மனைவியை ஏமாற்ற பாஸ்போர்ட் பக்கத்தை கிழிக்கத்தான் வேண்டுமா? – அருள்ராஜ்

Share

பாஸ்போர்ட்டில் எமிக்ரேசன் அதிகாரிகள் நீங்கலாக வேறு யாராவது ஏதாவது எழுதியிருந்தாலோ, அதன் பக்கங்கள் கிழிக்கப் பட்டிருந்தாலோ, உரிமையாளரைப்பற்றி எழுதப்பட்டுள்ள விவரங்கள் தெளிவின்றி காணப்பட்டாலோ, ஏதேனும் வேறு வகையில் சேதமாகி இருந்தாலோ அந்தப் பாஸ்போர்ட் மூலம் பயணம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். ஒரு பாஸ்போர்ட்டில் இருக்கும் விவரங்களில் ஒரே ஒரு புள்ளியை மாற்ற வேண்டியிருந்தாலும் புதிய பாஸ்போர்ட்தான் கொடுப்பார்கள்.

மேற்கூறப்பட்டுள்ள எல்லாக் காரணங்களுக்கும் அபராதம் கூட விதிக்கப்படுவதில்லை. மாற்றப்படுவதற்காக புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது பழைய பாஸ்போர்ட்டை காண்பித்தால் மட்டும் போதுமானது. பாஸ்போர்ட் தொலைந்து போயிருந்தால் மட்டும் சிறியதொரு தொகையை அபராதமாக வசூலித்துவிட்டு புதிய பாஸ்போர்ட் கொடுப்பார்கள்.

புதிதாக பாஸ்போர்ட் எடுத்தல், சாதாரண ரினீவல், தொலைந்து போயிருந்தால் அந்த நகலின் அடிப்படையில் வேறொரு புதிய பாஸ்போர்ட் எடுத்தல் மற்றும் முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம், மனைவி பெயர் சேர்த்தல்& நீக்குதல், Damages போன்ற காரணங்களால் புதுப்பித்தல் போன்ற அடிப்படைகளிலேயே பாஸ்போர்ட்கள் கொடுக்கப்படுகின்றன.
விசயத்திற்கு வருவோம்…

இங்கே கூறப்பட்டுள்ள பிரச்சனைக்காக ஒருவரைக் கைது செய்வார்கள் என்பதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த நபர் மாலத்தீவு சென்று திரும்பியதற்கான விசா மற்றும் எமிக்ரேசன் ஸ்டாம்புகள் மட்டும்தான் அவரது பாஸ்போர்ட்டில் குத்தப்பட்டிருக்கும். தோழியோடு சென்றாரா அவரின் தங்கையோடு சென்றாரா என்பதை கவனிப்பதெல்லாம் அரசாங்கத்தின் வேலை அல்ல. அந்த விவரங்கள் பாஸ்போர்ட்டிலும் இருக்காது.

ஒருவேளை இவர் மாலத்தீவு சென்று வந்ததை தன் மனைவியிடம் மறைக்க விரும்பியிருந்தால் அந்தப் பாஸ்போர்ட்டைத் தூக்கி குப்பையில் கடாசிவிட்டு Loss of passport முறையில் இரண்டொரு நாளில் புதியதாக பாஸ்போர்ட் எடுத்திருக்கலாமே. ஐ டி நிறுவனத்தில் வேலை செய்யும் இவருக்கு இந்த அளவுகூடவா அடிப்படை அறிவு இல்லாமல் இருக்கும்? இங்கே சொல்லப் பட்டிருக்கும் விதத்தில் சில பக்கங்களை கிழித்துவிட்டு அவர் மீண்டும் பன்னாட்டு பயணத்திற்கு ஏர்போர்ட் போயிருந்தால்கூட அவரைத் திருப்பி அனுப்புவார்களேயன்றி கைது செய்ய மாட்டார்கள்.

பக்கங்கள் கிழிக்கப்பட்ட காரணத்தை அதிகாரிகள் கேட்கும் பட்சத்தில், ஏதோ விதத்தில் இந்தத் தவறு நடந்துள்ளது என்றும் மேற்படி விவரங்கள் எனக்குத் தெரியாது என்றும்தான் எல்லோருமே சொல்வார்கள். அப்படித்தான் இவரும் சொல்லியிருப்பார். அதற்கு மேல் சம்பந்தப்பட்ட நபர்மீது வழக்கு தொடர்வதற்கோ கைது செய்வதற்கோ எந்த முகாந்திரமும் இல்லை. கிழிக்கப்பட் பக்கங்கள் ஏதேனும் குற்றச்செயல்களுக்கான ஆதாரமாக இருக்குமாயின் அதன் தன்மை வேறு. புதுசு புதுசா கதை விடுறானுக…

அப்புறம் முக்கியமான ஒரு விசயம். இந்திய ஏர்போர்ட் நடைமுறைகள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களில் நல்ல அனுபவம் உள்ள ஒருவரால் தன் ஜாடையில் உள்ள வேறொருவரின் பாஸ்போர்ட்டில் இந்திய நாட்டைவிட்டு வெளியேறவும் திரும்பவும் இந்திய நாட்டிற்குள் நுழையவும் முடியும். நம் விமான நிலையங்களில் கைரேகை மற்றும் கண் கருவிழிப்படலம் மூலம் பரிசோதிக்கும் முறை தற்போதுவரை நடைமுறைக்கு வரவில்லை. எமிக்ரேசன் அதிகாரிகளின் தனித்திறமையினால் மட்டுமே சில பல குற்றவாளிகள் அவ்வப்போது சிக்குகிறார்கள். டிஜிட்டல் இந்தியாவின் தொழில்நுட்பத்தால் அல்ல…

என்னங்கடா புதுசு புதுசா கதை விடுறீங்க?

-Arulraj

Leave A Reply