்கும் அதிகமாக தூங்குவது சோம்பேறித்தனத்தை உருவாக்கும்.

ஆக, தூங்கும் நேரத்தை கட்டுப்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வேறு வேலைகளுக்கு செலவிட போதுமான நேரமும் கிடைக்கும்.

பகல் நேரத் தூக்கம் என்பது ஒருவரை இளமைப்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் அந்த தூக்கம் அரைமணி நேரத்திற்கு மேல் நீடிக்கக் கூடாது.

போதுமான ஆரோக்கியத்துடன் இருக்கும் நபர்களுக்கு, கூடுதல் தூக்கம் எந்தவிதத்திலும் உடல்ரீதியாக உதவி செய்யாது, மாறாக அவர்களது நேரம்தான் வீணாகும்.

ஒரு காரியமும் செய்யாமல் படுக்கையில் விழுந்து கிடப்பதுதான் ஓய்வு அல்லது ஆசுவாசப்படுத்துதல் என பலர் நினைப்பதுண்டு.

ஆனால், அது, நேரத்தை ஓய்ந்திருந்து கழிப்பதாகும்.

மனோவியல்படி பார்த்தால் மனரீதியான, உடல்ரீதியான ஓய்வு என்பது, நம்முடைய முந்தைய வேலையிலிருந்து அடுத்த வேலைக்கு கவனத்தை திருப்புவது ஆகும்.

உடல் உழைப்பில் இருப்பவர்களுக்கு சோர்வு ஏற்படும். அடுத்து நீங்கள் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் துவங்கலாம். பின்னல் வேலையிலோ, தையல் வேலையிலோ ஈடுபடலாம். இவை கூட அருமையான ஓய்வுதான்.

மனம்சோர்வு நீங்கி ஆசுவாசமாகும்.

வழக்கமான அன்றாட நடவடிக்கைகள் என்றால் என்ன?
காலைக்கடன்கள், வீட்டுக்கு தேவையானவற்றை வாங்கித் தருவது, இந்த வேலைகள் எவ்வளவு சீக்கிரமாக முடிகிறதோ அந்த அளவுக்கு ஒருநாள் பொழுதில் நமக்கு வேறு வேலைகளுக்கான கூடுதல் நேரம் கிடைக்கும்,

அப்புறம் பார்த்தீங்கன்னா, நம்மை அழகுபடுத்திக் கொள்வதில் பெரும்பாலான நேரத்தை செலவிடுவோம். அழகாக தோன்றுவதும் நமக்கு சில சாதகமான பலன்களை தரும் என்பது உண்மைதான்.

ஆனால், அளவுக்கு அதிகமாக அதில் அக்கறை செலுத்துவதால் நமது நேரம்தான் வீணாகும்.

வெறுமனே மேக்கப் மட்டும், நம்மைப் பற்றிய கூடுதல் மதிப்பை ஒருவரிடம் ஏற்படுத்திவிடாது. மொத்த குணாம்சமும்தான் நம்மைப் பற்றி மற்றவர் கூடுதலாக மதிப்பிட காரணமாகும் என்பதை உணர வேண்டும்.

வீட்டு வேலைகளைப் பொறுத்தமட்டில் நிறைய பெண்கள் மதியத்திற்குப் பிறகும் கூட நீட்டி இழுத்துக் கொண்டிருப்பார்கள்.

முடிந்த அளவுக்கு ஒழுங்குப் படுத்தி பத்தரை மணிக்குள் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டால், அன்றைய பொழுதில் உபயோகமாக கழிக்க, ஏராளமான நேரம் கிடைக்கும்.

இதற்கு என்ன செய்யலாம்?
இன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகள் இன்னன்னது என முன்கூட்டியே முடிவு செய்து கொள்ள வேண்டும்.

கூடுதல் நேரம் இழுக்குமளவுக்கான வேலைகளை, ரொம்பவும் அரிதாகத்தான் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.வேலைகளை தேங்கப்போடுவதும் நேரத்தை வீணாக்கும்.

இந்தப் பொருள் இந்த இடத்தில்தான் இருக்க வேண்டும் என்கிற ஒழுங்கை கடைப்பிடிப்பதும் கூட நல்லது.

படிப்பது என்பது மனதுக்கு ஊக்கமளிக்கும் மருந்து. தகவல்களை தெரிந்து கொள்வதற்கு மட்டுமல்ல, சிந்தனையை தூண்டவும் உதவும், படித்தவர்கள் ஒவ்வொருவரும் புத்தகங்கள் படிப்பதை அவசியமாகக் கொள்ள வேண்டும்.

ஆனால், படிக்கிறதுக்கே நேரம் கிடைப்பதில்லை என நம்மில் பெரும்பாலோர் சமாதானம் சொல்லிக் கொள்வதை பார்க்கிறோம்.

ஊர் பொரணி பேசவும், முன்னால் போகவிட்டு பின்னால் பேசவும், குறை கண்டுபிடித்து அலசவும் நேரம் கிடைக்கும்போது படிக்க மட்டும் நேரம் கிடைக்காமல் போய்விடுமா?

நாம் நினைத்தால் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் படிக்க முடியும்.

ஒருவருக்காக காத்திருக்கும்போதோ, பயணத்தின்போதோ, வேலையின் இடைவேளையிலோ எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் இந்த மாதிரியான வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்வதில்லை.

ரெண்டு பேரோ அதற்கு மேலோ குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து படித்தவற்றை விவாதிப்பது நமது புத்தி கூர்மையை அதிகரிக்க உதவும்.

நமக்குள்ளே இருக்கும் திறமைகளை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். கலை நயமிக்க திறமைகளை நமக்குள் புதைந்து போகும்படி செய்துவிடக்கூடாது. படைப்பாற்றல் திறனை பாதுகாக்க வேண்டும்.

இன்னொரு விஷயம், நாம் வாழுகிற சமுதாயத்தில் பிறருக்காகவும் நாம் நேரம் செலவிட வேண்டும். யாருக்கேனும உதவி தேவைப்பட்டால் நம்மில் முடிந்த உதவியை செய்ய வேண்டும்.

பிறர் கண்ணீரை துடைக்கவும் மற்றவர் சந்தோஷத்தில் பங்கேற்கவும் வாய்ப்பு கிடைத்தால் அதை தட்டிக் கழித்து விடக்கூடாது.

இது மற்றவர்களுக்கும் நமக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தி பாலம் அமைக்க உதவும்.

மிக முக்கியமாக கனவு காண வேண்டும். உலகின் ஒவ்வொரு முன்னேற்றமும், கண்டுபிடிப்பும் கனவு கண்டதாலேயே நிகழ்ந்தது.

வெற்றிப்படிக் கட்டில் ஏறி சாதனைகள் நிகழ்த்த கனவு காண்பது அவசியம்.

கனவு காண்பதற்கு இடமோ, நேரமோ ஒதுக்க வேண்டியதில்லை.

வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போதோ, தூங்கும்போதோ, நடக்கும்போதோ எப்போது வேண்டுமானாலும் கனவு காணலாம்.

அதாவது எந்த நேரமும் கனவு காண உகந்த நேரம்தான்.

வாழ்க்கையே கனவின் அஸ்திவாரத்தில்தான் கட்டப்படுகிறது.

நாம்பிறக்கும் போதிருந்து நாட்கள் கழியத் துவங்குகின்றன.

எவ்வளவு நாட்கள் எஞ்சியிருக்கின்றன என்பது நமக்கு தெரியாது.

இதுவரை வீணாய் கழிந்த நாட்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

எஞ்சியுள்ள நாட்களிலாவது தவறுகளை தவிர்ப்போம். பயனுள்ள காரியங்களை செய்வோம்.

அவரும் வாழ்ந்தார் என்று நம்மை சுற்றியுள்ளவர்கள் சாதாரணமாக கூறுமளவுக்கு நமது வாழ்க்கை அமையக் கூடாது.

அவர் வாழ்ந்தார், அதனால் நாம் சிலவற்றை பெற்றோம் என, நம்மைப் பற்றி பிறர் பேசுமளவுக்கு வாழ்வோம்.

நேரம் நல்ல நேரம் – 3 – ஆதனூர் சோழன்

Leave A Reply