பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல் லாபகரமாக செயல்படுத்த அரசு முடிவு! – போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதி!

Share

அரசு போக்குவரத்துத் துறையை லாப நோக்கத்தில் மட்டும் நடத்தமுடியாது. இன்னும் பல கிராமங்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லை. பெண்களுக்கு இலவச பேருந்துகளை இயக்குகிறோம். அதை நெரிசல் இல்லாமல் போதுமான அளவுக்கு இயக்க வேண்டும்.

பேருந்து நேரங்களை அறிய நவீன வசதி

பேருந்து இயக்கத்தை நவீனப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். பேருந்து எப்போது புறப்படுகிறது. எந்த இடத்தில் வந்துகொண்டிருக்கிறது என்பதை பயணிகள் அறிந்துகொள்ள வசதி செய்யப்படும்.

மினி பஸ்களை அதிகரிப்போம்

அரசு போக்குவரத்துத்துறை இழப்பில்தான் இயங்குகிறது. ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வுக்கால பணப்பலன்களை வழங்குவதில்கூட சிரமத்தை சந்திக்கிறது. ஆனாலும் லாபம் மட்டுமே அரசின் நோக்கமல்ல. இழப்பை தாங்கிக்கொள்ள அரசு தயாராக இருக்கிறது. இழப்பை சமாளிக்க நகரங்களுக்குள் மினி பஸ்களை அதிக அளவில் இயக்கவும், நெடுந்தொலைவு பஸ்களில் வசதிகளை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

போக்குவரத்துத் துறைக்கு சொந்தமான இடங்களில் கட்டிடங்கள் கட்டுவோம்

தனியார் பேருந்துகளைப் போல பார்சல் சர்வீஸ்களையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். அரசு போக்குவரத்துத்துறைக்கு சொந்தமான இடங்களில் கட்டிடங்களை கட்டி, கீழ்த் தளத்தை அலுவலகப் பயன்பாட்டுக்கும், மேல் தளங்களை வாடகைக்கும் விட்டு வருவாயை அதிகரிக்கும் வாய்ப்புகளை பரிசீலனை செய்வோம்.

பழைய பேருந்துகளை புதிதாக கட்டுவோம்

தினந்தோறும் டீசல் விலை ஏற்றப்படும் நிலையிலும் பஸ் கட்டணத்தை உயர்த்தும் நோக்கம் இல்லை. செலவினங்களை குறைத்து இழப்பை சரிக்கட்ட திட்டமிட்டுள்ளோம். மோசமான பேருந்துகளை அடையாளம் கண்டு இனம்பிரிக்க கூறியுள்ளோம். அந்தப் பணி முடிந்தவுடன் சேஸ் நன்றாக இருந்தால் புதிய பேருந்துகளை கட்ட முடிவு செய்துள்ளோம். புதிய பேருந்துகளை வாங்கவும் ஒப்பந்தம் செய்துள்ளோம்.

சிசிடிவி கேமராக்கள் பொருத்துவோம்

பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்போம். சென்னையில் உரிய நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்தாமல் செல்வதாக புகார்கள் வருகின்றன. இதைத் தவிர்க்க டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு பயிற்சி கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.

ஆர்டிஓ அலுவலகங்களில் ஆன்லைன் பயன்பாடு

ஆர்டிஓ அலுவலகங்களில் நடக்கும் முறைகேடுகளை குறைக்க ஆன்லைன் பயன்பாடுகளை அதிகரிப்பதே சரியான வழியாக இருக்கும். ஆன்லைன் பயன்பாடுகளை அதிகரிக்கும்போது குற்றங்கள் குறையும் என்று கருதுகிறேன். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

Leave A Reply