நேரம் நல்ல நேரம் – 4 – ஆதனூர் சோழன்

Share

எளிமையிலும் நளினம்

கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அத்தனை பெண்களுக்கு மத்தியிலும், ஒரே ஒரு பெண் போகும் திசையெங்கும் ஓடிக் களைத்தன விழிகள்.

பட்டுப்புடவைகள் சரசரக்க, கழுத்திலும், காதிலும், கைகளிலும் பளீரென தங்க நகைகள் மின்ன வலம் வந்த பெண்கள் மத்தியில், விழிகள் ஏன் அந்த பெண்ணின பின்னால் அலைகின்றன.

இத்தனைக்கும் அந்தப் பெண் சாதாரண கைத்தறிப் புடவைதான் கட்டியிருந்தாள். முடியை தளரவிட்டு ஜடை பின்னியிருந்தாள். கழுத்தில் நூல்போல் ஒரு சங்கிலி மாட்டியிருந்தாள்.

ஆனால், அவள் முகத்தில் குடி கொண்டிருந்த சாந்தம். எத்தனை பேர் தன்னை கவனிக்கிறார்கள் என்று கணக்கெடுத்து களிக்காத போக்கு. அவள் மீது அவளுக்குள்ள தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக விழிகளில் தெரிந்த உறுதி, எல்லாம் சேர்ந்து, அவளை, அந்த பெண்கள் கூட்டத்திலிருந்து தனிமைப்படுத்தி காட்டின.

இதுபோல எத்தனையோ பேர் மற்றவர்களிடமிருந்து எளிதில் தங்களை வேறுபடுத்திக் காட்டும் வகையில் உடைத்தேர்வு. நடந்து கொள்ளும் விதம் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்துவார்கள்.

நான் மிகச் சாதாரணமானவன். எப்போதும் இதுபோலவே இருக்க விரும்புகிறேன் என சிலர் கூறுவார்கள்.

ஆனால், பேசுகிற பாணி, உடைகளை தேர்வு செய்வது உள்ளிட்ட விஷயத்தில் சற்று கவனம் செலுத்தினால் ஒருவர் பிறரின் மரியாதையை வென்றெடுக்க முடியும். மற்றவர்கள் அவரைப் பின்பற்றவும் கூடும்.

ஒரு விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எல்லோரும் சளசளவென்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.

என்னருகில் உட்கார்ந்திருந்த சிலரது பார்வை வாசல்புறம் திரும்பி சற்று நேரம் நிலைகுத்தின.

அவர்கள் பார்வையை தொடர்ந்து நானும் விழிகளை திருப்பினேன்.

28 வயது இருக்கும்.

அந்த இளைஞர் வெள்ளைச்சட்டையும் கருப்பு பேண்ட்டும் அணிந்திருந்தார்.

வரவேற்பில் இருந்தவர்கள் ஒவ்வொவரும் அவரை நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.

இளைஞரும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வணக்கம் தெரிவித்து மெல்லிய புன்னகையுடன் பதிலளித்து. நலம் விவாரித்துக் கொண்டிருந்தார். தனக்கு அறிமுகமான குழந்தையிடம் சென்று அவர்கள் கன்னத்தை கிள்ளியோ, தலையைக் கோதியோ பேசினார். சில பெண்கள் தூரத்தில் இருந்தபடியே அவரது பெயரைச் சொல்லி தங்களிடம் அழைத்தனர்.

விருந்திற்கு வந்திருந்த பலரது கண்களைப் போலவே என்னுடைய கண்களும் அந்த இளைஞரை அவ்வப்போது தேடிப் பிடித்து என்ன செய்கிறார் என கவனித்தன.

அந்த இளைஞரைப் போன்ற நபர்கள் மிகுந்த நிதானமாக இருப்பார்கள். தன்னைச் சுற்றி நடப்பவற்றை கவனமாக அவதானிப்பார்கள்.

மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், தங்களைப் பற்றி உணர்ந்து கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

பிறர் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து கவலைப்படமாட்டார்கள்.

இறுமாப்புடன் நடந்து கொள்வதைக் காட்டிலும், உரக்க பேசுவதைக் காட்டிலும், குறைந்தபட்ச சத்துத்துடன் பேசுவதாலும், அமைதியான நடந்தையாலும் பிறரது மரியாதையை எளிதில் சம்பாதிக்க முடியும்.

விலை மிகுந்த உடைகள் பதவி அதிகாரம் இவற்றால் மட்டும் ஒருவரைச் சுற்றி ஒளிவட்டம் உருவாக்க முடியும் என்பதில்லை.

நேர்த்தியான கைத்தறி சட்டை பேண்ட்டிலோ, நேர்த்தியான கைத்தறிப் புடவையிலோ கூட ஒருவர் தன்னைச் சுற்றி ஒளிவட்டத்தை உருவாக்க முடியும்.

இத்தகைய ஒளிவட்டம் பரம்பரை சார்ந்தது. அதை கையகப்படுத்துவது மிகவும் சிரமம் என்று நம்மில் சிலர் கூறுகின்றனர்.

அது அப்படி இல்லை.

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மகள் இளவரசி ஆன்னி அரண்மனைவாசி. அரண்மனை பழக்கவழக்கங்களில் மூழ்கித் திளைத்து வளர்ந்தவர்.

எனினும், சாதாரண குடும்பத்தில் பிறந்த டயானாவால், உலகின் கவனம் முழுவதையும் தன் மீது திருப்ப முடிந்தது எப்படி?

எனவே, பரம்பரை நேர்த்தி என பேசுவோரைக் காட்டிலும், பலவகைகளில், சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள் அதிக நேர்த்தியுடன் பிறரை கவர முடியும். அதற்கு நாம் நம் மீது தனிகவனம் செலுத்த வேண்டும்.

நேர்த்தியான வாழ்க்கை முறை என்பது எளிதில் கற்றுக் கொள்ளக் கூடியதுதான். அதற்கு நுணுக்கமான பார்வையும் எளிதில் பற்றிக் கொள்ளக் கூடிய அறிவும் இருந்தால் போதும்.

ஏற்கக் கூடியதை ஏற்கவும், தவிர்க்க வேண்டியவற்றை தவிர்க்கவும், நீங்கள் மானசீகமாக பின்பற்றும் நபர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை உள்வாங்கிக் கொண்டால் ரொம்ப ஈஸியாக பழகிக் கொள்வீர்கள்.

லலிதா மேடம் பற்றி இந்த இடத்தில் சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

லலிதாவின் கணவர் பெரிய சர்க்கரை ஆலையில் தலைமை கணக்காளராக இருந்தார்.

எம்.எஸ்சி., முடித்திருந்த லலிதா வீட்டிலேயே இருந்தார். நல்ல வசதியான குடும்பம்தான். வேலைக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால், லலிதா தனது குழந்தைகளை படிக்க வைப்பதிலும், பராமரிப்பதிலும் காட்டிய அக்கறை. அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் அவரது கணவரை கவர்ந்தன.

லலிதா, வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பதில் அவரது கணவருக்கு இஷ்டமில்லை.

பக்கத்திலேயே ஒரு மெட்ரிகுலேசன் பள்ளி இருந்தது. புதிதாக வளர்ந்த பள்ளி. அந்தப் பள்ளிக்கு பிரின்சிபால் தேவைப்பட்டது.

லலிதாவின் கணவர் அவரை அப்ளிகேஷன் போடச் சொன்னார்.

லலிதாவின் அப்ளிகேஷனை பார்த்த பள்ளி நிர்வாகம் அவரை வரவழைத்து பேசியது. பள்ளி நிர்வாகிகளுக்கு அவ்வளவாக விபரம் போதவில்லை. வெறுமனே வர்த்தகர்களாகவே இருக்கிறார்கள் என்பதை லலிதா புரிந்து கொண்டார்.

நான் இந்தப் பள்ளியை நல்ல நிலைக்கு கொண்டு வருகிறேன். ஆனால், எனது யோசனைகளை பள்ளி நிர்வாகம் அமல்படுத்த வேண்டும். இதற்கு உத்தரவாதம் அளித்தால் பணியில் சேருகிறேன் என்று கூறினார்.

அவரது நிபந்தனையை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.

அதன்பிறகு 5 ஆண்டுகள் லலிதா அந்த பள்ளியின் பிரின்சிபாலாக இருந்தார். பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் ஒவ்வொருவரையும் அவர் அறிந்து வைத்திருந்தார்.

உடன் வேலைபார்த்த சக ஆசிரியைகளுக்கு பொறுப்புகளை பகிர்ந்து கொடுத்தார். பெற்றோர் சந்திப்புக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கினார்.

படிப்பில் கவனம் இல்லாத குழந்தையின் பெற்றோரை அழைத்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் என கூறுவார்.

ஒருநாள் அவர் கணவர் பணிமாற்றம் பெற்று சென்றார். அவருடன் லலிதாவும் வேறு பள்ளியில் வேலைகிடைத்த போய்விட்டார்.

பெற்றோர்கள் பலருக்கு பள்ள¤நிர்வாகத்தின் மீது கோபம். நன்கு பழகிய லலிதா மேடம் பள்ளியை விட்டு விலகும்போது ஒரு வழி அனுப்பு நிகழ்ச்சிக்குக் கூட ஏற்பாடு செய்யவில்லையே என்று வருத்தம்.

லலிதாவுக்கு பதிலாக எங்கேயோ இருந்து ஒரு புதிய மேடம் பொறுப்பேற்றார்.

குறைகுடம் என்பது அவர் அடித்த கூத்திலேயே தெரிந்தது. அவரைக்காட்டிலும் சிறந்த ஆசிரியைகள் இருப்பதை அறிந்து, எல்லோரையும் மட்டம் தட்ட துவங்கினார்.

கண்டிப்பு என்ற பெயரில் பிள்ளைகளிடமும், பிள்ளைகளின் பெற்றோர்களிடமும் சிடுசிடுத்தார்.

பிளஸ் ஒன் படிக்கும் மாணவன் ஒருவனை பிரம்பால் அடித்து காயப்படுத்தினார். மாணவனின் பெற்றோர் பள்ளியில் வந்து பெரிய ரகளையே நடத்திவிட்டனர்.

இப்படியாகப் போய்க் கொண்டிருந்தபோது, பள்ளி ஆண்டு விழா வந்தது.

லலிதா மேடம் இருக்கும் போது, மேடையின் ஓரத்தில் நின்று கொண்டு நிகழ்ச்சிகளை ஒழுங்குப்படுத்துவார்.

நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பான ஆசிரியைகள் சீராக நிகழ்ச்சியை நடத்துவார்கள். தேவையென்றால் மட்டுமே மேடையில் ஏறுவார்.

ஆனால், இந்த புதிய மேடம், தானே மேடையை ஆக்கிரமித்துக் கொண்டார். பார்க்கவே அருவறுப்பாக இருந்தது.

நிகழ்ச்சிக்கு லலிதா மேடத்தை அழைத்திருப்பதாக பள்ளி நிர்வாகம் மைக்கில் அறிவித்த போது கூட்டம் முழுவதும் அவரை சுற்றுமுற்றும் தேடியது.

புதிய மேடம் கூட்டத்தின் சலசலப்பை கட்டுபடுத்த அடிக்கடி கெஞ்ச வேண்டியதாயிற்று. ஏனோ தானோவென்று நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. ஒரே இரைச்சல்.

அந்தச் சமயத்தில்தான் பள்ளி நிர்வாகி, லலிதா மேடத்தை மேடைக்கு வரும்படி அழைத்தார். பக்கத்து அறையில் இருந்த லலிதா மேடம் மேடைக்கு வந்த போது கூட்டம் அமைதியாகியது.

புன்சிரிப்புடன் வந்த அவர் மீதே அனைவரின் பார்வையும் நிலைகுத்தியது.

புதிய மேடம் முகத்தில் ஒரு பொறாமைக் கீற்று ஒளிர்வதை காண முடிந்தது.

இது பொறாமைப் படக்கூடிய விஷயமல்ல. லலிதா மேடம் எப்படி அவ்வளவு இரைச்சல் மிகுந்த கூட்டத்தை ஜ்ரு வினாடியில் ஆகர்ஷித்தார் என்பது கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்.

லலிதா மேடம் இவ்வளவு பேரை கவர்வதற்கு 5 ஆண்டுகள் எப்படியெல்லாம் தனது வாழ்க்கை முறையை நேர்த்தியாக அமைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், புதிய மேடம் அதைப் புரிந்து கொள்ளவோ, தன்னை மாற்றிக் கொள்ளவோ கொஞ்சம் கூட முயற்சி செய்யவில்லை.

முடிவு என்ன பள்ளி நிர்வாகம் அவரை டிஸ்மிஸ் செய்தது. லலிதா மேடத்திடம் நன்கு பயிற்சி பெற்ற அதே பள்ளியில் நீண்ட நாள் பணியாற்றும் ஜாக்குலினை புதிய மேடமாக்கியது.

“புதிய மேடம் அடிப்பாங்களே” என்று பிள்ளைகள் பயப்படும்படி நடந்து கொள்வதைக் காட்டிலும், “அய்யோ மேடம் திட்டப் போறாங்களே” என்று பிள்ளைகள் வருத்தப்படும் வகையில் நடந்து கொண்டாலே போதும். அதுதான் நல்ல ஆளுமைக்கு அடையாளம்.

அடுத்தமுறை, நீங்கள் பின்பற்றக் கூடிய மானசீகமான நபரை பார்க்கும்போது அவர் எப்படி தலையசைக்கிறார். தனது கைகளை எப்படி பற்றி இருக்கிறார். எப்படி அமர்கிறார். எந்த மாதிரியான மேனரிசம்களை அவர் கையாள்கிறார் என்பதை உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

சில சின்னச் சின்ன அசைவுகள் கூட, பக்கம் பக்கமாக பேசும்படி சக்தி வாய்ந்தவையாக இருக்கும். அவற்றிலிருந்து சிலவற்றை எளிதில் உங்களுடையவை ஆக்கிக் கொள்ள முடியும்.

நேரம் நல்ல நேரம் – 5 – ஆதனூர் சோழன்

Leave A Reply