பள்ளிக் கல்விக்கு கொள்ளி வைக்காதீர் – ஆதனூர் சோழன்

Share

எம்ஜியாரும், ஜெயலலிதாவும்தான் ஆசிரியர் அரசு ஊழியர்களை படுமோசமாக கேவலப்படுத்தியவர்கள். அவர்கள் வழியில் தினமலர் பத்திரிகையும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது வெறுப்பை உமிழ்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது.

அவாள் மட்டுமே ஆசிரியர்களாக இருந்து, யாரெல்லாம் படிக்கனும்னு வரையறை வகுத்திருந்த நிலை பறிபோனதும், அவாள் யாரும் ஆசிரியர் பணிக்கு வருவதே இல்லை.

இருப்பதிலேயே கடினமான பணி ஆசிரியர் பணிதான் என்பது எனது கருத்து. வீட்டில் ஒரு குழந்தையை கட்டுப்படுத்தி சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கும் நிலையில் காலையிலிருந்து மாலைவரை பிள்ளைகளை பாதுகாத்து, பாடம் எடுக்கும் பணியை சவுக்கு சங்கர் மாதிரி ஆட்கள் மிக எளிதாக கொச்சைப் படுத்திப் பேசுவதை கேட்க முடிந்தது.

கற்பித்தல் பணியில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டிய ஆசிரியர்களை பணிச்சுமையை ஏற்றி அவர்களுடைய கவனத்தை சிதறடித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கும் காரியத்தை அரசு அதிகாரிகள் தொடர்ந்து செய்கிறார்கள்.

காலையில் பள்ளிக்கு வந்ததும் மாணவர்களைக் கவனிப்பதற்கு பதிலாக தேவையற்ற வேலைகளை செய்ய வேண்டியிருப்பதாக புலம்புகிறார்கள். ஆசிரியர்களின் கவனத்தை சிதறடித்து, அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகரிப்பதை தடுக்கவே அதிகாரிகள் இத்தகைய கூடுதல் சிரமத்தை ஏற்றுவதாக கூறப்படுகிறது.

ஆனா ஊனான்னா ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை குறிப்பிட்டு விமர்சிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளை சீரழிப்பதற்காகவே ஆசிரியர்களை பழிவாங்குகிறார்கள். அதாவது, அரசுப்பள்ளிகளின் கற்பித்தல் திறனை வளர்த்து, பள்ளிகளில் மாணவர்களுக்கான வசதிகளில் கவனம் செலுத்தாமல் தவிர்த்து, தனியார் பள்ளி முதலாளிகளுக்கு சேவகம் செய்வதற்காகவே கல்வித்துறை ஆணையர் முயற்சி செய்வதாக கல்வித்துறையினர் கூறுகிறார்கள்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவியேற்ற புதிதில் பள்ளிகளை நவீனப்படுத்துவதில் அக்கறை காட்டினார். அதுகுறித்து நிறைய பேசினார். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவித்தார். தனியார் பள்ளி மாணவர்கள் கட்டணச் சுமையோடு இருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் சான்றிதழ் இல்லாமலேயே அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் என்றெல்லாம் சொன்னார்.

ஆனால், அவருடைய ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. டெல்லியைப் போல ஸ்மார்ட் ஸ்கூல்கள் அமைக்கப்படும், கேரள பள்ளிகளைப் போல தமிழக பள்ளிகளும் மேம்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அளித்த வாக்குறுதிகளும் நடைமுறைக்கு வரவில்லை.

ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விட்டுவிட்டு, அவர்களை பள்ளிக்குழந்தைகளைப் போல நடத்துவது என்பது ஒருவிதமான சேடிஸ்ட் மனப்பான்மை என்பதை அரசு உணர வேண்டும்.

இந்நிலையில்தான் பள்ளிக் கல்வித் துறையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆசிரியர்களும் அதிகாரிகளும் சில யோசனைகளை முன்வைக்கிறார்கள். இதை நிறைவேற்ற அரசு முன்வந்தால், பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக இயங்கும் என்று அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் சொல்கிறார்கள்.

1.ஆரம்பக் கல்வி முறையில் மாற்றங்கள் காணப்பட வேண்டும். குறிப்பாக மாணவர் சேர்க்கையை துரிதபடுத்தி தமிழைக் கட்டாயப் பாடாமாக்கி ஆங்கில வழிக் கல்வியை மேம்படுத்த வேண்டும்.

2. தனியார் பள்ளிகளை போன்று ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் மாற்றி அமைக்க வேண்டும்.

3. பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், குறிப்பாக கழிவறைகள் பராமரிக்கப்படுதல் வேண்டும். கழிவறைகள் கட்டினால் மட்டும் போதாது. தண்ணீர் வசதி போதுமான அளவு உறுதிப்படுத்த வேண்டும்.

4.ஆசிரியர்களுக்கு மண்டல, மாவட்ட வாரியாக பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

5. EMIS போன்ற செயல்பாடுகள் அலுவலக பணியாளர்களால் மேற்கொள்ளப் படுதல் வேண்டும்.

6. மாணவர்களிடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தபடுதல் வேண்டும்.

7. ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டு விழா நடத்த பட வேண்டும்.

8. பல்வேறு கல்வி மண்டலங்களாக பிரித்து இயக்குநர் அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும், மருத்துவத்துறை போன்று, கல்வித் துறையில் அனுபவமிக்க இயக்குநர் பணிக்கு அதிகாரம் வழங்கப்பட்டு, ஆணையர் பணியிடம் ஒழிக்கப்பட வேண்டும்.

9. பத்தாம் வகுப்பு வரை உள்ள சத்துணவுத் திட்டத்தை 12 ஆம் வகுப்பு வரை நீடிக்க வேண்டும்.

10. மாணவர்களுக்கு சீருடை வழங்குவதுடன், விளையாட்டில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தனி ஆடை வழங்கி விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு செயல்படுத்தினால் பள்ளிக்கல்வித் துறை வரலாற்றில் முதலமைச்சரின் பெயர் இடம்பெறும்.

Leave A Reply