யோகாவுக்கு பதிலாக உடற்பயிற்சி வகுப்புகளை மேம்படுத்துங்கள்! – ஆதனூர் சோழன்

Share

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் யோகா பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருக்கிறார். மாணவர்களின் கல்வித்தரம் மேம்பாடுக்குரிய வழிமுறைகளைத் தவிர வேறு எல்லாவற்றிலும் இவர் கவனம் செலுத்துகிறார். இவர் கவனம் செலுத்துகிறார் என்பதைவிட, இவருடைய கவனத்தை யாரோ திசைதிருப்பி இவருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றே கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.

யோகா என்பது வேதகாலத்திற்கு முன்பே உள்ளதுதான் என பல தொல்லியல் அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். சிந்து சமவெளி நாகரிகத்தில்கூட தியானம் செய்யும் முத்திரைகள் கிடைத்துள்ளன. பொதுவாக, புத்தம், சமணம் போன்ற மதங்களுக்குக்கும் இந்த யோகா தொடர்பு இருக்கிறது. புத்தரும், மகாவீரரும் தியான நிலையில்தான் புதிய வாழ்வியல் முறைகளை கண்டறிந்து மக்களுக்கு போதித்தனர் என்கிறது வரலாறு.

ஆனால், யோகாவை உடல்நலத்தைத் தாண்டி, ஆன்மிகத்துடனும், இந்துமத்ததுடனும் தொடர்பு படுத்தியது பார்ப்பனர்களின் சூழ்ச்சியாகும். இன்றைய யோகாவின் பல அம்சங்கள் விஷமத்தன்மை கலந்தவை. பொதுவாக பார்ப்பனர்கள் தூக்கிப்பிடிக்கும் எதுவுமே நமக்கு நல்லதல்ல என்ற தந்தை பெரியாரின் அளவுகோலைக் கொண்டு அமைச்சர் இந்த முயற்சியை கைவிட வேண்டும்.

கல்வித்துறையில் நிலவும் குளறுபடிகள் குறித்து பலமுறை கல்வித்துறை அதிகாரிகளின் மனக்குமுறலை செய்திகளாக்கியும் கொஞ்சம்கூட மாற்றம் இல்லை. பெரிய படிப்பு படிக்காத அதிமுக அமைச்சர் செங்கோட்டையனைக் காட்டிலும் இவர் பலமுறை தான் அறிவித்த விஷயங்களையே மாற்றி அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது கல்வித்துறையினர் மத்தியில் அமைச்சரை கேலிக்குரியவராக்கி விடுகிறது. ஒருவேளை இவருக்கு யோசனை சொல்கிறவர்களின் நோக்கம் அதுவாகத்தான் இருக்குமோ என்னவோ.

நாம் புதிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்று அறிவித்திருக்கிறோம். ஆனால், அந்தக் கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் பலவற்றை அமைச்சர் ஏற்றுக் கொண்டதாகவே தெரிகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு யோகா அவசியமல்ல என்பதையும், ஏற்கெனவே உள்ள உடற்பயிற்சி வகுப்புகளை, நல்ல உடற்பயிற்சி ஆசிரியர்களைக் கொண்டு முறையாக நடத்தினாலே மாணவர்களின் உடலும் உள்ளமும் புத்தெழுச்சி பெறும் என்பதையும் அமைச்சர் உணரவேண்டும்.

யோகா ஆசிரியர்கள் பெரும்பாலும் சங்கி மனப்பான்மையுடன்தான் இருக்கிறார்கள். அவர்கள் மாணவர்கள் மனதில் சங்கித் தன்மையை விதைக்கவே வாய்ப்புகள் அதிகம் என்பதையும் அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும்.

மாணவர்களை யோகாவில் ஈடுபடுத்துவதைக் காட்டிலும் விளையாட்டுகளில் கூடுதல் நேரம் பயிற்சி எடுக்கச் செய்தால் விளையாட்டுத் தரமாவது உயர வாய்ப்புண்டு.

யோகா பயிற்சியை எதிர்த்தால், கலைஞர் யோகா செய்யவில்லையா என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். கலைஞர் மூச்சுப்பயிற்சி மட்டுமே செய்தார். பின்னாளில் அவருக்கு தண்டுவட பிரச்சனை உருவானபோது, சில பிசியோதெரபி பயிற்சிகளை மட்டுமே செய்தார்.

சைக்கிளிங், நீச்சல், ஓட்டம் போன்றவற்றைக் காட்டிலும் உடலுக்கு உற்சாகம் தருவதும், உறுதியாக்குவதும் வேறு எதுவுமில்லை என்பதை அமைச்சர் உணர்ந்து அத்தகைய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசாங்கத்தை விரும்பும் அனைவருடைய வேண்டுகோள்.

Leave A Reply