நேரம் நல்ல நேரம் – 7 – ஆதனூர் சோழன்

Share

அலர்ஜி : உடலின் எச்சரிக்கை

மனித உடலை வெளிகிருமிகளிடமிருந்து பாதுகாக்க நோய் எதிர்ப்பு தன்மை உள்ளது.

ஒவ்வாமையும் (அலர்ஜி). பாதுகாப்பு தன்மையும் நோய் எதிர்ப்பு அமைப்பின் இரு முகங்கள் ஆகும்.

நமது உடலுக்குள் புகும் தொற்று கிருமிகளில் சில, நமக்கு தொந்தரவு செய்யமாட்டாது. எனினும் நமது நோய் எதிர்ப்பு தன்மை எந்த ஒரு கிருமிக்கும் உயிர் வாழும் வாய்ப்பை அளிக்க அனுமதிக்காது.

நமது நோய் எதிர்ப்புத் தன்மையின் முக்கிய உற்பத்தி ஸ்தலங்களாக கல்லீரல். மண்ணீரல். எலும்பு ஊன் அல்லது எலும்பில் உள்ள தசை மற்றும் லிம்ப் நோடுகள் விளங்குகின்றன.

இவை, நோய் எதிர்ப்புப் போரின் முக்கிய வீரர்களாக கருதப்படும் சிறப்பு ரத்த அணுக்களான, பாலிமோர்ப்ஸ், லிம்போசைட்ஸ் மற்றும் மோனோ சைட்டுகளை உற்பத்தி செய்கின்றன.

தொற்றுநோய் கிருமிகள் நமது தோல், சளிப்பாதை ஆகியவற்றின் வழியாக உடலுக்குள் ஊடுருவி அங்கேயே தங்கிவிட முயற்சி செய்கின்றன.

இதையறிந்தவுடன் முதல்கட்டமாக பாலிமார்பஸ் அணுக்கள், கிருமிகள் தங்கிய பகுதிக்கு கூட்டமாக சென்று மொய்க்கின்றன.

பாலிமார்ப் அணுக்கள் காலாட்படை வீரர்களை போன்றவை. இவை தான் தொற்றை எதிர்த்து போராடும் முதல்கட்ட போராளிகள் ஆகும்.

உடலுக்குள் ஊடுருவிய கிருமிகளை சுற்றிச் சூழும் பாலிமார்ப் அணுக்கள், கடுமையான ரசாயன விஷத்தை கக்குகின்றன. போராட்டத்தில் பாலிமோர்ப் அணுக்களில் சிலவும் மடிய நேருகின்றன.

இதையடுத்து மடிந்த கிருமிகள் பாலிமார்ப் அணுக்கள் மற்றும் மடிந்த திசுக்கள் மொத்தம் சேர்கின்றன.

தொற்று நோயுடன் ஆரோக்கியமான திசுக்கள் அழிக்கப்படுவதும் சேர்ந்து தீவிர சிக்கலை உருவாக்குகின்றன.

பெரும்பாலான சமயங்களில் சேதமடைந்த திசுக்களை நமது உடல் சரி செய்தோ அல்லது மறுபடியும் உருவாக்கியோ விடுகிறது.

ஆனால், கடுமையான தொற்று நோயின்போது குறிப்பிடத்தக்க அளவுக்கு திசுக்கள் சேதமடைகின்றன. அப்படிப்பட்ட சமயங்களில் நீண்ட கால நோய் எதிர்ப்பு போராட்டம் அவசியமாகிறது.

அதுபோன்ற சமயங்களில் பாலிமார்ப் அணுக்கள் கிருமிகளை எதிர்த்து போராட திறனற்றவை ஆகின்றன.

எனவே, கிருமிகளுடன் போராட, லிம்போசைட் அணுக்களுக்கு அழைப்பு விடப்படும்.

இந்த லிம்போசைட் அணுக்கள், தங்கள் மேல்பரப்பிலிருந்து ஏவுகணைகளைப் போன்ற கிருமி எதிர்ப்பு பொருளை விடுவிக்கின்றன. இரத்தத்தில் கலக்கப்படும் இந்த நோய் எதிர்ப்பு பொருள் குறிப்பிட்ட நோய்க் கிருமியை தூரத்திலிருந்தே அழிக்கவல்லது.

இதுதவிர மூன்றாவது கட்ட பாதுகாப்பு அணுக்களாக மோனோசைட் அணுக்கள் கருதப்படுகின்றன.

இவை இரு வேறுபட்ட விதங்களில் செயல்படுகின்றன. நோய் எதிர்ப்பு சண்டையில் ஏற்பட்ட அசுத்தங்களை சுத்தப்படுத்தி, சேதமடைந்த திசுக்களை சரி செய்கின்றன.

இரண்டாவதாக, இவை நோய் கிருமிகளை சூழ்ந்து அவற்றின் அடிப்படை அமைப்பை பிளந்து, லிம்போசைட் அணுக்களுக்கு அடையாளம் காட்டுகின்றன. அதற்கேற்பவே லிம்போசைட்டுகள், நோய் எதிர்ப்பு பொருளை வெளியிடுகின்றன.

நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் பாதுகாப்பு செயல்பாடுகள், நிஜமான போர்களில் தளபதிகள் வகிக்கும் தந்திரங்களுக்கு நிகரானவையாக உள்ளன.

ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு தானாகவே இயங்கக் கூடியது.

ஒருமுறை தாக்குதல் துவங்கிவிட்டால் அது தங்குதடையில்லாமல் தொடரும். உடலில் புகுந்த கிருமிகள் மூளை. இதயம் உள்பட எந்த ஒரு முக்கிய உறுப்பில் ஒளிந்திருந்தாலும் விரட்டி கொல்லும் வரை அது ஓயாது,

ஆனால், நிஜ போரில் பொது மக்கள் மத்தியில் ஒளிந்து கொள்ளும் எதிரிநாட்டு வீரர் மீது எளிதில் குண்டு வீச முடியாது.

சில சமயங்களில் நமது உடலில் புகுந்த அபாயகரமான கிருமிகளை ஒழிக்க பென்சிலின் போன்ற மருந்துகளைக் கூட நோய் எதிர்ப்பு அமைப்பு ஏற்றுக் கொள்ளும்.

அவ்வாறான மருந்து எதையும் ஏற்றுக் கொள்ள நமது உடல் மறுக்கும் போது அது அலர்ஜி எனப்படுகிறது.

அலர்ஜி பல வகைப்பட்டது. தோல், சுவாசப் பாதை, உணவுக் குழல் ஆகியவற்றில் இதன் அறிகுறிகள் தெரியவரும், உணவு அலர்ஜி. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் சுவாச அலர்ஜி. அதாவது, தூசு மற்றும் ரசாயன துகள்கள் நாசிக்குள் சென்றால் மூக்கில் சளி ஒழுக துவங்கும். அது தவிர தொடர் தும்மல்களும் வரும்.

உணவு அலர்ஜியால் வயிற்றுப் போக்குடன் வாந்தியும் ஏற்படும்.

அலர்ஜி எந்த வகைப்பட்டது என கண்டுபிடித்துவிட்டால், பின்னர், எப்போதும் அலர்ஜி ஏற்படாத வகையில் தீர்வு காண முடியும்.

அந்த வகையில் மருந்து அலர்ஜியை நாம் எளிதில் தவிர்த்து விடலாம்.

சளி சில தகவல்கள்

தலையில் சளிக் கோர்த்துக் கொண்டால் நம்மில் பெரும்பாலோர் என்ன செய்கிறோம்?

சூடா ஒரு டீ குடிப்போம். திசுக்களை அழுத்தி விடுவோம். இப்படியான குளறுபடிகளில் ஈடுபடுவோம்.

இங்கே நாம் புற்றுநோயை பற்றி பேசவில்லை.

ஆனால், சளித் தொந்தரவு அதுபோல தீவிரத் தன்மையுடையதாக மாறக் கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உண்மையில், அது எலும்பு உட்புழை (சைனஸ்) கோளாறாக இருந்தால் பெரிய அளவிலான சேதத்திற்கு காரணமாக அமையும்.

மூளையையும், மூக்கையும் இணைக்கும் எலும்பு புழையழற்சி கோளாறு (சினுசிடிஸ்) என்பது பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்று. ஆனால், அதைப்பற்றி மக்கள் அறிந்திருப்பதைக்காட்டிலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

தங்களது நோய் குறித்து நோயாளிகள் முன்கூட்டியே அறிந்து கொள்வதைப் பொறுத்தும் அவற்றுக்கு டாக்டர்கள் அளிக்கும் உடனடி சிகிச்சையை பொறுத்தும் பல்வேறு தொற்றுகளை தடுக்க முடியும் என ஹார்வர்டு மருத்துவ பள்ளியை சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தலையில் சளி கோர்க்க துவங்கிய ஒரு வாரத்திற்கு பிறகே அதுபற்றி நாம் மதிப்பிட முடியும். அந்த குறிப்பிட்ட கால அளவுக்குப் பிறகே. நமது உடல் நிலையில் மாற்றம் ஏற்படுவதை உணர முடியும். அப்போதுதான் நமது தொண்டை வழியாக இறங்கும் சளி கெட்டியாகும் அந்த சளியின் நிறம் வெளிர் மஞ்சளாகவோ அல்லது பச்சையாகவோ மாறியிருக்கும்.

அவ்வாறு நிறம் மாறிய பிறகு சினுசிடிஸ் கோளாறுகளுக்கான பாக்டீரியாக்கள் கொத்துக் கொத்தாக உருவாகின்றன.

காய்ச்சல், பல்வலி, முக கொடுகொடுப்பு அல்லது மோவாய் எலும்புகளில் வலி, தலைவலி இப்படியான அறிகுறிகள் தோன்றும்.

இதைத் தொடர்ந்து நீங்கள் தாமதமின்றி டாக்டரை அணுக வேண்டும்.

இத்தகையோர் எதைச் செய்ய வேண்டும்?

தினந்தோறும் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும். சூப்புகள், மூலிகை கசாயம் சாப்பிடுவது நல்லது.

நேரம் நல்ல நேரம் – 8 – ஆதனூர் சோழன்

Leave A Reply