நேரம் நல்ல நேரம் – 5 – ஆதனூர் சோழன்

Share

கல்யாண வாழ்க்கை கிரானைட் குவாரியல்ல

ஒரு கூட்டணி அரசாங்கம் எப்படி பிரச்சனை இல்லாமல் இயங்க முடியாதோ அப்படித்தான். கல்யாணவாழ்க்கையும்.

எனவேதான், எந்தச் சூழ்நிலையிலும் விவாகரத்து முடிவுக்கோ, பிரிந்து வாழும் முடிவுக்கோ அவசியமே இல்லை.

நிஜம் என்னவென்றால் கல்யாணம் என்பதே சோதனை செய்து வாழக் கற்றுக் கொள்கிற, வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவங்களையும் இனிமையான அனுபவங்களாய் மாற்றிக் கொள்ளக் கூடிய இணைப்புதான்.

காதல் திருமணங்களிலேயே பிரச்சனைகள் சகஜம் என்பதை காலம் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி, நெருங்கிய பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு பின்னர் நடைபெறுகிற திருமணத்திலேயே பிரச்சனைகள் என்றால்…

கல்யாண மேடையில்தான் முதன்முதலாக அறிமுகமாகிற நபர்களின் வாழ்க்கையில் எப்படி பிரச்சனை இல்லாமல் இருக்கும்?

பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கிற கல்யாணத்தில் கணவன் மனைவி இடையே ஒருவரையொருவர் புரிந்து கொள்வதில் பிரச்சனை உருவாகும். கருத்து வேறுபாடுகளும், சண்டை சச்சரவுகளும் நிறைய இருக்கும்.

அடிக்கொரு தரம் கணவனோ. மனைவியோ அமைதியாகி விடுவார்கள்.

இனிமேல் நாம ரெண்டு பேரும் குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம் என்றோ.

இனிமேல நாம பேசவே வேண்டாம் என்றோ அவர்கள் முடிவுக்கு வருவார்கள்.

இப்படியான முடிவெடுக்க நேருகிற சூழ்நிலையில், விளைவுகள் பல திசைகளிலும் பரவும்.

கணவன் மனைவியின் காதல் வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகும்.

கணிசமான அளவுக்கு மனதில் இறுக்கமும் பிடிவாதமும் படிந்துவிடும். அது நல்லதல்ல.

கருத்து வேறுபாடுகளை வெளியில் கொட்டிவிட வேண்டும்.

அப்போதுதான் மனசு இளக்கமாகும். உயிர்த்துடிப்பும் உற்சாகமும் ஊற்றெடுத்து பொங்கும்.

பள்ளியிலிருந்து வரும்போதே அம்மாவைப் பார்த்து,
“எங்க ஸ்கூல்ல இருந்து சுற்றுலா போறோம். ரெண்டு நாள் டூர்” என்று உற்சாகமாக கூறியபடி வந்தாள் பவானி.

“சரி. அப்பா வரவும் அவர்கிட்ட சொல்லு. அவர்தானே பணம் தரணும்” என்று சாதாரணமாக சொன்னாள் அம்மா.

அம்மா பதில் சொன்னவுடனேயே, பவானி முகம் சூம்பிவிட்டாள். சாயந்திரம் அப்பா வந்தார்.

எதற்கும் அப்பாகிட்டயும் சொல்லிறலாம் என்று அவரிடம் போனாள் பவானி.

“அப்பா, எங்க ஸ்கூல்ல இருந்து ரெண்டு நாள் டூர் கூட்டிட்டு போறாங்க. முன்னூறு ரூபா ஆகும்” என்று மெதுவாக சொன்னாள்.

ஒவ்வொரு மாசமும் பற்றாக்குறை பட்ஜெட்டில் குடும்பம். மகளுக்கு சம்மதம் செல்லிட்டா பணத்தை கொடுக்க முடியுமா? என்று அப்பாவுக்கு தயக்கம். உறுதியான பதில் வராததால் பவானியின் மனசு உற்சாகமிழந்தது.

மகளோட உற்சாகத்தை கெடுத்துவிடக் கூடாது என்று அவளுக்கு அம்மா சம்மதம் சொல்கிறாள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அப்பா ஆத்திரத்தில் வெடித்து விடுவார். ஏன் என்னை கேட்கவில்லை. நான் ஒரு மனுஷனா தெரியலையா என்று சீறுவார். அதுவே சண்டைக்கு காரணமாகிவிடும். இத்தகைய சண்டைகள் எந்த ஒரு கல்யாணத்தையும் உஷ்ணம் நிறைந்த சாம்பல் குவியலாக்கிவிடும்.

வேறு சில விஷயங்களில் கணவன் மனைவிக்கு இடையே சண்டை வர வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் எதிராளியின் மனதை எளிதில் காயப்படுத்தக் கூடிய விஷயத்தை கிளறிவிட்டுக் கொள்வதும் உண்டு.

இத்தகைய போக்கு உறவுகளை வலிமை குன்றச் செய்துவிடும். நெருக்கம் குறைந்துவிடும்.

திருமண வாழ்க்கை என்பது 24 மணி நேர வேலை போன்றது. இதில் கீறல்களும், மோதல்களும் உருவாவது இயற்கையான விஷயம். ஆனால் ஒருவரது கட்டுப்பாட்டையும் மீறி ஆத்திரம் வெளிப்படும் போது வாழ்க்கை சுழலில் சிக்கிவிடும்.

உணர்ச்சிகரமான சங்கடங்களுடனும், நெஞ்சை திணறச் செய்யும் உணர்வுகளுடனும் கணவன் மனைவி வாழ வேண்டுமா? அல்லது அவற்றிலிருந்து விடுபட்டு வாழ வேண்டுமா?

கோபம் என்பது சகஜமானது,

கணவன் மனைவி இடையே, சண்டை, விரக்தி, புலம்பல்கள் இருக்கத்தான் செய்யும். அதுபோன்ற சமயங்களில் இருவரில் யாரும் பீதியடைந்து விடக்கூடாது. அவற்றை அவற்றின் போக்கில் எதிர்கொண்டு மீள பழகிக் கொள்ள வேண்டும்.

மோகினிக்கு தனது கணவன் போக்கு புதிராக இருந்தது. வழக்கமாக வீட்டுக்குள் நுழையும் போதே அவளை அழைப்பான். அவளால் உடனடியாக வரமுடியாவிட்டால் அவள் இருக்கும் இடத்திற்கே போய்விடுவான்.

அவளுடைய இரண்டு கன்னங்களையும், விரல்களால் பற்றி இழுத்து, அவள் திமிறினாலும் முரட்டுத்தனமாக முத்தமிட்டுப் போவான்.

ஆனால் அன்றைக்கு அவனிடம் மாறுதல் தெரிந்தது. மோகினி குழம்பினாள்.

இதற்கெல்லாம் குழம்பத் தேவையில்லை. அவனுக்கு என்ன பிரச்சனையோ அவனை சகஜமாக்குவதற்கு உங்களால் ஏதும் செய்ய முடியுமா என்று பாருங்கள்.

முடியவில்லையா? அவனை அப்படியே சற்று நேரம் விட்டுவிடுங்கள். அவன் உணர்ச்சிக் கொந்தளிப்பிலிருந்து மீளட்டும். அப்புறம் அவனை நெருங்கி உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள். ஆதரவாய் அவனை அணைத்து முதலில் அவன் கவனத்தை உங்கள் மீது மட்டும் இருக்கும்படி திருப்புங்கள்.

காதல் ஒயின்போன்றது. நாட்கள் செல்லச் செல்லத்தான் அது முதிர்ச்சி பெற்று சுவைக்கும்.

“என்னை ஒருமுறைக்கூட பிரியமாக எனது மனைவி கைப்பற்றியதில்லை. ஆனால், நான் அவள் மீது பிரியமாக இல்லை என எப்போதும் குறை சொல்கிறாள்” என்றான் ரகுராமன்.

பரஸ்பர நலன்களைச் சார்ந்தே திருமண வாழ்க்கை அமைகிறது. அது கல்குவாரியோ, கிரானைட் குவாரியோ அல்ல, ஒருவர் மற்றவரின் காதலை தோண்டி எடுக்க!

அது ஒரு வங்கியைப் போன்றது.

கணவன் மனைவி இருவருமே அந்த வங்கியில் தங்கள் காதலை டெபாசிட் செய்திருக்க வேண்டும். அப்போதுதான் ஒருவர் காதலை மற்றவர் வென்றெடுக்க முடியும்.

பெரும்பாலான கணவன் மனைவியர் தங்கள் செயல்களை, தொடர்ந்து நியாயப்படுத்துவார்கள்.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தக் கூடியவர்கள், தங்களை தவறாக புரிந்து கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும். எதிராளியை நோக வைக்க கிடைத்த வாய்ப்பாக கருதமாட்டார்கள்.

அவர்கள் தங்களுடைய முகத்தை இழந்துவிடாமல், சமரசம் செய்து கொள்ள வேண்டியதன் முக்கியவத்துவத்தை உணர்ந்து இருப்பார்கள்.

யதார்த்தமான, புத்தி கூர்மையுள்ள தம்பதிகள் பாதிக்கு பாதி என்கிற அளவில் விட்டுக் கொடுக்க தயாராக இருப்பார்கள்.

சிலசமயம் அது 60க்கு 40 எனவோ, 30க்கு 70 எனவோ கூட இருக்கலாம். ஒரு சமயத்தில் மனைவி 70 சதவீதம் விட்டுக் கொடுக்கும்படி நேரலாம்.

மற்றொரு சமயம் கணவன் 70 சதவீதம் விட்டுக் கொடுக்கும்படி நேரலாம்.

எப்படியோ கணவன் மனைவி ஒருவருக்கொருவர் நல்லெண்ணத்தை வளர்த்துக் கொள்ள இது பெரிதும் உதவியாக இருக்கும்.

காதல் என்பது எளிதில் தூண்டப்படக்கூடியது அல்ல. ஆனால் அது மீளும் தன்மையை தன்னகத்தே கொண்டது.

மனைவியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ரசிக்க கணவன் பழகுவதும், கணவனின் நடவடிக்கைகளை ரசிக்க மனைவி பழகுவதும் ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ள உதவும்.

நேரம் நல்ல நேரம் – 6 – ஆதனூர் சோழன்

Leave A Reply