நேரம் நல்ல நேரம் – 6 – ஆதனூர் சோழன்

Share

புற்றுநோயிலிருந்து விடுதலை?

இறைச்சிக் கடையில் ஒரு நண்பரை பார்த்தேன்.

‘இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமையாச்சா. மட்டன் எடுத்துட்டு போகலாம்னு வந்தேன்’ என்றார்.

‘உங்களுக்கு ஒரு சேதி தெரியுமா?’ என்றேன்,

‘எதையாவது படிச்சீங்களாக்கும்?’ அவர் வழக்கம்போல் அலுத்துக் கொண்டார்.

‘விஷயத்தை கேட்டிங்கன்னா சந்தோஷப்படுவீங்க’ என்று அவரை சமாதானப்படுத்திவிட்டு சொல்லத் துவங்கினேன்.

இறைச்சிக்கு பதிலாக நிறைய பழங்கள், காய்கறிகள் கீரைகளை சாப்பிடுங்கள்.

குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். உங்கள் இதயம் பாதுகாப்பாக இருக்கும்.

மத்திய தரைகடல் நாடுகளின் உணவுப் பழக்கம் இதுதான்.

தாவரம் சார்ந்த உணவுப் பழக்கம் குடல் புற்றுநோயை தடுக்கிறது. அதுமட்டுமின்றி இதயத்திற்கும் இதமளிக்கிறது என சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதுக்காக, இறைச்சியை சுத்தமாக சாப்பிடக்கூடாது என்று அர்த்தமில்லை.

கட்டுப்பாடான அளவில் இறைச்சி மற்றும் இனிப்பு உணவுகளை நீங்கள் சாப்பிடலாம்.

இந்த உணவுப் பழக்கம் உங்களது மார்பு புற்றுநோயை குறைக்க உதவாது.

ஆனால், உங்கள் உணவோடு ஆலிவ் எண்ணெய் சேர்த்துக்கொண்டால் மார்பக புற்றுநோய் உருவாகும் அபாயத்தை குறைக்கலாம் என்று சமீபத்திய அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.

பழங்களும், காய்கறிகளும், குடல் புற்றுநோய் அபாயத்தை தடுக்கும் என்ற ஆய்வு முடிவு அமெரிக்க மருத்துவ சங்கத்தின் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

‘புற்றுநோய் அபாயமும் உணவுப்பழக்கமும்’ என்ற தலைப்பில் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுரைகளை இணைத்து மூன்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் முடிவில்தான் ஏராளமான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நல்லது என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

‘உணவுப் பழக்கமும், புற்றுநோயும்’ என்ற தலைப்பில் 10 முதல் 20 ஆயிரம் ஆய்வுக் கட்டுரைகளை உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் தொகுத்துள்ளது.

அமெரிக்க மருத்துவர்கள் சங்கத்தின் இதழில் வெளியிடப்பட்டுள்ள மூன்று ஆய்வுகளின் விபரம் வருமாறு:

முதல் ஆய்வு, அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் கொரியாவில் உள்ள யோன்சே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்தியது.

இது 10 ஆண்டுகளில் 12 லட்சம் பேரிடம் மேற்கொள்ளப்பட்டது.

நீரிழிவு நோயாளியோ இல்லையோ. ஒருவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது புற்றுநோய் உருவாகவும். அதன் காரணமாக அவர் இறக்கவும் வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.

ஒருவரது உடலில் குளுகோஸ் அளவு பொருத்தமற்று அதிகரிக்கும்போது அதன் காரணமாக கொழுப்பும் அதிகரிக்கிறது.

இது புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்துகிறது. உடலில் கொழுப்பு அதிகரிக்கும் விகிதம் எதிர்கால புற்றுநோய் அபாய விகிதத்தையும் அதிகரிக்கிறது.

இரண்டாவது ஆய்வு அட்லாண்டாவில் உள்ள அமெரிக்க புற்றுநோய் சொசைட்டியைச் சேர்ந்த டாக்டர் ஆன் சோவா மற்றும அவரது சகாக்களால் நடத்தப்பட்டது.

இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் பெருங்குடல் புற்றுநோய் அபாயம்குறித்து இவர்கள் ஆய்வு நடத்தினர். 1 லட்சத்து 50 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தியது.

வாரத்திற்கு ஒரு கிலோ என்ற அளவில் இறைச்சி சாப்பிடுபவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்றாவது ஆய்வு நெதர்லாந்தைச் சேர்ந்த பல்கலைக் கழக மருத்துவமைய ஆராய்ச்சியாளர்கள் நடத்தியது.

பழங்கள் காய்கறிகளை சாப்பிடுவதும், ஜுஸ் குடிப்பதும் மார்பக புற்றுநோய் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இந்த ஆய்வு 2 லட்சத்து 50 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்டது.

ஆனால், சில பெண்களுக்கு மிதமான பலனளித்தது எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இறைச்சி சாப்பிடுவதால் புற்றுநோய் அபாயம் என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. அதே சமயம் புற்றுநோய் அபாயத்தை குறைக்க இறைச்சி அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பதை தவிர்ப்பது நல்லது.

நிறைய காய்கறிகள், பழங்களை சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் என்பதை இந்த ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

Leave A Reply