நேரம் நல்ல நேரம் – 3 – ஆதனூர் சோழன்

Share

விடலைப்பருவம்

வீடு முழுக்க அமைதி, அமைதி!

ஒரு பிரளயம் ஓய்ந்த பிறகு உணருவோமே, அதுபோலவொரு அமைதி.

வீட்டுத் தலைவர் முகம் இறுகிப் போய் உட்கார்ந்திருந்தார்.

அழுது அழுது வீங்கிய முகத்துடன், கண்ணீர் கோடுகள் உப்புப் பொறிந்து, ஒடுங்கிப் போய் சுவரோரம் படுத்திருந்தாள் அம்மா!

கலைந்த தலையுடன், பாவம் அந்த சின்னப்பொண்ணு. பிரமை பிடித்தாற்போல குத்த வைத்திருந்தாள்.

பாசமான அம்மா அப்பாவுக்கு இப்படியொரு வேதனையை கொடுத்து விட்டோமே என்று அவள தேம்பிக் கொண்டிருந்தாள்.

ரேவதிக்கு 17 வயதுதான் ஆகிறது. அப்பாவும், அம்மாவும் வேலைக்கு போகிறவர்கள். மத்தியத்தர குடும்பம்தான்.

விடலைப் பருவ கோளாறு தவறு நடந்துவிட்டது.

பொதுவாக குழந்தைகளை இந்த வயதில் மிகவும் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும். வீட்டில் கிடைக்காத ஏதோ ஒன்று அவர்களுக்கு வெளியில் கிடைக்கும் போது, புத்தி தடுமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகின்றன.

“அடலஸன்ஸ்” எனப்படும் இந்த விடலைப் பருவம் ஆண்/பெண் இருபாலரும் பாலியல் ரீதியாக முதிர்ச்சியடையும் காலகட்டமாகும்,

இந்த பருவத்தில், பெண்ணுக்குள் பாலியல் ஹார்மோன்கள் எழுச்சியுற்று, குழந்தையை பெரிய மனுஷியாக்குகிறது.

உள் மற்றும் வெளி உறுப்புகளில் மாற்றம் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து, இனவிருத்திக்கான வாழ்க்கைக்கு அவர்கள் தயாராகின்றனர். எனவே மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர்களுக்குள் விரைவான மாற்றங்கள் உருவாகின்றன.

குழப்பம் மிகுந்த பல்வேறு உணர்ச்சி அலைகளின் அணிவகுப்பு அவர்களை செலுத்தத் துவங்குகின்றன.

அவர்களுக்குள் கொந்தளிப்பு நிகழ்கிறது.

அவர்கள் ஐயுற்று அஞ்சுகிறார்கள். அவர்கள் சிலிர்ப்படைகிறார்கள். அவர்கள் திகிலடைகிறார்கள்.

அதே சமயம் அவற்றை தாராளப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் அவர்கள் பழகுகிறார்கள். தங்கள் மீதே நிச்சயமற்ற தன்மையுடன் அவர்கள் இரண்டடி முன்வைத்து, ஒரு அடி பின்னால் வருகின்றனர்.

தங்களுக்குள் ஏற்பட்டுள்ள புதிய பாலியல் மாறுதல் குறித்து அவர்கள் விழிப்புற்று உள்ளனர். சில சமயங்களில் அதை வரவேற்கின்றனர். பல சமயங்களில் அது அவர்களுக்கு கோபத்தை வரவழைக்கிறது.

பெண் தனது உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து கர்வம் கொள்கிறாள். ஆனால் எப்பொழுதேனும் தனக்குள் எழுச்சியுறும் ஹார்மோன்களால் ஏற்படும் பேரழிவுக்கு இரையாகிவிடுகிறாள்.

விடலைப் பருவம் குறித்த புரியாத புதிர் ஒன்று உள்ளது.

பெரும்பாலானவர்களுக்குள் பாலியல் முதிர்ச்சி என்பது மனமுதிர்ச்சியைக் காட்டிலும் விஞ்சியிருக்கிறது.

அதன் விளைவாக அவர்கள் மிகவும் குழம்புகின்றனர். பழக்கவழக்கங்களில் தவறு செய்கின்றனர்.

அவர்கள் முரட்டுத்தனமாகவும் எதிர்த்து செயல்படுபவர்களாகவும் உருவாகின்றனர்.

அவர்கள் தங்கள் தோற்றம் குறித்து அதிக அக்கறை செலுத்துகின்றனர்.

இருபாலருமே ஒருவரை ஒருவர் கவர வேண்டும் எனக் கருதி செயல்படுகின்றனர். அவர்கள் தங்கள் சுதந்திரத்தை வலியுறுத்தி, பெற்றோரின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக சினங்கொள்கின்றனர்.

அவர்களுக்கு தங்கள் நண்பர்கள் செய்வதுதான் சரி எனத் தோன்றும். மூத்தவர்கள் சொல்வதை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை.

போதை மருந்துகளுக்கும். பாலியல் தவறுகளுக்கும் இலக்காகி வாழ்க்கையில் ஆறாத தழும்பை சுமக்கக் கூடிய காலகட்டமாகும் இது.

எல்லாவற்றையும் மீறி இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில் தங்களது வாழ்க்கைப் போக்கை தீர்மானிக்க வேண்டிய பருவம் இது.

கல்வி, சமூக பிரிவுகள் இனப் பிரிவுகளுக்கான கட்டளைச் சட்டங்கள், குடும்பப் பின்னணி ஆகியவை இந்தப் பருவத்தினரின் பாலியல் பழக்கவழக்கங்கள் மீது செல்வாக்கு செலுத்துகின்றன.

தவிர. கலாச்சாரம், சினிமா, டிவி மற்றும் பாரம்பரிய நடைமுறைகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பாலியல் கல்வி அளிப்பது அல்லது அதுபோதுமான அளவு இல்லாததும் குறிப்பிடத்தக்க விளைவுகளை உண்டு பண்ணுகின்றன.

இந்திய கிராமங்களைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள், குறைந்த வயதில் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். எனவே அவர்கள் விடலைப் பருவம் முடிவதற்குள்ளாகவே குடும்ப உறவுகளில் ஈடுபட வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. தெருவோர மற்றும் குடிசைப் பகுதி பெண் குழந்தைகள உயிர் வாழ்வதற்காக பாலியல் தொழிலாளர்களாக மாறுகின்றனர்.

விடலைப் பருவத்தினர் தங்களது பாலியல் உணர்வுகளை எப்படி சமாளிக்கலாம்?

இதற்கு மூன்று வழிகளை குறிப்பாக சொல்லலாம்.

இளவயது திருமணம்.

திருமணத்திற்கு முன் பாலியல் உறவு அல்லது அந்த உணர்வை அடக்கி ஆளுதல்.

பூப்பெய்தியவுடன் திருமணம் என்பது இந்தியாவில் சமூக பழக்கமாகிவிட்டது. ராஜஸ்தான், பீகார், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 17 வயதில் திருமணம் என்பது நடைமுறையாகிவிட்டது.

இத்தகைய திருமணங்கள் சமுதாய தடைகளின் வரம்புக்குட்பட்டு விடலைப் பருவ பாலியல் உணர்வுகளை தணித்துக் கொள்ள உதவுகின்றன. திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவுகளை தடுக்கின்றன. திருமணமாகாமலே தாயாகும் கொடுமையை தவிர்க்கின்றன. சட்டவிரோத கருக்கலைப்பு. விபச்சாரத்திற்கு தள்ளப்படுதல், பால்வினை நோய்களின் தாக்குதல் இவற்றுக்கு அவசியமில்லாமல் செய்கின்றன என்று காரணங்கள் பல கூறப்படுகின்றன.

ஆனால், இத்தகைய திருமணங்களுக்கு எதிராக நிறைய சொல்ல முடியும். குறிப்பாக. ஒன்றை சொல்ல வேண்டுமானால் பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தை இந்தத் திருமணங்கள் கட்டுப்படுத்துகின்றன. அவர்களை குழந்தை பெறும் எந்திரமாகவும், குழந்தைகளை பாதுகாக்கிற தாதிகளாகவும் மட்டுமே உருவாக்கி விடுகின்றன.

இரண்டாவதாக, பிள்ளைப் பெறுவதற்கு உகந்த வயது வராமல் குழந்தை பெற்றுக் கொள்ளுவதால் தாய் மற்றும் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. சினிமா, டிவி ஆகியவற்றின் பாதிப்பாலும், மேற்கத்திய கலாச்சாரத்தின் மீதுள்ள கவர்ச்சியாலும், பாலியல் வக்கிரங்களைக் கொண்ட புத்தகங்களை படிப்பதாலும், திருமணத்திற்கு முன் பாலியல் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு உருவாகிறது என கூறுகின்றனர்.

ஆனால், தற்கால விடலைப் பருவத்தினர் கூடுதல் தெளிவு பெற்றவர்கள் என்பதால் இந்தக் கூற்று முழுக்க முழுக்க உண்மை இல்லை.

இன்றைய இளம் பெண்கள் அணியும் உடைகளை காட்டிலும் புராதன பெண்கள் கூடுதல் கவர்ச்சி மிகுந்த உடைகளை அணிந்திருக்கின்றனர்.

“உடல்சார்ந்த அனைத்து விருப்பங்களிலும், விடலை பருவத்தினர் பாலியல் விருப்பத்திற்குத்தான் மிக அதிகமாக ஆட்படுகின்றனர். பாலியல் விருப்பத்தை பொறுத்தமட்டில் அவர்கள் கட்டுப்பாடு எதையும் தங்களுக்கு விதித்துக் கொள்வதில்லை” என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அரிஸ்டாட்டில் கூறியிருக்கிறார்.

எனவே விடலைப் பருவத்தினரிடம் ஆரோக்கியமான இனவிருத்தி குறித்த கோட்பாடுகளை பதியச் செய்ய வேண்டியது சமுதாயத்தின் பொறுப்பாகும். பாலியல் கல்வி போதுமான அளவு இல்லாததால் மனத்தடுமாற்றங்களுக்கும், விடலைப் பருவத்தினர் திருமணத்திற்கு முன்பே பாலியல் உறவு கொள்வதற்கும் காரணமாக அமைகின்றன.

உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கு 15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட ஒரு கோடியே 50 லட்சம் பெண்கள் திருமணமாகி குழந்தை பெறுகின்றனர். 40 லட்சம் பெண்கள் ஆண்டுதோறும் கருக்கலைப்பு செய்து கொள்கின்றனர்.

10 கோடி பெண்கள் பால்வினை நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். புதிதாக எய்ட்ஸ் நோய்க்கு காரணமான கிருமியால் தாக்கப்படுபவர்களில் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் மட்டும் 40 சதவீதம் ஆகும்.

தாய்லாந்து நாட்டிலுள்ள பாலியல் தொழிலாளர்களில் 8 லட்சம் பேர் 20 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள். இவர்களில் 25 சதவீதம் பேர் அதாவது 2 லட்சம் பேர் 14 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்.

இங்குள்ள வயதான பால்வினை நோயாளிகள், கன்னி கழியாத சின்னப் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டால் தங்கள் நோய் சரியாகிவிடும் என நம்புகிறார்களாம்.

உரிய வயதுக்கு முன்பே பூப்பெய்வது, நகர்ப்புற சமுதாய அமைப்பில் நிலவும் தாமதமான திருமண ஏற்பாடு முறைகள் திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவுகளுக்கு காரணங்களாக அமைகின்றன.

திருமணமாகாமல் கர்ப்பமான பெண்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் பாலியல் பலாத்காரத்திற்கு இரையானவர்கள் மிகவும் குறைவாக இருந்தனர்.

மற்றபடி பெரும்பாலோர் திருமணம் செய்து கொள்வதாக தரப்பட்ட வாக்குறுதி. அன்பளிப்புகள், பண உதவி ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு தங்களை இழந்ததாக கூறியுள்ளனர்.

விடலைப் பருவத்தினர் இத்தகைய பிரச்சனைகளில் சிக்கி விடாமலிருக்க, அவற்றை தங்களுக்குள் கட்டுப்படுத்திக் கொள்வது நல்ல வழிமுறையாகும்.

அதற்காக கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள் துன்பம் விளைவிக்கக் கூடியது இல்லை. அவமானகரமானது என தடுமாறவும் தேவையில்லை. மாறாக, அவை எய்ட்ஸ் கொடுமை நிலவும் இந்த சமயத்தில் மிகுந்த பாதுகாப்பானவையாகும். சரி, இந்தப் பிரச்சனையில் சமூகத்தின் பங்கு என்ன? அதையும் கூட 5 பிரிவுகளாக பிரித்துப் பார்க்கலாம்.

பெற்றோரின் பொறுப்பு, சமூகத்தின் பங்கு, அரசாங்கத்தின் பங்கு, சினிமா, டிவி ஆகியவற்றின் பங்கு, பள்ளி மற்றும் கல்லூரிகளின் பங்கு என பிரித்துக் கொள்ளலாம்.

முதலில் பெற்றோரின் பங்கு எப்படி இருக்க வேண்டுமென பார்க்கலாம்.

குழந்தையிடம் அதிக செல்லம் கொஞ்சுவதும் கூடாது. அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தவும் கூடாது. உங்கள் குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என திட்டமிட்டு விட்டீர்களா?

அப்படி ஒரு திட்டமிட்டு விட்டால் அதற்கு பாதகமான எதையும் நீங்கள் அனுமதிக்காதீர்கள்.

உங்கள் அதிகாரத்தை உறுதியாக பயன்படுத்தி அதை தடுத்து நிறுத்துங்கள். அதே சமயம் விடலைப் பருவ குழந்தைகளை எப்போதும் நிர்பந்தம செய்து கொண்டே இருக்காதீர்கள்.

பெற்றோரில் யார் தனக்கு சாதகமாக இருக்கிறி£ர்களோ அவருடன் விடலைப் பருவத்தினர் உரிமை எடுத்துக் கொண்டு, அதை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உண்டு. எனவே. குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

குழந்தைகளின் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து அவர்களை அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்கள் குழந்தை எந்த மாதிரியான நபர்களுடன் பழகுகிறாள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

உங்கள் குழந்தையின் ஓய்வுநேரம் எப்படி கழிகிறது என்பதை கவனியுங்கள். யாருடன் எப்படி அவர்கள் பொழுதை கழிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். போதை மருந்துகளுக்கு இரையாவி விடாமல் பாதுகாக்க இது உதவும்.

நல்ல பொருட்களை வாங்குவதற்காக, எளிதில் பணம் சம்பாதிக்க பாலியல் தவறு செய்து விடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.

சமூகத்தின் பங்கு என்ன என்பதை பார்க்கலாமா?

விடலைப் பருவத்தினருக்கு தாங்கள் யார் என்கிற அடையாளக் குழப்பம் ஏற்படுவது சகஜம்.

அவர்கள் விடலைப் பருவத்தினர். அவர்களை அதற்குரிய விதத்தில் அணுக வேண்டும் என்பதை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

வீட்டிலோ கல்லூரியிலோ வேலை பார்க்கும் இடங்களிலோ அவர்களது கருத்துக்களை கேட்கவேண்டும். திருத்திக் கொள்ள வேண்டிய கருத்துக்களை அவர்கள் கூறினால் அதை ஏற்றுச் செயல்படுத்துங்கள்.

இது, அவர்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்த்து அவர்களை பெரியவர்களாக்க உதவும்.

அரசாங்கம் இந்தப் பிரச்சனையில் எந்த மாதிரியான பங்கு வகிக்க முடியும்?

இனவிருத்திக்காக சுகாதார பாதுகாப்பை அரசு முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.

ஆண், பெண் இருபாலருக்குமான திருமண வயது உச்சவரம்பை அரசு கடுமையாக அமுல்படுத்த வேண்டும்.

விடலைப் பருவத்தினரின் பிரச்சனைகளை நட்புடன் அணுகக் கூடிய மையங்களை உருவாக்க வேண்டும். இந்த பிரச்சனைகளை சிறப்பாக கையாளக்கூடிய நிபுணர்கள் மற்றும மனோதத்துவ நிபுணர்களை அந்த மையங்களில் நியமிக்க வேண்டும்.

பாதுகாப்பான கருக்கலைப்புக்கு தேவையான வசதிகளை அளிக்க வேண்டும். பாதுகாப்பான பாலியல் உறவு, பாலியல் ரீதியாக பரவக்கூடிய நோய்கள், அவற்றிலிருந்து தப்ப உதவும். தடுப்பு முறைகள் குறித்து விடலைப் பருவத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் புத்தகங்கள் வெளியிட வேண்டும்.

சினிமா. டி.வி. ஆகியவற்றில் டி.வி.தான் இந்தப் பிரச்சனையில் மிகுந்த பங்காற்ற முடியும்.

புதிய தலைமுறையைச் சேர்ந்த வளரும் பருவத்தினருக்கு பாலியல் கல்வி அளிக்க டி.வி.தான் முக்கியத்துவம் வாய்ந்த சாதனமாகும். அவற்றுக்கு அந்தச் சக்தியுண்டு. தங்கள் பார்வையாளர்கள் மீது அவர்கள் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். பாலியலை சின்னத் திரையுல் சரியான முறையில் எப்படி ஒளிபரப்பலாம் என முடிவு செய்து கொள்ள வேண்டியது டிவி நிறுவனங்களின் பொறுப்பு. இந்த நவீன கால வாழ்க்கையில் ஹீரோ யாரும் உருவாவது கடினம். ஆனால். சினிமா மற்றும் டி.வி.யில் வரும் கதாபாத்திரங்களை, விடலைப் பருவத்தினரிடம் வியக்கத்தக்க மாறுதலை உண்டு பண்ணும் வகையில் அமைக்க முடியும்.

இந்த எண்ணத்தை டி.வி. நிறுவனங்கள் சமூகப் பொறுப்புடன் மனதில் பதியவைத்துக் கொள்வது நல்லது.

பள்ளிகளின் பங்கு குறித்துத்தான். இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. பள்ளிகளில் பாலியல் கல்வியை கற்பிப்பது, விடலைப் பருவ தடுமாற்றங்களை ஊக்குவிக்கும் என ஒரு சாரார் கருதுகின்றனர்.

உடல்கூறு அமைப்பு பற்றி மாணவர்களுக்கு போதுமான தகவல்கள் அளிக்கப்படாத பட்சத்தில் ஏற்படக்கூடிய சிரமங்களை இந்தக் கல்வி தவிர்க்க உதவும்.

துல்லியமான தகவல் அளிக்க தவறுவது, விடலைப் பருவத்தினருக்கு தேவையான சமயத்தில் சரியான அறிவைத்தர மறுப்பதாகும் என இன்னொரு பிரிவினர் கூறுகின்றனர்.

உடல்கூறுகள் பற்றியும். இனவிருத்தி அமைப்பு முறைகள் குறித்தும் விடலைப் பருவத்தில் கல்வி அளிக்க வேண்டும்.

பாலியல் நடவடிக்கைகளை தாமதப்படுத்துவதால் ஏற்படக்கூடிய நன்மைகளையும். பாதுகாப்பற்ற பாலியல் உறவு. பலருடன் உறவு கொள்வதால் ஏற்படக் கூடிய பாதிப்புகள், விடலைப் பருவ கர்ப்பம், சட்டவிரோத கருக்கலைப்புகள் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

பால்வினை நோய்கள் மற்றும் எய்ட்ஸ் நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெற தடுப்பு முறைகளை அவர்கள் தெரிந்திருக்க வேண்டும்.

மொத்தத்தில் குழப்பமான ஒரு காலகட்டத்தில் இருக்கும் விடலைப் பருவத்தினருக்கு குடும்பத்தினர் மற்றும் சமூகத்தின் ஆதரவு தேவை.

எப்போதையும் காட்டிலும் இப்போதுதான் அவர்களுக்கு இது அவசியம்.

விடலைப் பருவத்தினர் தங்கள் சிறகுகளை எச்சரிக்கையுடன் விரித்துப் பறக்க அனுமதிக்க வேண்டும்.

பிரச்சனைகளில் அவர்கள் சிக்கிக் கொள்ளும் போது, எளிதில் அவற்றை பகிர்ந்து கொள்ளும் வகையில் பெரியவர்கள் பக்குவப்பட வேண்டும்.

தன்னுடைய இமேஜை தானே உருவாக்கிக் கொள்ள அவர்களை அனுமதிக்க வேண்டும். அதே சமயம் தேவைப்படுகிற போது அனுமதி மறுக்கவும் தயங்கக் கூடாது.

நீதான்… நீ மட்டும்தான் நிஜம் என்பதை நிதமும் நினைத்து, நிம்மதியாய் தூங்கி எழுந்து காரியமாற்றும் பக்குவத்தை விடலைப் பருவத்தினர் பெறும் வகையில் அவர்களை பாதுகாக்க வேண்டியது அவசிமாகும்.

நேரம் நல்ல நேரம் – 4 – ஆதனூர் சோழன்

Leave A Reply