சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 1

Share

இடைக்காடர் சித்தர்

விட்ட குறை தொட்ட குறை உள்ளவர்களுக்கு நெறிவாய்க்கும் என்பது இடைக்காடர் வாழ்வைப் பொறுத்தமட்டில் சரியாகவே இருந்தது.

இடைக்காடர் கோனார் வகுப்பைச் சேர்ந்தவர். இவருடைய பிறப்பைபற்றி போகமுனிவர்

‘மட்டான இடைக்காடர் ஜாதிபேதம்
மகத்தான கோனாரே என்னலாகும்
திட்டமுள்ள கோத்திரங்கள் பதினெட்டாகும்
திகழான நூலதினில் கண்டமட்டும்
தாலமுடன் இடைக்காடர் பிறந்த நேர்மை
சட்டமுடன் சொல்லுகிறேன் தன்மைபாரே
தன்மையாம் புரட்டாசி மாதமப்பா
தாழ்வாக இரணியனைக் கொன்ற மாதம்
வண்மையாம் திருவாதிரை இரண்டாம் காலாம்
வளப்பமுடன் அவதரித்த சிசுபாலன்தானே’
என்று கூறுகிறார்.

ஆடுமேய்ப்பது யாருடனும் ஒப்பிடாமல் பட்டற்று ஒதுங்கி வாழ்வது இதுவே ‘இடையன் மேடு’ என்னும் பகுதியில் வாழும் இடைக்காடரின் அன்றாட இயல்பான வாழ்க்கையாக இருந்து வந்தது.

மலைச்சரிவு பக்கமாக தினம்தோறும் இடைக்காடர் ஆடுகளை அழைத்துச்செல்வார், அந்த ஆடுகள் எல்லாம் ஒருபக்கம் மேய்ந்து கொண்டிருக்கும்.

இடைக்காடரோ அங்குள்ள வருட்க்ஷத்தினடியில் கொம்பை ஊன்றிக்கொண்டு நிற்பார் உடல் மட்டும்தான் நிற்கும். உயிரும் சிந்தையும் சிவனைத் தேடி பிரபஞ்சமெங்கும் சுற்றிவரும். சித்தர்களில் மூத்தவர் சிவனல்லவா?

சரீரம் வேர்விட்டு மண்ணில் நிற்க உயிரும் சிந்தையும் வானமண்டலமெங்கும் சஞ்சரித்தபடி இடைக்காடர் பல நாட்கணக்காய் நிற்கின்ற கோலத்தை போகமுனிவர் வானத்தில் இருந்தபடி கண்டார்.

போகமுனிவர் சட்டென இடைக்காடரின் முன்வந்து தோன்றினார். வந்தவர் மகாசித்தர்போகர் என்பதை அறியார் இடைக்காடர்.

இருப்பினும் அவரை வணங்கி எழுந்து தர்ப்பைப் புல்லைக்கீழே பரப்பி அதன்மீது போகரை அமரச்செய்தார். குட்டி என்ற ஆட்டின் பாலைக்கறந்து கொண்டுவந்து சித்தரின் முன்னால் வைத்தார்.

‘சுவாமி தயவு கூர்ந்து இந்த ஏழையின் உபசரிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று வேண்டினார்.

இடைக்காடரின் அன்பில் நனைந்துபோன போகர் மைந்தா உன் தேகம் இங்கிருக்க உன் ஆத்மா வானமண்டலமெங்கும் சஞ்சரித்து திரிந்ததே. யாருடன் உறவாடிக்கொண்டிருந்தாய்? எதனைக்கண்டு ஆராய்ந்து கொண்டிரந்தாய்? என்று போகமுனிவர் கேட்டபோது இடைக்காடரால் பதிலேதும் கூற முடியவில்லை.

ஆட்டுப்பால் கறந்துவந்து அன்பொழுகக்கொடுத்த இடைக்காடருக்கு ஞானப்பால் வழங்க திருவுள்ளம் கொண்டார் சித்தர்.

போகசித்தரின் ஆகர்ஷணப் பார்வையில் தம்முடன் ஞான ஒளி வெள்ளம் பாய்வதை உணர்ந்தார். இடைக்காடர் வைத்தியம், வாதம், யோகம், ஞானம், வான சாஸ்திரம் யாவும் கைவரப்பெற்றார்.

ஏழையாக இருந்தபோதிலும் எல்லோரையும் உபசரிப்பதில் வள்ளலாகத்திகழ்ந்த இடைக்காடரின் பண்பும் அறிவும் போக சித்தரைக் கவர்ந்தது, அவருடன் சிலநாட்கள் அங்கேயே தங்கி யிருந்து இடைக்காடருக்கு பல்வேறு உபதேசங்களை அருளினார்.

இடைக்காடயர் குலத்தில் பிறந்த இடைக்காடருக்கு போகர் அனைத்து சித்த நெறிகளையும் கற்பித்து விடைபெற்றபோது கண்கலங்கினார்.

‘இடைக்காடா நான் உன்னைவிட்டுப்பிரியும் நேரம்வந்துவிட்டது, உன்னுள் வந்தடைந்த ஞானத்தைக் கொண்டு உலகை உய்விக்கும் வழிகளைக் கண்டறிந்து மக்களுக்கு அருள்வாயாக’ என்று யோகமுனிவர் கூறியபடி மறைந்துவிட்டார்.

இடைக்காடருக்கு உபதேசித்தவர் போக முனிவரே என்றும் போகர் சமாதிகொள்ளப்போகும் முன் புலிப்பாணியைப் பழனியிலும் இடைக்காடரைத் திருவண்ணாமலையிலும் இருந்து இறைபணி செய்துவருமாறுக் கட்டளையிட்டதாகவும் கூறப் படுகிறது.இதற்குச்சான்றாக இடைக்காடர் சமாதி திருவண்ணா மலையில் உள்ளது.

இடைக்காடர் சோதிடக்கலையிலும் மிகச்சிறந்து விளங்கினார். இடைக்காடர் தமது சோதிட ஆராய்ச்சி அறிவால் சிறிது காலத்தில் ஒரு கொடிய பஞ்சம்வரப்போகிறது என்பதை உணர்ந்தார்.

இடைக்காடர் தமது சோதிட ஆராய்ச்சி அறிவால் அறிந்த அந்த கொடிய பஞ்சத்தை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்தார்.

முன்னேறப் பாடாகத் தமது ஆடுகளுக்கு எக்காலத்திலும் கிடைக்கக்கூடிய எருக்கிலை போன்றவற்றை தின்னக் கொடுத்துப் பழக்கினார். குறுவரகு என்னும் தான்யத்தை மண்ணோடு சேர்த்துப்பிசைந்து சுவர்களை எழுப்பிக்குடிசை கட்டிக்கொண்டார்.

எருக்கிலை தின்பதால் உடலில் அரிப்பெடுத்து ஆடுகள் சுவற்றில் உராயும்போது உதிரும் தான்யங்களை மட்டும் கஞ்சி காய்ச்சி உண்டு வாழ்ந்தார். இவ்வாறு வரப்போகும் பஞ்சத்தை எதிர்கொள்ளத் தம்மைத்தயார்ப்படுத்திக்கொண்டார்.

பஞ்சம் வந்தது உணவும் தண்ணீரும் இல்லாமல் மக்கள் மடிந்தனர். ஊர்கள் பாழாயின நாடே ஜனசந்தடியில்லாம் பாலைவனம்போல் காட்சியளித்தது.

ஆயினும் இடைக்காடர் மட்டும் என்றும்போல் தம் ஆடுகளுடன் வாழ்ந்துகொண்டிருந்தார்.

நவக்கிரக நாயகர்களுக்கு ஆச்சர்யம் இது என்ன விந்தையாக உள்ளது. இதன் காரணத்தை அறியவேண்டும் என்று நினைத்த வர்களாக ஒன்பதுபேரும் கூடி இடைக்காடரின் குடிசைக்கு வந்தார்கள்.

இடைக்காடருக்கு சொல்லவொண்ணா ஆனந்தம், ஐயோ விண்ணுலக வாசிகளான நீங்கள் என் குடிசைக்கு வந்துவிட்டீர்களே முதலில் கொஞ்சம் சாப்பிடுங்க்ள இந்த ஏழையிடம் என்ன இருக்கிறது? வரகுரொட்டியும் ஆட்டுப்பாலும் தான் எளியவை என்று இகழாதீர்கள் என் உள்ளம் நிறைந்த அன்பால் உயிரையே கலந்து தருகிறேன். உண்ணுங்கள் உண்டு சிரமபரிகாரம், செய்து கொள்ளுங்கள் பிறகு பேசுவோம் என்று உபசரித்தார்.

சித்தரின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் வரகு ரொட்டியைத் தின்று பாலைப் பருகினார்கள் எருக்கிலைச் சத்து கலந்தபால் அல்லவா? உடனே அவர்களுக்கு மயக்கம் வந்துவிட்டது.

கிரகங்கள் மயங்கிக்கிடப்பதைப் பார்த்ததும் இடைக்காடர் அவை எந்த அமைப்பில் இருந்தால் மழைபொழியுமோ அந்த அமைப்பில் மாற்றிப்படுக்கவைத்துவிட்டார்.

வானம் இருண்டது மழைபொழிந்தது, வரண்டு கிடந்த பூமியின்தாகம் தனிந்தது, ஆறு குளம் குட்டைகள் நிரம்பின.

நவக்கிரக நாயகர்கள் விழித்துப்பார்த்தார்கள். நொடிப்பொழுதில் இடைக்காடச்சித்தர் செய்த அற்புதம் அவர்களுக்கு விளங்கி விட்டது. நாட்டின் பஞ்சத்தை நீக்கிய சித்தரின் நுண்ணறிவை மெச்சி அவருக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்து விடைபெற்று மீண்டனர்.

இடைக்காடச் சித்தரின் இத்தகைய நுண்ணறிவால் மாண்டவர் போக மீதியிருந்தவர்கள் உயிர் பிழைத்தனர். எமனிடம் சென்ற தங்களையெல்லாம் மீட்டுக்கொண்ர்ந்த இடைக்காடரை பெருஞ்சித்தர் என்றும் தெய்வமென்றும் உவமைபொங்க யாவரும் போற்றிப் புகழ்ந்தனர்.

உலகம் செழிக்க இத்தகைய மெய்சிலிரிக்கச் செய்யும் காரியம் ஆற்றிய இடைக்காடரின் புகழ் திசையெட்டும் பரவியது.

ஒரு சமயம் விஷ்ணு பகவானை வழிபடுகிறவர்களுக்கு ஓர் ஐயம் ஏற்பட்டது. விஷ்ணு பத்து அவதாரம் எடுத்திருக்கிறாரே? இதில் எந்த அவதாரத்தை வழிபடுவதால் விரைவில் பலன்கிட்டும் என்று யோசித்தனர். சித்தரிடம் கேட்போம் என்று இடைக்காடரிடம் வந்து கேட்டார்கள்.

சித்தரோ ‘ஏழை இடையன் இளிச்சவாயன்’ என்று கூறியிட்டுப் போய்விட்டார்.

வந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, நெடுநேரம் யோசித்தபின் இடையன் என்றால் கிருஷ்ணன் இளிச்சவாயன் என்றால் நரசிம்மர், ஏழை என்றால் சக்கரவர்த்தித்திருமகனாகப் பிறந்தும் ஏ¬£யாகவே வாழ்ந்தாரே அந்த இராமன்தான், என்று முடிவு செய்தனர், சித்தரின் நுண்ணறிவுத் திறனை மெச்சியவாறே சென்றனர்.

போகர்தான் இடைக்காடரின் குரு என்றும் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இடைக்காட்ருக்கு உபதேசம் செய்தவர் போகர் என்பது இடைக்காடர் தமது ஞான சூத்திரம் 70 என்ற நூலில் காப்புப் பாடலின் குறிப்பிட்டுள்ளார்.

‘காப்பு முதல் காட்சியென்று கடையில் நின்று
கடைச்சரக்கை கண்டுகொள்ளக்
காப்பு முதல் முதற்சேர்த்து நடுவில் நின்று
கணபதி தாளிரு சரணங் காப்போம் என்று
காப்பு முதல் மூலர்கோரக்க நாதர்
கமலமுனி போகரிஷி பாதங்காப்பு’
இடைக்காடர் திருவிடை முருதூரில் சமாதியில் வீற்றிருப்பதாக போகர் ஜனை சாகரத்தில் கூறியுள்ளார்.
இடைக்காடடுச் சித்தரின் பாடல்களில் மாணிக்கவாசல் பாடல்களின் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது.
‘மனம் எனும் மாடு அடங்கில் தாண்டவக் கோனே- முக்தி
வாய்த்தததென்று எண்ணடா தாண்டவக் கோனே
மண்ணாதி பூதங்கள் ஐந்தையும் கண்டேனே
மாயாவிகாரங்கள் யாவையும் விண்டேனே
விண்ணாழி மொழியை மெய்யினுள் கொண்டேனே
மேதினி வாழ்வினை மேலாக கொண்டேனே’
என்று பாடுகிறார் இது மாணிக்கவாசகரின் ‘கண்டபத்து’ பாடல்களின் எதிரொலிபோல் உள்ளது.
அதுபோலவே ‘தும்பீபற’ என்று பாடுகிறார் இடைக்காடர்
‘அஞ்ஞானம் போயிற்று என்று தும்பீபற -பர
மானந்தம் கண்டோம் என்று தும்பீபற
மெய்ஞ்ஞானம் வாய்த்ததென்று தும்பீபறாமலை
மேலேறிக்கொண்டோம் என்று தும்பீபற’
இதேபோலவே மாணிக்கவாசகருக்குப் பாடுகிறார்.
‘தேரை நிறுத்தி மலை எடுத்தான் சிரம்
ஈரைந்தும் இற்றவாறு உந்தீபற
இருபதும் இற்றதென்று உந்தீபற’
என்பது மாணிக்கவாசகர் பாடல்

சித்தர்களும் ஆழ்வார்களும் நாயன்மார்களும் மாச்சரியம் ஏதுமின்றி அக்காலத்தில் ஒருவர் பாடலை ஒருவர் பாடி மகிழ்ந்து தமிழுக்கு சுவை கூட்டியிருப்பதன் அடையாளமே இது.

Leave A Reply